நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 12, 2017

கார்த்திகைத் திங்கள் 4

கார்த்திகையின் முதல் திங்களன்று
திருஆலம் பொழில் சிவாலயத்தையும்

இரண்டாம் திங்களன்று
திருக்காட்டுப்பள்ளி சிவாலயத்தையும்

கார்த்திகை மூன்றாம் திங்களன்று
திருக்கரந்தை சிவாலயத்தையும்
தரிசனம் செய்தோம்..

கார்த்திகையின் நிறைவில்
வழக்கம் போலவே சிவாலய தரிசனம்..

இன்றைய திருத்தலம் - திரு ஐயாறு..

இந்நாளில் திருவையாறு என்று வழங்கப்படுகின்றது..

இத்திருத்தலம் -
தஞ்சை மாநகரின் வடக்கே 10 கி.மீ தொலைவில்
காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ளது

திருத்தலம்
திரு ஐயாறு..


இறைவன்
அருள்மிகும் ஐயாறப்பர் 
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்

அம்பிகை
அருள்தரும் அறம்வளர்த்தநாயகி
ஸ்ரீ தர்மசம்வர்த்தனி


தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி, சூரிய தீர்த்தம்...

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், மாணிக்கவாசகர்..

எண்ணரும் சிறப்புகளை உடைய திருத்தலம்...

தஞ்சையிலிருந்து 
இத்திருத்தலத்திற்காக வடக்கு நோக்கிப் பயணிக்கும்போது -

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி மற்றும் 
காவிரி ஆகிய ஐந்து நதிகளைக் கடக்க வேண்டும்...

தஞ்சையில் இருந்து பயணிக்கும்போது மட்டுமே
இந்த ஐந்து நதிகளையும் கடக்க வேண்டியிருக்கும்...

காவிரி புஷ்ய மண்டப படித்துறை - திரு ஐயாறு

அந்தக் காலத்தில் -
இந்த ஐந்து நதிகளிலும் நீராடிக் கரையேறியே
ஐயாறப்பனையும் அறம் வளர்த்த அம்பிகையையும்
வழிபடுதல் மரபாக இருந்திருக்கின்றது...

திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் - இவ்வழியே தான் நடந்திருக்கின்றார்கள்..

காசிக்குச் சமமான திருத்தலங்களுள் திரு ஐயாறும் ஒன்று...

திருவையாற்றினை அடுத்த அந்தணக்குறிச்சியில்
சிலாத முனிவருக்கு மகனாகத் தோன்றிய நந்தியம்பெருமான் -
இங்கே சூரிய புஷ்கரணியில் மார்பளவு நீரில் நின்று கொண்டு
ஏழுகோடி ருத்ர ஜபம் செய்தார்...

அப்போது நீரிலிருந்த மீன்கள் அவரது உடம்பினை அரித்து விட்டன...

அது கண்டு மனம் கனிந்த அம்பிகையின் திருத்தன பாரங்களில் இருந்து
கருணை வெள்ளம் சுரந்தது...

ஐயனும் அம்பிகையும் -
நந்தியம்பெருமானைத் தமது திருமகனாக ஏற்று மகா அபிஷேகம் செய்வித்தனர்...

ஈசன் தம்முடைய மான், மழு, சந்திர கலை ஆகிய அடையாளங்களுடன் அதிகார தண்டத்தையும் வழங்கி சிறப்பித்தார்...


நெற்றிமேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர்
பொற்றடம் புய நான்கும் பொருந்துறப்
பெற்றெம்மான் அருளால் பிரம்பு ஒன்றுகைப்
பற்றும் நந்தி பரிவொடு காப்பது..

- என்று கந்தபுராணம் புகழ்கின்றது..


திருக்கயிலாய தரிசனம் காண விழைந்த அப்பர் ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம் திரு ஐயாற்றில் தான் அருளப்பட்டது...

காவிரியின் தென்கரையிலிருந்த சுந்தரர் -
வெள்ளப் பெருக்கினால் தவித்து ஓலமிட்டார்..

அதுகேட்ட விநாயகப் பெருமான் தானும் ஓலமிட
பொங்கி ஓடிய காவிரி வழிவிட்டு விலகி நின்றதாக ஐதீகம்...

திருக்கடவூரில் தோன்றிய குங்கிலியக் கலய நாயனார்
திருவையாற்றில் குண்டம் அமைத்து குங்கிலியத் தூபமிட்டு வழிபட்டார்..

அவர் அமைத்த குண்டம் திருக்கோயிலின் தெற்கு வாசலில் உள்ளது..


