நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 09, 2018

சித்திரைச் சதயம்

இன்றைக்கு ஆயிரத்து நானூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு..
590 - ல் இருந்து 630 வரைக்குமான ஆண்டுகளின் இடைப்பட்ட ஒருநாள்...

முதலாம்  மகேந்திர பல்லவனையும்
அவனது ஆட்சிக்குட்பட்டிருந்த காஞ்சி மாநகரையும்
உலுக்கியது - அந்தக் குரல்!..

நாமார்க்கும் குடியல்லோம்!.. நமனை அஞ்சோம்!..

இதென்ன.. காஞ்சியில் மன்னவனின் அருகிருந்தா கேட்டது?...

இல்லையில்லை..

காஞ்சிக்குத் தெற்கே
ஏறத்தாழ எண்பது கல் தொலைவுக்கு
அப்பாலிருந்த சிற்றூரிலிருந்து ஒலித்தது...

அதுவும்,
திரு அதிகை வீரட்டானம் எனும் திருக்கோயிலிலிருந்து...

இப்படி ஒலிக்கக் காரணம்!?...

காஞ்சியில் சமண பீடாதிபதியாக வீற்றிருந்த தருமசேனர் -
வயிற்று வலி என்று பொய்யுரைத்து இங்கிருந்து நள்ளிரவில் தப்பித்தார்..

திருஅதிகை சென்று அங்கே புறச் சமயம் சார்ந்தார்..
சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டார்...

ஏனைய குருமார்களையும் அரசனையும் அவமதிப்பு செய்தார்...

இது தான் மன்னவனின் முன்பு வைக்கப்பட்ட குற்றச்சாட்டு...

அழைத்து வாருங்கள் இங்கே!..
- அதிரடியாய் ஆணை பிறந்தது அரசனிடமிருந்து...

அணி திரண்டு சென்ற அலுவலர்கள்
அரச கட்டளையை நிறைவேற்ற முனைந்தபோது தான்
கோயில் மணியின் நாதம் என முழங்கியது அந்தக் குரல்..


நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன் நற்சங்க வெண்குழையோர் காதில்
கோமாற்கே நாமென்றும் மீளாஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே!..(6/98)

இது கேட்ட அலுவலர்கள் அதிர்ந்தனர்...
ஓடிச்சென்று மன்னவனிடத்தில் உரைத்தனர்...

புறச் சமயத்தைச் சார்ந்ததுமே வயிற்று வலி ஓய்ந்து போனதாம்..
அச் சமயத்தின் இறைவனே வந்து புதிதாக பெயர் சூட்டினானாம்!..

என்ன என்று!.. - ஆங்காரம் வெளிப்பட்டது மன்னவனிடம் இருந்து..

திருநாவுக்கரசு!...

ஏதாகிலும் ஆகட்டும்... 
மீண்டும் சென்று அழைத்து வருக... ஆகாததாயின் இழுத்து வருக...
இயலவில்லை எனில் ஏதாவது செய்து முடித்து வருக!...
அங்கிருந்து வெறுங்கையுடன் வருவீராயின் 
அந்தக் கையில் உமது தலையைப் பரிசாகப் பெறுவீராக!..

முற்றும் துறந்தவர் அளித்த அதிர்ச்சிக்கும் மேலாக
முடி கொண்ட மன்னவன் அளித்ததோ பேரதிர்ச்சி...

திரும்பவும் ஓடினார்கள் திருஅதிகையை நோக்கி..
திருநாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்தனர்!..

அரசனின் அலுவலர்கள் மீது இரக்கம் கொண்டார்...

நற்றுணையாவது நமசிவாயவே!.. - என்று எழுந்து நடந்தார்..

அடியாரைச் சிறைப் பிடித்தான் மன்னன்...

புறச் சமயத்திலிருந்து மீள வேண்டும்!..
பலரும் கூடி நின்று பலவாறு வற்புறுத்தினர்..
ஒன்றும் பயனில்லை..

கூடி நின்று பேசியவர்க்கு தொண்டை வறண்டு போனது..
- தமிழகத்துக் காவிரியைப் போல...

