நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2023

திரு ஏரகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 8
வெள்ளிக்கிழமை


இன்றைய
திருப்புகழ்
திரு ஏரகம்


தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த ... தனதான
 
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கர்ப்ப ... முடலூறித்

தசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ... லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ... தரவேணும்..

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ... குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ... முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-


உலக மாயையின் வசமாகிய
இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய
மனையாளின் கருவில் உருவாகி 
அவளது கர்ப்பத்தில் ஊறி
பத்து மாதம் வளர்ந்து

நல்ல வடிவுடன் இப்புவியில்
 குழந்தைச் செல்வமாக 
நீ எங்களுக்குப் பிறந்து,

குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை
உச்சி முகர்ந்து, விழியோடு விழி பார்த்து
முகத்தோடு முகம் சேர்த்துக் 
கொஞ்சுகின்ற வேளையில்

திரண்ட எனது 
தோள்களில் நீ உறவாடி, 
மடித்தலத்தில் அமர்ந்து
குழந்தையாக விளையாடி,

நாள்தோறும் உனது மணி வாயினால் 
முத்தம் தந்தருள வேண்டும்..


முக அழகு மிக்க 
வள்ளிக் குறமகளின்  
 மார்பினில் அணைவதற்கு
நீதியுடன் வந்த நின்மலனே..

 பழைமையான வேதத்தினுள் 
ஒப்பற்றதாக விளங்கும்
பிரணவத்தின் பொருளை 
சிவபெருமானுக்கு
உபதேசித்த குகனே குருநாதனே..

எவ்விதத் தடையும் இல்லாது எனக்கு
உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த
திருவேரகத்தின் முருகப் பெருமானே..

இருபுறமும் மரங்கள்
நிறைந்து விளங்கும்
காவிரியாற்றின் வட திசையில் 
மாயையாகிய அரக்கருடன் போரிடுவதற்கு 
ஞானமெனும் வேலெடுத்த பெருமாளே...
**
 
முருகா முருகா
முருகா முருகா!..
***

11 கருத்துகள்:

  1. உனைப்பாடும் தொழிலன்றி வேறு இல்லை.  எனைக் காக்க உனையன்றி வேறு இல்லை..   முருகா..  முருகா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா.. முருகா..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருஏரகம் திருப்புகழ் பாடலும், விளக்கமும் அருமை.
    திருப்புகழை பாடி முருகனை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய நன்னாளில் முருகப் பெருமான் தரிசனம் கிடைத்து மகிழ்வுற்றேன். திருப்புகழ் பாடலும், விளக்கமும் நன்று. அனைவருக்கும் முருகப் பெருமான் அனைத்து நலன்களும் தர வேண்டுமாய் இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் முருகப் பெருமான் அனைத்து நலன்களும் தர வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. முருகா சரணம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. முருகா சரணம்..

    மகிழ்ச்சி..
    நன்றி ஜி..

    பதிலளிநீக்கு
  6. பலமுறைகள் போய் வந்தாலும் இப்போ சமீபத்தில் போகவே இல்லை. ஆனால் அந்த வழியாகத் தான் ஊருக்குப் போகிறோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..