நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 09, 2023

திருவீழிமிழலை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 26
 வெள்ளிக்கிழமை

இன்று
திருவீழிமிழலை
திருப்புகழ்


தனனா தனனா தனனா தனனா 
தனனா தனனா ... தனதான

எருவாய் கருவாய் தனிலே உருவாய்
இதுவே பயிராய் ... விளைவாக

இவர்போய் அவராய் அவர்போய் இவராய் 
இதுவே தொடர்பாய் ... வெறிபோல

ஒருதாய் இருதாய் பலகோ டியதாய்
உடனே அவமாய் ... அழியாதே

ஒருகால் முருகா பரமா குமார உயிர்கா 
எனவோ தருள் ... தாராய்...

முருகா எனவோர் தரமோ தடியார் முடிமேல் 
இணைதாள் ... அருள்வோனே

முனிவோர் அமரோர் முறையோ எனவே 
முதுசூர் உரமேல் ... விடும்வேலா

திருமால் பிரமா அறியா தவர்சீர் சிறுவா 
திருமால் ... மருகோனே

செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ் 
திருவீ ழியில்வாழ் ... பெருமாளே..
- : அருணகிரி நாதர் :-


உயிரின் உற்பத்திக்கு  எருவாய், கர்ப்பத்தில் கருவாய், அதனின்று உயிராகி உருவமாகி, பயிராகி விளைவாகி,

இவர் என்று இன்று இருப்பவர் பின்பு அவர் என்று சொல்லும் படியாகி, அவர் என்று பேசப்பட்டவர், மீண்டும் பிறந்த பின் இவர் என்று சொல்லும் படியாகி,

இந்தச் சங்கிலியே தொடர்ச்சியாய்,
வெறி பிடித்தது போல, 
ஒரு தாய் இரு தாய் என்று பல கோடியதாய் அடைந்து வீணாக யான் அழிவுறாமல்,

ஒருமுறையாவது முருகா என்றும் பரமா என்றும் குமரா என்றும் என்னுயிரைக் காத்தருள்வாய் என்றும் கூவித் துதிக்கும்படி உனது திருவருளைத் தந்தருள்வாயாக.

முருகா என ஒரு முறை ஓதும் அடியார்க்கு
அவர்தம் தலைமேல் இரு தாள்களையும் வைத்து அருள்பவனே..

முனிவர்களும் தேவர்களும் முறையோ முறையோ என்று, உந்தன் முன் ஓலமிட பெரும் சூரனுடைய மார்பில் வேலினை எறிந்த பெருமானே,

திருமாலும் பிரமனும், (அடியும் முடியும்) அறியாதவராகிய சிவபெருமானின் திருமகனே திருமாலின் மருமகனே,

அழகுமிகு சோலைகள்
செழும் மதில்களாகச்  சூழ்ந்திருக்கும்
திருவீழிமிழலையில் வாழும் பெருமாளே..

முருகா.. முருகா..
***

8 கருத்துகள்:

  1. சில ஊர்கள், சில பெயர்கள் சிலபேரை நினைவுபடுத்தி விடுகின்றன.  இந்த ஊர் பெயர் கேட்டதும் எனக்கு என் மாமா நினைவுக்கு வந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளியில் அருமையான முருகர் தரிசனம் கண்டு கொண்டேன். திருவீழீ மிழலையின் திருப்புகழும் , அதன் விளக்கமும் படித்துணர்ந்தேன். முருகன் அனைவரையும் அன்புடன் காத்தருள வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. கருவிலியில் இருந்து பார்த்தாலே கோயில் கோபுரம் தெரியும். அவ்வளவு கிட்டத்தில் இருந்தும் நாங்க இந்தக் கோயிலுக்கு ஒரே ஒரு முறை தான் அதுவும் பத்து வருஷங்கள் முன்னாடி போனோம்.

    பதிலளிநீக்கு
  4. ஊரின் பெயர் என்ன அழகு!! இந்த ஊர்க்கான திருப்புகழும் அறியமுடிகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தரிசனம் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..