நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 02, 2020

மார்கழி தரிசனம் 17

தமிழமுதம்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையின் மாணப் பெரிது..(124)
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 17


அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ ஒப்பிலியப்பன் 
இன்றேகழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்
பொன்தோய் வரைமார்பில் பூந்துழாய் அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம்.. (2283)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
திருவீழிமிழலை

நித்தமும்ஆயிரம் தாமரை கொண்டு ஈசனைப் போற்றி
ஸ்ரீஹரிபரந்தாமன் சக்ராயுதம் பெற்ற திருத்தலம்..

அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப்பெருமானும்
மக்கட் பசிதீர பணி செய்தது இங்குதான்.. 


வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே..

இறைவராயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.. (1/92)
-: ஞானசம்பந்தப் பெருமான் :-

ஸ்ரீ காத்யாயினி தேவியுடன்
ஸ்ரீ மாப்பிள்ளை ஸ்வாமி   

நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று குறையக் கண் நிறைய விட்ட
ஆற்றலுக்காழி நல்கிஅவன் கொணர்ந்திழிச்சுங்கோயில்
வீற்றிருந்தளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே..(4/64)
-: திருநாவுக்கரசர் :-
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை



முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்... 3


ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்... 4
***


தேவி தரிசனம்


அரணம் பொருள் என்று ஒன்றும் இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே..(051)
-: அபிராமிபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. திருவீழிமிழலை...  என்ன ஒரு பெயர்.   என் மாமா அங்கு வேலை பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    தரிசித்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு...

      திருவீழிமிழலையில் நான்காண்டு காலம் வசித்திருக்கிறோம்...

      எனது மூங்கில் பாலம் கதை அதையொட்டியதே...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நேற்று தாங்கள் என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். உடனடியாக என்னால் வர இயலாமல் போய் விட்டது குறித்து வருந்துகிறேன்.

    ஆகா, காலையில் எழுந்ததுமே நல்ல இறை தரிசனங்ள் கண்டு மகிழ்ந்தேன். ஆழ்வார்கள் அருளிய அழகான திருப்பாவை பாசுரங்களும் . திருநாவுக்கரசர் , திருஞானசம்பந்தர் பாடியருளிய திருவெம்பாவை பாடல்களும் அருமையாக உள்ளது. எப்போதும் அன்னையை தொழுத அபிராமிபட்டர் தந்த பாடல்களுமாய் இன்றைய மார்கழி தரிசனம் இனிமை. பலகோவில்களின் இறையனாரிகளின் படங்களும் கண்குளிர கண்டுகந்து பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன்.
    இனித் தொடரவும் ஆண்டவன் எனக்கு அருள் தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இப்பக்திப் பரவச பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி...

      அழகிய கருத்துரை கண்டு நெகிழ்ச்சி...

      ஏதோ நான் அறிந்தவற்றினை
      பொதுவாக விளங்கும் இறை இலக்கியத் தளங்களின் துணை கொண்டு பதிவில் வைக்கிறேன்...

      இப்பணி தங்களைப் போன்ற நல்லோர் தம் வாழ்த்துரைகளாலும்

      எல்லாம் வல்ல இறைவனின் கருணையினாலும் நலமாக நிகழ்கின்றது..

      மேலும் தொடர்வதற்கு பிரார்த்தனைகள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. திருவீழிமிழலை கோவில் மிகவும் நன்றாக இருக்கும். மாப்பிள்ளை ஸ்வாமி தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    இன்றைய தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி தரும் தரிசனம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நேற்றுகூட எங்கள் இல்லத்தில் உங்களின் பதிவுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உங்களின் ஆன்மீக அறிவும், செறிவான பதிவும் எங்களுக்கு பல புதிய தகவல்களைத் தருகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. திருவெம்பாவைப் பாடல்களின் தமிழ்,, மனம் நிறைக்கிறது..
    மஹாவிஷ்ணு ,ஈசன் படக்காட்சி மிகமிக அற்புதம். என்ன ஒரு பாசம் இருவர் முகத்திலும் மிக நன்றி துரை.
    திருவீழிமலை நாதஸ்வர வித்வான் ஒருவர் இருந்தார் இல்லையா.
    உப்பிலியப்பன் படக்காட்சி ஒய்யாரம்.

    அருமையான பதிவைக் காலையில் பகிர்ந்து மனமாற வைத்துவிட்டீர்கள் மிக மிக
    நன்றி மா துரை.

    பதிலளிநீக்கு
  6. திருவீழிமிழலைக் கோயில் தரிசனத்திற்கு மிக்க நன்றி. கருவிலியில் இருந்து பார்த்தாலே இந்தக் கோயில் கோபுரம் தெரியும். அங்கேருந்து நடந்தே வருவார்கள். ஆனால் நான் இந்தக் கோயிலுக்குப் போனது சுமார் பத்து வருடங்கள் முன்னாடி தான்! மாப்பிள்ளை சுவாமியும் அம்பிகையின் நாணம் கலந்த அழகும் பார்க்கப் பார்க்கப் பரவசம். அருமையான தரிசனம். ஒப்பில்லா அப்பனையும் சின்ன வயசிலிருந்து நினைச்சப்போ எல்லாம் பார்க்கும் பேறு கிடைத்திருக்கிறது. அனைத்துக்கும் நன்றி. திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களுக்கான விளக்கங்களைப் படங்கள் மூலமே அளிப்பதும் மகிழ்ச்சியாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பதிவு. படங்கள் ஒவ்வொன்றும் அழகு. நன்றி. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..