நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
-: குறளமுதம் :-
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்..(84)
*
-: அருளமுதம் :-
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல் - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-
ஊரிலேன் காணி இல்லை
உறவுமற் றொருவர் இல்லை
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா
அரங்கமா நகரு ளானே..900
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்
திருத்தலம்
திருமறைக்காடு (வேதாரண்யம்)
இறைவன்
ஸ்ரீ திருமறைக்காடர்
அம்பிகை
ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள்
தீர்த்தம் - மணிகர்ணிகா
தலவிருட்சம் - வன்னி..
அம்மையப்பனின்
திருமணக் கோலத்தினை
அகத்திய மாமுனிவர்
தரிசித்த திருத்தலம்..
இத்தலத்தில் வழிபாடு செய்த ஸ்ரீ ராமபிரான் கோடியக்கரையில் நின்று இலங்கையை நோக்கினன் என்பர் ஆன்றோர்..
தெற்கு நோக்கிய
எழிலார்ந்த துர்கை.
யம பயம் தீர்ப்பவள்..
வரப்ரசாதியானவள்..
அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப் பெருமானும் ஒரு சேர நின்று வழிபட்ட திருத்தலங்களுள் இதுவும் ஒன்று..
கோளறு பதிகம் பிறந்த திருத்தலம்..
இங்கிருந்தே
ஞானசம்பந்தப் பெருமான் பாண்டிய நாட்டிற்குப் புறப்படுச் சென்றார்..
*
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே..(6/23)
-: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் எண் - 10
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
*
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 19 - 20
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்..
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்..
இந்த அளவில்
ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான்
செய்தருளிய
திருப்பள்ளியெழுச்சியும்
திருவெம்பாவையும்
நிறைவடைகின்றன..
ஓம்
சிவாய
திருச்சிற்றம்பலம்
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ
ஓம் சிவாய நம ஓம். ஹரி நாராயண...
பதிலளிநீக்குதரிசித்தேன் நன்றி.
பதிலளிநீக்குஇரண்டு நாட்கள் முன்னர் தான் வேதாரண்யம், கோடிக்கரை பார்க்கலை என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். இங்கே தான் ஶ்ரீராமர் முதலில் இலங்கைக்குப் பாலம் கட்ட நினைச்சதாகச் சொல்லிக் கேள்வி.
பதிலளிநீக்குபாடல்கள் வாசித்துக் கொண்டேன். தலம் பற்றிய புராணமும் அப்பர் திருஞானசம்பந்தர் பற்றிய விவரங்களும் அறிந்தேன், துரை அண்ணா.
பதிலளிநீக்குகீதா
நாற்றத்துழாய்முடி நாராயணன் - துளசியை அணிந்து அணிந்து பகவானின் தலைமுடி துளசி வாசத்துடன் விளங்குகிறதாம் , அத்தகைய எம்பெருமானை மனதால் நினைத்து வாயினால் பாடி மகிழ்வோம் ...
பதிலளிநீக்கு