நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், பிப்ரவரி 14, 2013

காதலாகிக் கசிந்து

இளம் வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்த பண்டைய சமுதாயத்தில் திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் பழகுவது என்பதற்கு வாய்ப்பே இல்லை - என்று கற்றறிந்தோர் கூறுகின்றனர்.

பழந்தமிழ் இலக்கியங்கள் கூட, பருவத்தின் கவர்ச்சியால் ஆணும் பெண்ணும் பழகும் பழக்கத்தைக் ''களவியல்'' என்று தான் கூறியுள்ளன.   

ன்றும் என்றும் தமிழில் ''காதல்'' என்றால் ''அன்பு'' என்ற அர்த்தம்தான். வேறு எந்த அர்த்தமும் கிடையாது.

நம்மை வழிநடத்தும் தேவாரத்திலும் திருவாசகத்திலும் ''காதல்'' என்ற சொல் ''அன்பு'' எனும் பொருளிலேயே நோக்குமிடம் எங்கும் விரவிக் கிடக்கின்றது. 

எனினும் சிந்தனைக்குச் சில...

''காதலாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது''
- திருஞானசம்பந்தர்,  தேவாரம் - 3/49.

''காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர் தம் மனத்துளானை''
- திருநாவுக்கரசர்,  தேவாரம் - 6/66.

''காதல் செய்து களித்துப் பிதற்றிக் 
கடிமா மலரிட்டு  உனையேத்தி''
- சுந்தரர், தேவாரம் - 7/41. 

''உடையானே நின்றனை உள்கி உள்ளம் 
உருகும் பெருங்காதல் உடையார்'' 
- மாணிக்கவாசகர்,  திருச்சதகம் - 8/56.
 
மணம் செய்து கொள்ளும் முறை என்று இருந்தாலும் திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் தீண்டாமல் இருப்பதுதான் தமிழர் பண்பாடு என்பதை திருமருகலில் பாம்பு தீண்டி இறந்து, திருஞானசம்பந்தர் திருவருளால் மீண்டும் உயிருடன் எழுந்த இளைஞனின் வரலாறு விளக்கும்.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தீண்டாதிருந்து - திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்த பிறகு, மணமகனும் மணமகளும் ஒருவர் கரத்தினை ஒருவர் பற்றுவதால் (கைப்பிடித்தல்) திருமணத்திற்குப் ''பாணிக்கிரகணம்'' என்றும் பெயர் என்று அருளாளர்களும்   ஆன்றோர்களும் வகுத்து வைத்துள்ளனர்

ஆன்மீகமும் இலக்கியமும் கூறும் சமுதாய பழக்கவழக்கங்களைத் தெரிந்து கொள்வோம். அவற்றின் உட்பொருளைப் புரிந்து கொள்வோம்!...

எதுவும் தெரியாமல் - புரியாமல், மேல் நாட்டின் கீழ்த்தரமான ஒழுக்கமற்ற செயல்களை - கலாச்சாரம் என ஏற்று நடந்து  தமிழின் விரோதியாக, தமிழ்ச் சமுதாயத்தின் துரோகியாக தமிழர் இருக்க வேண்டாம்!...

ஏதும் அறியாத வாழை இளங்கன்றுகளும் - வளர் இளஞ்சிங்கங்களும் நெறி முறைகளைப் பேணிக்காத்து பெருவாழ்வு வாழ வேண்டும். 

பெற்றோர்க்குப் பிள்ளைகளே பெருஞ்செல்வங்கள்!... அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்று பெற்றவர்களால் தான் நினைக்க முடியும்!... 

பெற்றெடுத்து பெயர்சூட்டி, பெரிதுவந்து வளர்த்து பேணிக்காத்த பெற்றோரைக் காட்டிலும் உயர்ந்த மற்றோர் யார்?....

உடல் கவர்ச்சியால் மயங்கி

உளக்கிளர்ச்சி மிகக்கொண்டு, 

உளம் அழிந்து போகாமல்,  

உரு அழிந்து போகாமல்,  

உடல் அழிந்து போகாமல்  -

பெற்றோர்க்குப் பெரும்பெயர் தாருங்கள் பிள்ளைகளே!...

  
உங்களை மங்களகரமான மணக்கோலத்தில் -

மணக்கோலத்தில் காணவே ஒவ்வொரு பெற்றோரும் நாளும் தவம் செய்து கொண்டிருக்கின்றனர்!... 

அந்த வரத்தினைப் பெற்றோர்க்குத் தாருங்கள்!...

வாழ்க வளமுடன்!..

செவ்வாய், பிப்ரவரி 12, 2013

வினோதினி

வினோதினி - காரைக்காலைச் சேர்ந்த இளம் பெண். வயது 23.  பி.டெக்., பட்டதாரி. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவர்.

அவர் மீது சுரேஷ் என்ற கொடியவன்  - (இவன் கட்டிடத் தொழிலாளியாம்) அமிலம் வீசியதில் அவரது முகம், கை, தோள் முழுவதும் பாதிக்கப்பட்டு இரண்டு கண்களையும் இழந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் - சிகிச்சை பலனின்றி இன்று (12.02.2013) காலை 9.10 அளவில் வினோதினி உயிரிழந்தார்.


