நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 16, 2013

திருச்செந்தூர்

முருகனின் பெருமைகளை அறியாதார் யார்?....

எனினும் 
''...சொல்லச் சொல்ல இனிக்குதடா... முருகா'' என்றபடிக்கு ஐயன் முருகனுடைய பெருமைகளை  மீண்டும் சிந்திப்பதற்கும் சொல்வதற்கும் இன்று  ஒருநாள் நமக்குக் கிடைத்துள்ளது.

அமரர் இடர் தீர அமரம் புரிய வந்தவன் திருக்குமரன்.

எம்பெருமானின் நெற்றிக் கண்களில் தோன்றிய தீப்பொறிகளிலிருந்து சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் '' உலகம் உய்ய உதித்தவன் திருமுருகன்''.

அருவமும் உருவும்  ஆகி அநாதியாய்ப் பலவாய்  ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள்   ஆறுங்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம்  உய்ய. 
                                                                                                    - கந்தபுராணம்.

திருமுருகன் - தான் உதித்த, நோக்கத்தினை நிறைவேற்றிய திருத்தலம் தான் - ''ஜயந்திபுரம்'' எனப் புகழப்பெறும் - "திருச்செந்தூர்''. 

தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் ''அலைவாய்''  எனவும் ''செந்தில்'' எனவும் குறிக்கப்படும் திருத்தலம்.

திருநாவுக்கரசு சுவாமிகள்,

''நஞ்செந்தில் மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே..''

 - செந்தில் எனும் தலத்தில் குடியிருக்கும் வள்ளி மணவாளனாகிய முருகன் - என்று - திருமறைக்காடு திருத்தாண்டகத்தில் - மனமுவந்து போற்றி மகிழும் திருத்தலம். 

திருமுருகாற்றுப்படை - பயன் பெற்ற ஒருவர், மற்றொருவரும் பயன் பெறும் பொருட்டு அவரை வழிப்படுத்தும் வகையில் பாடப்பெற்ற பக்தி இலக்கியம்.

பொருளைப் பெற்று, உயிர் வாழும் பொருட்டு வழிப்படுத்திய காலத்தில்,  அருளைப் பெற்று, உயிர் உய்யும் பொருட்டு வழிப்படுத்திய இந்நூலில் முருகப் பெருமானே பாட்டுடைத் தலைவன். நாம் நல்வழிப்படும் பொருட்டு நம்மை வழிப்படுத்தியவர்  நக்கீரர். 

இவர் பாண்டியன் சபையில் தருமியின் பாடலுக்குப் பொற்கிழி பரிசினை எதிர்த்து போர்க்கொடி தூக்கியவர். நெற்றிக்கண் திறப்பினுங் குற்றம் குற்றமே என்று எதிர் வழக்காடி இறைவனின் நெற்றிக் கண் நெருப்பில் சாம்பலாகி பின் உயிர்த்தெழுந்தவர். இந்த வரலாற்றினையும் கூட திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத் திருப்பதிகத்தில் பதிவு செய்துள்ளனர்.

நக்கீரர் மீண்டெழுந்த பின் - ஒரு யாகம்  நிகழ்த்தும் போது பிழையான மந்திர உச்சரிப்பால் 'கர்முகி' எனும் பூதம் அவரைப் பிடித்துக் கொண்டு போய் - 'அப்புறமாகப் பலியிடலாம்'  என்று ஒரு குகையினுள் அடைத்து விடுகின்றது. அந்த நேரத்தில் முருகன் அருள் வேண்டி யாசிக்க, திருவருள் கை கூடி வந்து மீண்டும் நக்கீரர் உயிர் பிழைக்கின்றார். அதன் பிறகு அவர் இயற்றியதே திருமுருகாற்றுப்படை. இந்த நூலில் தான் படைவீடுகள் என ஆறு தலங்கள் குறிக்கப்படுகின்றன. அவை -

திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருஆவினன்குடி (பழனி),  திருஏரகம் (சுவாமிமலை), திருத்தணிகை, பழமுதிர்சோலை - என்பன.