தெற்குக் கோபுர வாசலில் விளங்கும் துவாரபாலகர்
சிவ ரூபமாக விளங்கி யம தர்மராஜனை விரட்டியடித்ததால்
துவார பாலகருக்கு முன்பாக நந்தி பணிந்திருக்கின்றது...

இங்கே வழிபடுவோருக்கு யமபயமில்லை என்பது நம்பிக்கை...

இத்திருக்கோயிலின் தென்புறம்
திருநாவுக்கரசர் தரிசனம் பெற்ற தென் கயிலாயமும்

வட கயிலாயம்
தென் கயிலாயம்
வடபுறம் ராஜராஜ சோழனின் பட்டத்தரசியாகிய
உலகமாதேவியாள் எடுப்பித்த வட கயிலாயமும் விளங்குகின்றன..

அன்னை அறம் வளர்த்த நாயகி - கிழக்கு நோக்கியவளாக
கொடி மரத்துடன் கூடிய தனிக் கோயிலில் திகழ்கின்றாள்..

மாதந்தோறும் திருக்கோயிலில் விசேஷங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன..

பங்குனியில் நந்தீசன் திருக்கல்யாணத்தை அடுத்து
சப்த ஸ்தான வைபவம் சித்திரையில் நிகழ்வது..

திருவையாற்றிலிருந்து
ஐயனும் அம்பிகையும் நந்தீசன் - சுயம்பிரகாஷிணியுடன் புறப்பட்டு
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் - என,
ஆறு திருத்தலங்களைச் சுற்றி வருவர்...

ஆடி அமாவாசையன்று அப்பர் ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம்..
நவராத்திரியில் அம்பிகைக்குத் தனியே பத்து நாள் திருவிழா..

கார்த்திகையில் சிறப்பாக சங்காபிஷேகம்..

ஐந்து திருச்சுற்றுகளை உடைய திருக்கோயில்..
இரண்டாம் திருச்சுற்று மேல் தள அமைப்புடன் கூடியது..

திருமாளிகைப் பத்தியில் புராண நிகழ்வுகள் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன...

மூலத்தானத்தின் மேல்புறம்
திருமாளிகைப் பத்தியில் திகழும் திருமுருகன்
கையில் வில்லும் அம்பும் தாங்கியவனாக
தேவியருடன் திருவருள் புரிகின்றனன்...

திருமாளிகைப் பத்தி


வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங் கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாம் என்றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருஐயாறே!..(1/130)
-: திருஞானசம்பந்தர் :-இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே!..(4/38)
-: திருநாவுக்கரசர் :-கயிலாய தரிசனத்தில் நாயன்மார்கள்
பரவும் பரிசொன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன் நான்
கரவில் அருவி கமுகு உண்ணத் தெங்கங் குலைக்கீழ் கருப்பாலை
அரவந் திரைக் காவிரிக்கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!..(7/77)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே 
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற்சோதீ!..(6/38)
-: திருநாவுக்கரசர் :-
***

திருவையாற்றின் பெருமைகளை ஒரு பதிவில் சொல்லி முடியாது...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாற்றிற்கு
ஐந்து நிமிடங்களுக்கு ஒன்றாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

இனிய சந்தர்ப்பம் ஒன்றில் - மீண்டும் 
திருவையாற்றினைப் பற்றிச் சிந்திப்போம்..

சீரார் திரு ஐயாறா போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***  

8 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  கார்த்திகையின் நான்காம் தரிசனங்கள் அழகிய படங்களுடன் அறிந்தேன் நன்றி

  பதிலளிநீக்கு
 2. எத்தனை எத்தனை இடங்கள் வரலாறுகள் அப்பப்பா .....ந்னைவில் வைக்க முடியுமா தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 3. சடைகணிந்த புண்ணியனார் - சடைக்கணிந்த

  பதிலளிநீக்கு
 4. அழகிய படங்களுடன் தரிசனம் அருமை ஐயா....

  பதிலளிநீக்கு
 5. நேற்று தளம் திறப்பதில் பிரச்சனைகள் வந்தது சகோ. கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துவிட்டேன். ஆனால் கருத்திட முடியாமல் தளம் குதித்துக் கொண்டே இருந்தது.

  படங்கள் அழகு. திருவையாறு-திரு ஐயாறு என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.காவிரி புஷ்ய மண்டபம் நீர்த்துறை அழகோ அழகு....காசி போல் உள்ளது....

  கீதா

  பதிலளிநீக்கு
 6. திரு ஐயாறு ... இனிய தரிசனம்...

  பதிலளிநீக்கு
 7. அழகிய படங்களுடன் அருமையான தரிசனம் சார்.

  பதிலளிநீக்கு