நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 18, 2018

மீனாட்சி தரிசனம்

அந்த மாலைப் பொழுதில் மதுரை ஜங்ஷனில் இருந்து -
ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலைச் சென்றடைவதற்குள்
வீதியெங்கும் விளக்கேற்றி விட்டார்கள்...


தெற்கு வாசல் வழியாகத்தான் அனைவருக்கும் அனுமதி...

சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக கெடுபிடிகள் ..
வழக்கத்தை விட பாதுகாப்பு நடைமுறைகள் அதிகமாக இருந்தன...

கையிலிருக்கும் செல்போன் ஒன்றுக்கு பத்து ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டது...

எங்களிடம் இருந்த மூன்றையும் கொடுத்தோம் ..
ஒரே பையில் போட்டுக் கட்டி ரசீது கொடுத்தார்கள்...

இரண்டு பைகளை பாதுகாத்துத் தருவதற்கு கட்டணம் என்றால்
செருப்புகளை வைத்திருந்து கொடுப்பதற்கும் காசு கேட்டார்கள்...

அதற்குள் - பக்கத்தில் கூச்சல்...

வடநாட்டவர் சிலருக்கும் -
பொருள்களைத் திரும்பக் கொடுப்பவர் ஒருவருக்கும் பிரச்னை...

நான் கொடுத்த தொப்பியைத் திருப்பிக் கொடுக்கவில்லை!.. - என்று
அந்த இளம் பெண் ஹிந்தியில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்...

அவர்களின் மொழி இவர்களுக்குப் புரியவில்லை...

தலையில் கை வைத்து தொப்பி.. தொப்பி.. - என்றாள் அந்தப் பெண்..

இவர்களோ -
தொப்பியை உங்கள் ஆட்கள் வாங்கிச் சென்று விட்டனர்!..
- என்று சாதித்தனர் - தமிழில்!...

அருகிருந்த பெண் காவலர்கள் -
யார் வீட்டு விருந்தோ.. - என்று கண்டு கொள்ளவே இல்லை...

தொப்பியைப் பறி கொடுத்த அந்தச் சின்னப் பெண் மிகவும் கலங்கியிருந்தார்...

எனக்குத் தெரிந்த ஹிந்தியில் அந்தப் பெண்ணுக்கு சமாதானம் கூறினேன்...
அருகிருந்த பெரியவர் ஒருவர் அவர்கள் பக்கத்து நியாயத்தைக் கூறினார்...

நான் அவர்களிடம் ஹிந்தியில் உரையாடுவதைக் கண்டதும் -
பொருள்களைத் திரும்பக் கொடுக்கும் பணியிலிருந்த பெண்

இந்த மாதிரி சொல்லுங்கள்.. - என்று
வேறொரு மாதிரியாக சொல்லச் சொன்னார்..

அது எனக்கு நியாயமாகப்படவில்லை...

நீங்கள் ஒருமுறை உள்ளே தேடிப் பாருங்களேன்.. - என்றேன்...

அதை அவர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை...

அதற்குள் தொப்பியைப் பறி கொடுத்தவர்கள் அவர்களாகவே அகன்று போனார்கள்..

அடுத்து பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்தோம்...

என்னைச் சோதனையிட்ட காவலர்
சட்டைப் பையிலிருந்த மூக்குக் கண்ணாடியைக்
காட்டவில்லை என்று கோபித்துக் கொண்டார்...

பெண்கள் பகுதியில் என் மனைவி வைத்திருந்த
கைப் பை சோதனையிடப்பட்டது...

அதனுள்ளிருந்த கற்பூரம், திரிநூல், தீப்பெட்டி, முகம் பார்ப்பதற்கான சிறிய கண்ணாடி - இவற்றை எல்லாம் அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்...

பொருள் பாதுகாப்பு கூடத்துக்குச் செல்வதென்றால் அங்கே பெருங்கூட்டம்...
சென்று திரும்புவது எனில் மேலும் தாமதமாகும்..

