நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 27, 2018

நெல்லையில்.. 2

ஸ்ரீ கொடிமாடஸ்வாமியின் தரிசனத்தை அடுத்து
ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோயில்..

ஸ்ரீ காந்திமதி
ஸ்ரீ கொடிமாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களிடம்
விடைபெற்றுக் கொண்டு -

அப்படியே திரும்பி ஜங்ஷன் செல்லும் சாலையில்
இருந்த உணவகம் ஒன்றினுள் நுழைந்தோம்...

என்னென்ன இருக்கின்றன என்று கேட்டுக் கொண்டு
விருப்பமானதைச் சொன்னதும் - சில நிமிடங்களில்,

வட்டமான தட்டின் மேல்
வழுவழுப்பான தாள் ( Wax Paper).. அதன் மேல் இருந்தன -  இட்லிகள்...

கேட்டதற்கு - இதுதான் வழக்கம் என்று கறாராக சொல்லி விட்டார்கள்....

அப்போதைக்கும் இப்போதைக்கும் குரலில் வித்தியாசம் தெரிந்தது...

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சிலர் - சாப்பிட்டு முடித்ததும்
தட்டில் விரிக்கப்பட்டிருந்த தாளை எடுத்து அங்கிருந்த
பெரிய வாளியில் போட்டு விட்டு கை கழுவிக்கொண்டிருந்தனர்....

அதற்கு மேல் அங்கே சாப்பிட மனம் இல்லை...

ஒருவேளை -
உணவு அருந்தியபின் - அந்தத் தாள் நைந்து கிழிந்து
அதிலிருக்கும் மிச்சம் மீதி சட்னி சாம்பார் கீழே தரையில்
சிந்தி விட்டால் கழுவி விடச் சொன்னாலும் சொல்வார்கள்!...

நல்லவேளையாக மேஜையில் கூட ஏதும் சிந்தவில்லை...

புதிய GST வரி விதிப்புக்கு முன்னதாகவே கொள்ளையான விலை...

பணத்தைக் கொடுத்து விட்டு - 
தப்பித்தோம்.. பிழைத்தோம்!.. - என்று வெளியே வந்தோம்..


மீண்டும் பேருந்து நிலையம்.. 
நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்லும் பேருந்து காத்திருந்தது..

அடுத்த பத்து நிமிடங்களில் கோயில் வாசல்...


முன்பு ஒரு முறை சென்றிருக்கின்றேன்...
இருந்தாலும் மனைவி மகனுடன் இதுதான் முதல்முறை...


மண்டபத்தின் விதானத்து சிற்பங்கள்..
மதுரை மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபம் போல இங்கும் கடைகள்..

ஆனாலும், அந்த நெருக்கடியும் கூச்சலும் இங்கு இல்லை...

இருந்தாலும், கோயில் வாசலை அடைத்தாற்போல இரும்பு தடுப்புகள்...
ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள்..

பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின் அனுமதி....

காலை வேளையானதால் அதிக கூட்டமில்லை...


பளிச்.. என - தூய வெள்ளையில் பிரம்மாண்டமாக நந்தியம்பெருமான்...

திருவிடைமருதூர், கீழ்வேளூர் திருத்தலங்களிலும் இப்படித்தான்...

பெருமானை வணங்கி விட்டு நெல்லையப்பரை நோக்கின கண்கள்...

என்ன புண்ணியம் செய்தன மனமே!.. - என்றிருந்தது...

பார்க்கப் பார்க்க பரவசம்... 
பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றியது...

நாம் பார்த்துக் கொண்டிருப்பதை விட 
எம்பெருமான் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்!...
- என்ற எண்ணமே நெஞ்சில் இனித்தது...

மூலஸ்தானம் தரிசனம் செய்யும்போதே
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, ஸ்ரீ வைரவர் தரிசனம்...

அருகில் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ ஹரி பரந்தாமன்...

உள் திருச்சுற்றில் பிக்ஷாடனர் திருக்கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும்..

காணும் இடம் எல்லாம் கலைநயம் ததும்புகின்றது...

நீண்டு விரிந்த வெளித் திருச்சுற்று.... அழகழகான சந்நிதிகள்..

முருகப் பெருமானுக்காக தனிக் கோயிலே உள்ளது...



நெல்லையப்பர் திருக்கோயிலின் தெற்காக
கிழக்கு நோக்கிய வண்ணம் அன்னை காந்திமதியில் திருக்கோயில்...

இரண்டு திருக்கோயிலையும் இணைப்பது சங்கிலி மண்டபம்...
வழியெங்கும் பேரழகான சிற்பங்கள்...

கோயிலுக்குள் திருக்குளம்.. ஆனாலும் கலங்கலான நீருடன் இருந்தது..

இதோ அம்பிகையின் சந்நிதி...

எதற்காகவோ கட்டணம் வசூலிக்கின்றார்கள்...

