நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 16, 2017

மார்கழிக் கோலம் 01

ஓம்

தமிழமுதம்


அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.. (01)

பாலும்தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :-
***
திரு அரங்கன்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின்
சேவடி செவ்வித் திருக்காப்பு..

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!..
-: பெரியாழ்வார் :-

மாதங்களில் நான் மார்கழி!..

- என்றுரைக்கின்றான் - ஸ்ரீகிருஷ்ணன்..

அந்த அளவுக்கு மங்கலகரமானவை மார்கழியின் நாட்கள்..

மார்கழியின் முதல் விடியலிலிருந்து தேவர்களுக்கு வைகறைப் பொழுது..
ஆலயங்கள் தோறும் திருப்பள்ளி எழுச்சி!.. தனுர் மாத வழிபாடுகள்!..  

தெருக்கள் தோறும் இல்லங்களின் தலைவாசலில் எழில் மிகும் கோலங்கள்!.. 

வண்ண வண்ணப் பூக்கள்!. . சுடர் விடும் அகல் விளக்குகள்!..

ஏன்!.. இதற்கு முன் வாசலில் கோலங்கள் இட்டதில்லையா?..
அவற்றில் பூக்களையும் அகல் விளக்குகளையும் வைத்ததில்லையா?.. 

அதற்கு முன் வாசலில்
கோலமிட்டு பூக்களையும் விளக்குகளையும் வைத்தார்கள் தான்!..

பிறகு!?..

இந்த மார்கழி முழுதும் பொருள் பொதிந்த கோலங்கள்..

அப்படி என்றால்?..

கோலத்தின் நடுவே -
பசுஞ்சாண உருண்டையில் பூசணிப் பூ ஒன்றை வைப்பார்கள்!.. 

அதன் பொருள் -
இந்த வீட்டில் பூ ஒன்று பூவை என்று பூத்திருக்கின்றது!.. 
கன்னி ஒருத்தி இருக்கின்றாள் என்பதை இலை மறைவு காயாக உணர்த்துவதாகும்!..

அந்தக் காலத்தில் கன்னிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலை..

இன்று அப்படி இல்லை.. என்றாலும் -
மார்கழிக் கோலங்களுக்கு மகத்துவம் அதிகம்..  


மங்கலம் சிறக்க வேண்டும்!.. மனையறம் செழிக்க வேண்டும்!..
மதிநலம் விளைய வேண்டும்!... மண் பயனுற வேண்டும்!.. 

இவை யாவும் எங்கிருந்து தோன்றும் ?.. 

ஒளி படைத்த நல்ல மனங்களின் உள்ளிருந்து!.. 

அப்படி ஒரு ஒளி - அதுவும் பேரொளி - 
ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் - 
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருத்துழாய் வனத்தில் உதித்த 
கோதை நாச்சியார் தம் திருஉள்ளத்தில் தோன்றியது!..  

அதன் பெயர் தான் -  திருப்பாவை!..

திருப்பாவை என்பது ஒரு நூல் அல்ல!.. 

நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வாழ்வியல் நெறி...

மங்கலகரமான மார்கழி முழுதும் நம்மை வழிப்படுத்துகின்றாள்  - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்!..

நம்மை அவள் அழைக்கின்றாள் - மார்கழி நீராடலுக்கு!.. 
வாருங்கள் - அவள் துணையுடனே செல்வோம்!..
***

நல்லதோர் வீணை


அருளமுதம் 

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் - 01
***
நன்றி - திரு. கேசவ் ஜி
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்குப் பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..
 ***

சிவ தரிசனம்
தில்லை திருச்சிற்றம்பலம்


இறைவன் - ஆனந்தக்கூத்தன்
அம்பிகை - சிவகாமசுந்தரி
தீர்த்தம் - சிவகங்கை
தலவிருட்சம் - தில்லை

அங்கே அரங்கம்!..

வைணவத்தில் கோயில் எனில் - 
திருஅரங்கம்..
அரிதுயில் கோலத்தில் அரங்க நாதன்.. 

இங்கே அம்பலம்!..

சைவத்தில் கோயில் எனில் - 
தில்லைத் திருச்சிற்றம்பலம்..
ஆனந்தக் கூத்தனாக அம்பலவாணன்..

ஐயன் அம்பிகையுடன் 
ஆனந்தத் திருநடனம் நிகழ்த்தும் திருத்தலம்...
பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் திருத்தலம்..

- பாடிப் பரவியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், மாணிக்கவாசகர்..
மற்றும் பல உத்தம அடியார்கள்..

தீர்த்தனைச் சிவனை சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப் 
பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக்கொடியேன் மறந்துய்வனோ..(5/2) 
-: அப்பர் பெருமான் :- 
***


ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய 
தேவாரம்

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!.. (6/95)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 01


போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் என்னை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!.. 
***

மீண்டும் மார்கழியில்
தேவாரம்
திருப்பாவை திருவெம்பாவை
ஆகிய தெய்வப் பனுவல்களின்
திருப்பாடல் பதிவுகளை
வழங்குதற்குப் பேறு பெற்றேன்..

இன்று முதல் நமது தளத்தில்
ஆறாவது ஆண்டாக 
மார்கழிப் பதிவுகள் தொடர்கின்றன..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
***

8 கருத்துகள்:

  1. இனிய காலை மார்கழித் திங்கள் வணக்கம் துறை செல்வராஜு சகோ...

    கோலம் பார்த்து கருத்திட வரோம்..இது அலைபேசி வழியாக....

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மார்கழியில் காலையில் அழகிய தரிசனம் நன்றி ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. மார்கழிக் கோலம் அழகு! இன்று காலையில் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லி.... தின்னல் உறுதியேல் நம்பி என்று சொல்லி படைத்தும் ஆயிற்று!!!

    பாடல்கள் அருமை..சகோ

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஓவியர் கேசவ் ஓவியத்தை The Hindu Friday supplementஇல் பார்த்தேன். மெய் மறந்தேன். இப்பொழுது உங்கள் பதிவு மூலமாகவும். கோலமே அழகு. மார்கழிக்கோலம் கேட்கவும் வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  5. மார்கழி கோலம் மகிழ்ச்சி தந்தது. நன்றி. தொடரட்டும் கோலங்கள்!

    பதிலளிநீக்கு
  6. மார்கழி பிறந்து விட்டது இனிப் பதிவுகளிலெல்லாம் திருப்பாவையும் திருவெம்பாவையும் தான் நன்கு ரசிக்கலாம்

    பதிலளிநீக்கு
  7. ஆஹா மார்கழி வந்து விட்டது... அந்த பெயிண்டிங் மிக அழகு..

    ஒளவையாரின் அன்னையும் பிதாவையு... மாத்தி எங்கோ எழுதியிருந்தார்கள் இப்படி...

    “அன்னையும் பிதாவும் பின்னடிக்கிடைஞ்சல்:)..
    ஆலயம் தொழுவது வேலை மினக்கேடு”.. ஹையோ கடவுளே.. ஹா ஹா ஹா..

    உங்க வீட்டுக் கோலத்தையும் டெய்லி போடலாமே இங்கு துரை அண்ணன்.

    பதிலளிநீக்கு
  8. ஆனந்தக்கூத்தன் அழகிய தரிசனம்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..