நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 02, 2023

செங்கோல்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 19
 வெள்ளிக்கிழமை

செங்கோல் - தமிழின் சிறப்புடைச் சொற்களுள் ஒன்று..

தமிழகத்தின் சிறப்புடை அடையாளங்களுள் ஒன்று..

கோல் - செங்கோல், தர்மத்தின் கோல். துலாக்கோல்..


அத்தகைய கோலை உடையவனே கோன் - இறைவன். அரசன்..

கோன் எனப்பட்ட அரசனை - கோ என்று ஓரெழுத்து ஒரு மொழியால் சிறப்பித்தது தமிழ்..

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.. 542
(அதிகாரம் : செங்கோன்மை)
- என்பது திருவள்ளுவர் காட்டும் செங்கோல்..

அரசனுக்கு தர்மமே செங்கோல்.. எனில் தமிழுக்கு
தமிழன்னைக்கு செங்கோல் திருக்குறள்..

(தமிழன்னை) ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும்!.. - என்று திரைப்படப் பாடல் ஒன்று சிறப்பித்தது..

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்..

- என்பது தமிழ் மூதாட்டியின் திருவாக்கு..

சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் காணப் பெறும் சொல்..

பூவேறு கோன் என்று  நான்முகனைக் குறிக்கின்ற மாணிக்கவாசகர் -


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே..

- என்று உருகுகின்றார்..

மாமன்னன் ராஜராஜ சோழன் - சோழ மண்டலத்தை
உலகளந்த கோல் என்பதனைக் கொண்டு அளந்து முறைப்படுத்தியது வரலாறு..


திவ்ய தேசமாகிய தஞ்சை மாமணிக் கோயிலில் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கரத்தில் செங்கோலுடன் சேவை சாதிக்கின்றார்.. 


மலைமகள் கோன், விண்ணவர் கோன், உம்பர் கோன், வானவர் கோன், அமரர் கோன் - எனும் வார்த்தைகள் மூவர் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் முழுதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பாடல்களில் காணப்படுகின்றன..

இலங்கையர் கோன், அரக்கர் கோன் - என்றெல்லாம் தனித்தன்மையுடன் குறிக்கப்படுபவன் இராவணன்..

நம் கோன், எம் கோன் - என்று ஈசனைக் குறிக்கும் திருஞான சம்பந்தர் 
வளவர்கோன் பாவை - என, பாண்டியன் தேவி மங்கையர்க்கரசியாரைக் குறித்தருள்கின்றார்..

திருமகள் கோன் (நாராயணன்) நங்கள் கோன் - என்பன சுந்தரர் தம் திருவாக்கு..

உம்பர் கோன், வானவர் கோன், அமரர் கோன் - என்பன  இடத்துக்குத் தகுந்தவாறு ஈசனையும் இந்திரனையும் குறிக்கின்றன..

புகலியர் கோன், காழியர் கோன் - என்பன, ஞான சம்பந்தர் திருப்பதிகங்களில் விரவி வருவதைப் போல,

நாவலர் கோன் - என்ற பதம் சுந்தரர் திருப்பதிகங்களில் விரவி வருகின்றது..

ஏயர்கோன், ஐயடிகள் காடவர் கோன் - அடியார் திருத் தொகையுள் குறிக்கப்படும் நாயன்மார்கள்..

சிவ மரபில் நந்தியானது தர்மத்தின் அடையாளம் என்பதை நாமறிவோம்..

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாளன்று மீனாட்சி அம்மனுக்கு கோலாகலமாக பட்டாபிஷேகம் நடத்தி    செங்கோல் சமர்ப்பிப்பது வழக்கம்..
 

அது முதல் மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடப்பதாக ஐதீகம்.. 

ஆவணி மூலத் திருவிழாவின் ஏழாம் நாளில் சுந்தரேசர் பட்டாபிஷேகம்.. செங்கோல் ஒப்படைப்பு.. அதன் பிறகு பெருமானின் ஆட்சி  என்பதாக நடைமுறை..

தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில் வசந்த உற்சவத்தின் போது செங்கோல் எழுந்தருள்கின்றது..

உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருவிழாவின் போதும் செங்கோல் எழுந்தருள்கின்றது..

இந்தப் பதிவில் - ஈசனின் நடனம் காட்டும் மூன்று ஓவியங்களிலும்  ஈசனின் திருக்கரத்தில் நந்தி தண்டம் (செங்கோல்) விளங்குவதைக் காணலாம்..