இங்கே ஓரமாக வைத்து விட்டு திரும்ப வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்...

அப்படியே செய்து விட்டு தரிசனத்திற்கு விரைந்தோம்....

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களைப் பிணைத்தவாறு
பளபளக்கும் குழாய்கள்... வரிசை என்ற பெயரில் மிகப்பெரிய இடைஞ்சல்...

குழாய்களின் அமைப்பு மிகக் குறுகிய இடைவெளியாக இருக்கின்றது..
சற்றே காலை எட்டி வைத்தால் கண்டிப்பாக இடித்துக் கொள்ள நேரும்...

உள்பிரகாரங்களை அடைத்தவாறு மடக்கி மடக்கி
தரிசனத்திற்கான வரிசை அமைக்கப்பட்டிருந்தது...

பக்தர்கள் முறையாக மூலஸ்தானத்தை
வலம் வரமுடியாதபடிக்குச் செய்திருந்தார்கள்...

மனம் உறுத்தலாக இருந்தது...

அம்பிகையின் சந்நிதிக்கு முன்பாக
சிறு பிள்ளைகளுக்கு மட்டும் - பால் வழங்கிக் கொண்டிருந்தனர்...

இது திருக்கோயிலின் சார்பாக 
எவ்வித விலையும் இன்றி வழங்கப்படுவதாகும்...

மனதார பாராட்டி விட்டு
வரிசையோடு வரிசையாக நகர்ந்து
மீனலோசனியின் சந்நிதிக்குள் நுழைந்தோம்...

சற்று உயரமான பலகை நடையில்
ஏறி இறங்கும்படி செய்திருக்கின்றார்கள்..

பச்சைப் பட்டுடுத்தி மல்லிகை மாலைகளுடன்
புன்னகை பூத்திருந்தாள் - அங்கயற்கண்ணி...


சுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி 
உத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப் 
பால்சுரந்த கலசம் போற்றி
இரும்புமனம் குழைத்தென்னை எடுத்தாண்ட 
அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரணநூபுரம் 
சிலம்பும் அடிகள் போற்றி!..
-: திருவிளையாடற்புராணம் :-

அம்மா!.. அம்மா!.. - என்று அரற்றியது மனம்...

கண் குளிரக் குளிர தரிசனம்...

மங்கலக் குங்குமத்தைப் பெற்றுக் கொண்டு -
சந்நிதியை விட்டு வெளியே வந்தோம்..

இரும்புக் குழாய்களால் தடுக்கப்பட்டிருந்ததால் -
திருமூலத்தானத்தை வலம் வரமுடியவில்லை...

ஆனாலும், நிருதி மூலை வரைக்கும் சென்று திரும்பி
ஐயனின் சந்நிதியை நோக்கி நடந்தோம்...


வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த்திங்கள் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!...(6/19)

நாவுக்கரசரின் தேவாரம் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருந்தது...

ஐயனின் சந்நிதியிலும் அருமையான தரிசனம்...

மந்திரமும் தந்திரமுமாகிய திருநீற்றைத் தரித்துக் கொண்டு
திருச்சுற்றின் மூர்த்திகளைத் தரிசித்தோம்..

திருக்கோட்டத்திலிருந்த ஸ்ரீதுர்க்காம்பிகைக்கு
வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டிருந்தது...

அருகில் எல்லாம் வல்ல ஸ்ரீசித்தர் பெருமான்...

திருச்சுற்றில் எங்கு காணினும் வண்ணச் சரவிளக்குகள்
மின்னிக் கொண்டிருந்தன..

ஏனெனில்,
அடுத்த சில தினங்களில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்...

நந்தி மண்டபத்தின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும்
பேருருவான ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி , ஸ்ரீ பத்ரகாளீஸ்வரி....

ஸ்வாமி சந்நிதிக்கு செல்லும் முன்பாக
ஆங்கொரு தூணில் பிள்ளைத்தாய்ச்சி அம்மன்..

