நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


சனி, ஏப்ரல் 09, 2016

திருவிழாவுக்கு வாங்க!..

டண்டண்.. டனட்.. டன..
டண்டண்.. டனட்.. டன..

டண்டண்.. டனட்.. டன..
டண்டண்.. டனட்.. டன.. டண்!..


இதனால.. சகலமான ஜனங்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்ன...ன்னா...
நம்ம பாண்டிய ராசா பொண்ணு கயற்கண்ணி தேவிக்கு வர்ற சித்திர மாசம் ஆறாந்தேதி திருக்கல்யாணமுங்கோ.....

இந்தாய்யா.. டமுக்கு!..

டமுக்கு இல்லீங்க.. தமுக்கு!..

அட.. ரெண்டும் ஒன்னுதான்யா!.. நீ பாட்டுக்கு தலைகால் புரியாம சொல்றே!.. இதுக்காகவா உன்னை அனுப்பி வெச்சாங்க?.. கொஞ்சம் வெவரமாத் தான் சொல்லேன்...

உள்ளதுங்க!.. நெஜமாவே தலைகால் புரியலைங்க!..

ஏன்?..

நம்ம மீனாட்சி அம்மாவுக்கு கல்யாணமுங்கோ!..

என்னலே?.. உளர்றே!.. கயற்கண்ணி... ங்கறே.. மீனாட்சி அம்மா...ங்கறே..
யாருக்கு கல்யாணம்?... பொண்ணு எந்த ஊரு?... மாப்பிள்ளை எந்த ஊரு ?..

ஐயா.. அவளுக்கு இருக்கு ஆயிரக்கணக்கான பேரு!...
சுளுவா இருக்குமே..ன்னு ஒன்னு ரெண்டு சொன்னேன்!..
பொண்ணுக்கு எந்த ஊரு... ந்னா கேட்டீங்க!..

ஆமா.. பொண்ணுக்கு எந்த ஊரு...ன்னு கேட்டேன்!..

இந்த ஊரு உலகமே அவளோடது தான்!.. ஆனாலும் அவ நம்ம மதுரைக்கார பொண்ணாச்சே!.. மாப்பிள்ளை அவளாகவே தேடிப் பிடிச்ச திரவியமாச்சே!.. திருநீல கண்டமாச்சே!.. சோம சுந்தர மூர்த்தியாச்சே!..


எல.. ராசாமணி!.. நம்ம சித்திரத் திருவிழா மீனாட்சி கல்யாணத்த...ல்லா இவ்வளவு நேரமாச் சொல்லிக்கிட்டு இருக்கான்!..

அட.. அத நேராவே சொல்றதுக்கென்ன!..
அது சரி.. இந்த வருசங் கல்யாணம் ..ன்னா,
போன வருஷஞ் செஞ்ச கல்யாணம் என்னாச்சு!..
அதுக்கு முன்னால செஞ்ச கல்யாணம் என்னாச்சு!..

டண்டன.. டண்டன.. டண்டன.. ட்டன்!..

என்னல.. கேள்வி கேட்டா உம்பாட்டுக்கு டமுக்கை அடிக்கே!..

சொல்றேன்.. சொல்றேன்!.. நேத்திக்கு பொழுது விடிஞ்சது.. மாடா உழைச்சு ஓடா தேய்ஞ்சாலும் மனசார வயிறார சாப்பிட்டு இருப்பீங்க!..

ஆமா!..

முந்தா நாளும் இப்படித்தானே?..

ஆமா..மா!..

நாளைக்கும் இப்படித்தானே பிழைப்பு!..

நாளைக்கென்ன.. இன்னைக்கும் அப்படித் தானே!..

நேத்திக்குத் தான் வேலை செஞ்சோமே!... சாப்பிட்டோமே!...ன்னு இன்னைக்கு சும்மா இருக்க முடியுங்களா!..

அதெப்படிங்...கறேன்.. எங் கிலுகிலுப்பை!..

அப்படித்தாங்க.. திருநாளும் திருவிழாவும்!..

நா.. என்ன கேட்டேன்.. அவன் என்னா சொல்றான்னு பாரு.. ராசாமணி!..

நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.. ஆளு நல்லா வெவரமாத்தான் இருக்காங்.. ஏன்யா.. அதுவும் இதுவும் ஒன்னா?..

ஒன்னு தாங்க.... வள்ளுவரே சொல்லியிருக்காரு!...

வள்ளுவரா?.. அவரு என்னலே.. சொல்லியிருக்காரு?...

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.. ந்னு!..

அதுக்கு?...

அருள்..ன்னா என்னாங்க?.. சந்தோஷந்...தாங்க!.. நிம்மதி தாங்க!..

ராசாமணி!.. என்னல.. சொல்றான்.. டமுக்கு!.. ஒன்னும் வெளங்கலையே!..