ஏதாயினும் செய்து கொள்க!.. - என்று, மன்னன் கை கழுவி விட்டான்..

சுண்ணாம்பு நீற்றறை, வஞ்சனைப் பாற்சோறு - என,
எதுவும் பயனளிக்கவில்லை..

மதயானை கொண்டு இடறுவோம்!.. - என்று,
மதங்கொண்டு நின்ற எண்ணமும் மண்ணோடு மண்ணாயிற்று...

இனியும் பொறுப்பதற்கில்லை... கல்லுடன் கட்டி கடலில் எறிக!...

மனம் இறுகி நின்ற மானிடர்களுக்கு முன் - கல் இளகிக் கனிந்தது..

இளகிக் கனிந்த கருங்கல் பூம்புணை என்றாகி கடலில் மிதந்தது..
அலைகளோடு தவழ்ந்து கரையைச் சேர்ந்தது...

திடுக்கிட்ட வன்கணாளர் தெறித்து ஓடிப் போயினர்..

செய்தி அறிந்த மகேந்திர பல்லவன் ஓடோடி வந்து நாணித் தலை கவிழ்ந்து
நாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்தான்...

அப்பர் பெருமானின் அருட்கரத்தினால்
திருநீறு பெற்று சிவ சமயம் சார்ந்தான்...

அதையும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில்
கல்வெட்டாகச் செதுக்கி வைத்தான்...

திருநாவுக்கரசர் அன்று தொடங்கிய பயணம்
தமிழகம் தொட்டு திருக்கயிலாயம் வரை தொடர்ந்தது...

திருக்கயிலையில் அவரைத் தடுத்தாட்கொண்ட இறைவன் -

நாவுக்கரசரே!.. நானே உம்மைத் தேடி வருகின்றேன்!...
- என்று, திரு ஐயாற்றில் திருக்காட்சி நல்கினன்...

திருவீழிமிழலையில்
மக்கள் பஞ்சம் தீர்க்க!.. என்று வேண்டி நின்றபோது
மாற்றுக் குறையாத பொற்காசு ஒன்றை நாளும் வழங்கி நின்றனன் ஈசன்...


திருப்பைஞ்ஞீலி எனும் திருத்தலத்தில் - இறைவன் எதிர் வந்து
அப்பர் பெருமானுக்கு சோறும் நீரும் அளித்து மகிழ்ந்தனன்...


திருமறைக்காட்டில் பலகாலமாகத் தாழிடப்பட்டிருந்த
திருகோயில் கதவுகளைத் திருப்பதிகம் அருளி
திறந்திடச் செய்தவர் திருநாவுக்கரசர்... 

திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து
மக்கள் தொண்டாற்றினார் அப்பர் பெருமான்..

அதனை அறிந்த ஞானசம்பந்த மூர்த்தி -
திருப்பூந்துருத்தியின் மண்ணை மிதிக்கவும் அஞ்சி -
ஊருக்கு வெளியே குடில் அமைத்துத் தங்கி சிவ தரிசனம் செய்தனர் எனில்
அப்பர் பெருமானின் பெருமையை உரைக்கவும் இயலுமோ!...


அப்பர் பெருமானின் பெருமைகளைக் கேள்வியுற்ற
திருப்பழனத்து அந்தணப் பெருந்தகை அப்பூதி அடிகள்
தான் செய்த எல்லா அறங்களுக்கும் திருநாவுக்கரசு எனும் பெயரைச் சூட்டினார்..

அது மட்டுமன்றி, தனது மகன்கள் இருவருக்கும்
மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு - என்று பெயர் வைத்தார் எனில்
அப்பூதி அடிகளின் மாண்பு தான் எத்தகையது...

இத்தனைக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை பார்த்ததே இல்லை...

அது கொண்டல்லவோ
அப்பூதி அடிகளின் மூத்த மகன் நாகந்தீண்டி மாண்டு போகவும்
விருந்தேற்க வந்த நாவுக்கரசர் அருளிய திருப்பதிகத்தால்
மாண்ட மகன் விஷம் தீர்த்து மீண்டு எழவும் - ஆகிய திருவிளையாடல்களை
நிகழ்த்தினான் - எம்பெருமான்...