இவற்றுள் - திருச்செந்தூர் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ள திருத்தலம் . ஆனாலும் "கந்தமாதன பர்வதம்' எனும் சந்தனமலையில் தான் திருக்கோயில் அமைந்துள்ளது. காலவெள்ளத்தில் சந்தனமலை பெருமளவு கரைந்து விட்டாலும் திருக்கோயிலின் உள்ளே பெருமாள் சன்னதியில் சந்தன மலையைக் காணலாம்.  தவிர - கோயிலுக்கு வடபுறம் ,

சந்தன மலையில் தான்  என் தாய் ''வள்ளி நாச்சியார்'' குகை அமைந்துள்ளது. கடற்கரையில் உள்ள நாழிக்கிணறு இயற்கையின் அற்புதம்.

சூரபத்மனின் ஆணவத்தை அழிக்க இங்கு படைகளுடன் எழுந்தருளிய சிவகுருநாதனைத் தரிசனம் செய்து வணங்கிய, தேவகுரு பிரகஸ்பதி (வியாழன்)  -  நம் பொருட்டு அசுரர்களின் வரலாற்றை  எடுத்துரைத்தார்.

சிவகுருநாதனைத்  தேவகுரு பணிந்து வணங்கியதால், இங்கே வியாழ தோஷங்கள் நீங்குகின்றன.

குரு பெயர்ச்சி அன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், நாம் முற்பிறவியில் செய்த கொடுவினைகளின் காரணமாக - 
பிரகஸ்பதி வழங்கும் தண்டனைகளின் தாக்கம் - சற்று குறைய வாய்ப்புள்ளது.

முருகா சரணம்!... முதல்வா சரணம்!...
முருகப்பெருமான் சூரனை  வெற்றி கொண்ட பின், தனது வெற்றிக்கு நன்றி தெரிவித்து ஜடாமகுடத்துடன் வலது கையில் தாமரை மலர் கொண்டு சிவ பெருமானை வணங்கிய தலம்.  இந்தத் திருக்கோலத்திலேயே திருவருள் புரியும் முருகனுக்குப் பக்கத்தில் சிவலிங்கம் இருக்கிறது.

திருச்செந்தூர் திருத்தலத்தின் தத்துவம் - ''நன்றி மறவாதிருத்தல்''.

இறைவனைக் குறித்துத் தவமியற்றிய சூரபத்மன் வரம் பல பெற்றும் அதைக் கொண்டு உய்வடையாமல் தேவர்களை - அவர்களின்  விதிவசத்தால் - துன்புறுத்தினான். சிவ அம்சம் திருக்குமரனாக வந்து நன்மைகளை எடுத்துக் கூறியும் - நன்றி மறந்து சிவ அம்சத்தினையே எதிர்த்து - ஆணவம் அழியப் பெற்றான்.

இந்த வெற்றியை முருகப்பெருமான் தன் தாய்தந்தையர்க்கு அர்ப்பணித்து - வணங்கி நின்றார். அந்த பூஜை நேரத்தில்தான் - தமக்கு நன்றி கூறிப் பணிந்து வணங்கிய தேவர்களுக்குக் காட்சியளித்தார்.

அந்தத் திருமுருகனின் திருவடித் தாமரைகளில், தூவி வணங்கிட - நன்றி அறிதல் எனும் நற்பண்பின்  மலர்களைத் தவிர வேறு நல்ல மலர்கள் ஏது?... 

முருகப்பெருமான் சூரபத்மனை, வெற்றி கொண்ட நாள் ஐப்பசி மாதம் வளர்பிறை ஆறாம் நாள். இந்நாளே இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்  கந்த சஷ்டி .

ஆவணி, மாசி மாதங்களில் பெருந்திருவிழாக்களும் பங்குனி உத்திரம், திருக் கார்த்திகை, வைகாசி விசாகம்  எனும்  வைபவங்களும் நிகழ்வுறுகின்றன.

இந்த வருட மாசித் திருவிழா இன்று (16.2.2013) முதல் நாளாக  கொடியேற்றத்துடன், சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

இரண்டாம் நாள் தொட்டு ஆறாம் நாள் வரை சிங்க கேடய சப்பரம், பூங்கேடய சப்பரம், தங்கமுத்துகிடா வாகனம், வெள்ளி அன்ன வாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி சரப வாகனம், தங்க மயில் வாகனம், கோ சப்பரம் - என தேவியருடன் பவனி வரும் செந்தில்நாதன்  ஏழாம் நாள் மாலையில் சிவப்புப் பட்டு அணிந்து  சிவபெருமானாக திருக்கோலங்கொள்கின்றார்.