புரியற மாதிரி சொல்லுலே!..

மேலோகத்துக்குப் போய்ச் சேர்றப்ப.. வாங்கிக்கலாம்.. ன்னு பார்த்தா - நடு வழியில.. அருள் எங்கேயும் விக்குதா?.. அரைக் கிலோ... ஒரு கிலோன்னு...

அதெப்படிலே விக்கும்?.. கிறுக்குப் பய புள்ளயாவுல்ல இருக்காங்!..

அதுக்குத் தாங்.. இங்கே குடுத்தனம் பண்றப்பவே கோயில் குளம்.. திருநா.. திருவிழா.. நல்ல மனுசங்க.. நல்ல காரியம்..ன்னு இருந்தா - தன்னால நிம்மதியும் சந்தோஷமும் வந்து சேர்ந்துடாதா!..


சமூக ஒற்றுமையில தானே சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்குது!..
ஊரெல்லாம் திருநாள்..ன்னு இருக்கிறப்போ எவ்வளவு சந்தோஷம்!..
மக்க.. மனுசங்களப் பார்க்கிறப்போ எவ்வளவு நிம்மதி!...

ஆயிரக் கணக்கில ஜனங்க.. வர்றாங்க.. அவங்க யாருன்னு உங்களுக்குத் தெரியுமா!.. நீங்க யாருன்னு அவங்களுக்குத் தெரியுமா?.. ஆனாலும் ஒருத்தர ஒருத்தர் எவ்வளவு பாசமா நேசமா பாத்துக்கிறீங்க!..

அந்த பாசத்திலயும் நேசத்திலயும் வர்ற வாசத்தில தாங்க உலகம் பூத்துக் கெடக்கு!..

அத விட்டுட்டு அருவா.. கோடாலி.. சுளுக்கி.. தீவட்டி..ன்னு.. எடுத்துக்கிட்டு நின்னா ஊரு வெளங்குறதுக்கா?...

தேரு இழுக்கிறீங்க.. தெப்பம் பார்க்கிறீங்க.. கூட்ட நெரிசல்.. முழி தெறிக்குது.. தொண்டை காயுது.. அவன் யாருன்னு பார்த்தா ஒருவாய் தண்ணி வாங்கிக் குடிக்கிறீங்க!..

வீதிக்கு வீதி அன்னதானம்..ன்னு கூப்பிட்டு கூப்பிட்டு சோறு போடுறாங்க... யாரு வீட்டு சோறுன்னா.. பார்த்து சாப்பிடுறீங்க?..

தொண்டை நனைஞ்சு வயிறு நெறைஞ்சா எவ்வளவு நிம்மதியா இருக்கு?.. சந்தோஷமா இருக்கு?...

அந்த வேளையில.. அவன் மேல.. இவன் கீழே..ன்னு யாருய்யா.. பார்க்கிறா?..

அந்த சோமசுந்தரம் மீன்காரன் வீட்டுல பொண்ணு எடுக்கலையா?.. 
தெருத் தெருவா வளையல் வித்துக்கிட்டு போகலையா?.. 
தகப்பன் இல்லாத புள்ளைக்கு தாய் மாமனா வரலையா?.. 
பன்னிக் குட்டிகளுக்கு பால் கொடுக்கலையா?..

கூலிக்காரனா.. குதிரைக்காரனா.. வெறகு வெட்டியா.. 
என்னா ரூபத்தில வரலே.. அந்த சோமசுந்தரம்?!..

இத்தனையும் சோமசுந்தரம் செய்றப்போ 
கூடவே இருக்காளே மீனாட்சி அவ யாரு?...

கோட்டையில பொறந்த மாதிரி குடிசையிலயும் பொறந்தவ!..
அவளுக்கு மன்னவனும் ஒன்னு தான்.. மீனவனும் ஒன்னு தான்!..

ராசாமணி.. எந்த சேதியக் கொண்டாந்து எங்கால சேர்க்கிறான்..னு பாரு!.. அதெல்லாம் சாமி கதையில்லா...

அது சாமி கதை இல்லீங்க.. 
நம்ம ஊரு பொண்ணு கதை.. 
மக்களோட மக்களா இருந்த மீனாட்சி கதை..

எல.. ராசாமணி... எங்களுக்குத் தெரியாதாக்கும்.. மீனாட்சி கதை?..
புதுசா வந்துட்டான் சொல்றதுக்கு!..

பாண்டிய ராசாவுக்கு மகளாப் பொறந்தா.. மீனாட்சி!..

அவ எங்கே பொறந்தா?.. நெருப்புல இருந்து தானே வந்தா!..

அதையெல்லாம் சொல்லனும்..னா திருவிழா முடிஞ்சிடும்.. சொல்லவா!..

நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.. டமுக்கு!.. நீ விஷயத்துக்கு வாய்யா!..


அப்பனுக்கு அப்புறம் வாரிசு இல்லேன்னதும் நானே மகாராணி..ன்னு மகுடஞ் சூட்டிக்கிட்டா!.. ஒரு பெண்ணுக்கிட்ட கையக் கட்டி நிக்கிறதா..ன்னு மீசையை முறுக்குன ஆளுங்களை எல்லாம் அள்ளிப் போட்டு நொறுக்குனா!..

மதுரையச் சுத்தி எழு பக்கத்திலயும் ஜயக்கொடி நாட்டினா.. 
அதுக்கப்புறம் மிச்சம்..ன்னு இருந்தது வடக்கு!.. 
விடாதே பிடி.. வடக்கு.. அதை அடக்கு!.. ன்னு கிளம்பினா!..

வடக்கை அடக்கனும்..னு கிளம்பின முதல் பொண்ணு நம்ம ஊரு பொண்ணு.. தானுங்க!.. அதுக்காகவாவது திருவிழா கொண்டாடனும் இல்லையா!..

ஆமா..மா!.. ஏ.. ராசாமணி.. சரியாத்தான..ல சொல்லுறான்!..

கயிலாசத்துல.. ஒருமாடு, கையில திருவோடு..ன்னு சுத்திக்கிட்டு இருந்த ஆலால சுந்தரத்தைப் பார்த்து - 

வா.. ஒரு கை பார்ப்போம்!.. - ன்னு எதிர்த்து நின்னா!..

சண்டையெல்லாம் வேணாம்.. சமாதானமாப் பேசிக்குவோம்!.. ன்னு ஆலால சுந்தரம் சொன்னதும்

அப்ப வாங்க எங்க ஊருக்கு.. அது தான் அமைதிப் பூங்கா!.. ந்னு சொன்னாளே - அதுக்காகவாவது திருவிழா கொண்டாடனும் இல்லையா!..

ஆமாய்யா!.. என் ராசா!.. அறிவு அறிவா பேசுறியே!..

இதெல்லாம் நான் பேசலைங்க.. பெரியவங்க சொன்னது!..

பெரியவங்க சொன்னதா?.. எப்ப சொன்னாங்க ராசாமணி!..

அதெல்லாம் அவங்க அப்பவே சொல்லிட்டாங்க.. நாம தான் கேட்கலை!..

அடக் கெரகம்!.. புத்தி கெட்டுப் போச்சே.. ராசாமணி!..

அந்தக் காலத்திலேயே வடக்கையும் தெற்கையும் ஒரு பார்வையால இணைச்சவளாச்சே நம்ம மீனாட்சி!.. அதுக்காகவாவது திருவிழா கொண்டாடனும் இல்லையா!..

ஆமாடா.. ராசா.. ஆமா!..

நிலத்துக்குக் கீழே நீர் இருக்கு.. அதை எடுத்து வெள்ளாமை செஞ்சுக்குங்க.. ந்னு சொல்லாம சொல்லி வைகையை வரவழைச்சிக் கொடுத்தாரே மீனாட்சி சுந்தரம் அதுக்காகவாவது திருவிழா கொண்டாடனும் இல்லையா!..

எலே.. ஐயா.. டமுக்கு.. நீ இங்கேயே தங்கி.. மீனாட்சி கதை சொல்லிக்கிட்டு இரேன்!..

அதெப்படிங்க.. நான் இன்னும் நாலு தெருவுக்கு போகணும்!.. 
கல்யாண சேதி சொல்ல வேணும்!..

அதான!.. முக்கியமான சேதிய கேட்க விட்டுட்டோமே.. நீ சொல்ல வந்ததை சொல்லுய்யா!..

நாளைக்குக் காலைல ஏழு மணிக்கு 
சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றமுங்க!..

ரெண்டாந் திருவிழா பூத வாகனம் அன்னவாகனம்..
மூனாந் திருவிழா கயிலாய பர்வதம் காமதேனு வாகனம்..
நாலாந் திருவிழா தங்கப் பல்லாக்கு..
அஞ்சாந் திருவிழா தங்கக் குதிரை வாகனம்..ஆறாந் திருவிழா தங்கக் காளை வெள்ளிக் காளை வாகனம்..
ஏழாந் திருவிழா நந்தி வாகனம் யாளி வாகனம்..
எட்டாந் திருவிழா மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்..
ஒன்பதாம் திருவிழா இந்திர விமானம்.. 
அன்னிக்குத் தான் வடக்கை அடக்குனது..

பத்தாந் திருவிழா (19/4) திருக்கல்யாணம் பூப்பல்லாக்கு

பதினொன்னாம் திருவிழா தேரோட்டம்..
பன்னிரண்டாம் திருவிழா தீர்த்தம் தேவேந்திர பூஜை..