செல்லும் இடம் எங்கும் மக்களுக்கு நல்லுரைகளை வழங்கிய
நாவுக்கரசர் - மீண்டும் சைவ சமயத்தை நிலை நாட்டினார்...

செம்மையான உழவாரத் திருப்பணியால்
சிவாலயங்களை மீட்டெடுத்தார்...

ஞானச்சுடர் கொண்டு நல்லொளி ஏற்றினார்..


அப்பர் பெருமானுடன் சேர்ந்து நின்று
திருஞானசம்பந்தமூர்த்தி செய்த திருப்பணிகள் அளப்பரியன...

திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், மதங்க சூளாமணியம்மை, அப்பூதியடிகள், திருநீல நக்கர், முருகனார், குங்கிலியக் கலயர், சிறுத்தொண்டர் -

ஆகிய பெருமக்கள் திருநாவுக்கரசருடன் அளவளாவிய பெருமை உடையவர்கள்...


நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே!..

மக்கட் பணி செய்து கிடக்கும் என்னைத் தாங்குதல்
இறைவா நினது கடன் அன்றோ!..

என, இறைவனுக்கு நினைவூட்டிய பெருந்தகை...

மக்கள் பணி செய்வோருக்கான இலக்கணம் -
கிடப்பதே!.. என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கியுள்ளது..

அந்த ஒரு வார்த்தைக்கே பல பதிவுகள் எழுதலாம்...

சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமுங் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவமென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே..(5/60)

என்றும்,

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஒங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே..(5/99)

- என்றும்,
திருப்பதிகப் பாடல்களின் மூலம் மக்களைச் சிந்திக்க வைத்த பேரருளாளர்...

அப்பர் பெருமான் - திருஐயாறு
அதோடு மட்டுமல்லாமல்

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே..(5/90)

என்று இறைவனின் எளிவந்த தன்மையை எடுத்துக்காட்டுகின்றர்...

இப்படியெல்லாம் இருந்தும்-
இந்தப் பூவுலக வாழ்க்கை பொல்லாததாக இருக்கின்றதே!...
இதயம் எனும் இருட்டறைக்குள் எத்தனை எத்தனை காமக் கசடுகள்!..
இறைவா!... உன்னருள் மழைக்கும் நான் தகுதி உடையவன் தானா!..
எம்பெருமானே!.. எனக்கும் உனது நல்லருள் கிட்டுமா?.

- என்று, மனம் நைந்து போகின்றது..

செய்த பிழைகள் பூதாகாரமாக முன் நிற்கின்றன..
ஆற்றாமையால் கண்ணீர் பெருகி வழிகின்றது...

செய்த பிழைகளை இனிமேல் செய்யாதிருப்பாயா மனமே!...

வினவினால் -
விடையறியாமல் மதில் மேல் பூனையாய்த் தவிக்கின்றது- மனம்..

இதைப் பற்றியெல்லாம் கவலையே வேண்டாம்...

மனமெனுந் தோணிபற்றி மதியெனும் கோலை ஊன்றிச்
சினமெனுஞ் சரக்கைஏற்றிச் செறிகடல் ஓடும்போது
மனனெனும் பாறைதாக்கி மறியும்போது அறியவெண்ணா
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூருடைய கோவே!..(4/46)

உன்னை உணரும் வகையினை நல்குவாயாக!.. - என்று,
அவனை முற்றிலுமாகச் சரணடைந்து விடு!..
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் பற்றிக் கொள்!..
அவ்வளவு தான்!... அதற்கு மேல் அனைத்திற்கும் அவனே பொறுப்பு!..

- என்று, நல்வழிகாட்டுகின்றார் அப்பர் பெருமான்...

அப்பர் பெருமான் - திருப்புகலூர்
இன்று சித்திரைச் சதயம்..
திருப்புகலூரில் அப்பர் பெருமான் இறைவனோடு கலந்த நாள்..

