நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 12, 2013

வினோதினி

வினோதினி - காரைக்காலைச் சேர்ந்த இளம் பெண். வயது 23.  பி.டெக்., பட்டதாரி. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவர்.

அவர் மீது சுரேஷ் என்ற கொடியவன்  - (இவன் கட்டிடத் தொழிலாளியாம்) அமிலம் வீசியதில் அவரது முகம், கை, தோள் முழுவதும் பாதிக்கப்பட்டு இரண்டு கண்களையும் இழந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் - சிகிச்சை பலனின்றி இன்று (12.02.2013) காலை 9.10 அளவில் வினோதினி உயிரிழந்தார்.


என் நெஞ்சிருக்கும் வரை உன் நினைவு இருக்கும் விநோதினி!... 

அன்புச் செல்வமே! அதிர்கிறது நெஞ்சம்... 

நின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!... 


இறுதி மூச்சு பிரியும் நேரம் வரை துளி கூட தைரியத்தை இழக்காமல் உறுதியுடன், சாதிக்கும் இலட்சியத்துடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், தன் மீது அமிலம் வீசிய கயவனைப் பற்றிச் சொல்லும் போது - ''... உண்மையான காதல்ன்னா என்ன அண்ணா!... நம்ம கூட இல்லைன்னா, நமக்குப் பிடிச்ச பொண்ணு எங்கேயுமே நிம்மதியா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறது தானா?.... என்று  கேட்டதாகவும் ஆனந்தவிகடன் நிருபர் தெரிவிக்கின்றார்.

* * *

வினோதினி மீது அமிலம்  வீசிய சம்பவம் 2012 நவம்பர் 14-ல் நடந்தது.  இருப்பினும் மறுநாள் தான் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

ஒருதலைக் காதலை நிராகரித்த ஒரே காரணத்திற்காக,  வன்மம் கொண்ட கொடியவன் வினோதினி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்வதை யார் மூலமாகவோ தெரிந்து கொண்டு பேருந்து நிலையத்தில் எதிர்பார்த்து காத்திருந்து  வினோதினியின் அமிலம் வீசினான்.

கொடியவன் சுரேசுக்கு தகவல் சொன்னவர்கள் யார்? அதிக அளவில் அமிலம் அவனுக்கு எப்படி கிடைத்தது? என்ற விவரங்கள் சரியாகத் தெரியவில்லை.

கல்வி கற்று குடும்பத்தின் துயர் தீர்க்க என்று கம்பீரமாக - வலம் வந்த வினோதினி ஒருதலைக் காதல் கொண்ட வெறியனால் சிதைந்து சின்னா பின்னமாகி மாண்டு போனாள். 

இந்தச் சம்பவம் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பதற வைத்துள்ளது. அன்று முதல் இன்றுவரை பெண் குழந்தைகளைக் கண் போல கவனமாகக் காத்து வளர்க்கின்றோம். இப்போது வெளியே நடக்கும் சம்பவங்களை கேள்விப்பட்டால் அச்சமாக இருக்கிறது.  

பெண் குழந்தைகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று - வீடு திரும்பி வரும் வரை தவித்து - துடித்து மடியில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மாலை  கழிந்து  இருட்டினாலே குடிகாரர்கள், திருடர்கள் தொல்லையால் சாலையில் தனியாக  ஆண்களே வரமுடிவதில்லை. பெண் பிள்ளைகளை  உள்ளூரில் படிக்க அனுப்புவது, தொலை தூரத்தில் படிக்கவைப்பது, வேலைக்கு அனுப்புவது என்று எதற்குமே பாதுகாப்பு  இல்லாமல்  ஆகிவிட்டது..

தலைநகர் தில்லி  - காரைக்கால்,  எந்த இடத்தில் நடந்த சம்பவம் ஆனாலும், 

இந்த மாதிரி ஈவு இரக்கமில்லாமல் செய்யும் கொடியவர்கள் மீது வழக்கு, விசாரணை என்று நடத்தி நேரங்காலத்தை வளர்த்துவதை விட - முச்சந்தியில் வைத்து  சுட்டுத் தள்ளிவிடவேண்டும். அப்படிச்  செய்தால் தான் மற்றவர்கள் தப்பு செய்ய அஞ்சுவார்கள்.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பெண்களை படிக்க வைப்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது. அதையும் மீறி படிக்கச் செல்லும் பெண்களுக்கு இவனைப் போன்ற கொடியவர்களின் தொந்தரவும் தொடர்ந்து வருகிறது

ஏளனம், அவமதிப்பு,வன்முறைகள், வன்கொடுமை என பல வகைகளில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். வினோதினிக்கு நடந்த கொடுமை இந்த மண்ணில் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. அமிலம் வீசிய கொடியவன் மீது மிக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைநகர் சம்பவம் போல மாணவி வினோதினிக்கு ஆதரவுப் பெருங்குரல் எழாதது வேதனை அளிக்கிறது.

பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்கின்றோம். இன்று வினோதினி தன் அழகையும், கண்களையும் இழந்து கொடிய வேதனைகளை - எந்த குற்றமும் செய்யாமல் - அனுபவித்து கடைசியில் உயிரையும் இழந்துள்ளார்.

இதற்கு இந்த சமுதாயம் / அரசாங்கம் என்ன பதில் கூறப்போகிறது?

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட்டதனொடு நேர்
                                                   - திருக்குறள்..

துஷ்டர்களை ஒடுக்கத் தெரியாத, இயலாத சமுதாய / அரசு அமைப்புகள் நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை.

நின்று வாழவேண்டிய பசுங்கொடியை அழித்த - கொடியவனுக்கு அதிக பட்ச தண்டனையை நிறைவேற்ற வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..