அப்ப.. அழகரு என்னிக்கு வர்றாரு?..

இங்கே கல்யாணம் முடிஞ்ச மறு நாள் (20/4) புறப்பாடாகின்றார்.. 
மறுநாள் போக மறு நாள் (22/4) காலைல வைகையில இறங்குகின்றார்..

எல.. ராசாமணி.. இந்த வட்டமாவது அழகரு வெள்ளணமா கிளம்பக்கூடாதா!.. தங்கச்சி கல்யாணத்தைப் பார்க்க வேணாமா!..

என்ன இப்புடி சொல்லீட்டீங்க?.. அழகரு எப்பவும் அப்புறமாத் தான் வருவாரு!.. சாமி குத்தமாகிடப் போகுது!.. கன்னத்தில போட்டுக்கிடுங்க!..

அதுவுஞ் சரிதான்.. சிவசிவா.. சிவசிவா!..

உடம்பு..ன்னா அழுக்கு இருக்கும்..
வீடு..ன்னா குப்பை இருக்கும்!..
ஊரு..ன்னா பிரச்னை வரத்தான் செய்யும்..
ஏற்றம் இறக்கம் இருக்கத் தான் செய்யும்!..
நல்லது கெட்டது நடக்கத் தான் செய்யும்..
அதெல்லாத்தையும் மறந்துடுங்க!.. 

சாமியா.. பூதமா.. ந்னு யோசிக்காம..
நம்ம ஊரு பொண்ணுக்கு திருவிழா.. 
அப்படிங்கற நினைப்போட வந்து சேருங்க...
அங்கால திருவிழாவைக் கண்ணாரப் பாருங்க...
ஜனங்களோட ஜனங்களா சேருங்க!.. 
நாலு பேருக்காவது நல்லது செய்யுங்க!..

மீனாட்சியையும் பார்க்கலாம்!..
மீனாட்சி சுந்தரத்தையும் பார்க்கலாம்!..

உன்னைய எங்கிட்டு பார்க்கிறது?...

அங்கனே கூட்டத்தில தான் சுத்திக்கிட்டு இருப்பேன்..
அவசியம் வந்துடுங்களா!..

வந்துடறோம் ராசா.. அவசியம் வந்துடறோம்!..


டண்டண்.. டனட்.. டன..
டண்டண்.. டனட்.. டன..
டண்டண்.. டனட்.. டன..
டண்டண்.. டனட்.. டன.. டண்!..

இதனால.. சகலமான ஜனங்களுக்கும் 
தெரிவித்துக் கொள்வது என்ன...ன்னா..

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி!..  
* * * 

14 கருத்துகள்:

 1. கல்யாண அழைப்பு
  அருமை நண்பரே
  ரசித்தே படித்தேன்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமையாய்
  வித்தியாசமாய்
  ஓர் அழைப்பு ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அன்பின்ஜி
  நல்ல சுவாரஸ்யமாக சென்றது தண்டோரா... மிகவும் யதார்தமான பேச்சு நடையில் அழைப்பு திருவிழாவுக்கு முடிந்தால் செல்கிறேன் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   நம்ம ஊரு பொண்ணுக்கு கல்யாணம்.. அவசியம் வந்துடுங்க!..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து அருமையான பகிர்வு ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அன்புள்ள ஐயா

  வணக்கம். எப்போதாவதுதான் வரமுடிகிறது. இருப்பினும் மே சூன் இரு மாதங்கள் விடுமுறை. அப்போது தொடர்ந்து வருவேன். நான் ஒருமுறை திருக்கல்யாணம் கண்டிருக்கிறேன். அருமையான மாறுபட்ட முறையிலான அழைப்பிதழ். அருமை. அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையைக் கண்டதும் மனம் நெகிழ்ந்தது..
   கொல்லர் தெருவில் ஊசி விற்பது போலத் தான் இது!..

   தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. சித்திரைத் திரு விழாவுக்குக் கட்டியம் கூறி யாயிற்றா ?இனி மதுரைத் திருவிழாவுக்கான பதிவுகள் தொடரும் தானே albeit in a different format. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   எல்லாம் தங்களைப் போன்ற பெரியோர்களின் நல்லாசிகள் தான்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. தண்டோரா போட்டு திருவிழா அழைப்புக்கு அழைப்பவரெவ்வளவு நல்ல விஷ்யங்கள், திருவிளையாடல் கதைகள் எல்லாம் அழகாய் சொன்னார். அவருக்கு பாராட்டுகள்.
  அழைப்புக்கு நன்றி.
  அன்னை மீனாட்சி அனைவருக்கும் மங்கலம் அருள வேண்டும்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும்
   அன்பின் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு