நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 12, 2019

மங்கல மார்கழி 28

ஓம் 

தமிழமுதம் 

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி.. (542)
*
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 28


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் 
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் 
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்..
*

அருளாளனே...

உனது பெருமை எதையும்
அறியாத பிள்ளைகளாக
உன்மீது கொண்ட அன்பினால்
சிறுபேர் சொல்லி அழைத்திருக்கின்றோம்...

அதற்காக
எங்கள் மீது கோபம் கொள்ளலாகாது!..

கறவைகளின் பின் சென்று
அவற்றை அங்குமிங்குமாக
மேய்த்துத் திரிந்து

கூடிய கூட்டமாக
இடைப்பாடியின் பிள்ளைகள் அனைவரும்
சேர்ந்தமர்ந்து உணவினை உண்டு களிப்பதல்லால்
வேறெதையும் பகுத்தறியாத நாங்கள்

பிறவிகள் தோறும் எம் குலத்தில்
உன்னைப் பெறும் புண்ணியத்தை
உடையவர்களானோம்...

கோவிந்தனே!..
இத்தகைய வாழ்வினில்
உன்னோடு கூடியிருப்பதனால்
யாதொரு குறையும்
இல்லாதவர்கள் ஆனோம்...

எவராலும் பிரிக்க இயலாதபடிக்கு

உனக்கும் எமக்கும் ஆகிய
இந்த உறவு பெரும் பேறு..

இந்த உறவு
இவ்வண்ணமே நிலைத்திருக்க
அருள் பொழிவாய் எம்பெருமானே!...



தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ பெருமாள் கருட சேவை - தஞ்சை.. 
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணிமருதம் சாய்த்தான் அவனே
கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரமெரித்தான் எய்து.. (2332) 

-: ஸ்ரீ பேயாழ்வார் :- 

இயற்கையின் சீதனம் 

எள்



இளைத்தவனுக்கு எள்!..
அர்த்தம் பொதிந்த சொல்வழக்கு..

அந்தக் காலத்தில் நேர்மையின் வழி நின்றே
எல்லாமும் நடைபெற்றன..

ஒன்றிரண்டு விதி விலக்கு இருக்கலாம்...

விடிந்த பின் நாலு நாழிகை கழித்து
கையில் ஒரு செம்புடன் செக்கடிக்குச் சென்றால்
சுத்தமான நல்லெண்ணெய் வாங்கி வரலாம்
நம்பிக்கையுடன்!...

வாணியப் பெருமக்களே
தம் பொறுப்பில் எண்ணெய் ஆட்டி வைத்திருப்பார்கள்..

சுத்தம் செய்யப்பட்ட கறுப்பு எள்ளை நன்றாக உலர்த்தி
அதன் அளவுக்கு ஏற்ப வெல்லமோ கருப்பட்டியோ சேர்த்து
மரச் செக்கில் ஆட்டி எடுத்து வைத்திருப்பார்கள்..

அந்தக் காலம் எல்லாம் இனி வருமா?..
என்று தெரியவில்லை..


ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடு பாம்புஎள் எனவேஓது..

- என்று, கவி காளமேகப்புலவரால்
பாடப்பெற்ற பெருமையுடையது எள்..

எள்ளும் அதன் எண்ணெயும்
மனிதர்க்குச் செய்யும் நலன்கள் பற்பல..

எண்ணெய் என்றாலே
அது எள்ளில் இருந்து பெறப்படுவது தான்..

இது ஒன்றுக்குத்தான்
நல்லெண்ணெய் என்று பெயர்...

எள்ளும் எண்ணெய்யும் மனிதருக்கு..
பிண்ணாக்கு கால்நடைகளுக்கு...

விடியற்காலையில்
எள்ளின் பூக்களைப் பறித்துத் தின்றால்
கண் நோய்கள் வரவே வராது...


நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளிக்க
உடற்சூடு குறைவதுடன் 
தோல் நோய்களும் விலகுகின்றன..

காலகாலமாக இருந்து வந்த இந்தப் பழக்கத்தினை
நாம் ஏன் துறந்தோம்!?...

இன்றைக்கு
சரும நோய் - பொடுகு என்றெல்லாம்
தொலைக்காட்சி ஊடகங்களில்
நிமிடத்துக்கொரு தரம்
ஊளையிடுகின்றார்கள்..

ஆனாலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதென்றால்
நம்மவர்களுக்கு அலுப்பு.. எரிச்சல்...

எள்ளும் வெல்லமும்
உடலுக்கு வேண்டிய இரும்புச் சத்தை வழங்குகின்றன...

எள்ளும் நல்லெண்ணெய்யும்
இளம்பெண்களின் மாதவிலக்குச் சுழற்சியை
சமன் செய்து - ஜனனேந்திரியங்களை
வலுவாக்குகின்றன.. 

இதெல்லாம்
நம்மவர்களுக்குப் பிடிக்குமா.. - என்பதை விட
ஆங்கில மருத்துவத்துக்குப் பிடிக்குமா?..

ஆங்கில மருத்துவத்தை
நாடி நின்றால் தான் தமிழர்களுக்குத் திருப்தி!..

ஆங்கில மருத்துவம் என்றில்லை..
பொதுவாக எந்த மருத்துவமும்
அதிகமாக தேவையிருக்காது
எள்ளை முறையாகப் பயன்படுத்துவோருக்கு!...

அதனால் தான்
இப்படிச் சொல்லி வைத்தார்கள்..

  வைத்தியனுக்குக் கொடுப்பதை
வாணியனுக்குக் கொடு!..
*

சிவதரிசனம் 
திரு வெண்ணி 


இறைவன் - ஸ்ரீ கரும்பேஸ்வரர்  
அம்பிகை - ஸ்ரீ சௌந்தர்யநாயகி

தலவிருட்சம் -  நந்தியாவட்டை
தீர்த்தம் -  சூரிய தீர்த்தம்..

வெண்ணிப் பறந்தலை..
இது தான் இத்தலத்திற்கு
சங்க காலத்தில் வழங்கப்பட்ட பெயர்..

இவ்வூரில் நிகழ்ந்த போரின் போதுதான்
சேர பாண்டியர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான்
கரிகால் பெருவளத்தான்...


தற்காலத்தில் இவ்வூர்
கோயில் வெண்ணி எனப்படுகின்றது..

முசுகுந்த சக்ரவர்த்தி வழிபட்ட திருத்தலம்..

இத்திருக்கோயில் 
கரிகால்சோழனால் எழுப்பப்பட்டது...

கருப்பங்கழிகளை ஒன்றிணைத்தாற்போல்
சிவலிங்கத்தின் திருத்தோற்றம்...



இத்தலத்தில் வழிபாடு செய்வார்க்கு
நீரிழிவுக் குறைபாடுகள் சரியாகின்றன
என்று அறியப்பட்டுள்ளது...

இத்தலத்தில்
சர்க்கரையைத் தானமாகக் கொடுப்பது
சாலச் சிறந்தது..

அதேசமயம் - நாமும்
நம் வயதுக்கும் உடல் நலனுக்கும்
ஏற்ற உணவு வகைகளை அளவுடன் 
உட்கொள்வது மிகவும் அவசியமாகின்றது...

கண்டதையும் தின்று தீர்த்து
நோயை நமக்கு நாமே உண்டாக்கிக் கொண்டு 
கடவுளே.. கடவுளே.. - என்று
கதறினால் சரியாகுமா!..

என்றால் - ஒன்றும்
சொல்வதற்கில்லை..

இத்திருக்கோயில்
தஞ்சை - நாகை நெடுஞ்சாலையில்
20 கி.மீ., தொலைவில் உள்ளது..

பிரதான சாலையில் இறங்கி
ஒரு கி.மீ., தூரத்துக்கு
கிராமத்தின் உள்ளே நடக்கவேண்டும்...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
நீடாமங்கலம் செல்லும் நகரபேருந்துகள் அனைத்தும்
கோயில் வெண்ணியில் நின்று செல்கின்றன..

தஞ்சை நாகை - இருப்புப் பாதை வழியில் உள்ள
கோயில் வெண்ணி ஸ்டேஷனில் எல்லா பாசஞ்சர் ரயில்களும்
நின்று செல்கின்றன..
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்காப்பு

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலோர்பாகம் உடையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணி அமர்ந்துறை
ஊரானை உள்கவல்லார் வினை ஓயுமே.. (2/14) 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 

நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் உள்ளத் தாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.. (6/59) 
*

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை
திருப்பாடல் 08 


தொன்மயிலை வாயிலார் நாயனார்
கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7/39)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
*** 

14 கருத்துகள்:

  1. சற்றே வளைந்த பெருமாள்... குனிந்து அருட்பார்வை வழங்கும் காட்சி... அருமை. குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
  2. ​சிறிய எள்ளின் பெரிய பெருமைகள்.. ​

    சிவதரிசனமும் ஆச்சு...

    இப்போ தடை நீக்கும் பெருமாள் தரிசனத்துக்குக் கிளம்பவேண்டும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தடை நீக்கும் பெருமாள் எல்லாருக்கும் நல்லருள் புரியட்டும்..

      நீக்கு
  3. எள் குறித்த விளக்கம் அருமை ஜி
    நாம் எல்லாவற்றையும் மறந்யு விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      திரும்பவும் எல்லாவற்றையும் பெற வேண்டும்...

      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இன்றைய கேசவின் படம் பார்த்ததும்....தாந்தோன்றி மலை பெருமாள் நினைவுக்கு வந்தார். இவர் எங்கள் புகுந்தவீட்டுக் குலதெய்வம்..

    பாறையை தன் தோள்மீது சுமந்து கொஞ்சம் தோள், கழுத்து வளைந்து பார்ப்பதாகச் சொல்லுவாங்க...

    பாசுரம், இறைவன் தரிசனம், அமுதம் பருகி ஆயிற்று...

    ஸ்ரீராம் சொல்லியிருக்கும் அந்த வீடியோ இங்கு வந்திருக்கும் என்று நினைத்தேன் அண்ணா...பகிர்ந்திருக்கலாமே! கறவைகள் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிருக்கும் என்று...

    எள் சிறப்பு அருமை...நம்ம வீட்டுல எள்ளுக்கு முக்கியத்துவம் உண்டே.

    எல்லாம் சிறப்பு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தான்தோன்றி பெருமாள் மலைக்கு சென்றதில்லை...

      மற்றபடி அந்த காணொளியை தரவிறக்கம் செய்து இங்கே பதிவு செய்கிறேன்..

      மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  5. திருப்பாவை,திருவெம்பாவையுடன்
    கண்ணனையும் ,ஈசனையும் வழிபட ஏதுவாக ஆச்சு.
    எள்ளின் திறன் உணர்ந்தவர்கள் முன்னோர்கள்.
    எள்ளுப்பூ நாசி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எள்ளுப்பூவுக்கு இத்தனை மகத்துவமா.

    மிக நன்றி துரை செல்வராஜு.
    என்றும் நலமுடன் இருக்க என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. தங்களது வருகைக்கும் அன்பின் பிரார்த்தனைகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  7. உங்களது காணொளியை முகநூலில் தேடினேன், கிடைக்கலை! :( பார்த்ததா என்னனு புரியலை. போகட்டும்.

    வேங்கடவன் நேரே இறங்கி வந்துவிட்டான் போல இருக்கு. அருமையான ஓவியம். தி/கீதா சொன்னாற்போல் தாந்தோன்றி மலைப் பெருமாள் இப்படித் தான் இருப்பார் எனக் கேள்வி. பார்த்ததில்லை.

    வெண்ணியாற்றைத் தாண்டிப்போகும்போதெல்லாம் வெண்ணிப்பறந்தலை என நினைவில் வரும். ஆனால் கோயில் இருப்பதோ அதன் சிறப்போ இன்றே அறிந்தேன்.

    எள்ளின் மகத்துவமும் அருமையாகச் சொல்லி இருக்கீங்க. தஞ்சாவூர் கருடசேவைப்படங்களும் பார்க்கக் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  8. அழகான பாசுரம். சிறந்த தகவல்கள்.,.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் அழகு.
    எள்பற்றி சிறப்பான தகவல்.
    பழமைக்கு மாறி வருகிறார்கள். மீண்டும் செக்கு எண்ணெய் அதுவும் மரச்செக்கு எண்ணெய் வந்து விட்டது.

    காலம் மாறும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கருடசேவை கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..