நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 31, 2023

சுந்தரத் தமிழ் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 17
   செவ்வாய்க்கிழமை

-:நன்றி:-
தலவரலாறு/திருப்பதிகம்: 
பன்னிரு திருமுறை
படங்கள்: விக்கி..

அன்பின் நெஞ்சங்கள் 
அனைவருக்கும் வணக்கம்..

நோவுளார் வாயுளான்.. - என்பது ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு..

அப்படியான இறைவனின்  திருவருளால் அனைவரும் சகல நோய் நலிவில் இருந்தும் விடுபட வேண்டும் என , வேண்டிக் கொண்டு பிணிகள் தீர்வதற்கான பிரார்த்தனைத் திருப் பதிகங்களை - அடுத்து வரும்  
பதிவுகளாகத் தங்கள் முன்பாக 
அன்புடன் சமர்ப்பிக்கின்றேன்..


சென்னையில் அம்பத்தூர் ஆவடியை அடுத்து அமைந்துள்ள தலம் - திருமுல்லைவாயில்..

கிருத யுகத்தில் ரத்தின புரமாகவும் திரேதா யுகத்தில் வில்வ வனமாகவும் துவாபர யுகத்தில் சண்பக  வனமாகவும் கலி யுகத்தில் முல்லை வனமாகவும் விளங்குகின்ற தலம்..

இத்தலத்தில் -
தனது யானையின் கால்களில் முல்லைக்கொடி சிக்கிக் கொண்டதனால் மன்னன் தொண்டைமான் வாளெடுத்து வீசினான்.. 

அப்போது பூமிக்குள்ளிருந்து பொங்கும் குருதியுடன் சுயம்பு லிங்கம் வெளிப்பட்டது.. பதறித் துடித்து தன்னை மாய்த்துக் கொள்ள முயன்ற மன்னனுக்கு இறைவன் திருக்காட்சி நல்கினன்..

வெட்டப்பட்ட இடத்தில் சந்தனக்காப்பு இட்டு வழிபட்டனர்.. 

இன்று வரை நாளும் சந்தனக் காப்புடனே திகழும் ஈசன் இத்தலத்தில் தான்..

நித்திய அபிஷேகங்கள்  ஆவுடையாருக்கு மட்டுமே.
வருடத்திற்கு ஒருமுறை - சித்திரை சதயத்தில் சந்தனக் காப்பு களையப்பட்டு மீண்டும் புதிய சந்தனம் பூசப் படுகின்றது.

இத்தலத்தில்  கிழக்கு நோக்கியதாக நந்தி..


திரு ஆரூரில் பரவை நாச்சியாரது கைத்தலம் பற்றிய சுந்தரர் தொண்டை மண்டலத்திற்குச் சென்ற போது மேலை விதியானது -  அவருக்கு திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணம் முடித்து வைத்தது..

திரு ஒற்றியூர் கோயிலில் மகிழ மரத்தின் கீழிருந்து
சங்கிலி நாச்சியாருக்கு சுந்தரர் சத்தியம் செய்து கொடுத்தார் - உன்னைப் பிரியேன்!.. - என்று..

செய்து கொடுத்த சத்தியத்தை மீறி,
நாச்சியாரைப் பிரிந்து  திரு ஆரூர் பெருமானைத்  தரிசிக்கும் ஆவலுடன் சுந்தரர் புறப்பட்ட வேளையில் - இரு கண்களிலும் பார்வையை இழந்தார்..

திடுக்கிட்ட சுந்தரர், ஒற்றியூர்ப் பெருமானை நினைந்து, திருப்பதிகம் பாடித் துதித்தார். 

திரு ஆரூர் சென்றே வேண்டும்  - என்ற உறுதியுடன் நடந்தார்.. சாலையில் செல்வோர்  வழி காட்ட திருமுல்லை வாயிலை அடைந்தார்..

தட்டுத் தடுமாறி இங்கு வந்து சேர்ந்த சுந்தரர்
மாசிலாமணி நாதரையும் கொடியிடை நாயகியையும் பதிகம் பாடித் துதித்தார்..

தனது குறைதனைச் சொல்லி மனமுருகி வணங்கினார்..

காஞ்சியை நோக்கி நடந்தார்.. 

அம்பிகை அவரைப் பின் தொடர்ந்தாள்..

ஏன்?.. எதற்கு!..

அதனை அடுத்த பதிவில் காண்போம். 
***

சுந்தரர் இத்திருப் பதிகம் முழுவதும் -
படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே!.. - என்று முறையிடுவதால் துயர்  களையும் பதிகம் என்று போற்றப்படுகின்றது..