என் நெஞ்சிருக்கும் வரை உன் நினைவு இருக்கும் விநோதினி!... 

அன்புச் செல்வமே! அதிர்கிறது நெஞ்சம்... 

நின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!... 


இறுதி மூச்சு பிரியும் நேரம் வரை துளி கூட தைரியத்தை இழக்காமல் உறுதியுடன், சாதிக்கும் இலட்சியத்துடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், தன் மீது அமிலம் வீசிய கயவனைப் பற்றிச் சொல்லும் போது - ''... உண்மையான காதல்ன்னா என்ன அண்ணா!... நம்ம கூட இல்லைன்னா, நமக்குப் பிடிச்ச பொண்ணு எங்கேயுமே நிம்மதியா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறது தானா?.... என்று  கேட்டதாகவும் ஆனந்தவிகடன் நிருபர் தெரிவிக்கின்றார்.

* * *

வினோதினி மீது அமிலம்  வீசிய சம்பவம் 2012 நவம்பர் 14-ல் நடந்தது.  இருப்பினும் மறுநாள் தான் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

ஒருதலைக் காதலை நிராகரித்த ஒரே காரணத்திற்காக,  வன்மம் கொண்ட கொடியவன் வினோதினி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்வதை யார் மூலமாகவோ தெரிந்து கொண்டு பேருந்து நிலையத்தில் எதிர்பார்த்து காத்திருந்து  வினோதினியின் அமிலம் வீசினான்.

கொடியவன் சுரேசுக்கு தகவல் சொன்னவர்கள் யார்? அதிக அளவில் அமிலம் அவனுக்கு எப்படி கிடைத்தது? என்ற விவரங்கள் சரியாகத் தெரியவில்லை.

கல்வி கற்று குடும்பத்தின் துயர் தீர்க்க என்று கம்பீரமாக - வலம் வந்த வினோதினி ஒருதலைக் காதல் கொண்ட வெறியனால் சிதைந்து சின்னா பின்னமாகி மாண்டு போனாள். 

இந்தச் சம்பவம் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பதற வைத்துள்ளது. அன்று முதல் இன்றுவரை பெண் குழந்தைகளைக் கண் போல கவனமாகக் காத்து வளர்க்கின்றோம். இப்போது வெளியே நடக்கும் சம்பவங்களை கேள்விப்பட்டால் அச்சமாக இருக்கிறது.  

பெண் குழந்தைகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று - வீடு திரும்பி வரும் வரை தவித்து - துடித்து மடியில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மாலை  கழிந்து  இருட்டினாலே குடிகாரர்கள், திருடர்கள் தொல்லையால் சாலையில் தனியாக  ஆண்களே வரமுடிவதில்லை. பெண் பிள்ளைகளை  உள்ளூரில் படிக்க அனுப்புவது, தொலை தூரத்தில் படிக்கவைப்பது, வேலைக்கு அனுப்புவது என்று எதற்குமே பாதுகாப்பு  இல்லாமல்  ஆகிவிட்டது..

தலைநகர் தில்லி  - காரைக்கால்,  எந்த இடத்தில் நடந்த சம்பவம் ஆனாலும், 

இந்த மாதிரி ஈவு இரக்கமில்லாமல் செய்யும் கொடியவர்கள் மீது வழக்கு, விசாரணை என்று நடத்தி நேரங்காலத்தை வளர்த்துவதை விட - முச்சந்தியில் வைத்து  சுட்டுத் தள்ளிவிடவேண்டும். அப்படிச்  செய்தால் தான் மற்றவர்கள் தப்பு செய்ய அஞ்சுவார்கள்.

இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பெண்களை படிக்க வைப்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது. அதையும் மீறி படிக்கச் செல்லும் பெண்களுக்கு இவனைப் போன்ற கொடியவர்களின் தொந்தரவும் தொடர்ந்து வருகிறது

ஏளனம், அவமதிப்பு,வன்முறைகள், வன்கொடுமை என பல வகைகளில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். வினோதினிக்கு நடந்த கொடுமை இந்த மண்ணில் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. அமிலம் வீசிய கொடியவன் மீது மிக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைநகர் சம்பவம் போல மாணவி வினோதினிக்கு ஆதரவுப் பெருங்குரல் எழாதது வேதனை அளிக்கிறது.

பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்கின்றோம். இன்று வினோதினி தன் அழகையும், கண்களையும் இழந்து கொடிய வேதனைகளை - எந்த குற்றமும் செய்யாமல் - அனுபவித்து கடைசியில் உயிரையும் இழந்துள்ளார்.

இதற்கு இந்த சமுதாயம் / அரசாங்கம் என்ன பதில் கூறப்போகிறது?

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட்டதனொடு நேர்
                                                   - திருக்குறள்..

துஷ்டர்களை ஒடுக்கத் தெரியாத, இயலாத சமுதாய / அரசு அமைப்புகள் நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை.

