நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 24, 2023

பிரம்மரந்திரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 10
 வெள்ளிக்கிழமை
**

நேற்றைய பதிவில் -
நாளையும் கட்டுரை தொடரும் என்று நினைக்கிறேன். பாதியில் நிற்கிறது.. - என்று அன்பின் ஸ்ரீராம் அவர்கள் குறித்ததால் அவசரமாக இந்தப் பதிவு..
***


மனிதனின் மண்டை ஓடு (கபாலம்) உறுதியானது.. 
ஆனாலும் தனித் தனியான ஆறு சில்லுகள். 

இந்த ஆறு சில்லுகளும் பூர்ணமாகிப் பொருந்தாமல் இருப்பதே உச்சிக்குழி - பிரம்மரந்திரம்..

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு இவை அனைத்தும் மென்மையாவை. விரிவடையக் கூடியவை..

இந்த ஆறு சில்லுகளும்
இப்படி மென்மையாக இருப்பதால் தான் - கருவறையில் இருந்து குழந்தை வெளியேறும் போது நெகிழ்வடைந்து  ஒன்றன்மீது ஒன்று இழைந்து கொள்கின்றன.. 

ஏனைய தோள் எலும்புகளும் மார்புக் கூடும் நெகிழ்ந்து கொள்வதனால் தான் - பிறப்பு வழியில் சிசு எளிதாக வெளியே வருகின்றது..

குழந்தையின் எலும்புகள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்குள் உறுதியாகி விடுகின்றன..

மோட்சபுரி தலத்திற்கான திருவாசல் சொர்க்க வாசலுக்கு இணையானது அதுவே பிரம்மரந்திரம் என்பர்.. 

அது எப்போது திறக்கும் என்பது யோகியர்க்கு மட்டுமே தெரியும்.. அதைத் திறக்கும் சூட்சுமத்தையும் அவர்களே அறிவர்.. யோக சித்தியின் உச்சம் அதுவே.. 

மாபெரும் யோகியர் ஒளி வடிவாக தமது கபாலத்தைத் திறந்து கொண்டு வெளியேறுவர் என்பதை நம்மில் பலரும் அறிந்திருப்போம்..

பிரம்மரந்திரத்தைத் திறக்கும் சூட்சுமத்தை அறிந்த ஞானியர்  மட்டுமே  சச்சிதானந்தத்தில் திளைக்க முடியும்.

மும்மலங்கள் கடந்தவர்க்கு அது தானே திறக்கும்.. 

மூலாதாரத்தில் கணபதியின் அருளால் தொடங்குகின்ற பயணம் பூரணத்துவம் எய்துமிடம் இதுவே.. 

மூலாதாரத்திற்குக் கீழே பாதாளம்.. பிரம்மரந்திரம் என்கிற சகஸ்ராரத்தைக் கடந்தால் எல்லையற்ற பரவெளி.. 

இதை உணர்த்துவதே ஔவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல்..

வாசி யோகத்தின் அடுத்த நிலை தாரணை.. ஆத்ம ஞானம் எய்துவது இந்நிலையில் தான்..

பிரம்மரந்திர சகஸ்ராரம் எனும் கமலத்தில் தான் ஞானம் பிறக்கின்றது.. இந்நிலையில் மூன்று காலங்களும் புலனாகும் என்பது தெளிவு.. 

ஈசனின் கைகளுக்குள்  சென்ற பிறகு காலமும் நேர்மும் யாருக்குத் தேவை!?..


ஆனாலும்,
மூன்று காலத்தையும் உணர்ந்த ஞானியரைக் கொண்டே மீண்டும் உலகம் சிருஷ்டிக்கப் படுகின்றது..

பிரம்மத்தின் பூர்ணமே கபாலம்.. ஈசனின் கரத்தில் பிரம்ம கபாலம் என்பர்..

உண்மையில்
பிரம்ம கபாலம் என்பது பிரம்மனின் கபாலம் அல்ல.. நம்முடையது..


" அடே.. ஆணவ மாயா கன்மங்களை இந்த ஓட்டோடு விட்டு விடு.. உன்னைக் கரையேற்றுகின்றேன்!.. " 

- என்று ஈசன் வருவதே பிக்ஷாடனர் திருக்கோலம்.. இவருக்குத் துணையாக வருபவள்
மாயை ஆகிய ஜகன் மோகினி..

ஜகன்மோகினியும் ஏடாகூடமாகத்தான் வருகின்றாள்.. 
கருத்தழியாமல் கரையேறுவது யார் பொறுப்பு?.. இந்த இடத்தைப் பின்னொரு நாள் பேசுவோம்..


பிக்ஷாடனர் - ஜகன்மோகினி தரிசனத்தால் ஆடை நெகிழ்ந்த நிலையில் ரிஷிகளின் ஆத்ம பலமான அவர்களது மனைவியர்.. 

இந்தக் கோலத்தை சித்திரங்களாக சிற்பங்களாக கோயில்களில் காணலாம்.. 

இதைப் பற்றி புரியாத பலர் உளறி வைத்தாலும் இது ஒரு தத்துவம்..

இது நிகழ்வது தாருகா வனத்தில்.. என்றாலும் தாருகாவனத்து முனிவர்களின் பிரதிநிதிகள் நாமே!.. 

கரையேற இயலாது காமத்திலும் மற்றையவற்றிலும் மூழ்கி  இறைவனையே எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம்.. 

நமக்குப் பிரம்ம ஞானம் விளைவது எந்நாளோ?..

பிரம்ம கபாலத்திற்கு உரியவரே கபாலீஸ்வரர்..
எளிய ஆன்மாக்கள்
பிரம்மரந்திரத்தைக் கடந்து செல்வதற்கு உதவுபவர் சிவபெருமான்.. அவர் பெயரே பிரஹதீஸ்வரர்..

இந்த அளவில் இது போதும்.. இதற்கு மேல் ஞானகுருவினால் மட்டுமே உணர்த்த முடியும்..

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!..(4)

- என்று, அபிராமபட்டர் வேண்டுவதும்,

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே! (100)

என்று பரவசம் ஆவதும் இந்நிலையில் தான்..

அந்தாதியின் நூறாவது பாடலுக்குள் சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிணி என்னும் ரகசியமும் பொதிந்துள்ளது.. 

நூறாவது திரு ப்பாடலில் அம்பிகையை முழுதாக வர்ணித்து கொன்றை மாலையைச் சூட்டி விடுகின்றார் பட்டர்... காரணம் அம்பிகையாகிய சிவை -  சிவானந்தவல்லி என ஜொலித்துக் கொண்டு இருக்கின்றாள்!..


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 
சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிணி என்று முடிவாகக் கூறுவதும் இதையே!..

பால் கண்ணுக்குத் தெரிகின்றது.. அதன் சுவையும் ஏனைய கூறுகளும்?..

திருநாவுக்கரசர் குறித்தருள்வது போல அவன் -

மாமணிச் சோதியன் மறைய நின்றுளான்..

அவனும் அவளும் வேறு வேறு அல்லவே!..

கூத்தனும் கூத்தியும் கூத்ததன் மேலே!.. - என்கின்றது திருமந்திரம்..

இதுவே ஆகாயத் தலமாகிய சித் அம்பலத்தில் ஆனந்தத் திரு நடனம்!..

அம்பிகையை அடைந்து விட்டால் ஐயனை அடைந்து விடலாம்.. இதுவே நிதர்சனம்!..


இந்த நிலையில் சர்வேஸ்வரனுடன் கூடியிருக்கும் சக்தியே பாலா.. சித்தர்கள் வாலை என்பர்..  வாலாம்பிகை என்றும் பெயர் வழக்கு..

இப்படியான ஞான நிலையை எய்துவதற்கு இறைவனே உறுதுணையாய் இருப்பதை திருஞானசம்பந்தர் தமது திருவாக்கில் குறித்து அருள்கின்றார்..

ஊனில் உயிர்ப்பை  ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்து வார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.. 3/22/3.

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. அம்பிகையின் திருவடிகளே சரணம்.  இன்று ஒல்லப்பட்டவற்றுள் எத்தனை என் மண்டைக்குள் ஏறியது என்று தெரியவில்லை.  அதற்கும் அவள் அருள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. சிதம்பரத்தில் அம்மன் சன்னதியில் இந்த சித்திரங்கள் மேல் விதானத்தில் இருக்கிறது.
    அபிராமி அந்தாதி பாடல்கள், திருமந்திர பாடல், திருஞானசம்பந்தர் பாடல் பகிர்வுகளால் நல்ல விளக்கமாக சொன்னீர்கள்..
    அன்னையை வணங்கி ஞானநிலை அடைய முயல்வோம்.
    இறைவன் தான் நல்லமனதை தரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. பிரமிப்பான ஆன்மீக தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அருமை, பதிவின் விவரம் எனக்குப் பிடிபட கொஞ்சம் தாமசமாகும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஆழமான பகிர்வு.

    பிரமமந்திரத்தை திறக்கும் சக்தி நம்மிடம் இல்லை சக்தி அன்னையை வணங்கி அருள் பெறுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..