சங்கிலிக்காக எனது கண் கொண்ட பண்பனே!.. - என்று இறைவனிடம் குறைபாட்டுக் கொள்ளும் சுந்தரர் திருப்பதிகத்தில் தலபுராணத்தையும் குறித்தருள்கின்றார்..
***
சோழ நாட்டில் சீர்காழிக்கு அருகில் திருமுல்லை வாயில் என்று மற்றுமொரு தலம் இருப்பதால், தொண்டை நாட்டுத் தலமாகிய இது - வட திரு முல்லை வாயில் எனவும் 
சோழ நாட்டுத் தலம் தென் திரு முல்லை வாயில்
எனவும் குறிக்கப் படுகின்றன..

சீர்காழிக்கு அருகிலுள்ள  திருமுல்லை வாயில்
திருஞானசம்பந்தப் பெருமானால் பாடப் பெற்றுள்ளது..
***
தலம்
வட திருமுல்லைவாயில


இறைவன்
ஸ்ரீ மாசிலாமணி நாதர்

அம்பிகை
ஸ்ரீ கொடியிடை நாயகி

தலவிருட்சம் முல்லை
தீர்த்தம்
கல்யாண தீர்த்தம்

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் 69

கஜ பிருஷ்ட மூலஸ்தானம்
திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்கு உன்
சீருடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 1

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 2


விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழம்அன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
சங்கிலிக்கா என்கண் கொண்ட
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே..3

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டு இசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளற்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 4

சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 5


மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 6

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல்அ றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 7

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் தன்னைஆட் கொண்ட
சம்புவே உம்பரார் தொழு தேத்துந்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 8


மட்டுலா மலர்கொண்டு அடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 9

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.. 10

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்ட எம்மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவல் ஆரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே.. 11

திருச்சிற்றம்பலம்

சுந்தரர் திருவடிகள் 
போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

  1. திருமுல்லை வாயில் பதிகம் படித்து தரிசனம் செய்து கொண்டேன். பிணிகளை போக்கி ஆரோக்கியம் அருள வேண்டிக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பிணிகளை போக்கி ஆரோக்கியம் அருள வேண்டிக் கொள்வோம்... //

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. நல்ல பதிவு.


    சிவருமான் நோயற்ற வாழ்வை அருள வேண்டும். ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நோயற்ற வாழ்வை அருள வேண்டும். . //

      ஓம் நம சிவாய..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. திருமுல்லைவாயில் தலவரலாறு அறிந்து கொண்டேன்.

    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  4. பெயரில்லா31 ஜனவரி, 2023 09:32

    திருமுல்லைவாயில் தெரியும் ஆனால் இக்கோயில்பற்றிய விவரங்கள் இப்போதுதான் அறிகிறேன் துரை அண்ணா, நம் எல்லோரது உடல்நலத்தையும் இறைவன் காக்க வேண்டும். நம் நட்புகள் பலர் ஏதோ ஒரு உடல்நலப்பிரச்சனையில்...எல்லோருக்கும் இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நம் நட்புகள் பலரும் ஏதேதோ உடல் நல பிரச்சனையில்..
      எல்லோருக்கும் இறைவனிடம் பிரார்த்தனைகள்..//

      அன்பின் வருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. தகவல்கள் அருமை ஐயா...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  6. தகவல்கள் அருமை ஐயா...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  7. நினைச்சப்போ எல்லாம் போய்க் கொண்டிருந்த கோயில் இது. சில சமயம் பிரதோஷ தரிசனத்திற்கும் சென்றது உண்டு. நாங்க பெண்களாக வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு ஒன்பதரைப் பேருந்தில் போயிட்டு பதினொன்றரைக்குள் வீடு வந்து சாப்பிட்டுப்போம். நவராத்திரி தரிசனத்திற்கும் போனது உண்டு. இந்தக் கோயிலில் தான் வைணவப் பெரியார் ஒருவர் காஞ்சி பரமாசாரியாரின் ஆக்ஞையின் பேரில் பாதரசலிங்கத்தைக் கூட்டுவித்து அதைப் பல ஊர்களுக்கும் எடுத்துச் சென்று வழிபாடுகள் செய்து கொண்டு வைத்திருக்கிறார். நாங்க கடைசியாப் போனப்போக் கூடப் பாதரச லிங்கம் இருந்தது. 82/83 ஆம் ஆண்டுகளில் இது நிகழ்ந்தது என நினைக்கிறோம். அம்பத்தூர் வீட்டிற்கு கிரஹப்ரவேசம் செய்து போன உடனே நடந்தது இந்த நிகழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. படித்து மகிழ்ந்தோம்.

    அனைவர் பிணிகளும் அவனருளால் நீங்க அவன்பாதம் பணிந்து நிற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் பிரார்த்தனையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்....
    லதாமத்யாம்பாள், கொடையிடைநாயகி, கொடியிடையம்மை.

    திருவடிகளே சரணம் ...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..