நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 03, 2024

சிவஜோதி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 20
சதய நட்சத்திரம்
 வெள்ளிக்கிழமை

திருநாவுக்கரசர்
சிவஜோதியுள் கலந்த நாள்


' புறச்சமயப் படுகுழியினின்றும் எடுத்தாள வேண்டும்.. ` - என்று திலகவதியார் செய்து கொண்ட  விண்ணப்பம் கேட்டு  எம்பெருமான் சூலை எனும் வயிற்று வலியினைக் கொடுக்க, காஞ்சியிலிருந்து நள்ளிரவுப் போதில் புறப்பட்டு திரு அதிகைப் பதியினை அடைந்து சகோதரியின் கால்களில் விழுந்தார் தருமசேனராக இருந்த மருள் நீக்கியார்.. 

திலகவதியார் திருநீறு கொடுக்க - 
 " கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்...
எனத் திருப்பதிகம் பிறந்தது..
 
திருப்பதிகம் பிறந்த அளவில் சூலை நோயும் பறந்தது..

வானில் இருந்து,
நாவுக்கரசு - எனும் திருப்பெயரும் எழுந்தது..

சகோதரனின் கையில் உழவாரப் படையினைக் கொடுத்தார் திலகவதியார்.. 
சகோதரியை வலம் வந்து பணிந்த நாவுக்கரசர் - திருநாவுக்கரசர் உழவாரப் படையினைக் கொண்டு உடையானின் ஊர்ப்பணி செய்வதற்கு நடந்தார்..

புறச்சமயத்தினரின் சொல் கேட்டு - அவரைச் சிறை பிடித்த மகேந்திர பல்லவன் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கினான்..

' நாமார்க்கும் குடியல்லோம்.. ' என்று சிவமயமாகி இருந்தவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது.. அதிலிருந்து மீண்டு வந்த நாவுக்கரசர் சுண்ணாம்புக் காளவாயில் அடைக்கப்பட்டார்.. 

சுண்ணாம்புக் காளவாயும் பூஞ்சோலையாகிப் போக - மதம் கொண்டிருந்த யானையை  அவிழ்த்து விட்டனர்.. 

அது நாவுக்கரசரை வலம் வந்து வணங்கி விட்டு ஓடிப் போனது..


ஆத்திரமுற்றோர் அறிவழிந்து
கருங்கல்லினொடு நாவுக்கரசரைக் கட்டி கடலுக்குள் தள்ளினர்..
அந்தக்கல்லும் மிதந்து திருப்பாதிரிப்புலியூரில் கரை ஒதுங்கியது..


மெய்யறிவு பெற்ற மகேந்திர பல்லவன் நாவுக்கரசரின் கால்களில் விழுந்து சிவ சமயத்தைத் தழுவினான்..

அதன்பின், திருப்பெண்ணாகடத் தலத்தில் சூல இடபக் குறிகளைப் பெற்றுக் கொண்ட நாவுக்கரசர் தில்லையம்பதி முதலான திருத்தலங்களைத் தரிசித்த வேளையில் காழிப்பதியில் நிகழ்ந்த அதிசயம் கேட்டு அங்கு விரைந்தார்.. 

ஞானசம்பந்தர் எனும் அந்தக் குழந்தை - " வாருங்கள் அப்பரே.. " என்று அழைத்து எதிர் கொண்டது.. 


ஊர்கள் தோறும் நடந்த அப்பர் - திங்களூர் எனும் தலத்தில் அப்பூதி அடிகள் எனும் மெய்யடியாரைக் கண்டு இன்புற்றார்.. அவர் பொருட்டு ஆங்கொரு அற்புதம் நிகழ்ந்தது.. 

நாவுக்கரசருக்கு அமுது படைக்க என்று வாழையிலை அரிந்த போது நாகம் தீண்டி இறந்த பாலகன் அப்பர் ஸ்வாமிகளின் திருப்பதிகத்தால் உயிர் கொண்டு எழுந்தனன்..

காலம் நடத்திய வழியில் திரு ஆரூரில் தியாகேசனை வணங்கி, ஆழித்தேர் கண்டு மகிழ்ந்து திருப்புகலூர் ஏகிய போது திருப்புகலூரில் மீண்டும் திருஞானசம்பந்தர் எதிர் கொண்டார்.. 

