நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 16, 2022

ஆழித்தேரோட்டம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று செவ்வாய்க் கிழமை.. பங்குனியின் ஆயில்ய நட்சத்திரம்..

சோழ மாமன்னர்களின் ஆதி தலைநகரமாகிய திரு ஆரூரில் ஆழித் தேரோட்டம் சிறப்புற நடைபெற்றுள்ளது..

திருத்தலம்
திரு ஆரூர்


இறைவன்
ஸ்ரீ புற்றிடங்கொண்டார்
ஸ்ரீ தியாகராஜர்


அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை
ஸ்ரீ கமலாம்பிகை

வீதி விடங்கப் பெருமான்
அஜபா நடனம்

தீர்த்தம்
கமலாலயம்
தலவிருட்சம் - பாதிரி

தேரூரும் நெடுவீதி.. (6/25/9) என்று
அப்பர் பெருமானால் சிறப்பிக்கப்பட்ட திருத்தலம்..


ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.. (4/19/7)

ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்.. (6/89/2)

என்றெல்லாம் அப்பர் ஸ்வாமிகள் பாடியருள்கின்றார்..

இவ்வண்ணமாக ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே - திரு ஆரூர் ஆழித் தேரோட்டத்தை அப்பர் ஸ்வாமிகள் (570 - 670) தரிசனம் செய்திருக்கின்றார் - என்பது சான்றோர் தம் கருத்தாக அமைகின்றது..


முப்பத்தாறு அடி உயரம் கொண்டது ஆழித்தேர்..


இதன் மேல் அறுபத்தாறு அடி உயரத்திற்கு  நான்கு அடுக்குகள் கட்டப்பட்டு, அதன் மேல் விமானம், ஸ்தூபி அமைத்துள்ளனர்..


திசைக்கு எட்டு  வீதம், நான்கு திசைகளுக்கும் 
முப்பத்திரண்டு பட்டைகளைக் கட்டி, அதன்மேல் கீற்று வேய்ந்து வண்ணத் திரைச் சீலைகளைக் கொண்டு தேர் அலங்கரித்துள்ளனர்..


ஐநூற்றுக்கும் மேற்பட்ட பனஞ்சப்பைகளும் சவுக்கு மரங்களும் மூவாயிரத்து ஐநூறு
மூங்கில்களும் கொண்டு ஆழித்தேர் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது..


வல்லியந் தோலுடை யான் வளர்திங்கட்
கண்ணியினான் வாய்த்த
நல்லிய நான்முகத் தோன்தலையின்
நறவேற்றான்
அல்லியங் கோதை தன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத்
தொழுவாரும் புண்ணியரே..1.105.9
-: திருஞானசம்பந்தர் :-



( மேற் காணொளிகள்
WhatsApp ல் வந்தவை)

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம்  ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிகை ஏந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே..6.034.1
-: திருநாவுக்கரசர் :-




தருமபுரம் ஸ்ரீ மகா சந்நிதானம் அவர்கள்
வேளாக்குறிச்சி ஸ்ரீ மகா சந்நிதானம் அவர்கள்
உளுந்தூர்பேட்டை திருநாவுக்கரசர் திருமடத்து ஸ்வாமி அவர்கள் கலந்து கொள்ள திருத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது..



(காணொளி நன்றி - தஞ்சை விஜய்)

பொன்னும் மெய்ப்பொரு ளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழை யைப் பொறுப்பானைப்
பிழையெலாந்தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மானை எளிவந்தபிரானை
அன்னம் வைகும்வயற் பழனத்து அணி
ஆரூரானை மறக்கலு மாமே..7.059.1
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் :-


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

19 கருத்துகள்:

  1. சிறப்பான ஆழித்தேரோட்டம்.  தியாகேசர் நம்மைக் காக்கட்டும்.  தேருக்கு முட்டு கொடுக்கும் காணொளி கூட வந்திருந்தது.  பயப்படாமல் நகரும் தேருக்கு முன் நின்று முட்டு கொடுக்கும் பக்தர்கள், திறனாளர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. தேருக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்தவும் திருப்பவும் செய்வது பல இடங்களில் வம்சாவளி என்றும் சொல்கின்றார்கள்..