நின்று வாழவேண்டிய பசுங்கொடியை அழித்த - கொடியவனுக்கு அதிக பட்ச தண்டனையை நிறைவேற்ற வேண்டும்...

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

அஞ்சலி

அஞ்சலி 

deepam
தலை நகர் - புது தில்லியில்  ஆறு கொடியவர்களால் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மருத்துவ மாணவி உயிர் வாழப் போராடி - மாண்டாள்..

துவாரகாவில் ரகசிய இறுதிச்சடங்கு. உடல் தகனம் செய்யப்பட்டது. 


வன்கொடுமைக்கு  ஆளான  23 வயது  மருத்துவ மாணவி உயிர் வாழ வேண்டி 13 நாட்கள் போராடி - ஓய்ந்து - உயிர் ஒடுங்கினாள்....
அந்த இளம் பெண்ணின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் . என்ன பாவம் செய்தாள் இந்த பெண்? ...மிகவும்  வருத்தம் தரும் செய்தி இது....

இப்படி எரியும் நெருப்பில் இடுவதற்காகவா.... இத்தனை காலம் பேணி வளர்த்தார்கள்?.....சிதையின் நெருப்பு அணைந்து விடலாம்!.... பெற்றவர்கள் வயிற்றில்  எரிகிறதே நெருப்பு!....

கல்லூரிக்கோ, பள்ளிக்கோ அனுப்பிவிட்டு வீடு திரும்பும் வரை வயிற்றிலே பெண்ணை பெற்ற தகப்பனும் தாயும் தீயில் நிற்பது போல  இருக்கிறார்கள்.. நெருப்பை வயிற்றில் கட்டி கொண்டு இருக்க வேண்டி உள்ளது. நடைபெறும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் பெற்றோர்களை நிம்மதி இல்லாமல் ஆக்கிக் கொண்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு எந்தவித தண்டனை அளித்தாலும் அந்த தண்டனை மட்டுமே  தீர்வாகிவிடாது.

தனி மனித ஒழுக்கம் பேணிக் காக்கப்பட வேண்டியது அவசியம்...

''நேற்று - இன்று - நாளை'' என பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இளம் பெண்களும் தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.. ஒவ்வொரு இளைஞனும் சக இளம் பெண்களை சகோதரிகளாக பாவித்துப் பழக வேண்டியது அவசியம்... பெண்ணைத் தாயாக சகோதரியாக மகளாக பாவித்துப் போற்றிக் கொண்டாடிய மண் இது.

ஈனர்கள் வெளியேற்றிய நாற்ற, சீர்கேடுகள் கலாச்சாரம் நாகரிகம் என்ற பெயர்களில் இங்கும் பரவியதால் - பரப்பப் பட்டதால் - பரிதவித்து நிற்கிறது - பண்பாடு மிக்க பாரதம்...
 
அனாவசியமாக இளம் பெண்கள் இரவில் தக்க பாதுகாப்பு இன்றி வெளியே வருவதில் உள்ள சிக்கல்களை அமைதியான முறையில் சிந்திக்க வேண்டியது அவசியம்...

நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தரவில்லை இன்றைய கல்வி நிலையங்கள்.. பணம் சம்பாதிப்பதே - இருதரப்பினருக்கும் லட்சியமாகி விட்டது. ஆசிரியர்களோ , கல்வி நிறுவனங்களோ - பிள்ளைகளின் சமுதாய ஒழுக்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதில்லை...

வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களை மாசு படுத்துவதற்கே - இன்றைய  ஊடகங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இயங்குகின்றன...இதிலிருந்தெல்லாம் மீண்டு பிள்ளைகள் நல்லபடியாக வளர்வது பெரும்பாடுதான்!....

பெற்றோர்களும் பிள்ளைகளை ஆணாகட்டும்... பெண்ணாகட்டும்... நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

''தீதும் நன்றும் பிறர் தர வாரா...''

இது மாதிரியான  கொடுமைகள் இனி நடக்காமல் இருக்கட்டும்.. தவிரவும்  சட்டங்களும்  நீதியும் மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியமும் நேர்ந்துள்ளது. இதுவே தருணமாக அமையட்டும்.

உடல் வந்த ஒரு மணி நேரத்திற்குள்  தகனம் செய்யப்பட்டது - என செய்தித் தாள்கள் கூறுகின்றன. நீதி கேட்டுப் போராடும் இளைஞர்களின் மனநிலையினை எண்ணி அரசு அச்சப்படுகிறது போலும்...

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட்டதனொடு நேர்
                                                   - திருக்குறள்..

துஷ்டர்களை ஒடுக்கத் தெரியாத, இயலாத அரசு அமைப்புகள் நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை.

நீரில் அஸ்தி  கரைவதற்குள் கொடியவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நிறைவேற்ற வேண்டும்...

கொடியவர்களின் அஸ்தி நீரில் கரையும் வரையில்,

அந்த இளம் பெண்ணின் அஸ்தி கரைவதற்கு வாய்ப்பில்லை.