நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 07, 2023

திருப்புகழ்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 22
 வெள்ளிக்கிழமை

இன்று
பழநித் திருப்புகழ்


தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ... தனதான

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து ... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ... துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற ... னடிசேராய்..

மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த ... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகளுக்கு மாற துங்க ... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த ... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


இந்தப் பூமியில் பிறந்து குழந்தை எனத் தவழ்ந்து
அழகுடன் நடை பழகி வளர்ந்து சிறுவனாகி
அரிய மழலைச் சொற்கள் மிகுந்து வரும் குதலை மொழிகளைப் பேசி
சிறந்த விதமாக வளர்ந்து பதினாறு வயதாகின்ற நிலையில்
சைவ சமயத்தின் பெருமை கூறுகின்ற நூல்கள், ஆகமங்கள், சிறப்புடைய வேதங்கள் - இவற்றை ஓதுகின்ற அன்பர்களுடைய
திருவடிகளை நினைத்து
வணங்காமல் 
இளம் பெண்களின் மீது ஆசை மிகுந்து அதன் காரணமாக மிகக் கவலையுடன் அலைந்து
திரிகின்ற அடியேனை 
உனது திருவடி அன்பினில் சேர்க்க மாட்டாயா?..


சும்மா இரு என மெளன உபதேசம் செய்த சம்புவும்
பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப் பூ - இவற்றைத் தனது மணிமுடியில் அணிந்த  மகாதேவனும் ஆகிய
இறைவன் மனமகிழும்படி அவரை அணைந்து அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த மலைமகளாகிய
அம்பிகையின் குமாரனே,

பரிசுத்தமுடைய வேலினை
உடையவனே, 
இவ்வுலகைச் சுற்றி வருவதற்கு ஆசை கொண்டு மயிலின் மேல் திகழ்ந்து
பூமி அதிரும்படியாக வலம் வந்தவனே,
வீரக்கழல் அணிந்தவனே,
மோட்ச வீட்டில் பொருந்தி நின்று பழனி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே..

முருகா
முருகா
***


8 கருத்துகள்:

  1. திருப்புகழைப் பாட வேண்டும்.  முருகன் திருவருளை நாடவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. திருப்புகழ் பாடலை பாடி முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. திருப்புகழ் இனிமை. முருகன் திருவருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
  4. இனிமையான திருப்புகழ் பாடல். உலகில் நல்லவை நிகழ்ந்திட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய அருணகிரிநாதரின் திருப் புகழைப்பாடி, அதன் விளக்கமும் உணர்ந்து கொண்டேன். முருகன் அனைவரையும் காத்தருள வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். முருகா சரணம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. திருப்புகழைப்பாடப் பாட வாய் மணக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..