நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 24, 2020

அமுத நிலா

இன்று தை அமாவாசை.

கிட்டத்தட்ட  215 ஆண்டுகளுக்கு முன், இதே  - தை அமாவாசை நாள்.

தலம் : - திருக்கடவூர்.

இடம் : - வம்பளந்தான் திண்ணை.

நேரம் : - (அறியாமை) சாயுங்காலம்.

சூழல் :- ஊர் முழுதும் அழுத்தமான மௌனம் .

 அதே சமயம் பரபரப்பு.. என்ன நடக்குமோ என்ற திகைப்பு!..


'' என்னவாம்!?..''

'' நம்ம சுப்ரமண்ய குருக்கள் இருக்காரே!..''

'' யாரு?.. அம்பாள் சந்நிதியில உட்கார்ந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களை அபிராமி.. அபிராமி..ன்னு வம்புக்கு இழுப்பாரே.. அவரா?..''

'' அவரே தான்.. இன்னைக்கு சரியா மாட்டிக் கொண்டார்!..''

'' யார் கிட்டே!..''

'' மகராஜா..கிட்டே!..''

''..என்னது மகராஜாவா!.. அவர் எங்கே இங்கே வந்தார்?.. நான் மாயவரத்ல இருந்து இப்பதானே வர்றேன்.. கொஞ்சம் புரியும்படி சொல்லு..''

'' தஞ்சாவூர்ல இருந்து சரபோஜி மகராஜா பூம்புகார் கடல் கரைல அமாவாசை தர்ப்பணம் செய்துவிட்டு -  இங்கே அம்பாளை தரிசிக்க வந்திருக்கார்..''

'' ம்!..''

'' கோயிலுக்கு வந்தவர் .. கோயில்ல நம்ம சுப்ரமணியம் அரை மயக்கத்தில இருக்கிறதை பார்த்து விட்டார்..''

'' அடடே!..''


'' நம்ம ஆளுங்க குருக்களோட அடாவடிகளை சொன்னப்போ ராஜா நம்பற மாதிரி இல்லை!.. ராஜாவே அவரைப் பார்த்து,

குருக்களே!.. இன்னிக்கு என்னங்காணும் திதி..ன்னு கேட்டதும், அரை மயக்கத்தில் இருந்த சுப்ரமணி பௌர்ணமி… ன்னு உளறிட்டார்!..''

'' அடப்பாவி மனுஷா!.. நெறஞ்ச அமாவாசை!.. அதுவும் தை அமாவாசை!.. ''

'' அப்பறம் என்ன!.. இன்னிக்கு பௌர்ணமின்னா ஆகாயத்தில நிலா வருமா.. ன்னு .. ராஜா கேட்க… 
இவரும்.. வரும் போய்யா.. சர்தான்.. அப்படின்னுட்டார்...''

'' ராஜா கடுப்பாயிட்டார். இன்னிக்கு சாயுங்காலம் நிலா வரல்லேன்னா.. உன்னைய அடுப்புல போட்டு வறுத்துடுவேன்னுட்டார்.. ''

'' அடடா!..''

'' அவருக்காக  நெருப்பு மூட்டி - அதுக்கு மேல ஊஞ்சல் கட்டி இருக்காங்க!.. ''

''அடப்பாவமே.. புள்ளகுட்டிக்காரர் ஆச்சே!... கோயிலுக்கு வந்தோமா.. பஞ்சாங்கம் படிச்சு ரெண்டு பாட்டு பாடுனோமா..ன்னு இல்லாம.. வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிட்டாரே!.. சரி..  போனா போவுது குருக்களை விட்டுடுங்க.. ன்னு  அவருக்காக யாரும் ராஜாக்கிட்டே பேசலியா!..''

'' யார் பேசுவா?.. எப்ப பாத்தாலும்.. அவனோட என்ன கூட்டு!.. இவனோட என்ன சேர்த்தி..ன்னு  புலம்பிக்கிட்டே இருந்தா யார் தான் அவரை பக்கத்தில சேர்த்துக்குவாங்க!.. நீயே சொல்லு!..''

'' அதுவும் சரிதான்!...''

'' அதுவும் இல்லாம.. கோயிலுக்கு வர்ற பொண்ணுங்களைப் பார்த்து நீ அம்பாள் மாதிரி இருக்கேன்னு சொன்னாக் கூட பரவாயில்லே!..  நீ வராஹி மாதிரி இருக்கே.. நீ பத்ரகாளி மாதிரி இருக்கே.. நீ சாமுண்டி மாதிரி இருக்கே...ன்னு சொன்னா.. நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு கோவம் வருமா.. வராதா?..''

'' வரும் தான்.. ஆனாலும் பாவங்க.. நம்ம குருக்கள்!.. ''

'' நீங்க வேறே...  ராஜாக்கிட்டேயே உளறிட்டோமே.. அப்படின்னு ஒரு வருத்தம் கூட குருக்கள் கிட்ட இல்லையே!.. ''

'' அப்படியா!..''


'' என்ன அப்படியா?.. எல்லாம் அவ பாத்துக்குவா.. அவ தானே என்னய இந்த மாதிரி பேச வெச்சி வம்புல மாட்டி விட்டா... அப்படி இப்படின்னு ஒரே பிடிவாதம்.. அதனால தான் இப்ப சிக்கல்ல சிக்கி ஊஞ்சல்ல ஆடப்போறார்..''

'' சரி .. அப்ப இதுக்கு என்னதான் முடிவு?..''

'' முடிவா.. அதை அவரே தேடிக்கிட்டார்!.. அம்பாள் எனைக் காப்பாத்துவா.. ன்னு சொல்லிட்டு இருக்கார். கீழே நெருப்பை உண்டாக்கி மேலே ஊஞ்சல் தொங்க விட்டிருக்காங்க.. அதுல இருந்து தான் இன்னும் கொஞ்ச நேரத்தில.. பாடப் போறார் நம்ம சுப்ரமணி!.. ''

'' நெருப்பு மேலே பாட்டா!?.. ''

'' ஆமா.. அந்தாதி..ன்னு ஒரு பாட்டு வகை இருக்கு .. ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசில உள்ள எழுத்து அசை, சீர்,  ....''

'' இதெல்லாம் நமக்குப் புரியாதுங்க.. தெளிவா சொல்லுங்க..''

'' ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசி சொல்லை - அடுத்த செய்யுளோட முதல் சொல்லாக வச்சி பாடுறது.. அதுக்குப் பேர் தான் அந்தாதி.. அந்த மாதிரி பாடுறதா இருக்கிறார்..இப்ப புரியுதா!.. ''

'' புரியுது.. நல்லாவே புரியுது!.. அப்போ.. பாட்டு பாடுனா நிலா வருமா!?..''

'' யாருக்குத் தெரியும்!.. அங்கே போய் பார்த்தால் தானே தெரியும் .. நான் அதுக்குத் தான் கோயில் வாசலுக்குப் போறேன்!..''

'' அப்போ.. சாமி கும்பிட இல்லையா?.. ''

'' அதுக்கெல்லாம் வயசான காலத்தில பாத்துக்கலாம்!..''

'' அப்போ... நானும் வர்றேன்!... என்ன தான் நடக்குதுன்னு பாக்கணும்!..''

'' ஆமா.. ஏதோ.. பாட்டு சத்தம் காதுல விழலே!...''

'' ஆமாமா!.. குருக்கள் தான் பாடுறார்... அப்ப முன்னாலேயே கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரா!..'' 

'' இரு ..இரு.. என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு.. ஊரே கூடி நிக்குது போல.. முதல்ல பாட்டைக் கவனி.. ''



விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் 
பழிக்கே உழன்று வெம்பாவங்களே  செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே!..

'' கேட்டியா.. இப்பவும் என்ன சொல்றார் பார்.. கயவர்  தம்மோடு என்ன கூட்டு.. ன்னு.. அதாவது நம்மள ... அட ஏன் மேல இடிக்கிறே!.. கண்ணு தெரியலயா?.. பட்டப் பகல் மாதிரி நிலவு இருக்குறப்ப!...''

'' நிலவா!... அது எங்கேயிருந்து வந்திச்சி.. இன்னிக்கு அமாவாசை.. மறந்து போச்சா!..''

'' என்ன உளர்றே!.. இவ்வளவு வெளிச்சம் நிலவு இல்லேன்னா எப்படி வரும்!?.. ஆ.. ஆ.. அதோ.. பார்யா.. நிலா.. வானத்து.. மேலே!..''

'' என்னா அதிசயமா இருக்கு!.. நம்பவே முடியலயே!.. இப்படியும் நடக்குமா!.. ''

'' நடந்திருக்கே!..  குருக்கள் விஷயமான ஆள்தான்யா!.. பாட்டு பாடி நிலாவ கொண்டாந்துட்டாரே!..''

'' இங்கே பாரு... அன்னிக்கு அவரை குறை சொன்ன  பொண்ணுங்கள்ளாம் ... இப்ப ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து கும்புடுறதை!.. அப்பப்பா.. இந்தப் பொண்ணுங்கள நம்பவே முடியலயே...''


'' கோயில்ல குடியிருக்கிற அம்பாளையே நம்ப முடியலையே... இவ தானே அன்னிக்கு பௌர்ணமி.. இன்னிக்கு அமாவாசை.. ன்னு உருவாக்கி வெச்சா.. இப்ப - அவளே.. பாட்டுக்கு மயங்கி நிலாவைக் காட்டிட்டாள்... ன்னா!..''

