நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 6
புதன்கிழமை
நேற்றைய பதிவு தொடர்கின்றது..
உணவுக்கு அமரும் முன்பாக எப்போதும் கை கால்களைக் கழுவிக் கொண்டு நெற்றியில் இட்டுக் கொண்டு கிழக்கு முகமாக அமர்ந்து பழைய கஞ்சியாக இருந்தாலும் அதை முகம் மலர்ந்த அன்புடன் - அன்ன லக்ஷ்மி என்று சொல்லி அருந்த வேண்டும்..
வடக்கு நோக்கி அமர்ந்து உண்பதைத் தவிர்க்க வேண்டும்..
டீ, காஃபி - இவைகளை ஒதுக்கி வாழந்திடப் பழகுதல் வேண்டும்.. வீட்டுக்கு வெளியே கண்ணில் பட்ட கடைகளில் எல்லாம் உணவுப் பண்டங்களை வாங்கித் தின்னும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்..
பெண்கள் மாலை நேரத்தில்
விளக்கேற்றுவதற்கு முன்பே தலை வாரிக் கொள்ள வேண்டும்.. திருவிளக்குக்கு நெய் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் இவற்றுள் ஒன்றை மட்டும் இடவேண்டும்.
சூரியனுக்கு மட்டுமே பரிகாரம் என்று இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றலாம்.. இதற்கும் கூட சில நடைமுறைகள் இருக்கின்றன..
சிவ வைணவ சமயங்களைச் சார்ந்தவர்கள். மெழுகு திரி ஏற்றவே கூடாது.. அதில் மிருகக் கொழுப்பு கலப்பு இருப்பதாக சொல்கிறார்கள்
மற்றபடி அவர் சொன்னார் இவர் சொன்னார்.. - என்று கேள்விப்பட்ட எண்ணெய்களைக் கலந்து வீட்டுக்குள் விளக்கேற்றக் கூடாது.. அதுபோலத் தான் சுண்டைக்காயைக் குடைந்து (பூசனிக்காய்) விளக்கேற்றி வைப்பதும்..
திருவிளக்கின் சுடர் ஒரு நெல் மணியின் அளவே ஒளிர்தல் வேண்டும்.. திகு திகு என்று எரியக் கூடாது..
செவ்வாய், வெள்ளிக் கிழமை கிழமைகளில் பிள்ளைகளுடன் அருகிருக்கும் கோயிலுக்குச் செல்வதற்கு இயலவில்லை என்றால் ஞாயிற்றுக் கிழமை அவசியம் சென்று தரிசித்து வருதல் வேண்டும்..
ஆலயம் தொழுவது நன்று - என்று சொல்லவில்லை ஔவையார்..
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. - என்று தான் சொல்கின்றார்..
இது கர்ம பூமி.. வாழ்வதற்காகவே நாம் வந்திருக்கின்றோம்.. கஷ்டமோ நஷ்டமோ வாழ்ந்துதான் ஆக வேண்டும்..
இறை வழிபாடு என்ற ஒன்று மட்டுமே கரை சேர்க்கும்.. பரிகாரங்கள் அல்ல..
உண்மையான பரிகாரம் என்பது - செய்த பிழைகளுக்கு மனம் வருந்துவதும் திருந்துவதும் ஏழைகளுக்கு இரங்கி உதவுவதும் தான்!..
இருப்பினும் மனமகிழ்ச்சிக்காக எளிய பரிகாரக் குறிப்புகளை பின்பொரு நாளில் தருகின்றேன்..
இறை வழிபாடும் நல்லொழுக்கமும் மிகமிக அவசியம்..
சஞ்சித கர்மத்தின் படி பிறந்து பிராரப்தத்தின் படி வாழ்கின்றோம்..
வாழ்க்கையின் (செயல்படுகின்ற) வினைப் பயன்கள் நம்மை ஆகாமியம் எனும் மறு வினைக்கு (பிறப்பிற்கு) இட்டுச் செல்கின்றன..
இதனால் மீண்டும் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம்!..
இதைத்தான் -
இருள்சேர் இருவினையும் - என்கின்றது திருக்குறள்..
திருக்குறளில் இறைவன் என்றால் இறைவன் அல்ல.. இருவினை என்றால்.. - என்றெல்லாம் ஜல்லியடித்து உருட்டுவதற்கு நம்மிடையே போலிகளும் உண்டு (உள்ளனர்)..
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்குமே!.. - என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னது தனிப்பாடல் ஒன்று.. அதற்குப் புழுதி வாரித் தூற்றுவாரும் இங்கே உண்டு (உள்ளனர்)..
ஆண்கள் தாம் செய்யும் பணி எதுவானாலும் அதில் சிந்தையை நிறுத்திச் செய்தல் வேண்டும்.. வேலை முடிந்து திரும்பும் போதெல்லாம் பிள்ளைகளுக்கு ஏதும் வாங்கி வருவ்தற்கு இயலாதெனினும் இன்முகத்துடன் வீட்டுக்கு வருதல் வேண்டும்..
குடும்பப் பிரச்சினைகளைப் பேசி களைத்துப் போகாமல் கை கால் முகம் கழுவி முடிந்தால் அலுப்பு தீர குளித்து விட்டு ஒருமித்த மனதுடன் தேவார திருவாசகம் சொல்லி இறைவனை வணங்க வேண்டும்..
குழந்தைகளுக்கு திருக்குறள் தேவார திருவாசகம், திவ்ய ப்ரபந்தம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்..
தொலைக்காட்சி போன்ற துஷ்ட நிகழ்ச்சிகளில் மனதைச் செலுத்தாமல் வீட்டில் உள்ளவர்களிடம் இயல்பாக பேசி மகிழ்ந்து எளிய உணவை உண்டு இரவு ஒன்பது மணிக்குள் இறை சிந்தனையுடன் உறங்க வேண்டும்..
இளங்குமாரர்கள் தலை முடியைத் திருத்தாமலும் முகம் மழிக்காமலும் திரிவது கூடாது..
இன்றைய தலைமுறையினர் மணக்கோலம் கொள்ளும் போது கூட முகம் மழித்து தம்மை ஒழுங்கு படுத்திக் கொள்வதில்லை.. பஞ்சை பராரிகளாகத் தோற்றமளிக்கின்றனர்.. அத்தகையோர்
நமது இலக்கு அல்ல.. கடந்து விடுவோம்..
பெண்கள் ஒருபோதும் தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது.. வளையல்களையும் காதணிகளையும் கழற்றி வைத்துவிட்டு மூளியாக இருப்பதும் தகாது..
வாசல் தெளித்து கோலமிடுவது,
மாடத்தில் விளக்கேற்றுவது,
கணவனுக்குப் பரிமாறுவது,
படுக்கை விரித்துப் போடுவது
- இந்த நான்கையும் வீட்டுப் பெண்களே செய்தல் வேண்டும்.. வேலையாட்கள் செய்யவே கூடாது..
படுக்கை அறை என்று தனியாக இருந்தால் அதனுள் கணவன் மனைவியைத் தவிர வேறு எவரும் நுழையக் கூடாது.. பிறர் நுழைவதற்கு அனுமதிக்கவும் கூடாது..
இல்லறத்தில் மணாளனோடு கூடி இருந்த மங்கை விடிவதற்கு முன் எழுந்து குளிக்க வேண்டும்..
அப்போதைக்கு இயலாதெனில் கை கால் முகம் கழுவி கூந்தலை உதறி முடித்து நெற்றிக்கு வைத்துக் கொண்டு வாசல் கதவைத் திறக்கலாம்.. தலை வாசல் தெளித்துக் கோலம் இடலாம்.. குற்றமில்லை..
ஆனால், திருவிளக்கு ஏற்றக் கூடாது..
குளித்து விட்டு சமையல் வேலையை கவனிக்கலாம்..
அதேசமயம்,
ஆண் தலைக்குக் குளிக்காமல் வீட்டு வாசற்படியைத் தாண்டவே கூடாது..
கொல்லைப் புறத்தில் கிணறு இருந்த சூழலில் சொல்லப்பட்ட விஷயம் இது..
ஆறு குளங்களில் நீராடல் எனில் அது வேறு!..
குளிக்காமல் வேறு ஆடை மாற்றிக் கொள்வதும் வெளியில் புறப்படுவதும் கூடாது..
நாகரிக வெள்ளம் தலைக்கு மேலாகப் போய்க் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் இதையெல்லாம் யார் பின்பற்றுவது ?!..
மகிழ்ச்சி மனநிறைவு இவற்றைத் தவிர மற்றவையே கையிருப்பு..
ஆண்களோ பெண்களோ தலையில் துணியைப் போட்டுக் கொள்ளுதல் (முக்காடு) கூடாது.. தலையில் துணியைப் போட்டுக் கொள்ளுதல் என்பது பெரிய அவமானத்தினைக் குறிக்கும்.. பெரிய இழப்பினைக் குறிக்கும்..
நமது வழக்கத்தில் - தலையில் துணியைப் போடுதல் என்பது - ரத்த சம்பந்தம் உடையவர்களின் இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடையது..
பொதுவாக
முக்காடு போட்டுக் கொள்ளுதல் என்பது பாரதத்தின் அடையாளமே அல்ல..
அதைப்பற்றி எங்கள் தமிழாசிரியர் ஐயா பாலசுந்தரம் அவர்கள் சொல்லியிருக்கின்றார்..
அதைப் பற்றி வேறொரு நாளில் பேசுவோம்..
வாழ்க நலம்
நலமே வாழ்க..
***
நிறைய விஷயமுள்ள பதிவு. இவாறான கடமைகளை பெரும்பாலும் நம் அன்னை தந்தை சொல்லக்கேட்டு அதிலும் பாதியையாவது நாம் நிறைவேற்றி இருப்போம். இந்தக் காலத்தில் இவை எல்லாமே மறைந்து விட்ட பழக்கங்களாகி விட்டன.
பதிலளிநீக்குஉண்மை தான்.. இப்போது நிலைமை தலைகீழ்.. ஒன்றும் செல்ல முடியாது..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க.
நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் ஜி
பதிலளிநீக்கு//பெண்கள் ஒருபோதும் தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது வளையல்களையும் காதணிகளையும் கழற்றி வைத்து விட்டு மூளியாக இருப்பதும் தகாது//
இன்றைய கல்லூரியில் படிக்கும் பெண்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள்.
எடுத்து சொன்னால் வினோதமாக பார்க்கின்றனர் வேற்றுகிரகவாசி போல்...
உண்மை தான்.. இப்போது நிலைமை தலைகீழ்.. ஒன்றும் செல்ல முடியாது..
நீக்கு// இன்றைய கல்லூரியில் படிக்கும் பெண்கள் இப்படித் தான் இருக்கின்றார்கள்.//
எல்லாம் தொலைக்காட்சி உபயம்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நலம் வாழ்க.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நல்ல கருத்துக்கள் அடங்கிய அருமையான பதிவு. இதன் தொடர்ச்சியான நேற்றைய பதிவையும் படித்தேன். அதிலுள்ள வார்த்தைகள் அனைத்தும் அருமையான பொக்கிஷங்கள்.
இதையெல்லாம் நம் முன்னோர்கள் அவர்களும் கடைப்பிடித்து வழிவழியாக சொல்லித் தந்து வந்தவைதான். வரும் வழியிலேயே பாதியை நாம் தொலைந்து விட்டோம். இருப்பினும் மீதியை நாமும் பின்பற்றி, அதை நம் சந்ததியினருக்கு கடத்துவதற்கு கவனமாக அரும்பாடுகள்பட்டும் வருகிறோம். அவர்களும் இதை அவர்கள் தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பிரார்த்தித்தும் வருகிறோம். இதை விட நம்மால் வேறு என்ன செய்ய முடியும்.? இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கச் செய்து அந்த ஆண்டவன் அனைவரையும் நலமுடன் வைத்திருக்க வேண்டும். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மை தான்.. இப்போது நிலைமை தலைகீழ்.. ஒன்றும் செல்ல முடியாது.. நீதியை அவரவரும் புரிந்து கொள்ள வேண்டும்..
நீக்கு// நாமும் பின்பற்றி, அதை நம் சந்ததியினருக்கு கடத்துவதற்கு கவனமாக அரும்பாடுகள் பட்டும் வருகிறோம்.//
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நலம் வாழ்க.
சிறப்பான விஷயங்களைச் சொல்லும் பதிவு. இதில் பல விஷயங்கள் இன்றைக்கு கடைபிடிக்கப்படுவது இல்லை என்பதும் நிதர்சனம்.
பதிலளிநீக்கு// இன்றைக்கு கடைப் பிடிக்கப்படுவது இல்லை என்பதும் நிதர்சனம்..//
நீக்குஉண்மை தான்.. இப்போது நிலைமை தலைகீழ்.. ஒன்றும் செல்ல முடியாது..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நலம் வாழ்க.
பல இளம்பெண்களையும் கூந்தலை முடிந்து கொள்ளச் சொல்லிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன் இப்போவும். இங்கே நான் தான் திருந்தணும் போல! நானோ திருந்துவதாக இல்லை. :(
பதிலளிநீக்கு// இங்கே நான் தான் திருந்தணும் போல! நானோ திருந்துவதாக இல்லை. :( //
நீக்குஉண்மை தான்.. இப்போது நிலைமை தலைகீழ்.. ஒன்றும் செல்ல முடியாது..
நாம் தான் திருந்த வேண்டும்.
வேறு வழி இல்லை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நலம் வாழ்க.
நல்ல வழக்கங்கள்.
பதிலளிநீக்குஇவற்றை வரும் காலத்துக்கு எடுத்துச் செல்ல முடியுமா என்பது சந்தேகமே.