நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 9
செவ்வாய்க்கிழமை
நன்றி
Maps & Images - Google
நம்மில் பலரும்
அனுபவித்த, மறக்க முடியாத அந்நாளைய
தஞ்சாவூர் ஜில்லா..
வடக்கே கொள்ளிடம் ஆனந்தத் தாண்டவ புரம்
கிழக்கே நாகப்பட்டினம் வங்காள விரிகுடா
தென் கிழக்கே அகஸ்தியம்பள்ளி கோடியக்கரை
தெற்கே தொண்டி ராமநாதபுரம்
மேற்கே கல்லணை, திருச்சி -
என்று பரந்து விரிந்திருந்த ஜில்லாவின் ரத்த நாளங்களைப் போல காவிரியும் அதன் கிளைகளும்..
கலை, கலாச்சாரம்
பாரம்பரியம், பண்பாடு
தானம், தருமம்
வீரம், விவேகம்
அடக்கம், அகந்தை
- என, பற்பல
குணாதிசயங்கள் நிறைந்த
சோழர்களின் பூமி..
திரும்பிய திசையெல்லாம் மரகதப் பச்சையாய் வயல் வெளிகள்,
மா, பலா, வாழை, வேம்பு, பனை, தென்னை, இலுப்பை, ஆல், அரசுகள்..
இன்னும் புன்னை, கொன்றை...
சாலை வழி நெடுக நிழல் விரித்திருக்கும் புளி.. பிரம்மாண்ட குடைகளாய் தூங்கு மூஞ்சி மரங்கள்..
எல்லாவற்றுக்கும் உயிர் நாடியாகிய காவேரியில் புது வெள்ளம் வரும்போது தூப தீபத்துடன் தண்டனிட்டு வணங்கி வரவேற்கும் மக்கள்..
ஆற்றில் காவேரி வந்து விட்டால் வீட்டுக்குள் மஹாலக்ஷ்மி வந்து விட்டாள் என்று அர்த்தம்!..
ஊருக்கு ஊர் கம்பீரமான கோயில்கள்.. அழகழகாய் குளங்கள்.. புராணங்கள், பதிகங்கள் - பிரபந்தங்கள்..
கூறைச்சேலை, பட்டு வேஷ்டி ஜவுளி, காய்கறி பழங்கள்,
பண்ட பாத்திரங்கள், மளிகை மண்டி, எண்ணெய் ஆட்டித் தரும் செக்கடிகள், வெத்தலை சீவல் புகையிலை சுண்ணாம்பு..
தலை வாழை இலையில் இருந்து மண் பானை, சட்டி, தென்னங்கீற்று, ஓலை, பாளை, கயிறு எல்லாம் கிடைக்கும் வாரச் சந்தைகள்
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் காவேரியை மிஞ்சியதாக - கோடை காலத்துத் திண்ணைகளில் நன்னாரி வேருடன் மண் பானைத் தண்ணீர்..
திருவிழா என்றால்
தஞ்சாவூர் முத்துப் பல்லாக்கு 24 கருட சேவை புன்னைநல்லூர் தெப்பம் புஷ்ப பல்லாக்கு..
கும்பகோணத்தில் கருடசேவை மாசிமகம் மகாமகம்
நாச்சியார்கோயில் கல் கருடன்
மாயவரத்தில் துலா ஸ்நானம் கடைமுழுக்கு
சீயாழியில் திரு முலைப்பால் உற்சவம்
திருவாரூர் ஆழித்தேர்
பட்டுக்கோட்டை நாடியம்மன் வரகரிசி மாலை..
திருவையாறு சத்தானம் (சப்த ஸ்தானம்) தியாகராஜர் ஆராதனை,
மன்னார்குடி உறியடி வெண்ணெய்த் தாழி
திருச்செங்காட்டங்குடி அமுதுபடையல்
நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் திருவிழா
வேதாரண்யம் தை அமாவாசை தீர்த்தவாரி
ஆவுடையார் கோயில் ஆனி மகம்..
ஆறு சுவைகளுக்கும் அர்த்தமாகிய சோழ தேசத்தில் ஏழாவது சுவையாக சங்கீதம்..
கோயிலில் ஸ்வாமி புறப்பாடு என்றால் களை கட்டும் மல்லாரி, நாட்டியம் நாடகம் கச்சேரி..
நாலு வீதிகளிலும் கொட்டு முழக்குடன் எட்டுத் தவில்கள்.. விடிய விடிய நாதஸ்வரம்.. ஆங்காங்கே உறுமி பம்பையுடன் களை கட்டும் கரக ஆட்டங்கள்..
