நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சோழ வம்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோழ வம்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 23, 2022

சோழ வம்சம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 7
புதன்கிழமை

சோழ வம்சாவளி குறித்த 
பதிவு தொடர்கின்றது..

முதல் பகுதி சோழவம்சம் 1


1. குலோத்துங்கன்.. (1070 - 1120) முதலாம் குலோத்துங்க சோழன். முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப்  பேரன். 

பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் அதிராஜேந்திர சோழர்..  இவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் - மேலைச் சாளுக்கியத்திற்கு சோழர் பெண் கொடுத்த வகையில் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். கலிங்கத்துப் பரணி கொண்ட விறலோன் என்பது சிறப்பு பெயர்..

2. விக்கிரமன் (1118 - 1135) முதலாம் குலோத்துங்க சோழனின் மகன். கூத்தன் உலாக் கொண்ட விக்கிரம சோழன் என்ற சிறப்புடையவன்..

3. (இரண்டாம்) குலோத்துங்கன் (1133 - 1150) விக்கிரம சோழனின் மகன்.

அநபாயச் சோழன் என, புகழப்பட்ட மன்னன்..  
இவரது முதலமைச்சரே சேக்கிழார்..

சேக்கிழார் பெரிய புராணம் இயற்றியது இவரது  ஆட்சியில்.. 

அவையில் இருந்த பெரும் புலவர் ஒட்டக்கூத்தர்..

விக்கிரம சோழன் உலா, தக்க யாகப் பரணி - ஆகியவை ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டன..

விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் விளங்கியவர் -  ஒட்டக்கூத்தர் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் தான்
நளவெண்பா பாடிய புலவர் புகழேந்தி..

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் தில்லை மாநகரம்  விரிவுபடுத்தப்பட்டது. கனகசபை கோயிலும் புதுப்பிக்கப்பட்டது..

இச்சமயத்தில் தான்
தில்லை கோவிந்த ராஜர் அப்புறப்படுத்தப் பட்டதாக - தக்க யாகப் பரணியில் கூத்தர் கூறுவதாகச் சொல்கின்றது - விக்கி

4. (இரண்டாம்) ராஜராஜன் (1146 - 1163) இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன்.. 



தற்காலத்தில் தாராசுரம் எனப்படும் ராஜராஜபுரத்தில் ஐராவதேஸ்வரர் ஆலயத்தை அமைத்த மன்னன் இவரே.. 

5. (இரண்டாம்) இராஜாதிராஜன் (1163 - 1178) இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்.

திருபுவனம் கோயில்
6. (மூன்றாம்) குலோத்துங்கன்.. (1178 - 1218) இரண்டாம் ராஜராஜ சோழனின் மகன். திருபுவனம் ஸ்ரீ கம்பகரேஸ்வரர்  கோயிலைக் கட்டிய மன்னன்.. 

மூன்றாம் குலோத்துங்க சோழன் 
காலத்தினைக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர் வாழ்ந்த காலம் என்று கருதுகின்றனர்..

இந்தக் கருத்திலும் மாறுபாடுகள் சொல்லப்படுகின்றன..

ஸ்ரீ சரபேஸ்வரர்
இந்த மன்னனின் ஆட்சியில் தான் சாளுக்கியத்தின் சரபேஸ்வர வழிபாடு சோழ நாட்டில் ஏற்பட்டது..

அத்துடன்,
மூன்றாம் குலோத்துங்கன் திரு ஆரூர் அம்பலத்தில் பொன்னும் வேய்ந்திருக்கின்றான்.

7. (மூன்றாம்) ராஜராஜன் (1216 - 1256) மூன்றாம் குலோத்துங்க சோழனின் மகன். இம்மன்னனின் காலத்தில் தான் சோழப் பேரரசின் வீழ்ச்சி தொடங்கிற்று..

மதுரையிலிருந்து மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். மூன்றாம் ராஜராஜனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கு இரையாக்கினான். 

அங்கிருந்த மாட மாளிகைகளையும் மணி மண்டபங்களையும் இடித்துத் தள்ளி தரை மட்டமாக்கினான்.

சோழர்களின் பூர்வீக பூமியாகிய பழையாறையின் அரண்மனையில் மாற வர்மன் சுந்தர பாண்டியன்
வீராபிஷேகம் செய்து கொண்டான். 

போரில் தோல்வியுற்ற மூன்றாம் இராஜராஜன் திறை செலுத்துதற்கு ஒப்புக் கொண்டு தனது சுற்றத்தாருடன் தலைநகரை விட்டு வெளியேறி ஒரு தனி இடத்தில் தங்கியிருந்தான்..

சில ஆண்டுகளுக்குப் பின்பு மூன்றாம் இராசராசன் திறை செலுத்த மறுத்துவிட்டான். இதனால் சினங்கொண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது மீண்டும் ஒரு போர் தொடங்கினான். 