திருப்புகலூர், திருப்பாதிரிப்புலியூர், திருஐயாறு, திருப்பைஞ்ஞீலி,
திருப்பூந்துருத்தி, திருமறைக்காடு, தஞ்சை களிமேடு
முதலான திருத்தலங்களிலும்

மற்றும் பல சிவாலயங்களிலும் அப்பர் பெருமானுக்கு 
சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நிகழ்கின்றன...

இந்த நாளில் 
அப்பர் பெருமானின் திருவடிகளைத் 
தலைமேல் கொள்வதே பெரும்புண்ணியம்..

ஈசனுடன் 
உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
பிணைத்துக் கொள்ளும்படி அருளினார் அப்பர் பெருமான்..

அவ்வண்ணமாக இதோ திருப்பாடல்.. 


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!..(6/95)

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!..
அப்பர் பெருமான் திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ 

31 கருத்துகள்:

  1. ஆஹா... எதிர்பார்த்தமாதிரி அட்டஹாசமான இடுகை வந்துவிட்டது. இதுமாதிரி மறைப்பாடல்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஆழ்ந்து படித்துவிட்டு பின்னர் பின்னூட்டம் இடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      தங்களுக்கு நல்வரவு... நானும் உங்களை எதிர்பார்த்திருந்தேன்..
      விரிவான கருத்துரைக்குக் காத்திருக்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அங்கிருந்து வெறுங்கையுடன் வருவீராயின் அந்தக் கையில் உமது தலையைப் பரிசாக பெறுவீராக...

    எத்தனை கொடூரமான கிலிசொல் அன்றைய மன்னர்களின் வார்த்தைகளும் கவித்துவமாக இருந்திருக்கின்றதே...

    அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்கு நல்வரவு..

      நேற்றைய பிரம்படி படத்தைப் பார்த்து விட்டு மிக வருத்தம் அடைந்தீர்கள்..

      ஆனாலும் மன்னர்கள் வழங்கிய தண்டனைகள் இப்படித்தான் இருந்தன...

      அதனால் தான்
      சாலையோர மரங்கள் விறகு ஆகாமலும்
      ஆறு குளங்கள் வீட்டு மனையாக மாறாமலும் நிலைத்து நின்றன..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நாமார்க்கும் குடியல்லோம்.....

    சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய், அவன் திருவடிகளை அடைக்கலமாய் அடைந்துவிட்டதால், நாம் யாருக்கும் அடிமை அல்லர், யமனைக் கண்டு பயம் இல்லை..... என்ற அப்பர் வாக்கு மனதில் பதிந்தது.

    நடலை - பொய், ஏமாப்போம்-களிப்புற்றிருப்போம் (இறைவன் நம் மனதில் உறைந்திருக்கும்போது மகிழ்ச்சிக்குக் குறைவேது?)

    என் கடன், திருத்தொண்டு புரிந்துகொண்டு, அதன் விளைவுகளுக்குச் சொந்தம் கொண்டாடாமல் (கிருஷ்ணார்ப்பணம் என்பதுபோல்) இருப்பது. அப்படி நான் இருக்கும்போது, இறையின் கடமை, என்னைப்போன்ற அடியோரைத் தாங்குதல் - பாடல் படிக்க இன்பம் தந்தது. மிகுந்த பொருளுடையது.

    விறகில் தீயினன்... மாமணிச் சோதியான் - எனக்கு பாடப்புத்தகத்தில் வந்த பாட்டு. மிகுந்த அர்த்தம் பொதிந்தது. இறைவன் எங்கே என்று கேட்பவர்களுக்கு பதில் கூறும் விதமாக அமைந்தது.

    நல்ல பாடல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. அது இடுகையின் தரத்தை மேலும் மேம்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.. அவர்களுக்கு

      தங்களது இனிமையான கருத்துகளால் மனம் நெகிழ்கின்றது...

      அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகங்கள் தான் தேவாரம் எனப்படுபவை..

      ஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் திருக்கடைக்காப்பு,
      சுந்தரர் அருளிய திருப்பாட்டு - என்றாலும்
      அவைகளும் தேவாரம் என்ற சிறப்பினைப் பெறுகின்றன..

      தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான பதிவு. துளஸிஜி தமிழ் இடுகைகளை மிகவும் ரசிப்பார் என்று கீதா சொல்லி இருந்தார். அவர் இந்தப் பதிவுகளைப் படிக்கிறாரா கீதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஆமாம். இன்று இதையும் அனுப்பிவிட்டேன் இப்போது. இப்போதெல்லாம் அவர் கருத்து வர லேட்டாகிவிடுகிறது. நான் முந்திக் கொண்டு விடுகிறேன். இங்குதானே தலைமையகம். அவர் இப்போது பாலக்காட்டில் இல்லையே ரிட்டையர் ஆகி வீட்டோடு சென்றாகிவிட்டதால் தாமதம் ஆகும்...அதனால் இப்போதெல்லாம் என் கருத்தோடு போடுவது என்பது நான் கருத்து போடத் தாமதமானால் மட்டுமே...அவருடைய கருத்தும் (தங்கிலிஷில்) வந்திருந்தால்...முன்பெல்லாம் அவர் ரெகுலராக வாசித்து முதலில் கமென்ட் அனுப்பிவிடுவார்...நான் தான் தாமதமாக்குவேன்...ஹா ஹா

      கீதா

      நீக்கு
  5. //கூட நின்று பேசியவர்க்கு தொண்டை வறண்டு போனது - தமிழகத்துக் காவிரியைப் போல...//

    ஹா... ஹா... ஹா... நல்ல வார்த்தையாடல்...

    பதிலளிநீக்கு
  6. இதில் பல சம்பவங்களை திருவருட்செல்வர் படத்தின் மூலமாக அறிந்திருக்கிறேன். சிவாஜி நன்றாக நடித்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் நினைவு வந்தது படத்தில் பார்த்த நினைவு..பதிவு வாச்க்கும் போது வந்தது ஜிவாஜி நினைவுக்கு வந்தார்....படம் டக்கென்று நினைவுக்கு வரலை...உங்கள் கருத்து பார்த்ததும் நினைவுக்கு வந்தது ஜிவாஜி படம்..! ஆமாம் நல்ல நடிப்பு...

      கீதா

      நீக்கு
  7. ஆஹா துரை அண்ணா அழகான பதிவு. சித்திரை சதயத்திற்கு இப்படி ஒரு விசேஷமா? இன்றுதான் அறிகிறேன்.

    வழக்கம் போல அருமையான தமிழில்...திருநாவுக்கரசரின் வரலாறு!!

    தொண்டை வறண்டு போனதை இப்போதைய காவிரிக்கு ஒப்பீடு ரசித்தேன் அண்ணா,...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அதையும் திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டையில் கல்வெட்டாகச் செதுக்கி வைத்தான் இது ஒரு முக்கிய தகவல் புகைப்படச் சன்றுடன் வலை நண்பர்களுடன் பகிரலாமோ

    பதிலளிநீக்கு
  9. செய்த பிழைகளை இனிமேல் செய்யாமல் இருப்பாயா மனமே?

    விடை தெரியாமல் மதில் மேல் பூனையாய் தவிக்கிறது மனம்..//

    நிதர்சனமான வரி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அப்பர் பெருமானின் வாழ்வும் வாக்கும் அருமை.
    பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் மிக அருமை.
    அப்பர் பெருமான் திருவடி போற்றி போற்றி.

    பதிலளிநீக்கு
  11. துரை அண்ணன் ஏதோ தமனா அனுக்கா கீர்த்திப் போஸ்ட் எண்டார்ர்... அதுதான் ஓடிவந்தேன் வந்த வேகத்தில சம்பந்தரையும் அப்பரையும் தரிசித்து விட்டுச் செல்கிறேன்ன்...

    துரை அண்ணன் இவை 50 + ஆட்கள் படிக்கும் போஸ்ட்டக்கும்:)) கரீட்டுத்தானே?:)) ஹையோ முறைக்காதீங்கோ எனக்கு முன் வந்தோரைச் சொன்னேன்:))...