'' அதுவும்..  தமிழ் பாட்டுக்கு!.. அம்பாளே மயங்கிட்டாள்...ன்னு அர்த்தம்!..''

'' நாம தான் குருக்களப் பத்தி தப்பு கணக்கு போட்டுவிட்டோம்.. அங்கே பார்.. ராஜாவே எந்திரிச்சு வந்து குருக்களைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு ... என்னது.. அபிராமி பட்டர்..ன்னு பட்டயமா!.. சரிதான்.. நல்ல மனுஷனுக்கு மரியாதை செய்ய வேண்டியது தான்யா!..''

'' இன்னும் பாடறார்.. கேளுங்க.. ஆஹா!.. மனசு கரையுதே... ''

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ் 
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல் 
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!...

'' பார்.. பார்.. அம்பாளை நமக்கெல்லாம் தரிசனம் செய்து வைக்கிறார்.. ஆஹா.. தாயே.. தயாபரி.. எங்க பிழையெல்லாம் பொறுத்துக்கம்மா!.. எங்களுக்கு நல்ல புத்தியக் கொடும்மா!.. அபிராமி!.. அபிராமி!..''

'' என்னய்யா.. கண்ணுல ... ''

'' ஆனந்த கண்ணீர்!..  ஐயா!.. ஆனந்தக் கண்ணீர்!..
உங்க கண்ணுலயுந்தான்.. கண்ணீர் வருது!.. ''

'' நாம எல்லாம் குருக்களை தப்பு தப்பா சொல்லியும், அவரு நமக்கும்  அம்பாள் தரிசனம் செஞ்சு வெக்கிறார்..ன்னா..  அவரு தான்யா மனுசன்..''

'' உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் ..ன்னு ஆரம்பிச்சு - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!.. ன்னு நூறு பாட்டு பாடி அந்தாதிய பூர்த்தி செஞ்சிருக்கிறார்!..'' 

'' நூல் பயன் என்ன சொல்றார்..ன்னு கவனி..''

ஸ்ரீ அபிராமவல்லி  
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்கக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!..

'' கேட்டீங்களா.. அம்பாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லை.. ன்னு.. சொல்லி நம்ம கண்ணைத் தெறந்து வச்சிருக்கார்.. ''

'' வாங்க நாமளும் போய் அவர்கிட்ட நல்லதா நாலு வார்த்தை பேசுவோம்.. இனிமே.. எனக்கு அபிராமி தான் விழித்துணையும்.. வழித்துணையும்!..''

'' எனக்குந்தான்!..''

அபிராம பட்டர் வாழ்க!.. வாழ்க!..
அபிராமவல்லி வாழ்க!.. வாழ்க!..
அமிர்தகடேசர் வாழ்க!.. வாழ்க!..

- : ஓம் சக்தி ஓம் :-
ஃஃஃ

15 கருத்துகள்:

  1. தெரிந்த கதையாயினும் தங்களது விளக்கத்தில் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அபிராமி அந்தாதியைப் பற்றித் தெரிந்தாலும் மீண்டும் படிக்கச் சுவை. முகநூலிலும் யாரோ பகிர்ந்திருந்தனர். அருமையான பதிவு. சரளமான உரையாடல்!

    பதிலளிநீக்கு
  3. விளக்கம் உங்கள் பாணியில் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அபிராமியை தொழுவாருக்கு ஒரு தீங்கும் வராதுதான்.
    மிக அருமையான உரையாடல் மூலம் அபிராமி வானில் முழு நிலவை பக்தனுக்காக தோன்ற செய்த கதையை சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      அபிராமியைத் தொழுவார்க்கு அல்லல் ஒன்றில்லையே...

      நீக்கு
  5. அன்னை அபிராமி மனமெங்கும் நிறைந்தாள்.
    அண்டம் எங்கும் நிறைந்தாள்.
    தாடங்க நாயகி,குருக்களையும் காத்து
    நமக்கும் வழிகாட்டினாள். அமாவாசை சிறப்பு
    பெற்றது அவள் அருளால்.
    மிக்க நல்லதொரு பதிவை இட்டதற்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னை அவளல்லால் ஆவது ஒன்றும் இல்லை...
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  6. வித்தியாசமான முறையில் சொல்லியிருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கதை அருமை. இன்று தை அமாவாசை, வெள்ளிக்கிழமை, சனிப்பெயர்ச்சி.... முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அபிராமி பட்டர் கதை - மிகச் சிறப்பாக உங்கள் பாணியில் சொல்லி இருப்பது சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..