நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


திங்கள், மே 04, 2015

ஆற்றில் இறங்கிய அழகன்

வைகை காத்துக் கிடக்கின்றது வள்ளல் திருவடிகளைக் காண!..

அதன் பொருட்டு - திருமாலிருஞ்சோலை என்று புகழப்படும் அழகர் கோயிலில் இருந்து மதுரையம்பதியை நோக்கி அருள்மிகும் சுந்தரராஜப் பெருமாள் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் கோலத்தில் கடந்த சனிக்கிழமை (2/5) புறப்பட்டார்.


கள்ளழகர் என்று கனவிலும் நினைவிலும் கொண்டாடப்படுபவர் 
- ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் -  நூறு தடா நிறைய அக்கார அடிசிலும் வெண்ணெயும் நேர்ந்து கொண்டது - கள்ளழகரிடம் தான்!..

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக அழகர்கோயிலில் இருந்து சனிக்கிழமை இரவு 7.15 மணிக்கு தங்கப் பல்லக்கில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் கோலத்தில் தோளுக்கினியனாக மதுரை நோக்கிப் புறப்பட்டார்.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்துவது!..

அதுவரை தனித்தனியாக நடைபெற்றுக் கொண்டிருந்த இரு பெரும் விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தியவர் -  திருமலை நாயக்கர்.

அந்தவகையில் - தற்போது ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலும் அழகர்மலை ஸ்ரீகள்ளழகர் திருக்கோயிலும் இணைந்து நடத்துகின்றன.

மீனாட்சியம்மன் திருக்கோயிலில் அன்று கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது.

சித்திரைத் திருநாளின் மறுபகுதியாக 18/4 அன்று தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடங்கியது.

இதன் அடிப்படையில் - மதுரையில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் நிறைவுற்றதும், அழகர்கோயிலில் இருந்து ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்படுகின்றார்..

ஸ்ரீகள்ளழகர் சனிக்கிழமை மாலை மூலஸ்தானத்தின் மேற்குப் புறத்தில் உள்ள தாயார் சந்நிதி அருகிருந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.

ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் தலைப்பாகையுடன் - கண்டாங்கிப் பட்டுடுத்தி திருக்கரத்தில் வேல் கம்பு, வளரி எனும் ஆயுதங்களுடன் - கள்ளழகர் திருக்கோலத்தில் திகழ்ந்தார்.
ராஜகோபுரத்தின் காவல் மூர்த்தியாகிய பதினெட்டாம்படி கருப்பசுவாமி சந்நிதியின் எதிரில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு வையாழி ஆனவுடன் கொம்பு சாத்தும் நிகழ்ச்சியும் தீப ஆராதனையும் நிகழ்ந்தது.

ஸ்ரீ கருப்பசாமி சந்நிதிஅதன் பின் கருப்ப சுவாமியிடம் விடை பெற்றுக் கொண்டு - மேள தாளத்துடன் வாண வேடிக்கைகள் முழங்க, சம்பிரதாயப்படி வெள்ளியங்குன்றம் ஜமீன் மாட்டு வண்டியில் முன் செல்ல கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். 

கள்ளழகரை தீபாராதனையுடன் வழிபட்டு பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர். 

அப்போது - பக்த ஜனங்கள் பலரும் பிரசாதங்களை விநியோகித்தனர். 

அழகருடன் ஏராளமான பக்தர்கள் - கள்ளழகர், கருப்பசாமி வேடமணிந்து உடன் வந்தனர்.
சனிக்கிழமை இரவு. பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி வழியில் அப்பன் திருப்பதியில் சீர்பாதம் தாங்கிகள் ஓய்வெடுத்தனர். 
அதன்பின் கடச்சனேந்தல் வழியாக பயணம் தொடர - ஞாயிற்றுக் கிழமை அதிகாலைப் பொழுதில் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது.

கள்ளழகருக்கு அதிர்வேட்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வேயர் காலனி, ரிசர்வ் லைன் வழியாக மதுரை நகருக்குள் வந்தருளிய கள்ளழகரை ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை - அழகர்கோயில் சாலையில் உள்ள அம்பலகாரர் மண்டகப்படியில் வாண வேடிக்கைகள் முழங்க வரவேற்று மகிழ்ந்தனர்.
ஞாயிறு இரவு, தல்லாகுளம் பகுதியின் திருக்கண்களில் அருள்பாலித்த கள்ளழகர் தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் எழுந்தருளினார்.
அங்கு திருமஞ்சனமான பின்னர் - முன்னிரவு 2.30 மணியளவில் தங்கக் குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.  
அப்போது, அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் அனுப்பி வைத்த மாலை அணிவிக்கப்பட்டது. 

பின்னர் சிறப்பு பட்டாடையாக பச்சைப் பட்டு உடுத்தப்பட்டது.


விடியற்காலை 3.00 மணியளவில் தல்லா குளம் கருப்பசாமி திருக்கோயில் அருகே - பச்சைப் பட்டுடுத்திய கோலத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் - 

மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே கோரிப் பாளையம், ஆழ்வார்புரம் வழியாக வைகை ஆற்றை நோக்கி எழுந்தருளினார்.
இன்று அதிகாலை வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள - இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கண்ணில் எழுந்தருளும் கள்ளழகரை -  தெற்கு மாசி வீதி ஸ்ரீவீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். 