இங்கே வேண்டிக் கொண்டு நாமே
பிள்ளைத்தாய்ச்சி சிற்பத்துக்கு எண்ணெய்க்காப்பு செய்விக்கலாம்...

சிற்பத்தின் மேலிருந்து வழியும் எண்ணெய்யை
சேகரித்து எடுத்துச் சென்று கர்ப்பவதியின் வயிற்றில்
தடவி வந்தால் சுகப்பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை...

நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் -
இங்கே வேண்டிக் கொண்டிருக்கின்றோம்..

முன்பு மேலாடையின்றி இருந்தது சிற்பம்..
இப்போது ஆடை அணிவித்திருக்கின்றார்கள்..

இருந்தாலும் நல்லெண்ணெய்யை
சிற்பத்தின் மேல் ஊற்றி சேகரித்துக் கொள்ளலாம்..

இங்கே எண்ணெய்க்காப்பு செய்யும் நடைமுறை..
இன்னும் வர்த்தகமாக்கப்படவில்லை..

நன்றி - Fb
மன நிறைவாக தரிசனம் செய்தபின்
பொற்றாமரைக் குளக்கரையில் சில நிமிடங்கள்...

செயற்கை நீரூற்றுகள் பொங்கிக் கொண்டிருந்தன..

அந்தப் பக்கம் திருச்சுற்று மண்டப மேல் தளத்தின் கற்கள் பிரிக்கப்பட்டிருந்தன...

அங்கே செல்வதற்கு இயலவில்லை.. இரும்புத் தடுப்புகள் இருந்தன..

நன்றி - Fb
அங்கிருந்து வெளியேறும்போது விபூதிப் பிள்ளையார் தரிசனம்...

திருக்கோயிலுக்குள் செல்லும் போது இரும்புத் தடுப்புகளின் வழியாக சென்றதால் திருநீற்றுப் பிள்ளையாரைத் தரிசிக்க இயலவில்லை...

விநாயகரின் மேலிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டு
பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டோம்..

திருவாசலை ஒட்டினாற்போல சேவார்த்திகள்
சித்ரான்னம் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள்...

மணக்க மணக்க புளியோதரை..
சந்தோஷத்துடன் வயிறார உண்டோம்....

நேரமாயிற்று...

இரவு உணவுக்குப் பின் -
புனலூர் பாசஞ்சரைப் பிடித்து திருநெல்வேலி செல்லவேண்டும்...

இருப்பினும் -

மீனாட்சியம்மன் திருக்கோயிலில் படமெடுக்க வேண்டும் 
- என்ற எண்ணம் இப்போதும் நிறைவேறவில்லை...

அந்த நாளை அவளே குறித்துக் கொடுப்பாள்..

ஐயனிடமும் அம்பிகையிடமும் விடைபெற்றுக் கொண்டோம்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அழகிய தரிசனக் காட்சிகள் எமக்கும் கிட்டியது வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. அம்மனை தரிசிக்க 50, 100 கொடுத்தாலும் கால் கடுக்க காத்து நிறக வேண்டும். விடுமுறை நாட்கள், விஷேசநாட்களில் போகவே முடியாது கோவிலுக்கு . ஏகபட்ட கெடுபிடிகள்.

    மனதில் நினைத்து வீட்டிலிருந்து வணங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தை சில நேரம் நிணைக்க வைப்பாள். இரண்டு வாரங்களுக்கு முன் போனோம் கூட்டம் இல்லை பரவாயில்லை சீக்கிரம் தரிசனம் செய்து விடலாம் என்று நினைத்து 50 ரூபாய் டிக்கட் எடுத்து சென்றால் காலை அபிஷேகம், பூஜை , வரிசை நகரவே இல்லை பூஜை முடிய 1மணி நேரம் ஆனது. அப்புறம் தரிசனம் செய்தோம்.

    உள்ளூர் வாசிகளுக்கே எப்போது போனால் கூட்டம் இல்லாமல் இருக்கும் என்று தெரியவில்லை அப்படி இருக்கிறது சூழ்நிலை.

    அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி என்பது போல் அவள் மனது வைத்தால் பார்க்கலாம்.

    செருப்பு இலவசம் தான் ஏன் காசு வாங்கினார்கள் என்று தெரியவில்லை.
    மணக்க மணக்க புளியீதரை கிடைத்தது மகிழ்ச்சி.
    சாருக்கு புளியோதரை பிடிக்கும் அன்று பிரசாத கடையில் கேட்டால் 9 மணிக்கு மேல்தான் வரும் என்றார்கள்.சர்க்கரை பொங்கல் இருக்கு என்றார்.

    பதிலளிநீக்கு
  3. சில வருடங்களுக்கு முன் தெற்கு கோபுர வாசல் செல்லும் வழியில்தான் நாங்கள் குடி இருந்தோம்!

    பதிலளிநீக்கு
  4. மனிதர்களின் அதிகாரத்தில் சிக்கி பக்தர்களிடமிருந்து விலகி நிற்கிறார் கடவுள் மதுரையில்.

    பழைய காலம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு எளிதாக தரிசனம் செய்ய முடிந்தது அப்போதெல்லாம்...

    பதிலளிநீக்கு
  5. மேல ஆவணி மூல வீதியில் தான் பல வருடங்கள் இருந்தோம். அதன் பின்னரும் அதை ஒட்டிய வடக்குக் கிருஷ்ணன் கோயில் சந்தில் மேலாவணி மூலவீதி, வடக்காவணி மூலவீதி சேரும் முக்கில் குடி இருந்தோம். எப்போ நினைச்சாலும் கோயிலுக்குப் போயிருக்கோம். அதை நினைத்து மனம் ஏங்குவது தான் மிச்சம். இப்போ ஆயிரம் கெடுபிடி. இம்முறைப் பையர் வந்தப்போப் போனது. ஏப்ரல் மாதம்! தரிசனத்துக்கு அவ்வளவு கஷ்டப்படவில்லை. நாங்க காரில் சென்றதால் வடக்காவணி மூலவீதியில் முன்னே மார்க்கெட் இருந்த மைதானத்தில் காரை நிறுத்திச் செல்ல வேண்டும். வடக்கு வாசல் வழியாக உள்ளே விடவில்லை. நேரே ஆயிரக்கால் மண்டபம் போகுமே! கிழக்கு வாசல் வழியாகத் தான் சென்றோம். மனதை வேதனை அள்ளியது. என்றாலும் அம்பிகை இனிமையான தரிசனம் கொடுத்தாள். சொக்கநாதர் சந்நிதியில் தான் அர்ச்சனைத் தேங்காயை உடைக்காமல் அப்படியே திரும்பக் கொடுத்து விட்டார்கள்! :(

    பதிலளிநீக்கு
  6. மிக அழகிய தரிசனம்...

    போன வருடம் சென்ற போது கோபுர தரிசனத்தோடு வந்து விட்டோம்...

    பதிலளிநீக்கு
  7. சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் யானே. நல்ல தரிசனம்.

    'மீனலோசனி' - இந்தச் சொல், எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய,

    'மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே
    ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே' - தீனகருணாகரனே நடராஜா பாடலை நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
  8. மதுரை ஆஹா அப்படியே தரிசனம் செய்தது போன்று இருந்தது ஐஅயா/அண்ணா. அருமையான தரிசனம். இங்கும் வர்த்தகம் தொடங்கியிருப்பது வேதனைதான் என்றாலும் எண்ணெய்க்காப்பு வர்த்தகம் ஆகாமல் இருப்பது மனதிற்கு இதம்.

    இருவரின் கருத்தும்...

    துளசி: கோயில் பற்றி கண்டதும் அப்படியே பழைய நினைவுகள். என் கதையிலும் மதுரைதான் கதைக்களம்... கோயில் பொற்றாமரைக் குளம், விபூதிப் பிள்ளையார் அம்மன் என்று....இடம் பெற்றிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..