    சரி சரி பக்திப் போஸ்ட்களில் இதனால்தான் நான் கால் வைக்கத் தயக்கம்.. என் வாய் சொல்லுக் கேட்காது அது பின்பு வம்பாகிடும்.. அழகிய பதிவை பக்தியோடு படிச்சிட்டு ஓடுறேன்ன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா துரை அண்ணன் சொன்னது அங்கிட்டு!!! இங்கிட்டு அல்ல....துரை அண்ணனே தான் இளைஞர் என்றுதான் சொல்லியிருக்கார்...இதோ உங்களுக்கு அப்புறம் துளசியின் கமென்ட் டைப் பண்ணப் போறேன்...அப்போ துளசி ரொம்பச் சின்னப் புள்ளையாக்கும் கரீக்ட்டா!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. ஓ கீதா ... அங்கத்தைய கதையையா ஜொன்னார்ர்ர்ர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதானே நான் ஷொக்ட்ட்ட்ட் ஆகிட்டேன்ன்ன் துரை அண்ணன் பக்கத்தில் கொமெடியா என:)...

      நீக்கு
    3. அதிரா-- ஆமாம் 50+ ஆட்களும், கனடா சென்று கோவிலுக்குச் சென்று நீராடி, சாமியாடி, கடவுள் தரிசனமும் பிரசாதமும் சாப்பிட்டு, அதைப் பெருமையாக படமெடுத்து இடுகை போட்டுக்கொண்ட 61+ ஆட்களும் படித்துப் பயன்பெறலாம். ஹா ஹா ஹா.

      நீக்கு
    4. @நெ.த
      தென்னை மரத்தில தேள் கொட்டினா பனை மரத்தில நெறி போட்டுதாமே:) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை:)... ஹையோ ஹையோ எல்லோருமே உசாராத்தான் இருக்கினம் வயசு விடயத்தில:) ஹா ஹா ஹா:).

      நீக்கு
  12. என்ன அருமையான தமிழ்! உங்கள் தளத்தில் பக்தியும் தமிழும் இரண்டறக் கலந்து வருவதை ரசிப்பேன். தமிழ்நாட்டை விட்டுச் சென்ற பின் தமிழில் அவ்வப்போது வாசித்தாலும், நல்ல தமிழ் வாசித்து 28 வருடங்கள் ஆன நிலையில் தான் வலைத்தள வருகை. அதற்கு முன்ன் எனக்கும் அதற்கு முனைந்திட வழி இல்லாமல் போனது. பல சூழல்கள் காரணம். வலைத்தளம் வந்த பிறகுதான் இப்படியான தமிழை வாசிக்கிறேன். இதுவும் சில சமயங்களில் எனக்குத் தடைபடுகிறது. மொபைலில் மட்டுமே வாசிக்க இயலும் என்பதால். வீட்டில் பல பணிகள் என்பதாலும் தடைபடும்.

    தமிழ் அன்னை விளையாடுகிறாள். நிறைய தமிழ் அறிவும் ஞானமும் தங்களுக்கு வியக்கிறேன். நாவுக்கரசரைப் பற்றி ஓரளவு திருவருட்செல்வர் படம் மூலம் அறிந்திருந்தாலும் உங்கள் பதிவு பாடல்கள் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்டாலும் மண்டையில் நிற்க வேண்டுமே!

    இனிமேலும் பிழைகள் செய்யாமல் இருப்பாயா மனமே என்ற கேள்விக்கு மனம் தவிதாலும் அதற்கான வியை அடுத்து நேரே கீழே வ்ந்துவிட்டதே. இறைவனை சரணடைதல்!

    நான் செய்வதும் அதுதான். எனக்கு அவரைச் சொல்லத் தெறியாது. எனக்குத் தெரிந்த ஓரிரு வரிகளைச் சொல்லிவிட்டு அவரிடம் அப்படியே எல்லாவற்றிற்கும் மன்னிப்பு கேட்டிடல் அவரின் அருளை நினைத்து மகிழ்தல். அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ எல்லாமும் நீயே என்றிடும் பாமரன் நான்.

    உங்கள் தமிழிலும் அழகான பாடல்களிலும், இறைவனையும் நினைத்து திளைத்தேன். அழகான பதிவு ஐயா.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. கங்கை ஆடில் என், காவிரி ஆடில் என், கொங்கு தண் குமரித் துறை ஆடில் என், ஒங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என், எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

    என்ன ஒரு பொருள். எல்லாரும் கங்கையில் முழுகினால் பாவம் போயாச்சு என்று நினைத்துக்கொள்கிறார்கள். அப்படி அல்ல. எதிலும், எங்கும் ஈசனை, இறையைக் காணாதவர்கள் எங்கு புனித நீராடினாலும் பிரயோசனம் இல்லை.

    இதைப் படிக்கும்போது, 1400 ஆண்டுகளுக்கு முன்னரே, கங்கை, காவிரி, குமரி, கடல் என்று தீர்த்த யாத்திரை செல்லும் வழக்கிருந்ததையும் புரிந்துகொள்ளலாம்.

    இதைப் பற்றிப் படித்தபோது, கூகிளார், பட்டினத்தாரின் பாடலைப் பகர்ந்தார். (அதாவது திருவாரூரிலிருந்து வேறு ஊர் நோக்கி இறைவனைத் தரிசிக்க பாதயாத்திரை போகுபவர்களைப் பார்த்து)

    ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர்த் திருநாள் என்று
    ஊர்கள் தோறும் உழலுவீர் -நேரே
    உளக் குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
    விளக்கு இருக்க தீ தேடுவீர். (எரியும் விளக்கு இருக்கும்போதே நெருப்பு எங்கே என்று தேடிக்கொண்டிருப்பீர். அதாவது திருவாரூர் ஈசன் நீங்கள் கேட்டதெல்லாம் தரக் காத்திருக்க, அந்த ஊரில் பிறந்துவிட்டு இன்னொரு ஊர் கடவுளை நோக்கி பாதயாத்திரை செல்லும் அறிவிலீரே என்பது அர்த்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கங்கை ஆடிலென்.... படிக்கும்போது விழுந்து விழுந்து பாடமாக்கியது இப்போ தூசு தட்டி விட்டது போல இருக்கு... அருமையான அர்த்தமும் சொல்லிட்டீங்க..
      இதனால்தான் நானும் ஈசனைக் காணும் அரை தேம்ஸ் இல் குதிக்கப் போவதில்லை என சொல்லி அமர்கிறேன்:).

      நீக்கு
    2. அதிரா- ஒருவேளை ஈசன், இந்த அதிராப் பெண் தேம்சில் குதித்த உடன் அவரைக் காப்பாற்றி காட்சி தரலாம் என்று நினைத்திருந்தால்???

      நீக்கு
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).. அதிராவைத் தள்ளாமல் விடமாட்டினம் போல தேம்ஸ்ல:)).. மீயும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஐடியாவாகத் தேடி எடுத்துத் தப்பிடுறேன்:))..

      நீக்கு
  14. மாசில் வீணையும் மாலை மதியமும்.....நாவுக்கரசப் பெருமானின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கப்படிக்க இன்பம் அதிகமாகும். பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்றுள்ளேன். இருந்தாலும் விழா நாளில் இக்கோயில்களில் ஏதாவது ஒரு கோயிலுக்கு அவசியம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது இப்பதிவு. மக்கட் பணி என்பதுதானே சரி ஐயா? மக்கட்ப் பணி என்றுள்ளதே.

    பதிலளிநீக்கு
  15. செய்தி அறிந்த "நரசிம்ம பல்லவன்" என்பது "மகேந்திர பல்லவன்" என வந்திருக்கணுமோ? நரசிம்ம பல்லவர் காலத்தில் ஞானசம்பந்தர் வந்தாச்சு! இது மகேந்திர பல்லவன் காலத்தில் நடந்தது என எண்ணுகிறேன். சொல்லுவது தவறானால் மன்னிக்கவும். தேவாரப் பாடல்களுடன் கூடிய அருமையான இடுகை! மிகவும் ரசித்துப் படித்தேன். வந்திருக்கும் அழகான கருத்துக்களும் மனதைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      செய்தி அறிந்த நசிம்ம பல்லவன் - என்று வந்தது பிழை தான்..

      திருத்தம் செய்து விட்டேன்...

      இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..