எட்டாம் நாள் காலையில்  வெண்பட்டு அணிந்து நான்முகனாகவும், உச்சிப் பொழுதில் பச்சைப்பட்டு அணிந்து திருமாலாகவும் அருள்கின்றார்.  ஒன்பதாம்  நாள் பல்லக்கு. தங்க கயிலாய வாகனம் மற்றும் வெள்ளைக் கமல வாகனம்.

பத்தாம் திருநாள் மாசி மகத்தன்று  (25/2 - திங்கள்) காலையில் தேரோட்டம்.

மறுநாள் (செவ்வாய்) மாலை தெப்பம். பன்னிரண்டாம் திருநாளான (27/2) புதன் மாலை மஞ்சள் நீராட்டுடன் வீதிவலம் வந்து - அபிஷேகம், அலங்கார தீபாராதனை. இரவு தேவியருடன் மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து திருக்கோயிலைச்  சேர - திருவிழா இனிதே நிறைவுறுகின்றது.

சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும்  அவன்
கால் பட்டழிந்தது  இங்கு என்தலை மேல்அயன் கையெழுத்தே...
                                                                                                                  - கந்தர் அலங்காரம்.

80 பாடல்களுக்கும் அதிகமாக - திருச்செந்தூர் முருகனின் திருப்புகழைப் பாடித் துதித்து மகிழ்ந்தவர் அருணகிரிநாதர். 

"செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி 
செந்திற் பதிநகர் உறைவோனே" - திருப்புகழ் (96)
- ''செஞ்சொற் சங்கப்புலவர்களால் பாடப்பட்ட  பழைமையான  திருத்தலம்  திருச்செந்தூர்'' என்பதை திருப்புகழ் வாயிலாக அறியமுடிகின்றது..

அருணகிரிநாதருக்கு - தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு என்னும் ஆறு அணிகலன்களும் திருவடிகளிற் ''கணகண'' என்று ஒலிக்க -  திருநடன தரிசனம் அளித்தவன் செந்தில்நாதன்.
 * * *


இனி,
உயர்திரு.டாக்டர்.தணிகைமணி-வ.சு. செங்கல்வராயப்பிள்ளை எம்.ஏ., டி.லிட்.,
அவர்கள் - தனது ''அருணகிரிநாதர் - வரலாறும் நூலாராய்ச்சியும்'' 
எனும் நூலில் வழங்கியுள்ள கருத்தொன்றினைக் காண்போம்...

''திருச்செந்தூர் என்பது அலைவாய்த்தலம். இத்தலத்தைத் தியானிப்பதால், இத்தலத்திற் கடலலை கரையில் மோதி ஓய்வது போலவும், அங்ஙனம் ஓயும் இடத்தே இறைவன் திருக்கோயில் கொண்டுள்ளது போலவும், நமது மனதில் எழுகின்ற எண்ணங்கள் ஓய்ந்து மன அமைதி கூடும். அங்ஙனம் கூடுமிடத்து இறையொளி தோன்றும்.''
 * * *  

வேலும் மயிலும் துணை!..

2 கருத்துகள்:

  1. அற்புதமான விளக்கங்கள்....நான் முருகப் பெருமானின் அடிமை.அதுவும் செந்தூர் பெருமானை நீங்கா நினைவுடன் நினைந்து வாழ்பவன்.....சீரலைவாய் பற்றி..இவ்வளவு விஷயங்கள் கேள்விப்பட்டதே இல்ல....செந்தூர் முற்காலத்தில் சந்தன மலையில்தான் இருந்தது. வல்லிக் குகை இருப்பது சந்தனக்குகையே.........இது தணிகை மணியின் கருத்தாயினும் தங்கள் வாயிலாக அறிய முடிந்தமைக்கு முருகனுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்பின் திரு. காரை. K.S. விஜயன் அவர்களுக்கு நல்வரவு...

    தங்கள் அளவுக்கு அடிமை பூண்டவன் அல்லேன்..

    எனினும் ஆத்மார்த்தமாக சிறு வயது முதற்கொண்டு
    அவனதுஅன்பினில் திளைத்து வாழ்பவன்...

    அவனளித்த அருட்செல்வங்களைச் சொல்லி முடியாது...

    அவன் ஒருவனே எங்களது வாழ்வின் வழித்துணையானவன்...

    தங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..