ஊருக்குள் வந்து விலாசம் கேட்டால் அந்த வீட்டிற்கே அழைத்துச் செல்லும் சிறுவர்கள்..
மிகுந்த ஞாபகத்துடன் நலம் விசாரித்து பழங்கதை பேசும் பெரியவர்கள்..
ரெண்டு இட்லிக்குக் கூட வழிய வழிய சாம்பார் சட்னி ஊற்றும் ஆரிய பவன்கள் காப்பிக் கடைகள்..
வகை வகையாய் வாழைப் பழங்களுடன் கடைத்தெருக்கள்..
நடுக்காவேரி திருக்காட்டுப்பள்ளி காய்கறிகள்.
வைக்கோல் பொதிக்குள் பழுத்த செம்மாம்பழங்கள்..
மாம்பழங்களுக்கு முன்பாகவே வீடுகளில் மாவடு ஊறுகாய் அடை மாங்காய் - வகைகள்..
பருவத்திற்கு ஏற்ற விளைச்சலால் மண் மணக்கின்ற ஊர்கள்..
தஞ்சாவூர் வீணை, கதம்பம், அசோகா, சந்திரகலா, போளி, தும்பைப்பூ இட்டிலி காரச்சட்னி, தயிர்வடை டிகிரி காஃபி,
தலையாட்டி பொம்மை வறுத்த முந்திரி, ஜரிகைமாலை, லஸ்ஸி பாதாம் பால், நன்னாரி சர்பத்..
திருவையாற்று வாழையிலை, வாழைப் பழம்.
கும்பகோணத்து நெய் ரோஸ்ட், பருப்புப்பொடி,
பித்தளை டவரா டிகிரி காஃபி, வெற்றிலை சீவல், எலுமிச்சை நாரத்தங்காய்..
நாச்சியார் கோயில் குத்துவிளக்கு
திருபுவனத்து முகூர்த்தப் புடவைகள்
பட்டு வேஷ்டிகள்
மாயவரத்து மாம்பழம் கூறைச் சேலை
மன்னார்குடி கொய்யா, கொடுக்காய்ப்புளி
திருவாரூர் தேன் மிட்டாய், கடலை உருண்டைகள்
கந்தர்வகோட்டை முந்திரிப்பழம்
உரத்தநாட்டு உளுந்து பயறு
பட்டுக்கோட்டை தேங்காய், பலாப்பழம்
அறந்தாங்கி கடலை, கொப்பரை..
நாகப்பட்டினத்து மீனும் கருவாடும்
உழவுக்குச் சளைக்காத உம்பளாச்சேரி காளைகள்
வேதாரணியத்து உப்பும் மல்லிகையும்..
ஊரைச் சுற்றிக் கொண்டு ஓடும் ஆறு..
வயல் வெளிக்குள் இரை தேடும் வாத்துக் கூட்டங்கள்..
ஊர் முழுக்க புளிய மரங்கள் என்றாலும் இல்லாதவரை கூப்பிட்டுக் கொடுத்தனுப்பும்
குணவதிகள்..
மதியப் பொழுதில் பேரைச் சொல்லிக் கூப்பிட்டு அஞ்சல் அட்டையைக் கொடுத்து விட்டுச் செல்லும் தபால்கார தாத்தாக்கள்.
குந்தவைக்காக தவம் இருக்கும் வல்லவரையர்கள்..
அட்லஸ் சைக்கிளில் அரைப் பெடல் அடிக்கும் விடலைகள் தலை நிமிராமல் ரெட்டை சடையுடன் பள்ளிக்கூடம் செல்லும் பெண் பிள்ளைகள்..
ஓரோன் ஒன்னு!.. காதைத் துளைக்கும் சத்தத்துடன் மரத்தடிப் பள்ளிகள்..
'ச.ரி.க.ம.ப. ' ...
அக்ரஹாரத்தில் வாய்ப்பாட்டு வகுப்புகள்..
கூடவே -
தாம் தித் தாம்.. தை தித் தை.. - சலங்கை ஒலிகள்!..
நாதஸ்வரத்தின் விஸ்தாரத்தில்
நனைந்திருக்கும் மாந்தோப்புகள்!..
கோயில் மண்டபத்தில் தேவாரப் பதிக பண்ணிசைப் பயிற்சிகள்..
காரை வீட்டுத் திண்ணைகள், நடு முற்றங்கள், கொல்லைப் புற கிணற்றடிகள் தொழுவங்கள், கொடி முல்லைப் பந்தல்கள்..
வீட்டு விசேஷங்கள் என்றால் சில்க் ஜிப்பா அகலக் கரை வேஷ்டி அங்க வஸ்திரம் காதுகளில் கடுக்கண் கையில் காப்பு..
வாய்க்கு இதமாக கொழுந்து வெத்தலையுடன் கொட்டைப் பாக்கு.. பாக்கு வெட்டியும் சுண்ணாம்பு டப்பியும் கூடுதலாக பன்னீர்ப் புகையிலை ..
வயதாகி பல் உதிர்ந்து விட்டால் வறுத்த சீவலுடன் எவர்சில்வர் வெத்தலைப் பெட்டி..
தஞ்சாவூர் மாயவரம் ஜங்ஷன் வாசல்களில் போட் மெயில் வருகைக்காக வரிசையாய் நின்றிருக்கும் குதிரை வண்டிகள்..
தெருவுக்கு நாலு சவாரி வண்டிகள் என்றாலும்
பண்ணையார் வீட்டில் கம்பீரமாக நிற்கும் ரெட்டை மாட்டு வில் வண்டி கண்ணைக் கவரும்..
கொம்பின் கூர் நுனியில் வெள்ளிக் குப்பி குஞ்சலம் சலங்கைப் பட்டையுடன் வண்டி மாடுகள்..
மோழைத் தலையுடன் உழவு மாடுகள்..
மஞ்சள் குங்கும சுமங்கலத்தில் பசுக்கள்.. துள்ளித் திரிகின்ற கன்றுகள்..
தார் ரோட்டில் பாம் என்ற சத்தத்துடன் புகையைக் கிளப்பிக் கொண்டு செல்லும் பஸ்கள்..
கரும் பச்சையில் தஞ்சாவூர் எஸ்ஸெம்ட்டி
சிவப்பு நிறத்தில் கும்பகோணத்து எஸ்ஸார்வியெஸ்
பச்சை நிற ராமன் ராமன்..
கிராமத்து கப்பிச் சாலையில்
அவ்வப்போது ப்ளஷர் கார்கள்..
நாகை கடல் வழியில் ரஜூலா என்றொரு கப்பல் பினாங்கு சிங்கப்பூர் என்று போவதற்கு..
அது நிறுத்தப்பட்டதும் MV சிதம்பரம்.. கப்பல்
நாகைக்கு வருகிறது என்றால் கப்பலைப் பார்ப்பதற்கு என்றே உறவுக்கார கூட்டம்..
ரசாயனக் கலப்பு இல்லாத தெளிவான தண்ணீர் ஓடும் வாய்க்காலில் பித்தளைப் பாத்திரங்களைக் கழுவி எடுத்துச் செல்லும் அக்காக்கள்..
டவுன்களில் டிராமா கொட்டகையோடு சினிமா தியேட்டர்.. கிராமங்களில் டூரிங் டாக்கீஸ்.. திருவிழா நேரங்களில் கூத்து மேடைகள்..
ஊருக்கு மறைவாக கள்ளுக் கடைகள்.. குடித்து விட்டு ஊருக்குள் வருவதற்கு அச்சப்படும் ஆண்கள்..
சிறப்பு மிகு தஞ்சை ஜில்லாவில் இருந்து 1974 ல் அறந்தாங்கி
கந்தர்வகோட்டை பிரிக்கப்பட்டன..
நீதி நிர்வாகத்தில் மட்டும் - கீழத் தஞ்சை என்றிருந்த திருவாரூர் நாகப்பட்டினம் வட்டாரங்கள் 1991 ல் தனியாகின..
2020 ல் மயிலாடுதுறைப் பகுதி தனி மாவட்டம் என்றானது..
இன்னும் சில பகுதிகளும் தனிக் குடித்தனம் செல்வதற்குக் காத்திருக்கின்றன..
மிச்சம் இருக்கின்ற ஊர்கள் ஒவ்வொன்றும் தனியானாலும் தஞ்சை என்றாலே இனிமை தான்.. பெருமை தான்..
இன்றைக்கு மேம்பட்டதாக வசதிகள் என்றாலும்
பசுமையும் வளமையும் குறைந்து கொண்டிருப்பது நிதர்சனம்..
வாழ்க நலம்
வளர்க நலம்
***
எங்கிருந்து எங்கு வந்து விட்டோம்? எவ்வளவு மாறி விட்டது எல்லாம்?
பதிலளிநீக்குவெகு தூரம் வந்து விட்டோம்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
தஞ்சாவூரு சீமையிலே என்கிற பாட்டும், தஞ்சாவூரு மேளம் என்கிற பாடல், தஞ்சாவூரு மண்ணடுத்து பாடலும் நினைவுக்கு வருகின்றன.
பதிலளிநீக்குஎல்லாம் நினைவுக்கு வர வேண்டிய பாடல்கள் தான்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
மிக அருமையான விவரிப்பு. நாச்சியார் கோவில் கல் கருட சேவையை மறந்துவிட்டீர்களே.
பதிலளிநீக்குநீங்க லிஸ்ட் போட்டதெல்லாம் இப்போவும் கிடைக்குதா? நெய்ரோஸ்ட்..
வெங்கட் ரமணா, மங்களாம்பிகா - எல்லாம் சிறப்பு..
நீக்குஇப்போதும் கிடைக்கலாம்..
நாச்சியார் கோயில் சேர்த்து விட்டேன்..
விடுபட்டதற்கு மன்னிக்கவும்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
மாருதியின் முதல் படமும் கடைசிப் படமும் மிகவும் கவர்ந்தன.
பதிலளிநீக்குஅழகோ அழகு..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நாச்சியார் கோயில் கல்கருடன் பற்றிக் குறிப்பிட்டிருக்காரே. நெல்லை கவனிக்கலை போல! மிக அருமையாகப் பழைய தஞ்சை மாவட்டத்தைக் கண்களெதிரே கொண்டு வந்துட்டீங்க. இப்போல்லாம் நிறையவே மாறி விட்டது.
பதிலளிநீக்குநாச்சியார் கோயில் முதலில் குறிக்க வில்ல..
நீக்குஇதிலே சொல்லப்பட்ட பலவும் நான் கண்ணாரக் கண்டவை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நலம் வாழ்க..
நாச்சியார் கோயில் முதலில் குறிக்க வில்ல..
நீக்குஇதிலே சொல்லப்பட்ட பலவும் நான் கண்ணாரக் கண்டவை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நலம் வாழ்க..
அருமையாகச் சொல்லியிருக்கீங்க துரை அண்ணா.
பதிலளிநீக்குஇப்படி ஒவ்வொரு ஊருக்கும் தனித்துவம் உண்டுதான் இல்லையா? எனக்கு உடன் நினைவுக்கு வந்தது தஞ்சாவூர் மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணி விட்டு சேத்து சேத்து
காவிரிக்கு ஒரு கதை என்றால் தாமிரபரணிக்கும் வைகைக்கும், பெரியாற்றிற்கும் கதைகள் இருக்கும் தான்...ஒவ்வொரு நதியும் அது சுற்றி ஓடும் ஊர்களுக்கும் பெருமைதான்
கீதா
//காவிரிக்கு ஒரு கதை என்றால் தாமிரபரணிக்கும் வைகைக்கும், பெரியாற்றிற்கும் கதைகள் இருக்கும்//
நீக்குஉண்மை தான்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நலம் வாழ்க..
சிறப்பான பதிவு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
பதிலளிநீக்குநன்றி தனபாலன்..
தஞ்சையின் பெருமைகளை மிகவும் அருமையாக படங்களுடன் விளக்கி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஉறின் சிறப்பை கண் முன்னே கொண்டு வந்தது உங்கள் எழுத்து.
அதற்கு உங்கள் படங்கள் தேர்வும் அருமை.
மண்ணின் பெருமை சொல்ல சொல்ல இனிமைதான்.
டூரிங்க் டாக்கீஸ் நினைவுகள் வருகிறது, இப்போது அவை இல்லை.
மாயவரம் ஜங்க்ஷன் ஒரு காலத்தில் அத்தனை ரயில் போனது இப்போது அவை எல்லாம் ரத்து ஆகி விட்டது.
ஜானகி ராமன் அவர்கள் கதையில் மாயவரம் ரெயில் நிலையம் இடம்பெறும் ,மாட்டு வண்டி கூலி (வண்டி சத்தம்) பற்றி எல்லாம் வரும்.
நிறைய பழைய நினைவுகளை நினைவு படுத்தும் பதிவு.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தஞ்சாவூரில் பெருமைகளை மிக அருமையான விஸ்தரிப்புடன் ரசிக்குமாறு சொல்லியிருக்கிறீர்கள். பதிவு மிகவும் அருமையாக உள்ளது. அத்தனை படங்களும் அதற்கு மெருகேற்றுகின்றன. தஞ்சைக்கு நாங்கள் அவ்வளவாக சென்றதில்லை. தங்கள் விவரிப்பில் தஞ்சை மாநகரம் முழுவதும் சுற்றிய களைப்பு இப்போது.
ஊர்கள், அதன் பெயர்கள், மாவட்டங்கள் என பிரிவதோடுல்லாமல் பழைய கால வாழ்க்கைகளும், ரசித்த சம்பவங்களும், அதன் இடங்களும் முற்றிலும் மாறித்தான் வருகின்றன. என்னசெய்வது....? இப்படி அடிக்கடி நினைவு கூறி கொள்ளத்தான் வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.