இப்போரில் தோல்வியுற்ற மூன்றாம் ராஜராஜன்  நாட்டை விட்டு வடபுலம் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பல்லவ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த கோப்பெருஞ் சிங்கன் என்பவன் தெள்ளாறு என்னும் இடத்தில் மூன்றாம் ராஜராஜனை சிறை செய்து, தனது தலை நகராகிய சேந்த மங்கலம் கோட்டையில் அடைத்து வைத்தான்.

இதே காலகட்டத்தில் போசள நாட்டை வீரநரசிம்மன் (1220 - 1230)  ஆண்டு வந்தான். இவன் தன் மகளை மூன்றாம் ராஜராஜனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான்.  

மூன்றாம் இராஜராஜனை
கோப்பெருஞ்சிங்கன் சிறை வைத்ததை அறிந்து மனம் கொதித்த வீரநரசிம்மன் பெரும்படையுடன் சென்று கோப்பெருஞ்சிங்கனைப் போரில் தோற்கடித்தான். அவன் சிறை வைத்திருந்த மூன்றாம் ராஜராஜனை மீட்டான்..

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து படையுடன் வீரநரசிம்மன் சென்று, காவிரியாற்றங்கரை மகேந்திர மங்கலத்தில் 
சுந்தர பாண்டியனோடு போரிட்டு அவனை வென்று, அவன் கைப்பற்றி இருந்த சோழ நாட்டை மீட்டு மீண்டும் மூன்றாம் ராஜராஜனுக்கு வழங்கினான்.

இத்தோல்விக்குப் பின்னர், பாண்டியர் போசளரோடு மண உறவு  கொண்டனர் என்பது தனியான வரலாறு..

தஞ்சையைத் துறந்து 1023 ல் கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த ராஜேந்திர சோழருக்குப் பின் வந்த  இரண்டாம் நிலைச் சோழ வம்சம் - மாற வர்மன் சுந்தர பாண்டியனிடம் (1216 - 1239) தோற்று கங்கை கொண்ட சோழ புரத்தையும் இழந்தது..

மூன்றாம் இராஜராஜன் மீண்டும் பழையாறைக்கு வந்து தஞ்சையை தன்னுடன் வைத்துக் கொள்ள சோழப் பேரரசு - சிற்றரசு என்றானது.. 

8. (மூன்றாம்) இராஜேந்திரன். 
(1246  - 1279) மூன்றாம் இராஜராஜ சோழனின் மகன். சோழ வம்சத்தின் கடைசி அரசன். மாபெரும் சோழப் பேரரசு வலிமை குன்றி தன்னை இழந்தது..

(இரண்டாம்) மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பிறகு, கி.பி. 1251 ல் மன்னனாக முடி சூடிக் கொண்ட (முதலாம்) சடைய வர்மன் சுந்தர பாண்டியன் 1257 ல் சோழ நாட்டின் மீது படையெடுத்து திறை செலுத்தாதிருந்த மூன்றாம் ராஜேந்திரனை வென்று அவனைத் தனக்குக் கீழ்  ஆக்கினான். 

தனது ஆட்சிக் காலம் முழுவதும் பாண்டியருக்குத் திறை செலுத்தியே வாழ்ந்த
மூன்றாம் ராஜேந்திரன் சோழப் பேரரசின் கடைசி மன்னன் என்று ஆனான்.. 

அவன் இறந்த பின்னர், சோழ நாடு பாண்டிய நாட்டுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது..
***

கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டிய தெற்கு எல்லையில் கண்காணிப்பு குறைந்ததும் பரந்து பட்டிருந்த நிலப்பரப்பின் ஆளுமையில் திறமை குன்றியதுமே சோழர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றுரைப்பார் எங்கள் வரலாற்று ஆசிரியர் திரு S.R.கோவிந்தராஜன் அவர்கள்..

அறங்களும் ஆலயங்களும் பாதுகாக்கப்பட்டன.. தமிழ் முன்னெடுக்கப்பட்டது.. கலைகள் உச்சம் தொட்டன..

நீர் நிலை வயல் வெளிகளின் மேம்பாட்டினால் சமுதாயத்தின் எல்லா மக்களும் இன்புற்று வாழ்ந்தனர்..

இதற்கு மேல் என்ன வேண்டும் வாழ்வு பொன்னாக ஆவதற்கு!..

தஞ்சையும் 
ராஜ ராஜேஸ்வரமும் 
அதன் கல்வெட்டுகளும்
இன்னும் பல காலத்திற்கு 
புகழ் ஏந்தியிருக்கும்..

சோழர் தம் புகழ் நீடூழி வாழ்க..
***

ஞாயிறு, நவம்பர் 20, 2022

சோழ வம்சம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 4
ஞாயிற்றுக்கிழமை

சதய விழாவின் போது
வெளியிடுவதற்காக இணையத்தில் 
இருந்து தொகுக்கப்பட்ட பதிவு.
தாமதம் ஆகி விட்டது.
(நன்றி : விக்கி)

திருக்கயிலையில் முசுகுந்தர்

சோழர் குல முதல்வன் சூரியன் - வழி தொட்டு 

மைந்தனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்

ஆடும், புலியும் சேர்ந்து நீர் பருகச் செய்த மாந்தாதா

புரந்தன் ஊர் புரந்த வேந்தன் உம்பர் விமானம் உகைத்த முசுகுந்த சக்கரவர்த்தி

புறாவுக்காக நிறை புக்கோன் ஆகிய சிபி

காவிரிக் கரை செய்தோன் கரிகாலன்

களவழிப் பாட்டுக்குச் சேரன் தளை களைந்தான் கோச்செங்கணான்

தொண்ணூறும் ஆறும் பூணாகப் புண் சுமந்தோன் விஜயாலயன்

திருமன்றம் ஆடகத்தால் வேய்ந்த அபயன் பராந்தகன்

கேரளநாடு சிந்தின ராஜராஜன்

கடாரமும், கொப்பமும் கொண்ட ராஜேந்திரன் 

என்றெல்லாம் உலா நூல்கள் சோழ வம்சத்தினரைப் புகழ்கின்றன.. 

அந்த வழியில் சோழ வம்சத்தில் பிற்காலத்தில் புகழுற்று விளங்கிய
மா மன்னர்களை இன்றைக்கு சிந்திப்போம்..
**

01. விஜயாலய சோழர் (848 - 871) பிற்காலச் சோழ அரசை நிறுவியவர் இவரே.. 

திருப்புறம்பியத்தில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து முத்தரையர்களையும் வென்று தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழ அரசை நிர்மாணித்தவர்.. இவரது தந்தையின் பெயர் நமக்குக் கிடைக்கவில்லை. 

விஜயாலய சோழர் அரியணை ஏறியதில் இருந்து - நூற்று எழுபத்தைந்து ஆண்டு காலம் மும்முடிச் சோழ மண்டலத்தின் தலைமைப் பீடமாகத் திகழ்ந்தது - தஞ்சாவூர்..

02.  ஆதித்த சோழன் (871 - 907 ) விஜயாலய சோழரின் மகன்..

03. (முதலாம்) பராந்தக சோழர் (907 - 955)
ஆதித்த சோழரின் மகன். 



இவரே தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்
பொன் தகடு  பதித்து திருப்பணி செய்தவர்.. எனவே பொன் வேய்ந்த சோழர் என்று சிறப்புப் பெயர்..  பராந்தக சோழர் காலத்தில்  உருவாக்கப்பட்டது தான் வீரநாராயண ஏரி (இன்றைக்கு வீராணம் ஏரி).

இந்த ஏரி பராந்தக சோழர் மூத்த மகனான ராஜாதித்தனால் வெட்டப்பட்டது. ராஜாதித்த சோழன் இந்த ஏரிக்கு தனது தந்தையின் இயற்பெயரைச் சூட்டினான். பராந்தக சோழரின் இயற் பெயர் வீர நாரயணன் என்பதாகும்..

ராஜாதித்த சோழன் தக்கோலத்தில் நடைபெற்ற போரில் வீர மரணம் எய்தினான். பராந்தக 
சோழருக்கு - ராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் -  என மூன்று மகன்களும்
உத்தமசீலி, வீரமாதேவி, அனுபமா என மூன்று மகள்களும்..

04. கண்டராதித்த சோழர் (950 - 957) முதலாம் பராந்தக சோழரின் இரண்டாவது மகன்.  ராஜாதித்த சோழனின் தம்பி. 

இவரது பட்டத்தரசியே செம்பியன் மாதேவியார். சோழர் வரலாற்றில் பெரிய பிராட்டி என்று
அழைக்கப்பட்ட மாதரசி. 

கண்டராதித்த சோழர் சிவ வழிபாடு செய்யும் போது ஈசனின் நாட்டியஒலி கேட்கும் என்றொரு செய்தி. இவர் இயற்றிய கோயில் திருப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் உள்ளது.. 

இவரது ஆட்சிக் காலத்தில் தில்லையில் திருஆதிரைத் தேர் ஓடாமல் தடைபட்டு நின்ற போது சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி தேர் ஓடும்படியாகச் செய்தார் என்றொரு செய்தியும் உண்டு.. 

05.  அரிஞ்சய சோழன் (956 - 957) பராந்தக சோழரின் மூன்றாவது மகன். (கண்டராதித்த சோழரின் தம்பி) 

06. (இரண்டாம்) பராந்தக சோழர் (957 - 973) அரிஞ்சய சோழரின் மகன். 

இவரே சுந்தர சோழர்.. ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி - என மூன்று மக்கள்..

07. ஆதித்த கரிகாலன் 
(957 - 969) இரண்டாம் பராந்தகராகிய சுந்தர சோழரின் மூத்த மகன்..

காஞ்சியில் இருந்தபடி ஆட்சியைக் கவனித்துக் கொண்டார்.. கடம்பூர் மாளிகையில் எதிரிகளால் கொல்லப்பட்டவர்..

08. மதுராந்தக உத்தம சோழன் (973 - 985)
கண்டராதித்த சோழரின் மகன். அருள்மொழி வர்மனின் சிற்றப்பா..

ஆதித்த கரிகாலனின் மரணத்துக்குப் பிறகு  - இவருக்கே மணிமுடியைக் கொடுத்தான் அருள்மொழி.. 

மதுராந்தக ஏரியை உருவாக்கியவர் இவரே..

09.  அருள்மொழி வர்மன். ராஜராஜ சோழன்.. (985 - 1014). இரண்டாம் பராந்தக சோழராகிய சுந்தர சோழரின் இரண்டாவது மகன்.. 

பெரிய பாட்டியார் ஆகிய செம்பியன் மாதேவியார் மற்றும் சகோதரி குந்தவை ஆகியோரின் பாசத்தில் வளர்ந்த அருள்மொழி - இராஜராஜன் எனும் பட்டப்பெயருடன் மணிமுடி கொண்டார்.. 



தட்சிண மேரு எனும் பெருங்கோயிலை எழுப்பி ராஜராஜேஸ்வரம் எனும் பெயரைச் சூட்டினார். வடக்கே நர்மதைக் கரையிலிருந்து முழு தென்னகமும் ஈழமும் முந்நீர் தீவுகள் பன்னீராயிரமும் கைவசமாகின.. 

இவரது காலத்தில் தான் வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றி வடிவமைக்கப்பட்டன..

ராஜேந்திரன், குந்தவை, மாதேவடிகள்..

10. ராஜேந்திர சோழன் (1012 - 1044) ராஜராஜ சோழரின் மகன்.


1019 ல் கங்கைக் கரைக்கு படை நடத்தி வெற்றி கொண்டு 1023 ல் புதிய தலை நகராக கங்கை கொண்ட சோழ புரத்தையும் கோயிலையும் உருவாக்கினார்..

தஞ்சையை விட்டு விலகி தனக்கான நகர் என்று ராஜேந்திர சோழன் புதிதாக உருவாக்கிக் கொண்டதில் இருந்து சோழப்பேரரசு சரிந்து விழும் வரை கங்கை கொண்ட சோழபுரம் தான் - சோழ மண்டலத்தின் தலைநகராகத் திகழ்ந்தது.. 

இருப்பினும் தனது வெற்றிகளையும் தன் தந்தையுடைய வெற்றிச் சாசனங்களையும் தஞ்சைக் கோயிலில் தான் ராஜேந்திர சோழர் பொறித்து வைத்திருக்கின்றார்.. 

ஸ்ரீ காளஹஸ்தி கோயில் ராஜேந்திர சோழரின் திருப்பணி..

பாரத நாட்டின் முக்கால் பங்கு ஆளுமை இவரிடம் இருந்தது..


தந்தை உருவாக்கியிருந்த கடற்படையின் துணை கொண்டே தூரக் கிழக்கு நாடுகளைக் கைக்கொள்ள முடிந்தது..

ராஜேந்திர சோழரின் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளைக் கொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.

தனது மகள் அம்மங்கா தேவியை தனது சகோதரி குந்தவை - வேங்கி மன்னன் விமலாதித்தன் ஆகியோரின் மகனான ராஜராஜ நரேந்திரனுக்கு மணம் செய்து கொடுத்து உறவை மேம்படுத்திக் கொண்டார்..

11.  ராஜாதி ராஜன் (1018 - 1054) ராஜேந்திர சோழரின் மூத்த மகன். 

12. (இரண்டாம்) ராஜேந்திரன் (1051 - 1063) ராஜேந்திர சோழரின் இரண்டாவது மகன். தந்தையின் பெயருடன் பட்டம் ஏற்றுக் கொண்டவர்..

13. வீரராஜேந்திரன் 
(1063 - 1070) இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகன்

14. அதிராஜேந்திரன் (1067 - 1070) வீரராஜேந்திர சோழனின் மகன். அதிராஜேந்திர சோழனுக்கு ஆண் வாரிசுகள் இல்லை..

அடுத்த 
பதிவிலும் வரலாறு தொடரும்..

வாழ்க சோழ தேசத்தின்
புகழ்..
***