நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை முதல் நாள்
திங்கள் கிழமை
சாத்தன் என்ற சொல்லுக்கு காட்டு வழியில் செல்கின்ற வணிகக் கூட்டத்தினைக் காத்து நிற்கின்ற தலைவன் எனப் பொருள் கூறுகின்றனர் ஆன்றோர்...
வழித் துணைவன் வழி காட்டுபவன் என்றும் பொருள் கொள்ளலாம்...
ஸ்ரீ தர்மசாஸ்தா எனும் தெய்வ வடிவும் அவ்வண்ணமே...
ஸ்ரீசாஸ்தா - தமிழில் சாத்தன் எனப்படுகின்றார்..
இத்தகைய சாத்தனை ஈசன் எம்பெருமானின் மகன் என்கின்றார் திருநாவுக்கரசர்..
பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற்றூரனாரே.. 4/32/4
-: திருப்பயற்றூர் தேவாரம் :-
பெண்களைக் காத்தருள்பவர் ஸ்ரீ மகா சாஸ்தா என்று
இவரைப் போற்றுகின்ற ஸ்ரீ கந்தபுராணம் - இவரது பொறுப்பில் இந்திராணியை ஒப்படைத்து விட்டுத் தான் தேவேந்திரன்
தவம் இயற்ற - சீர்காழிக்குச் சென்றதாக இயம்புகின்றது...
இவரது முதன்மைத் தளபதி கருப்பசாமி எனப்படும் ஸ்ரீ மகாகாளர்..
பழங்காலத்தில் சாத்தன் சாத்துவன் என்பன சூடும் பெயர்களாக இருந்துள்ளன..
(புலவர் - சீத்தலைச் சாத்தனார்
பெரு வணிகர் மாசாத்துவன்)
சாத்தனூர் சாத்த மங்கலம் என்ற ஊர்ப் பெயர்களும் சிந்திக்கத் தக்கன..
இத்தகைய புகழ்
பெறும் சாத்தனுக்கு பற்பல திரு வடிவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன..
அவற்றுள் ஒன்று தான் ஸ்ரீ பூர்ணகலா பொற்கலா தேவியருடன் கூடிய ஐயனார் திருக்கோலமும்...
காவல் நாயகர் ஸ்ரீ ஐயனார்..
இன்றளவும் நீர்நிலைகளின் காவலர் ஐயனார் தான்...
ஐயனாரின் யோகத் திருக்கோலமே ஸ்ரீ ஐயப்பன்...
இந்த யோகத் திருக்கோலத்திற்காக பற்பல திருவிளையாடல்கள் நிகழ்ந்துள்ளன..
இப்படி யோக மூர்த்தியாகிய ஸ்ரீ ஐயப்பன் மகர சங்கராந்தியாகிய தை மாதத்தின் முதல் நாளில் ஜோதியாகக் காட்சி தருகின்றார்..
இவரைத் தரிசிப்பதற்கு ஒரு மண்டல காலம் கடும் விரதங்களை மேற்கொள்ள வேண்டும்...
அந்த விரதங்கள் இன்று முதல் தொடங்குகின்றன...
நாமும் நல்ல பழக்க வழக்கங்களுடன் பக்தி நெறியில் நடந்து ஐயனைத் தரிசிப்போம்...
ஓம்
பூதநாத சதானந்த
சர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நம:
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும்
ஆசாரக் குறைவுகளையும்
பொறுத்துக் காத்து ரட்சித்து அருள் புரிய வேண்டும்..
சத்யமான பொன்னு பதினட்டாம் படிகளின் மேல் வீற்றிருக்கும்
ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
***



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..