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நேற்று எங்கள் குடும்ப க்ரூப்பில் ஜோதி டீவியில் தேரோட்டம் காட்டுகிறார்கள் என்று ஒருவர் சொன்னார்.  'ஜோதி டீவி எங்களுக்கு வராதே' என்று சிலர் விசனிக்க, என் தங்கை, அவள் அலுவலகத்தில் ஜோதி என்றொரு பெண் இருப்பதாகவும், அவளை பார்க்கலாமா' என்றும் நகைச்சுவையாகக் கேட்க, மாமா ஒருவர் 'அவர் தேர் போல இருப்பாரா' என்று பதில் நகைச்சுவை காட்ட, தங்கையும் 'ஆமாம்..  கொஞ்சம்'  என்று பதில் சொல்ல, கே ஜி வொய் ராமன் (எங்கள் ஆசிரியர்களில் ஒருவர்)  'அவர் ஆழித்தேர் அல்ல, தோழித்தேர் ' என்று டைப்படித்து  கலகலப்பூட்டினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..

      ஆழித்தேரும் தோழித்தேரும் அழகோ அழகு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. எனக்கும் வாட்சப்பில் தேரோட்டக் காணொளிகள் வந்தன. முகநூல் வழியாகவும் பார்த்து மகிழ்ந்தேன். எல்லாக் கோயில்களிலும் இப்படிப் பிரம்மோற்சவம், திருத்தேர் ஓடுதல் என நடைபெறுகிறது. மனதுக்குக் கொஞ்சமானும் உற்சாகம் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. உண்மையில் இப்படியான விழாக்கள் மகிழ்ச்சிக்கு உரியவை.

      கருத்துரைக்கு நன்றியக்கா..
      நலம் வாழ்க..

      நீக்கு
  4. ஜோதி தொலைக்காட்சி எங்களுக்கும் வராமல் இருந்தது. இப்போது வருவதாக நம்ம ரங்க்ஸ் சொன்னார். ஆகவே நாங்களும் ஜோதியில் ஐக்கியம்.

    பதிலளிநீக்கு
  5. திருவாரூருக்குப் பின்னர் சோழர்கள் உறையூர்ப்பக்கம் வந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோழர்கள் புதிது புதிதாக தலை நகர்களை உருவாக்கி சிறப்பித்தார்கள்..அவற்றுள் நின்று நிலைத்து இருப்பவை திரு ஆரூர், தஞ்சை, கரூர்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. உறையூரும் தான். சோழ இளவரசி கமலவல்லித்தாயாரை இரண்டு நாட்கள் முன்னர் தானே அரங்கன் ரகசியமாய்ப் போத் திருமணம் செய்து கொண்டு வந்தார். இப்போது நாச்சியார் கோயில் என்றே அந்தப் பக்கத்தை அழைக்கின்றனர்.

      நீக்கு
  6. நல்ல தகவல்கள். எனக்கும் வாட்ஸாப்பில் ஆழித்தேரோட்ட காணொளி வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. அன்பின் ஜி
    தேரோட்ட விவரணங்களும், காணொளி தரிசனங்களும் கிடைக்கப் பெற்றேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. ஆழித்தேரோட்டம் குறித்த சில காணொளிகள் எனக்கும் வாட்ஸப் வழி வந்தது - பார்த்து ரசித்தேன். இங்கேயும் தகவல்கள் படித்து ரசித்தேன்.

    ஓம் நமச்சிவாய....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. ஆழித்தேரோட்டம் என்ற தலைப்பே சொல்லியது திரு ஆரூர் தேரோட்டம் என்று. திரு ஆரூர் தேரோட்டம் வெகு சிறப்பானது. தேரும் மிகப் பெரியது. திரு ஆரூரானை பல வருடங்களுக்கு முன் தரிசித்ததுண்டு. அருமையான பெரிய கோயில், அப்போது திருப்பணி நடந்து கொண்டிருந்தது.

    காணொளிகளும் கண்டு ரசித்தேன் அண்ணா.

    எங்கள் ஊரில் தேரோட்டத்திற்குத் தடி எடுத்துப் போட ஆனை வரும்! அது ஒரு கனாக்காலம்! ஆனை தெருவீதிகளில் வருவதும் நாங்கள் தேங்காய் வெல்லம் கொடுப்பதும் எங்கள் வீட்டு முன் ஓலைகளைத் தின்று கொண்டிருக்கும் காட்சி எல்லாம் மனதில் வந்தது.

    தகவல்களும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. யானை வந்து தேர் தள்ளியதையும் பார்த்திருக்கின்றேன்..

      அன்பின் கருத்துக்கு நன்றி..
      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..