நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

தமிழ் தரும் கணபதி

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு!..

                                                         
மலரில் இருந்து மணத்தைப் பிரிக்க முடிந்தாலும் - தமிழில் இருந்து பிரித்தறிய முடியாத சொல் - ஒளவையார்.

விநாயகப்பெருமானின் அருளைப் பெற  -  நமக்கு,  அவர் அறிவுறுத்தும் எளிய வழி.



பவளம் என, சிவந்த திருமேனியையும்  தும்பிக்கையையும் உடைய விநாயகப் பெருமானது திருவடிகளை,  

கடும் விரதம் , அருந்தவம் என உடலை வருத்திக் கொள்ளாமல் - எளிமையாக,

நாளும் தவறாது நல்மலர்களால் வணங்குவோர்க்கு - சரஸ்வதியின் அருளால்  பேச்சு வன்மையும்  நல்ல மனமும் உண்டாகும். மலர்களுள் சிறந்த செந்தாமரையில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியின் அருட்பார்வையும்  கிட்டும். 

இதில் - மேனி நுடங்காது என்பதற்கு - விநாயகப் பெருமானை வணங்குபவர் மேனி பிணிகளால் வருந்தாது. உடல் நலம் விளங்கும் எனவும் கொள்ளலாம். 


ஆக, விநாயகப் பெருமானை அன்புடன் அருகம் புல் அல்லது அன்றலர்ந்த மலர்  கொண்டு வணங்கி வருவோர்க்கு - அறிவும் திருவும் ஆரோக்கியமும் கிட்டும் என்பது ஒளவையாரின் அமுத மொழி.

இத்திருப்பாடல் - ''மூதுரை'' எனும் நீதி நூலின்  காப்புச் செய்யுள் .

இந்த மூதுரையில் தான்,

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்..

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ (டு)
இணங்கி இருப்பதுவும் நன்று.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவை அல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நல் மரம்.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.    

- என  அமுத விருந்தளிக்கின்றார் - ஒளவையார்.
பின்னும், 


பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக்கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா..

என்று - ''நல்வழி'' எனும் நூலில் - அறச்செயல்களை வகுத்தளிக்கும் போது துங்கக்கரி முகத்துத் தூமணியாகிய கணபதியை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றார். இந்த நூலில் -

ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும்; ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
'இல்லை' என மாட்டார் இசைந்து..

செய்தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்றுஅறிந்து அன்றுஇடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்..

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்; இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்றெடுத்த
தாய்வேண்டாள்; செல்லாது அவன்வாயின் சொல்..

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.. 

ஆற்றங் கரையின் மரமும், அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும், விழும்அன்றே; ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்;
பழுதுண்டு வேறோர் பணிக்கு..  

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்..

- போன்ற இன்சுவைப் பாடல்கள் விளங்குகின்றன. 

இந்தப் பாடல்களை ஊன்றிக் கவனித்தால் அறிவின் மகத்துவத்தையும் செல்வத்தின் அவசியத்தையும் ஒளவையார் வலியுறுத்துவதை அறியலாம்.

சொல்வாக்கும் செல்வாக்கும் பெற்றுய்ய வேண்டும் எனில் - நல்ல அறிவு வேண்டும் என்பது திண்ணம். அப்படிப்பட்ட அறிவின் வடிவாகத் திகழ்வது - 

தமிழ்!..  

அமுதத் தமிழ்!.. - சொல்லிப் பாருங்கள். நாவினில் தேனூறும்.

மற்றெந்த மொழியுடனும் அமுதம் கலந்திட வாய்ப்பே இல்லை!..

மற்ற மொழிகள் அறியத் தருபவை. தமிழ் ஒன்றே - அறிவைத் தருவது!.

அதனால் தான் - பாரதிதாசன்,

''தமிழுக்கும் அமுதென்று பேர்!..'' - என்று முழங்கினார்.


இப்படி அமுதாக விளங்கும் தமிழை - இயல், இசை, நாடகம் - எனும் மூன்றின் வடிவாகத் தனக்கு வழங்குமாறு ஒளவையார் வேண்டிக் கொள்ளும் போது - 

அவர் - கணபதிக்கு  சமர்ப்பிப்பது,

பால், தேன், பாகு, பருப்பு.

பால் - தன்னுடன் நான்கு நற்பொருள்களைக் கொண்டு விளங்குவது.

தேன்  - தனித்து மருந்தென விளங்குவது. தானும் கெடாது. தன்னுடன் சேர்ந்தவைகளையும் கெடுக்காது.

பாகு - மூலிகைகளுடன் சேர்ந்து மருந்தெனத் திகழ்வது.

பருப்பு - சாத்வீக உணவுப்பொருட்களுள் முதன்மையானது.

இத்தகைய நிவேதனம் - நிவேதிக்கப்பட்ட பின் பிரசாதமாகின்றது. இந்தப் பிரசாதமே - விருந்தெனவும் மருந்தெனவும் ஆகின்றது. இதுவே மூளையின் இயக்கத்தினை அறவழியில் தூண்டுகின்றது.


எனவேதான் விநாயகர் - சிற்சில தலங்களில் தூண்டுகை விநாயகர் என திருப்பெயர் கொண்டு விளங்குகின்றார்.

இப்படி  - மூளையின் இயக்கம் தூண்டப்பட்டு விட்டால்,

எல்லாம் ஒன்றென உணர்ந்து சித்தம் சிவமயம் ஆகிவிடும்.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.

இப்படி உணரச் செய்வது தான் - இந்த நிலையை எய்துவதைத்தான்,

''சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டி..''

என்று விநாயகர் அகவல் மூலமாக நிலைநிறுத்துகின்றார் - ஒளவையார்.


ஒளவையார் நமக்களித்த நல்வழிப்படி  
விநாயகப் பெருமானைச் சரணடைவோம்!..


துங்கக்கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா..

ஓம் கம் கணபதயே நம:

9 கருத்துகள்:

  1. அருமை
    ஔவையார் நமக்களித்த நல்வழிப்படி
    விநாயகப் பெருமானை சரணடைவோம்

    பதிலளிநீக்கு
  2. அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்கள் வருகைக்கும் இனிய நல்வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. ஆகா... ஆகா... இன்சுவைப் பாடல்கள் அருமை...

    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  4. அருமையான பாடல்கள் !
    மறந்து விட்டேனோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ,உங்கள் பதிவைப் படித்தேன். நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூதுரையும் நல்வழியும் நம்மை நல்வழிப்படுத்துபவை. மறக்க முடியுமா!.. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. 'சத்தத்தினுள்ளே சதாசிவங் காட்டி
    சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டி..''

    சிறப்பான வைரவரிகளைப் பதிவாக்கியமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..