நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


செவ்வாய், ஏப்ரல் 19, 2016

மாமதுரைத் திருவிழா 5

மாமதுரையில் நிகழ்வுறும்
சித்திரைத் திருவிழாவின் முத்திரைத் திருநாள் - இன்று..
***

நேற்று ஒன்பதாம் திருநாள்.

அன்னை மீனாக்ஷி திக்விஜயம் செய்தாள்..
சுந்தரேசப்பெருமானைக் கண்டு நாணித் தலை கவிழ்ந்தாள்..

போர்க்கோலங் கொண்ட பூங்குழலாள்
புதுமலர் சூடி திருமணக்கோலங் கொண்டாள்!..

இன்று மதுரையம்பதியில் மங்கலகரமாக 
ஸ்ரீ மீனாட்சி - ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ந்தது.

மங்கல வைபவத்தின் நிகழ்வுகளை -
இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..

இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :- 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், திரு.அருண்., 
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *


மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப் 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே!.. (24)
* * *

ஒன்பதாம் திருநாள் (18/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

-: காலை :-
மரவர்ண சப்பரத்தில் எழுந்தருளல்.

-: இரவு :-
அருள் தரும் சுந்தரேசப்பெருமானும் 
அங்கயற்கண் அம்பிகையும்
இந்திர விமானத்தில் 
எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

பத்தாம் திருநாள் (19/4) வைபவம்
ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம். 


-: காலை :-
சித்திரை வீதிகளில் 
வெள்ளி சிம்மாசனத்தில் திருவீதி உலா!..

முத்துராமையர் மண்டபத்தில் 
கன்னி ஊஞ்சலாடிய கயற்கண்ணி
திருமண மண்டபத்திற்கு எழுந்தருளினாள்.

பல்லாயிரக்கணக்கானவர் மாமதுரையில் கூடியிருக்க - 
அம்மையும் அப்பனும் சர்வ அலங்காரத்துடன் -
ஆடி வீதி மற்றும் சித்திரை வீதிகளில் எழுந்தருளினர்.
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில்
சுந்தரேசப் பெருமான் எழுந்தருளினார்.

பெருமானைத் தொடர்ந்து - பிரியாவிடையும் மீனாக்ஷி அம்மனும்
திருமணக் கோலத்தில் மணமேடைக்கு எழுந்தருளினர்.

அன்புத் தங்கையை கன்யாதானம் செய்து கொடுப்பதற்கென - திருப்பரங்குன்றத்திலிருந்து ஸ்ரீ பவளக்கனிவாய்ப் பெருமான்
 எழுந்தருளினார். 

அம்மையப்பனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்வதற்கு - 
வள்ளி தெய்வானையுடன் திருமுருகன் - தானும் எழுந்தளினன்.

காலை 8.45 மணியளவில் ரிஷப லக்னம் கூடிய சுபவேளையில் திருமாங்கல்யதாரணம் நிகழ்ந்தது.
ஸ்ரீ மீனாக்ஷிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட சுபவேளையில் கூடியிருந்த மக்கள் மலர்களுடன் அட்சதை தூவி வழிபட்டதுடன் - சுமங்கலிகள் தாலிச்சரடு மாற்றிக் கொண்டனர்.

திருமண விழாவில் மகிழ்ச்சியுடன் சுற்றி வருகின்ற மச்சக்கன்னியும் 
கனகசுந்தரம் அருகிருக்க புது மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டாள்..

-: இரவு :-
அருள்தரும் சுந்தரேசப்பெருமான் யானை வாகனத்திலும் 
அங்கயற்கண் அம்பிகை பூம்பல்லக்கிலும்
மாசி வீதிகளில் எழுந்தருள்வர்.புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம்காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம்அடியார்கள் நடுஇருக்கப்
பண்ணிநம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே!.. (41)
-: அபிராமி அந்தாதி :-   

மீனாட்சி சுந்தரேசர்
திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம் சிவாய சிவாய நம ஓம் 
* * *

4 கருத்துகள்:

 1. அன்பின்ஜி புகைப்படங்கள் அனைத்தும் கண்ணைப் பறிக்கின்றன....
  திருவிழா 5 நன்று வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
 2. இன்றைய விழாவில் உங்களோடு பயணித்தோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மீனாட்சி கல்யாணத்தில் நாங்களும் கலந்து கொண்டோம்

  பதிலளிநீக்கு
 4. திருவிழாவில்...
  புகைப்படங்கள் வழி எங்களையும் கலந்து கொள்ள வைத்தீர் நண்பரே

  பதிலளிநீக்கு