சித்திரைத் திருவிழாவின் சிறப்பான இந்நிகழ்ச்சியை தல்லாகுளம், கோரிப் பாளையம் பகுதிகளில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.சித்திரைத் திருநாளின் பதினான்காம் நாள் என்று சொல்லப்படும் - நன்னாள்!..

காலை 6.47 மணியளவில் பெருகி ஓடிய வைகை நீரில் இறங்கினார் கள்ளழகர். 

அச்சமயம் - பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் - 
கோவிந்தா.. கோவிந்தா!.. - என ஆரவாரித்து அன்பினை வெளிப்படுத்தினர். 

முன்னதாக ஸ்ரீ வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வைகையில் இறங்கினார்.

வைகையில் கள்ளழகர் இறங்கியதைத் தொடர்ந்து - தீர்த்தவாரி.

சர்க்கரைச் சொம்பில் கற்பூரம் ஏற்றி - மக்கள் கள்ளழகரை ஆராதித்தனர்.

நன்றி - தினமலர்
வைகையில் எழுந்தருளிய பின்னர் - ராமராயர் மண்டகப்படியில் அழகரின் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வைபவம் நிகழ்கின்றது.

அதன்பின்னர் - அண்ணா நகர் வழியாக வண்டியூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருள்கின்றார்.

இன்று இரவு முழுவதும் வாணவேடிக்கைகளுடன் மக்கள் கள்ளழகரைத் தரிசிக்கின்றனர்.

நாளை செவ்வாய்க்கிழமை காலையில் - வண்டியூர் வைகையின் நடுவே அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம். அத்துடன் நாரைக்கும் முக்தி அளிக்கின்றார்.

நாளை இரவு - ராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதாரத் திருக்காட்சி அருளல்.

நன்றி - சக்தி விகடன்
இந்த வருடம் அழகரின் தங்கக்குதிரை வாகனம் புதிதாகச் செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் மகிழ்ச்சி - வைகையில் தாராளமான தண்ணீர்..

இருகரைகளையும் தழுவிச் சென்ற நீரைக் கண்டு மக்கள் மனம் நெகிழ்ந்தனர்.அழகர் ஆற்றில் இறங்குவதைத் தரிசிப்பதற்கு தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டிருந்தனர்.

நள்ளிரவில் வைகையில் கூடியிருந்த மக்களிடையே சற்று சலசலப்பு நிகழ -அதனால் காவல் துறையின் கவனிப்பும் நிகழ்ந்திருக்கின்றது. 


புகைப்படம் எடுக்கக் காத்திருந்த நமது நண்பர்கள் பாதிக்கப்பட்டு Facebook- ல் செய்தி வருத்தத்துடன் வெளியானது.

அனைத்தும் அழகரின் சித்தம்..


இன்றைய பதிவின் அழகிய படங்களை வழங்கிய 
திரு குணா. அமுதன் மற்றும் திரு ஸ்டாலின் அவர்களுக்கு 
மனமார்ந்த நன்றி!..
* * *

புதன்கிழமை (6/5) காலையில் ராமராயர் மண்டகப்படியில் இருந்து புறப்படும் கள்ளழகர் - ஆழ்வார்புரம், கோரிப்பாளையம் வழியாக தல்லாகுளம் சேதுபதி மண்டகப்படியில் எழுந்தருள்கின்றார்.

அன்றிரவு - பூம்பல்லக்கில் எழுந்தருளி - வியாழக்கிழமையன்று காலை
அழகர் மலையைச் சென்றடைகின்றார். 

அழகர் வரும் வழியின் மீது விழி வைத்துக் கிடந்த மக்கள் - வாஞ்சையுடன் வள்ளல் பெருமானுக்கு விடை கொடுத்து அனுப்புகின்றனர்.

கண் பனிக்கும் நிலையில் மீண்டும் அழகர் வருவது எப்போது!.. 
- என சிந்திக்கத் தொடங்குகின்றது மனம்.

கள்ளழகர் திருவடிகள் போற்றி.. போற்றி!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * * 

14 கருத்துகள்:

 1. ஆகா, அழகர் ஆற்றில் இறங்குவதை காண கண் கோடி வேண்டும் என்பர், கண்ட காண்கள் பாக்கியம் பெற்றவை. புகைப்படங்கள் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 3. தங்களால் அழகர் ஆற்றில் இறங்கும் காட்சி கண்டேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 4. படங்கள் அழகு காணொளியும் கண்டேன் நண்பரே வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. படங்களும் தகவல்களும் அருமை... அருமை ஐயா...

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. தங்களால் அழகருடன் பயணித்தோம். ஆற்றில் இறங்கினோம். மக்களிடையே ஏற்பட்ட சலசலப்பு பற்றி அறிந்தேன். தவிர்க்கமுடியாதவையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதன காரண காரியங்களுக்கான கதை ஒன்றை எதிர்பார்த்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   கள்ளழகரின் வருகை மண்டூக மகரிஷியை சாபத்திலிருந்து காப்பதற்கே!..
   அதனை - மீனாட்சியம்மன் திருமணத்துடன் இணைத்து விட்டார்- மன்னர் திருமலை நாயக்கர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு