நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 09, 2025

அன்பில் சிவாலயம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வியாழக்கிழமை

அன்பில் 
ஸ்ரீ சத்தியவாகீசர் ஆலய தரிசனம்..


அன்பில் ஸ்ரீ சுந்தரராஜப்
பெருமாள்  கோயிலில் இருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ளது சிவாலயம்..

அன்பில் கோயிலில்  
இறைவன் - ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர்.. அம்பிகை -  ஸ்ரீ சௌந்தரநாயகி.  

ஸ்ரீ பிரம்ம தேவர் இங்கு வழிபட்ட காரணத்தால் பிரம்மபுரீசர்  என்றும் திருப்பெயர்.. 

காயத்ரி தீர்த்தம் 
தல விருட்சம் ஆலமரம்..

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்  -  இருவரது திருப்பதிகங்களையும் பெற்றுள்ள இத்தலம் அன்பில் ஆலந்துறை என வழங்கப்பட்டு தற்போது அன்பில் என்று விளங்குகின்றது..

மஹாளய பட்ச அமாவாசையன்று தரிசனம் செய்தோம்.

முன்மண்டபத்தில் அன்பர்கள் கூட்டம்.. படமெடுக்க இயலவில்லை..

இவ்வூரில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் புகழ் பெற்று விளங்குகின்றது.. 

ஆயினும்
தரிசனம் செய்ய இயலவில்லை..

தஞ்சையிலிருந்து எங்கள் வழித்தடம் : தஞ்சை -  திருக்காட்டுப்பள்ளி - அன்பில் ..



ஸ்ரீ காசி விஸ்வநாதர்



ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், அக்டோபர் 06, 2025

நிவேதனம் 3

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
புரட்டாசி
மூன்றாம் திங்கள்

புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில் இன்று
புளியோதரை

தேவையான பொருட்கள்:

புளி, நல்லெண்ணெய்,
உலர்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
மஞ்சள் தூள், கடுகு, வெந்தயம், கொத்தமல்லி விதை வேர்க்கடலை, பெருங்காயம், 
கறிவேப்பிலை, கல் உப்பு -

ஆகிய இவற்றை தக்க அளவில் எடுத்துக் கொண்டு அவரவர் விருப்பப்படி புளிக் காய்ச்சல் தயார் செய்து கொண்டு -

வாணலியை சூடாக்கி,  நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிதம் செய்து -

குழைந்து விடாமல் 
வடித்தெடுக்கப்பட்ட பச்சரிசி சாதத்தை தேவையான அளவு இட்டு முன்பே செய்து வைத்திருக்கின்ற புளிக் காய்ச்சலை விருப்பப்படி சேர்த்து நன்றாகக் கிளறி எடுத்தால் -

பாரம்பரிய புளியோதரை...

ஓம் ஹரி ஓம்
**

சனி, அக்டோபர் 04, 2025

புரட்டாசி 3

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
மூன்றாம் 
சனிக்கிழமை


இன்று
கோடிஹத்தி 
ஸ்ரீ ஸ்ரீ நிவாசப்பெருமாள் தரிசனம்..


வானமுட்டிப் பெருமாள் எனப்படுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்..
தாயார் ஸ்ரீ மகாலக்ஷ்மி..

நின்ற திருக்கோலத்தில்  சேவை சாதிக்கின்றார்..

பிப்பல மகரிஷிக்கு தரிசனம்.. அவர் பெயரால் தீர்த்தம்.. அருகில் காவிரிக் கரை.

அத்தி மரத்தில் தோன்றிய பெருமாள் - சங்கு, சக்கரம், கதை, வரத அபய ஹஸ்தங்களுடன் பதினாறு அடி உயரம் கொண்டு பிரமாண்டமாகக் காட்சி தருகின்றார்..
எனவே தான் 
வானமுட்டிப் பெருமாள் என, செல்லப்பெயர்..

தொன்மையான பெயர்  - கோடி ஹத்தி விமோசனப் பெருமாள் என்பதாகும்.. 

கோடி ஹத்தி என்ற திருப்பெயரே இன்றைக்கு கோழி குத்தி என்றாகி விட்டது..

மன்னன் ஒருவனின் குஷ்ட நோயைத் தீர்த்து அருளியதாக ஐதீகம்..

புராதன கோயில் முற்றிலும் சிதைந்து விட தஞ்சை மராட்டிய மன்னர் காலத்தில் கோயில் மீண்டும் உருவாகியிருக்கின்றது..

