நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
வியாழக்கிழமை
உத்திரச்சேர்த்தி
பாகம் 2
எங்கே போயிற்று கணையாழி?..
அரங்கநாயகிக்குத் தெரிந்தால்!?..
அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்!.. புதிதாய் கணையாழி ஏதும் இருக்கின்றதா!.. என்று..
இப்போது என்ன செய்வது?...
திரும்பவும் உறையூருக்கா!.. வேறு வினையே வேண்டாம்!..
அரங்கனின் பதற்றத்தைக் கண்டு - ஒருவர் சொன்னார் -
''..நான் கூட பார்த்தேனே!..''
கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி - உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள் - சந்நிதியில் யாருடைய காதில் விழ வேண்டுமோ - அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது.
வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து - அரங்கநாயகியைத் தேடி - உள்ளே நுழைந்தால் - அந்த நேரம் பார்த்து,
அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - '' படார் '' - என்று!..
பழைய காலத்துக் கதவாயிற்றே - என்று கூட பார்க்கவில்லை!..
அத்தனை கோபம்.. அரங்கநாயகிக்கு!..
உறையூருக்குப் போனது தப்பு இல்லை!.. கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை!.. கணையாழி காணாமல் போனதுதான் தப்பு!.. என்ன கஷ்டமடா சாமீ!.. அவள் பாற்கடலில் தோன்றினாள் அல்லவா!.. அப்போது தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த கணையாழி!.. அது தான் இத்தனைக்கும் காரணம்!..
''..இப்படிப் போற இடத்தில எல்லாம் பொறுப்பில்லாமல் எதையாவது தொலைத்து விட்டு வந்தால் சும்மா இருக்க முடியுமா!..''
ஒரே கூச்சல்!.. ஆரவாரம்!..
''.. ஆஹா.. இவங்க எல்லாம் யார்!..''
''.. பொண்ணு வீட்டுக்காரங்களாம்.. பேச வந்திருக்காங்க!.''
''.. ஏன்.. அவங்க வீட்டுப் பொண்ணுக்குப் பேசத் தெரியாதுன்னா?..''
''.. சரி.. சரி.. விடுங்கப்பா.. நம்ம பக்கமும் தப்பு இருக்கு!...''
அரங்கன் திகைத்தான். ''..என்ன சொல்கின்றார் இவர்!.. என்னிடமா.. தவறு!..''
அதற்குள் மணிக்கதவம் ஒரு புறமாகத் திறக்கின்றது. உள்ளேயிருந்து அரங்க நாயகியின் குரல்!.. தேனாகத் தித்தித்தது அரங்கனின் திருச்செவிகளில்!.. என்ன சொல்கின்றாள்.. ஆர்வமாக உற்றுக் கேட்டான்!..
''அதென்னது?!.. திருத்தோள் எங்கும் சந்தனத் தீற்றலாமே!.. திருநேத்ரங்கள் சிவந்தும் கருங்குழற் கற்றைகள் கலைந்தும் கிடக்கின்றதாமே!..
அரங்கன் மறுபடியும் அதிர்ந்தான்..
உடன் இருக்கும் உளவாளி யார்?..
''..இதெல்லாம் இவ்விடத்தில் யார் சொன்னது?..''
''..யாரும் தனியா வந்து சொல்லணுமாக்கும்?.. அதான் ஊரே பார்த்துப் பார்த்து ரசிக்கின்றதே!..''
''..இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?.. நீதான் படிதாண்டா பத்னியாயிற்றே!.. ''
''..எப்படியோ தெரியும்.. இனிமேல் இங்கே வேலை இல்லை.. அங்கே - உறையூரிலேயே இருந்து கொள்ளும்!..''
''..நறையூரோ.. மறையூரோ!.. உன் உளம் தானே - நான் உவந்துறையும் உறையூர்!..''
''..ஆகா... இந்தக் கள்ளம் எல்லாம் இனியும் வேண்டாம்.. நீர் போய் அங்கேயே இருந்து கொள்ளும்!..''
வார்த்தைகளோடு வேறு பலவும் உள்ளிருந்து - ஆலம் விழுது என - அன்பின் விழுது என - அரங்கனின் மேல் வந்து விழுந்தன.
நெடுங்கதவு மறுபடியும் அடைத்துக் கொண்டது.
பூக்களையும் வெண்ணெய் உருண்டைகளையும் வீசியது கூட பரவாயில்லை.. திருக்கதவைச் சாத்தியது கூட சரிதான்!..
கையில் கிடைத்த வாழை மட்டையால் சாத்தலாமா!..
அரங்கன் பரிதவித்துப் போனான்!..
அந்த நேரம் பார்த்து - அருகில் ஒரு பல்லக்கு வந்து நிற்கிறது. உள்ளிருந்து பதைபதைப்புடன் இறங்கினார் நம்மாழ்வார்!.. அவருக்கு மனசு தாங்கவில்லை..
அண்ட பகிரண்டமும் அரங்கனைக் காண வேண்டி அல்லவோ - அரற்றிக் கிடக்கின்றது. அத்தகையவன் - தன் திருமேனி முழுதும் வியர்த்து அழகெல்லாம் கலைந்து, ஒரு குழந்தையைப் போல விக்கித்து நிற்பதுவும் சரியா!..
அரங்கனுக்கா இந்த நிலை!..
விறுவிறு - என நடந்து, பிராட்டியாரின் வாசல் திருக்கதவைத் தட்டுகிறார்.
''.. ஆயிரம்தான் இருந்தாலும் இதைப்போல செய்யலாமா நீ!.. கமலவல்லியின் கரம் பிடிக்க மனம் உவந்தவளும் நீ!.. ஓங்கி உலகளந்த உத்தமனின் உள்ளத்துள் உவந்து இருப்பவளும் நீ!.. இப்போது உன் முகங்காட்ட மறுத்து மட்டையால் அடிப்பவளும் நீ!.. நீ இன்றி அவளில்லை!.. அவளின்றி நீ இல்லை!.. அனைத்தும் அறிந்த நீ அரங்கனை அல்லல்படுத்தலாமா?.. இது நியாயமா?.. அம்மா?.."
ஆழ்வாருக்குத் தொண்டையை அடைத்தது.
''...உறையூரில் கமலவல்லி கரத்தினைப் பற்றியிருந்த வேளையில் கூட, உன் நினைவையும் அல்லவா அரங்கன் பற்றியிருந்தான்!.. அந்த நினைவுக்கு நீ தரும் பரிசு இதுதானா?..
கணையாழி தொலைந்த இடம் எது என்று உனக்குத் தெரியாதா!..சற்றே எண்ணிப் பார்.. உன் நினைவில் பால் பழங்கூட உட்கொள்ளாமல், உன்னை எண்ணி ஓடி வந்தவனின் முகத்தைப் பார்..
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. ஆனால் தொண்டருக்கெல்லாம் தொண்டன் - உண்ணாமல் உறங்காமல் மயங்கியிருப்பதைப் பார்!..''
இதற்குமேல் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அரங்கநாயகிக்கு...
''.. இதை அப்பவே சொல்றதுக்கென்ன!.. இன்னும் சாப்பிடலை.. பசிக்கிறது.. ன்னு!.. கணையாழி போனாப் போறது!.. நீங்க வாங்க!..''
நெடுங்கதவு திறந்து கொள்ள, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்!... - என, தாள் எல்லாம் தூள் ஆனது!
அரங்கநாயகி சொன்னாள்,
''..இதுக்காக யாராவது பெரியவங்களைத் தொந்தரவு செய்வார்களோ? சரியான பைத்யம்!..''
ஆழ்வார் புன்னகைத்தார்!.
அரங்கநாயகி புன்னகைத்தாள்!.
அரங்கநாதனும் புன்னகைத்தான்!..
அவர்களுடன் அனைத்துலகும் புன்னகையாய் பூத்தது!..
அரங்கனும் நாச்சியாரும் சேர்த்தியாய் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தார்கள்!..
அமிழ்தினும் இனிய அன்பினில் குழைந்த அக்கார அடிசில் நிவேதனமானது..
அன்பினில் கலந்த இருவரும், அகளங்கன் திருச்சுற்றில் வில்வ மரத்தடியில் மாதவிப்பந்தல் எனும் மல்லிகைப் பந்தலின் கீழ், '' சேர்த்தி மண்டபத்தில்'' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதித்து இன்புற்றனர். அவர்தம் அன்பினில் அனைத்துலகும் இன்புற்றது.
* * *
பின்வந்த நாட்களில் ஸ்ரீ ராமானுஜர் - இந்த சேர்த்தி வேளையில் தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் (கத்ய த்ரயம்) பாடியருளி அரங்கனைச் சேவித்தார். இது - இன்றும் அரையர் சேவையில் நிகழ்வுறுகின்றது.
பங்குனி உத்திரச் சேர்த்தி அன்று - 18 முறை விடிய விடிய திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஒருமுறைக்கு ஆறு என மொத்தம் 108 கலசங்கள்.
திருமஞ்சனத்திற்குப் பின் திவ்ய தரிசனம். திருத்தேருக்கு எழுந்தருள நேரம் நெருங்குகின்றது. கண்கள் கசிகின்றன. மீண்டும் கமலவல்லியிடம் சொன்ன அதே வார்த்தைகள்!..
''.. உன் பங்கு நான்.. என் பங்கு நீ!.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி!..''
பத்தாம் நாள் காலையில் பங்குனித் தேரோட்டம். மங்கல மாவிலைத் தோரணங்களாடும் சித்திரை வீதியில் திவ்ய ப்ரபந்தத் திருப்பாசுரங்களைக் கேட்டவாறே அரங்கன் அன்பர்களுக்கு அருள் பொழிகின்றான்.
மறுநாள் ஆடும் பல்லக்கு. அடுத்து துவஜஅவரோகணம்.
மங்களகரமான பங்குனி உத்திரப் பெருவிழா இனிதே நிறைவுறுகின்றது!..
* * *
அது சரி... காணாமல் போன கணையாழி கிடைக்கவே.. இல்லையா!..
அது எப்போது காணாமல் போனது ?.. இப்போது கிடைப்பதற்கு!..
அரங்கனும் அரங்கநாயகியும் சேர்ந்து நடத்திய நாடகம் தான் மட்டையடி!..
அந்தக் கணையாழி - கமலவல்லி விரலிலும் அரங்க நாயகி விரலிலும்,
அதே சமயம் - அரங்கனின் விரலிலும் பத்திரமாக உள்ளது!..
* * *
பங்குனி உத்திரத்தன்று சக்திக்கேற்ப - வெண்ணெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் சேர்த்த திருஅமுது நிவேதனம் செய்வது மரபு.
2014 ன் பதிவு இது!.. சில நகாசு வேலைகளுடன் மீண்டும்!..
இப்பதிவைப் பலரும் தத்தமது பக்கங்களில் தத்தமது பெயரில் வெளியிட்டு மகிழ்ந்து கொண்டார்களாம்... கருத்துரைக்கு 2020ல் தகவல் வந்திருக்கின்றது...
அடியவர் கூட்டம் வாழ்க..
அரங்க மா நகரும் வாழ்க..
அன்னையும் வாழ்க..
அரங்கனும் வாழ்க..
அவர் தம் அன்பினில் அவனியும் வாழ்க!..
***


உலகையே ஒரு நோக்கில் அளப்பவன் , கடலையே கைகளால் அள்ளுபவன் கணையாழியைக் காணோம் என்று தேடுகிறானா... அடப்பாவமே...
பதிலளிநீக்குஎல்லாம் அவனது நாடகம்....
நீக்கு"ஏன், அவங்க வீட்டுப் பொண்ணுக்கு பேசத் தெரியாதுன்னா?" - ஹா ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஇதனை நினைத்தாலே மனம்முறுவலிக்கும்
நீக்குஅருமை.. அருமை.. இவ்வளவு சுவையாக இருந்தால் யார்தான் நக்கித் தின்னாமல் இருப்பார்கள். அவர்கள் பெயரில் வெளியிட்டுக் கொண்டதுதான் தவறு..
பதிலளிநீக்குஉண்மை தான்
நீக்குஇப்போது தங்கம் விற்கும் விலையில் இதுபோல ஒரு ஆபரணம் செய்து, அதுவே மூன்று பேரிடம் இருந்தால் லாபம்தான்!!!!
பதிலளிநீக்குஅதானே இப்போது தங்கம் விற்கும் விலையில்!...
நீக்குபெற்றோர் சண்டையிட்டுக் கொள்ளும்போது குழந்தைகள் இருவருக்குமிடையே ஓடி ஓடி மாறி மாறி மழலையில் என்ன பேசுகிறார்கள் என்றே புரியாமல் மிழற்றி இருவரையும் சமாதானம் செய்வார்கள். சமயங்களில் ஒருவருக்கு ஆதரவாய் இன்னொருவரை கண்டிக்கவும் செய்வார்கள்.
பதிலளிநீக்குநம்மாழ்வாரின் மத்தியஸ்தம் அதை நினைவு படுத்துகிறது!
சிறப்பு...
நீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
அரங்கமும் அரங்க நாயகியும் நடாத்திய நாடகம் கண்டோம்.
பதிலளிநீக்குநன்றாக தந்துள்ளீர்கள்.
மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
ரசிக்கத்தக்க பதிவு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குபாராட்டிற்கு நன்றி...