நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 01, 2014

மார்கழிப் பனியில் - 17

 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  - கோலஞ்செய் 
துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு 
சங்கத் தமிழ் மூன்றும் தா!..

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 17. 

 
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் 
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் 
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே 
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய் 
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த 
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் 
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா 
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் : 1 - 2 


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என்னே என்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்! - 1

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்! - 2
 

ஆலய தரிசனம்

திருவலஞ்சுழி


இறைவன் - கபர்தீஸ்வரர், வலஞ்சுழி நாதர்
அம்பிகை - பிரஹந்நாயகி, பெரிய நாயகி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி, அரசலாறு

ஒருமுறை ஆதிசேஷன்  பூமியையை வளைய வந்து ஒரு புறமாகத் துளைத்து மறுபுறம் வெளியேறியது. அப்படி வெளியேறிய  - பெரு வளை வெகுகாலம் மூடப்படாமலேயே கிடந்தது.  

பருவங்களின் சுழற்சியால்  - காவிரி பொங்கிப் பெருகி கரை புரண்டு வந்தாள்.  விதியின் வசமாய் திறந்து கிடந்த பிரு வளையாகிய பிலத்தினுள் - பாய்ந்த காவிரி பாதாளத்தினுள் விழுந்தாள். அவளால் மேலெழுந்து வர இயலவில்லை!.. 

அவ்வளவுதான்!.. 

நீரோட்டம் இன்றி, நெடு வயல்கள்  - ஏரி குளங்கள் எல்லாம் பொலிவிழந்து போயின.  மக்கள் கூடி மன்னனிடம் முறையிட - மன்னனோ செய்வதறியாது திகைத்து - இறைவனைச் சரணடைந்தான். 

அப்போது  - தியாக மனம் கொண்ட ஒருவர் திறந்து கிடக்கும் பிலத்தினுள் பாய்ந்தால் - பாதாளத்தில் கிடக்கும் காவிரி மேலே வருவாள்! - என்று அசரீரி ஒலித்தது. அதைக் கேட்ட அளவில் மனம் மகிழ்ந்த மன்னன் தன்னுயிரை மக்களுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்துடன் - பெருவளையினுள் குதிக்க முற்படுகையில் -


ஆங்கே - வறண்டு கிடந்த காவிரியின் கரையில் தவம் செய்து கொண்டிருந்த ஹேரண்ட முனிவர் - மன்னனைத் தடுத்து நிறுத்தி விட்டு தன்  உயிரைத் தியாகம் செய்து பிலத்தினுள் குதித்தார். 

அந்த அளவில் பாதாளத்தினுள் பரிதவித்துக் கிடந்த காவிரியும் மேலெழும்பி வர, ரிஷபாரூடராக காட்சி கொடுத்த இறைவன்  - ஹேரண்ட முனிவரைத் தன்னுடன்  இணைத்து - சிவசாயுஜ்யம் அளித்தான்.

ஹேரண்ட முனிவர் போன்ற தன்னலம் கருதாத கருணை மனம் படைத்தவர்களால் தான் நாடும் நகரும் மக்களும் மண்ணுயிர்களும் இன்புற்று வாழ்கின்றன - என்பது ஐதீகம். 

பின்னர் - தனது தவறுக்கு வருந்திய ஆதிசேஷன் - ஈசனைப் பணிந்து வணங்கி உய்வடைந்தான்.

இத்தலம் - அம்பிகை தவம் மேற்கொண்டிருந்த தலங்களுள் ஒன்றெனக் குறிக்கப்படுகின்றது. தவக்கோல அம்பிகையை பிரமன், இந்திரன் - வழிபட்டதாக  ஸ்தலபுராணம்.

ஹேரண்ட முனிவரின் சிலா ரூபமும் அவர் பாய்ந்த பெரு வளையும் திருக்கோயிலின் உள்ளே விளங்குகின்றன.

அமுதம் வேண்டும் என பாற்கடலைக் கடையும் முன்  கடல் நுரை கொண்டு தேவேந்திரன் செய்த  திருமேனிதான் - இங்கே விளங்கும் ஸ்வேத விநாயகர்.  இவருக்கு நித்ய அபிஷேகம் கிடையாது வஸ்திரம் சாத்தப்படுவதும் இல்லை. கற்பூரக் காப்பு மட்டுமே!..

அம்பிகை தவம் செய்து இறைவனை அடைந்த தலம் ஆதலால் - ஈசனின் வலப்புறம் கிழக்கு நோக்கியவளாக விளங்குகின்றாள். அம்பிகையின் சந்நிதி முன்பாக  - அஷ்டபுஜ மாகாளியம்மன் சந்நிதி விளங்குகின்றது.

கிழக்கு ராஜ கோபுரத்தின் வெளியில், மேற்கு நோக்கியபடி - ஸ்ரீ பைரவரின் தனிக்கோயில் எழிலாக விளங்குகின்றது.

அப்பர் ஸ்வாமிகளும் திருஞான சம்பந்தப்பெருமானும் வழிபட்டிருக்கின்றனர்.

இத்திருத்தலத்தில்,  பூச நீராட்டுப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது என்பதனை -

பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி(2/2)

- என்று திருஞான சம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார்.

தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் - கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருவலஞ்சுழி.  இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் சுவாமிமலை முருகப்பெருமானின் திருக்கோயில் உள்ளது..

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே!..(2/106)
திருஞானசம்பந்தர். 

சிவாய திருச்சிற்றம்பலம்.

14 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன்!..வளர்க நலமுடன்!..
      எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  2. பிள்ளையார் சுழிபோட்டு இந்த புத்தாண்டைத் துவங்கிய, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! பாவை பாடல்கள் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..
      எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
      அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  3. ஐங்கரன் அருளோடு அனைவருக்கும் நலனனைத்தையும்
    அருளிட வேண்டுகிறேன்!

    உங்களுக்கும் உக்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..
      எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
      அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  4. சிறப்பான ஆரம்பம் ஐயா...

    திருவலஞ்சுழி சிறப்புகளுக்கு நன்றி...

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..
      எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
      அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

      நீக்கு
  5. சிறப்பானதோர் தலம் பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் அனைவருக்கும்
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

      நீக்கு
  6. இனிய ஆரம்பம் ஐங்கரன் துணையோடு ....!
    ஹேரண்ட முனிவர் பற்றியும் காவேரி பற்றியும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி...!

    உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  7. ஆஹா .... விநாயகருடன் ஆரம்பம். அசத்தல். அதன் பிறகு திருப்பாவை + திருவெம்பாவை + ஆலய தரிஸனம் அனைத்துமே ஜோர் ஜோர். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும்
      இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..