அத்தி மரத்தில் திருவடிவம்..
அத்தி மரத்தின் வேர்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகச் சொல்கின்றனர்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்த கோயிலுக்கு மானியங்கள் அளித்து, திருக்கோயில் பணிகள் செய்ததற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன..
(நன்றி விக்கி)

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வானதிராஜபுரம் செல்லும் பேருந்துகள் கோயில் வழியாக செல்கின்றன..

கடந்த வருடங்களில்
மயிலாடுதுறைக்கு  
சில முறை
சென்றிருந்தும் இங்கு தரிசனம் செய்யும் பேறு 
இன்னமும் கிடைக்கவில்லை..

பெருமாளே சரணம் 
-::-

ஓம் ஹரி ஓம்
நமோ ஸ்ரீநிவாசாய
**

வெள்ளி, அக்டோபர் 03, 2025

வெள்ளி

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வெள்ளிக்கிழமை


பந்தாடு மங்கையர் 
செங்கயற் பார்வையிற் பட்டுழலும்
   சிந்தா குலந்தனைத் தீர்த்தருள்வாய் 
செய்ய வேல்முருகா
      கொந்தார் கடம்பு புடைசூழ் 
திருத்தணிக் குன்றில் நிற்கும்
  கந்தா இளங்குமரா 
அமராவதி காவலனே.. 79.. 
-: கந்தரலங்காரம் :-
 நன்றி கௌமாரம்


செம்மையான வேலாயுதத்தைத் தாங்கி அருளும் பெருமானே!

பந்துகளுடன் விளையாடுகின்ற அழகிய பெண்களின் கயற் கண்களில் 
அடியேன் அகப்பட்டு உழல்கின்ற  கவலையை -  இன்னலைப் போக்கிக் காத்திட வேணும்..  

பூங்கொத்துகளுடன் கூடிய கடம்ப வனம் சூழ்ந்திருக்கின்ற
திருத்தணி மலையின் மீது நின்றிருக்கின்ற கந்தனே குமரனே.. 


வானுலகத்தின் அமராவதி நகரினைக் காத்தருள்கின்ற பெருமானே!..
(தஞ்சையம்பதி
-::-
 
முருகா முருகா
ஓம் நம சிவாய 
**

வியாழன், அக்டோபர் 02, 2025

விஜயதசமி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வியாழக்கிழமை


அனைவருக்கும்
ஸ்ரீ விஜய தசமி
நல்வாழ்த்துகள்


மனிதரும்  தேவரும்  மாயா முனிவரும்  வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.. 4

சுந்தரி எந்தை துணைவி  என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 8

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னயன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. 13


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கை சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே.. 21


மணியே மணியின் ஒளியே  ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே 
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.. 24


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினிவாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
-: அபிராமி பட்டர் :-
-:-


தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ் அடிமை
     செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்
     கணக்காக வையாது நின் திரு உளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து, இனல் படாது, நல் வரம்அளித்துப் பாதுகாத்து அருள் செய்ய
     வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி
புரந்தரன் போதன் மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்
     பதாம்புய மலர்ப் புங்கவி புராந்தகி புரந்தரி புராதனி
     புராணி திரிபுவனேசுவரி
மருந்தினும் நயந்த சொல் பைங்கிளி வராகி எழில்
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
     சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!.. (7)
-: அபிராமி பட்டர் :-


ஓம் சக்தி ஓம்
**

புதன், அக்டோபர் 01, 2025

கலைமகள் நவமி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை


இன்று 
ஸ்ரீ சரஸ்வதி பூஜை

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்

சகலகலாவல்லி மாலையைப் பாடி, 
ஸ்ரீ சரஸ்வதி தேவியை  வழிபட அன்னையின் அருள் கிடைக்கும் என்பது  நம்பிக்கை..


ஸ்ரீ குமரகுருபரர் அருளிச் செய்த
சகலகலாவல்லி மாலை
(சில பாடல்கள் மட்டும்)

வெண்தாமரைக்கு அன்றி நின் 
பதந்தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ 
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக 
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே 
சகல கலாவல்லியே. 1

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த 
கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் 
வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவில் நின்று
காக்குங் கருணைக் கடலே 
சகல கலாவல்லியே. 4

பஞ்சப்பி இதந்தரு செய்யபொற் 
பாதபங் கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே 
நெடுந் தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் 
செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய் 
சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் 
தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிது எய்த 
நல்காய் எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் 
கனலும்வெங் காலும் அன்பர்
கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் 
சகல கலாவல்லியே. 6.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா
 

நன்றி 
இணையம்

ஓம் சிவாய நம ஓம்
**

திங்கள், செப்டம்பர் 29, 2025

நிவேதனம் 2

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
இரண்டாம் திங்கள்


புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில்
மிளகுப் பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி 300 gr
பாசி பருப்பு  150 gr
மிளகு  2 tsp 
இஞ்சி  சிறு துண்டு 
நெய்  தேவையான அளவு 
சீரகம்  1 tbsp
முந்திரிப் பருப்பு 15
பெருங்காயத்தூள் சிறிது
கறிவேப்பிலை இரண்டு இணுக்குகள்
 
செய்முறை

இளஞ்சூட்டில் நெய்  விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்..

வசதியான பாத்திரம் ஒன்றில் பச்சரிசி,  பாசிப்பருப்பு  இரண்டையும் நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து சற்றே குழையும்படி வேக வைத்துக் கொள்ளவும்...

தாளிப்பு கரண்டியில் தரமான நெய் விட்டு சீரகம், இடித்த மிளகு, பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி, முந்திரிப் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து -

செய்து வைத்திருக்கும் பொங்கலுடன் சேர்த்து நன்றாகக் கலந்து கிளறி விடவும்..

தேவையெனில் பொங்கலில் மேலும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும்.  

பாரம்பரிய மிளகுப் பொங்கல்..

ஓம் ஹரி ஓம்
**

சனி, செப்டம்பர் 27, 2025

புரட்டாசி 2

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
இரண்டாம் 
சனிக்கிழமை


ஜெய ஜனார்த்தனா 
கிருஷ்ணா
ராதிகா பதே
ஜன விமோசனா
கிருஷ்ணா
ஜன்ம மோக்ஷனா

கமல லோசனா கிருஷ்ணா
கம்ச மர்த்தனா
த்வாரகா பதே கிருஷ்ணா
தீன ரக்ஷகா..


இன்று
இனிய 
கிருஷ்ண கானம்


காணொளிக்கு நன்றி

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**

வெள்ளி, செப்டம்பர் 26, 2025

முசியாமல் இட்டு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை


படிக்கின்றிலை பழநித்திரு நாமம் படிப்பவர் தாள்
   முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமல் இட்டு
      மிடிக்கின்றிலை பர மாநந்த மேற்கொள விம்மி விம்மி
         நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கினியே... 75
கந்தரலங்காரம்
 நன்றி கௌமாரம்


ஏ.. நெஞ்சே, பழநியம்பதியின் அருமை பெருமைகளைப் படித்து உணர்ந்தாயில்லை. பழநி முருகனின் திருப்பெயர்களை ஓதுகின்ற அடியார்களது திருவடிகளைப்
பணிகின்றாயில்லை.  
முருகா சரணம்' என்று துதிக்கின்றாயில்லை.  யாசித்து வருவோர்க்கு  முகம் கோணாமல் உணவு வழங்கி -

அதனால், நீ வறுமை அடைந்தாயில்லை. பேரின்பம் மிகுதியாகி முருகனை நினைத்து விம்மி விம்மி அழுகின்றாயில்லை... 

அன்பினால் முருகன் பேர் பாடி ஆடுகின்றாயில்லை..
இப்படியிருக்க நமக்கு ஏது அடைக்கலம் ?..
-: தஞ்சையம்பதி :-

முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை...

இந்த வரிகளினூடாக நாயன்மார்கள் பலர் நினைவுக்கு வருகின்றனர்..
-::-
    
முருகா சரணம்
சிவாய நம
**

புதன், செப்டம்பர் 24, 2025

அன்பில திவ்ய தேசம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை

இன்று
அன்பில் 
ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் தரிசனம்..

காவிரி தீரத்தில்
பெருமாள் பள்ளி கொண்டு  விளங்குகின்ற தலங்களில்  அன்பில் திவ்ய தேசமும் ஒன்று..

திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட திருக்கோலம். பெருமாள் தாரக விமானத்தின் கீழ் கிழக்கு முகமாக சயனத் திருக் கோலம் கொண்டுள்ளார்..

மூலவர் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள்

தாயார் அழகிய வல்லி
உற்சவர் வடிவழகிய நம்பி
மண்டூக தீர்த்தம்
தல விருட்சம் தாழம்பூ

மண்டூக மகரிஷியின் சாபம் தீர்ந்த தலம்..
திருமழிசையாழ்வார் மங்களாசாசனம்..

மஹாளய பட்ச அமாவாசையன்று தரிசனம் செய்தோம்.
தஞ்சையிலிருந்து எங்கள் வழித்தடம் : தஞ்சை -  திருக்காட்டுப்பள்ளி - அன்பில் ..













ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
**

திங்கள், செப்டம்பர் 22, 2025

நிவேதனம் 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
புரட்டாசி
முதல் திங்கள்

புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

எனினும் கண்டதும் கொண்டதும் இனி வரவிருக்கின்ற திங்கள்
பதிவுகளில்..

சர்க்கரைப் பொங்கல் 

தேவையான பொருள்கள்

பச்சரிசி 
வெல்லம்
நெய் தேவையான அளவு
முந்திரிப் பருப்பு 100 gr
உலர் திராட்சை 100 gr
ஏலக்காய்  5 
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை 

பச்சரிசியை நன்றாக அலசி விட்டு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
 
அடுத்து வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை இட்டு. 

வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 

வெல்லம் கரைந்து கொதித்த பிறகு  தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

வெல்லம் சுத்தமாக இருப்பின் பாகாக ஆக்கிக் கொள்ளவும். 

பச்சரிசி வெந்து குழைந்து வருகின்ற பக்குவத்தில்   சாதத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கிளறி. ஏலக்காயைத் தூளாக்கி  சேர்க்கவும்.

சுத்தமான வாணலியில் தரமான நெய் விட்டு முந்திரிப் பருப்பு  உலர் திராட்சை இவற்றை வறுத்துக் கொள்ளவும்.

இதனை சர்க்கரை பொங்கலில் சேர்த்து தேவையெனில்  மேலும் சிறிது நெய் சேர்த்து பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்..

பாரம்பரிய
சர்க்கரை பொங்கல் .

ஒரு பங்கு - 
கொதிக்கின்ற பாலைச்  சேர்த்தும் 
சிலர் செய்வர்.

ஓம் ஹரி ஓம்
**

சனி, செப்டம்பர் 20, 2025

புரட்டாசி 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
முதல் சனிக்கிழமை


ராம ராம ராம ராம 
ராம நாம தாரகம்
ராம க்ருஷ்ண வாசுதேவ 
பக்தி முக்தி தாயகம்
ஜானகி மனோஹரம் 
சர்வ லோக நாயகம்
சங்கராதி சேவ்யமான 
திவ்ய நாம கீர்த்தனம்
**

இன்று
குழந்தைகளின்
ஸ்ரீ ராமநாம பஜன்


காணொளிக்கு நன்றி
ஜெய் ஸ்ரீராம்
ஓம் நம சிவாய
**

சனி, செப்டம்பர் 13, 2025

அழகு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை


இன்றொரு 
அழகான காட்சி..

காணொளிக்கு நன்றி


அப்பாடா!..
பத்திரமாய் தரை (!)
இறங்கியாயிற்று..

ஓம் சிவாய நம
**

வெள்ளி, செப்டம்பர் 12, 2025

பேராயிரம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை



இன்று
புள்ளிருக்கு வேளூர்
(வைத்தீஸ்வரன் கோயில்)
 திருப்பதிகப் பாடல்
**

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-


ஆயிரம் திருப் பெயர்களைப் புகழ்ந்து தேவர்கள் துதிக்கின்ற பெருமானாகவும்

தன்னை விட்டு நீங்காத அடியவர்களுக்கு  வீடுபேறு எனும் செல்வத்தை வழங்குபவனாகவும்

மந்திரங்களும் அவற்றின்  முறைகளும் மருந்துகளும்  தானேயாகி - தீராத நோய்களைத் தீர்த்தருள வல்ல வைத்திய நாதனாகவும் 

திரிபுரங்கள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகுமாறு வலிமையான வில்லைக் கையில் கொண்டு போரிட முனைபவனாகவும் விளங்குகின்ற -

புள்ளிருக்கு வேளூர் பெருமானைப் போற்றி வணங்காமல்  நாட்களைப் போக்கி விட்டேனே!..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், செப்டம்பர் 09, 2025

புள்ளிருக்கு வேளூர்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை

உடல் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த செவ்வாய் அன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தரிசனம்.. 

வெளித் திருச்சுற்றில் எடுக்கப்பட்ட படங்கள் இவை..












பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலை கைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**