ஸ்ரீ விருபாக்ஷி கோயில்
சிவபெருமான் திருக்கரத்தில் நந்தி உருவத்துடன் கூடிய தண்டத்தை ஏந்தியவாறு அரக்கன் மீது நடனமாடுகின்ற (ஊர்த்துவ தாண்டவம்) சிற்பமானது - கர்நாடக மாநிலத்தின் பட்டடகல் விருபாக்ஷி கோயிலில்
காணப்படுகின்றது...

பட்டடகல்  - விருபாக்ஷர் கோயில் (யுனெஸ்கோ) உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களுள் ஒன்று..

கல்வெட்டுகளின் அடிப்படையில் இக்கோயில்
எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கட்டப் பட்டதாக அறியப் படுகின்றது..

பட்டடகல் என்பது  சாளுக்கியர்கள் முடிசூட்டிக் கொள்ளும் இடமாகும்...
(நன்றி : விக்கி)

பொன் நெடுங்கோல் என்று பாசுபத அஸ்திரத்தை ஞான சம்பந்தப் பெருமான் குறித்தருள்கின்றார்..

இங்கே எல்லாம் 
செம்மையாக இருக்கும் வரை தான் செங்கோல் 
சிவ தண்டம் ..

செங்கோல் தவறினால் யம கண்டம் தான்..

கோல் கொண்டவனே கொடூரன் எனில், 
சீர் தரு செங்கோலானது பொன் நெடுங்கோல் எனும் பாசுபத அஸ்திரமாகி விடும் - என்பது திருக்குறிப்பு..

அன்றைக்கு தீயவர் மீது பாசுபதத்தை அருச்சுனன் ஏவியதாக குறிப்புகள் ஏதும் இல்லை..

தீயவர் தீயாகப் பெருகி இருக்கும் இன்றைய சூழலில் தர்மம் தானே பாசுபதத்தை ஏவி - இம் மண்ணையும் மக்களையும் காத்து நிற்கும் என்பது திண்ணம்..

தஞ்சை - திருச்சோற்றுத்துறை கோயிலில் நாளும் நடைபெறுகின்ற செங்கோல் சேவை..
(இக் காணொளி நேற்றிரவு கிடைத்தது..)


காணொளிக்கு நன்றி..

கல் நெடு மால்வரைக் கீழ் அரக்கன் இடர் கண்டானும்
வில் நெடும் போர்விறல் வேடனாகி விசயற்கு ஒரு
 பொன் நெடுங்கோல் கொடுத்தானும் அந்தண் புகலி நகர்
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே.. 3/7/8
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. செங்கோல் பற்றி வாட்சப்பில் நிறையத் தகவல்கள். அதற்கு மேலும் சில தகவல்கள் இங்கு. மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. மிக நல்லதொரு தொகுப்பு.  இதனைச் சேகரிக்க எத்தனை நேரம் எடுத்துக் கொண்டீர்கள்?  காணொளியும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று ஒரு பொழுது..

      முன்பே இங்கிருந்த பதிவு வேறொரு நாளில் வரும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்....

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. செங்கோல் பற்றிய தகவல்கள் அருமை ஜி

    காணொளி கண்டேன் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. திருக்குறிப்பு விரைவில் நடக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழந்தமிழர் குறிப்புகளை மட்டும் கவனிக்கவும்..

      உங்களது காழ்ப்பினை இங்கே காட்ட வேண்டாம்!..

      நீக்கு
  5. செங்கோல் குறித்த தகவல்கள் நன்று. தொகுப்பாக இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. செங்கோல் குறித்த பகிர்வு பாடல்களுடன் நன்றாக உள்ளது. படங்களும், சிவன் சிலை அமைப்பும் அருமை. காணொளியும் கண்டேன். நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  7. இப்போதுள்ள சூழ்நிலையில் செங்கோல் பற்றி அறியவோ, அதன்படி நடக்கவோ யாரும் இல்லை என்பதே உண்மை. மேலும் பாரம்பரியத்தையும் அதன் மதிப்பையும் உணராத ஆட்சியாளர்கள் இருக்கையில் இதை எல்லாம் எழுதிப் படித்து நம் மனத்தை நாமே ஆறுதல் கொள்ள வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..