நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 29, 2023

சங்கர நாராயணர்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 13
சனிக்கிழமை


நாகங்களாகிய சங்கன், பத்மன் ஆகியோர் அன்னை உமையவளின் பக்தர்கள்.  இவர்களுக்குள் ஒரு சச்சரவு ஏற்பட்டது. 

இந்த உலகில் சிவபெருமானே உயர்ந்தவர்  என சங்கனும், திருமாலே மேலானவர் என்று பத்மனும் விவாதிக்கத் தொடங்கினர். இதில் தீர்வு காண இயலாத இருவரும் வேறுவழியின்றி அம்பிகையை வணங்கி - தமது ஐயம் தீர்க்கும்படிக் கேட்டுக் கொண்டனர்.

அன்னையும்
ஹரியும் ஹரனும் ஒருவரே!.. - என்பதை அனைவருக்கும் நிரூபிக்கும் வழி என்ன என்று சிவபெருமானிடமே கேட்டாள்..
 
தம்முள் பெரியவர் யார்?.. - என்ற சந்தேகத்திற்கு பூவுலகின் புன்னை வனத்தில்  தவம் இயற்றினால், அங்கே காட்சி தந்து உன் சந்தேகம் தீர்ப்போம்.. - என்று வழிகாட்டினார் ஈசன்.

அதன்படி  புன்னைவனத்தில்  தவமிருந்தாள் அன்னை ..
ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நன்னாளில் அம்பிகைக்குச் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தார் இறைவன். 

அரியும் சிவனும் ஒன்றே என உலகிற்கு உணர்த்தப்பட்டது..

இதன் பிறகும் தெளிவடையாமல்  சங்கனும் பத்மனும் சச்சரவில் ஈடுபட்டதால் அவர்களது நாக்கு இரு பிளவாகிப் போனது - என்பதும் உணரத்தக்கது..


அன்னை தவமிருந்த புன்னை வனமே - சங்கரன் கோவில்..

சங்கரநாராயண தரிசனம் காண்பதற்காக அம்பிகை  மேற்கொண்ட  தவம் குறித்த விழாவே ஆடித் தபசு..

ஆடித்தபசு பதினொன்றாம் திருநாளில் (31/7/23) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. 

அன்று காலை ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நிகழ்த்தி பரிவட்டம் சாத்துவர்..

நண்பகலில்  தவக்கோலம் கொண்டு தங்கச்சப்பரத்தில்
கோமதி அம்மன் தெற்கு ரத வீதி மண்டகப்படியில் எழுந்தருள, அன்று மாலைப் பொழுதில்    
சங்கர நாராயண ஸ்வாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி நல்கும் ஈசன் நள்ளிரவில் யானை வாகனத்தில்  சங்கரலிங்க ஸ்வாமியாக  காட்சிக் கொடுத்தருள்வார்..
 
ஐப்பசியில் திருக்கல்யாண விழாவும் கொண்டாடப் படுகின்றது ..

திருக்கோயிலில் கிடைக்கும் புற்று மண் பிரசாதம் தோல் நோய்களுக்கும்  விஷக் கடிகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது..

இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் அணிந்து , குங்குமம் இட்டுக் கொண்டால் நோய்களும் தீவினைகளும் குறையும் என்பது நம்பிக்கை..

ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமியையும், 
ஸ்ரீ கோமதி அம்மனையும் சிந்தித்து அனைத்து நலன்களையும் எய்துவோம்...


ஸ்ரீ சங்கரநாராயணன் எனும் மாலொரு பாகன் திருக்கோலம் தேவாரத்தில் பல பாடல்களில் போற்றப்படுகின்றது..
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சங்கர நாராயணன் கோவில் ஆடித்தபசு விபரங்களை அறிந்து கொண்டேன். முன்பு அம்மா வீட்டில் இருந்த போது இந்த கோவிலுக்கு ஒரு முறை வேண்டுதலுக்காக சென்றுள்ளோம். அங்குள்ள அருமருந்தான புற்றுமண் நோய் தீர்க்கும் மருந்தாக அனைவருக்கும் பலன் அளித்துள்ளது.

    அன்னை கோமதி அம்பாளும், சங்கர நாராயணயரும் அனைவரையும் காத்தருள நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அன்னை கோமதி அம்பாளும், சங்கர நாராயணரும் அனைவரையும் காத்தருள பிரார்த்தித்துக் கொள்வோம்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  2. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான விவரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. சங்கரன் கோவிலில் உள்ள உறவினர் திருவிழாவுக்கு வர சொல்லி போன் செய்தார்கள்.
    முன்பு ஒரு நாள் திருவிழா பார்த்து இருக்கிறோம். போய் வந்து பதிவும் போட்டேன்.
    நேற்று தேர் திருவிழா படங்கள் அனுப்பினார்கள்.
    கோமதி அம்மன் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அம்மன் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ...

      நீக்கு
  5. ஓம் சங்கரநாராயணாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..