நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.. 125
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 16
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்..16
*
-: ஆழ்வார் திருமொழி :-
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.. 2155
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்
திருத்தலம் - திருக்கோளிலி
இறைவன்
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
அம்பிகை
வண்டார்பூங்குழலி
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்
தலவிருட்சம் - தேற்றாமரம்
சப்த விடங்கத் தலங்களுள்
திருக்கோளிலியும்
ஒன்று..
ஈசன் திருமுடியைக் கண்டதாக நான்முகன் பொய்யுரைத்ததும் அவரிடமிருந்த படைப்புத் தொழில் பறி போய் விடுகின்றது.. பூமியின் சமநிலையும் பாதிப்படைகின்றது..
கவலையுற்ற கிரகாதிபர்கள் ஒன்பது பேரும் ஈசனிடம் முறையிடுகின்றனர்..
நான்முகப் பிரம்மனும்
மனம் வருந்தியவராக இத்தலத்திற்கு வந்து பரமனைப் பணிந்து வழிபாடு செய்கின்றார்..
இதனால் மீண்டும் உயிர்களை சிருஷ்டிக்கும் வரத்தைப் பெறுகின்றார்..
எனவே ஸ்வாமி
ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என வழங்கப்படுகின்றார்..
நவக்கிரக நாயகர்கள் இங்கே குறையிரந்து நின்றதால் இத்தலத்தில் வக்ரம் இல்லை..
நவக்கிரக மூர்த்திகளை
நேர் வரிசையில்
தரிசிக்கலாம்..
எல்லாவித தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்..
இப்பகுதியில் வாழ்ந்த குண்டையூர்க் கிழார் என்பவர் ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளுக்கு வழங்கிய நெல் மூட்டைகள் ஈசன் அருளால் மலை அளவு ஆனது..
இதைக் கண்டு வியந்த சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருப்பதிகம் பாடித் துதிக்க - ஈசன் தனது கணங்களை அனுப்பி நெல் மலையை திரு ஆரூருக்கு மாற்றி வைத்ததாக வரலாறு..
இந்நிகழ்வு வருடம் தோறும் மாசி மகத்தன்று நிகழ்கின்றது..
இன்றைய பதிவிலுள்ள
ஞானசம்பந்தப் பெருமான்
திருப்பதிகத்தில் - நமது வழிபாட்டினால் நமது சந்ததியும் சிறப்படையும் என்று குறிப்பிடுவது சிந்தையில் கொள்ளத் தக்கது...
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன் கோளிலிஎம் பெருமானே.. 1/62
-: ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருப்பாடல் எண் - 16
உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.. 230
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
திடீர் மழை என்று
தலைநகர் சென்னையில்
இயற்கை தனது
சீற்றத்தை மீண்டும்
காட்டியுள்ளது..
நுண்தீக் கிருமியின்
தாக்கமும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது..
மக்கள் இன்னும்
திருந்தவில்லை
நம்மை நாமே
இறைவன் துணையுடன்
பாதுகாத்துக் கொள்வோம்..
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
சிறப்பு.
பதிலளிநீக்குஎதிர்பாரா பேய்மழையும், வெள்ளமும், தீ நுண்மியும் மிரட்டுகின்றன.
நாடும், வீடும் நலம் பெறட்டும்...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திருப்பாவை பாடல் அருமை. தெய்வ படங்கள் கண்களுக்கும்,மனதுக்கும் நிறைவு. சிவ தரிசனமும் பெற்று, திருக்கோளிலி திருத்தலம் பற்றிய விபரங்களும் தெரிந்து கொண்டேன். இறைவன் மக்கள் அனைவரையும் இன்னல்கள் ஏதுமின்றி காக்க பிரார்த்தித்துக் கொள்வோம். ஓம் நமோ நாராயணாய நமஃ. ஓம்நமசிவாய. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குநம் எல்லோருக்கும் இறைவன் துணை இருக்கட்டும்!
பதிலளிநீக்குதுளசிதரன்
திருக்கோளிலி தரிசனம் அருமை!
பதிலளிநீக்குகருத்து வருமா? வராதா? என்ற அச்சத்திலேயே கருத்திட்டேன்.நல்ல வேளை சேர்ந்து விட்டது.
பதிலளிநீக்கு