இருவருமாக தலயாத்திரை செய்து திருவீழிமிழலையில் படிக்காசு பெற்று பஞ்சத்தினால் விளைந்த
பசிப்பிணி போக்கி - திருக்கடவூரில் கலய நாயனார் மடத்தில் தங்கியிருந்து திருமறைக்காடு ஏகி திருக்கோயிலின் கதவுகளைத் திறக்கவும் அடைக்கவும் செய்தனர்..  

அதுசமயம் பாண்டிய நாட்டில் இருந்து மங்கையர்க்கரசியார் அழைப்பு விடுக்க - திருஞானசம்பந்தர் ஆலவாய்க்குச் சென்றார்..

மக்கட் பணியைத் தொடர்ந்தார் அப்பர் ஸ்வாமிகள்..

அதன்பின் திருநாவுக்கரசர்
திருப்பைஞ்ஞீலி தலத்திற்குச் செல்லும் வழியில் இறைவன் பொதி சோறு கொணர்ந்தளித்து எதிர்கொண்டனன்..

அதன் பின் திருக்காளத்தியைத் தரிசித்த ஸ்வாமிகள் அங்கிருந்து திருக்கயிலைக்கு நடந்தார்.. கால்கள் தேய்ந்ததால் ஊர்ந்து சென்ற அவரை சிவயோகியாக வந்த இறைவன் கயிலாயத்தின் தடாகத்தில் மூழ்குமாறு பணித்தனன்.. 

அங்கே மானசரோருவ தீர்த்தத்தில் மூழ்கிய திருநாவுக்கரசர் இங்கே திரு ஐயாற்றின் சூரிய தீர்த்தத்தில் எழுந்தார்.. 

அப்போது - அம்மையப்பன்  தோன்றி பற்பல ஜீவராசிகளாகத் திருக்காட்சி நல்கினர்..


அப்பர் திருமடம் திருப்பூந்துருத்தி

திரு ஐயாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி ஏகிய
 அப்பர் ஸ்வாமிகள் அங்கே திருமடம் அமைத்துத் தங்கியிருந்த போது

திருஞானசம்பந்தர் மதுரையில் இருந்து சோழ நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.. 

அஃதறிந்த அப்பர் ஸ்வாமிகள் ஊர் எல்லையில் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு அழைத்து மகிழ்ந்தார்..

அதன்பின் பாண்டி நாட்டுத் தலங்களைத் தரிசித்து மீண்ட திருநாவுக்கரசர் -

காலம் கனிந்த வேளையில் தமது எண்பத்தொன்றாவது வயதில் - சித்திரைச் சதய நாளில்  திருப்புகலூரில் சிவகதியடைந்தார்..

மகேசன் தொண்டுடன் மக்கட் தொண்டும் ஆற்றிய புண்ணியர்  - திருநாவுக்கரசர்..

இராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சை  ராஜராஜேஸ்வரத்தில் தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் (கி. பி. 1013 -14) திருநாவுக்கரசர் திருவுருவத்தை எழுந்தருளுவித்ததாக கல்வெட்டுச் செய்திகள் உள்ளன..

திருநாவுக்கரசர் அருளியவை என்று சொல்லப்படுகின்ற (4900) திருப்பதிகங்களில் நமக்குக் கிடைத்திருப்பவை 312 மட்டுமே..

திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் அகச் சான்றுகள் நிறைந்திருப்பவை.. 


இவைகளே தேவாரம் எனப்பட்டவை.. 

ஸ்ரீ ராஜராஜ சோழர் பெருமுயற்சி செய்து
தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள் கிடந்த சுவடிகளை மீட்டு,  திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களைக் கொண்டு தொகுத்தளித்தார்...

திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பதிகங்கள் - பன்னிரு திருமுறைகளுள் 4,5,6 எனும் மூன்று தொகுதிகளாகத்  திகழ்கின்றன..

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்   
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்  
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்   
என்கடன் பணி செய்து கிடப்பதே.. 5/19/9
-: திருநாவுக்கரசர் :-
**
திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி..
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***