அம்மனின் சந்நிதிக்குள் நுழைகின்றோம்..

மனம் நம்மிடையே இல்லை...

பச்சைப் பசுங்கிளியாகப் பறந்து
அம்பிகையின் கருவறைக்குள்
சுற்றி வருவதைப் போன்றதொரு உணர்வு...

அம்பிகையும் அழகான பச்சைப் பட்டுடன்
அலங்கார ஸ்வரூபிணியாக அருள் பொழிகின்றாள்...

சந்நிதி முழுதும் மங்கலக் குங்குமத்தின் நறுமணம்...

மன நிறைவும் மங்கலமும் அருள் பிரசாதங்களாகின..

திருக்கோயிலினுள் -ஆங்காங்கே
படமெடுப்பதற்கு தடை என்று சொல்கின்றார்கள்..

எங்கும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றதா.... கவனிக்கவில்லை...

ஆனாலும், தயக்கமாக இருந்தது... இருந்தாலும் விடவில்லை..

அங்கும் இங்குமாக எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்!...








திரும்பவும் திருச்சுற்றில் நடந்து
நந்தி மண்டபத்தினை அடைந்தோம்...

நேரமும் ஆகியிருந்தது.. ஜனங்களின் வருகையும் கூடியிருந்தது..

நந்தி மண்டபத்தின் முன்பாக நிறைய விளக்குகள்
ஜொலித்துக் கொண்டிருந்தன...

நந்தியம்பெருமானின் திருமேனி ஜகஜ்ஜோதியாக இருந்தது...

தவிரவும் அந்த மண்டபத் தூண்களில்
கலைநயம் மிக்க நடன மாதர்களின் சிலைகள் திகழ்ந்தன..

அருகிருந்த அலுவலகத்தில் சிலர் இருந்தார்கள்..

இங்கே படம் எடுத்துக் கொள்ளலாமா!.. -  பணிவுடன் கேட்டேன்....

படமா!... இங்கால...யா!...

ஒரு மாதிரியான ஏளனச் சிரிப்பு வெளிப்பட்டது - அவர்களிடமிருந்து...

அதெல்லாம் எடுக்கக் கூடாது!.. - மறுத்து விட்டார்கள்...


ஆயினும், திருவிழாக் காலங்களில்
திருக்கோயிலில் நடைபெறும் வைபவங்கள் -
ஐயனுக்கும் அம்பிகைக்கும் நிகழ்த்தப்படும்
அபிஷேகங்கள் உள்பட அனைத்தும்
படங்களாக  Fb ல் வெளிவருவது குறிப்பிடத்தக்கது...

ஸ்வாமி நெல்லையப்பர் (Fb)
அன்னை காந்திமதி (Fb)
தலைக்கு மேல் கைகூப்பி வணங்கியவாறு
கொடி மரத்தினருகில் வீழ்ந்து வணங்கி
அம்மையப்பனிடம் விடைபெற்றுக் கொண்டு
திருக்கோயிலில் இருந்து புறப்பட்டோம்...

அப்படியே அந்த வீதியில் காலார நடந்து அங்கேயொரு வணிக வளாகத்தின்
கீழ் தளத்தில் இருந்த உணவகத்தில் குளுகுளு... என, ஜிகர்தண்டா...

அங்கிருந்து புறப்பட்டு நெல்லை ஜங்ஷன்....



அங்கே விற்கப்பட்ட உணவு வகைகள்
காலையில் சாப்பிட்டதை விட நன்றாக இருந்தன...

ஆனால் -

காசு கொடுத்தால் தான் நல்ல தண்ணீர்!...
- என்ற நிலைக்கு நாடு ஆளாகி இருக்கும் சூழ்நிலையில்

பயணிகளின் மீது மிகுந்த கருணையுடன்
காசு போட்டால் இயங்கும் இயந்திரத்தினை
ரயில்வே நிர்வாகம் அமைத்திருந்தது...



மதியம் 2.30 மணியளவில் திருச்சி வரைக்கும் செல்லும்
Inter City Express   திருவனந்தபுரத்திலிருந்து வந்து நின்றது..

முன்பே பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கைகளில் பயணம் தொடர்ந்தது..

இரவு எட்டேகால் மணியளவில் திருச்சியை அடைய வேண்டும்..
ஆனால், அரைமணி நேர தாமதம்...

அங்கிருந்து 9.20 க்கு தஞ்சை பாசஞ்சர் வண்டியில்
எங்கள் பயணம் தொடர - இனிதே இல்லத்தை அடைந்தோம்...

இன்னும் எத்தனை எத்தனையோ 
காண வேண்டிய தலங்கள் நெல்லையில்!...

காலமும் சூழ்நிலையும் ஒத்துழைக்க வேண்டும்..

வாழ்க நலம்!...
*** 

13 கருத்துகள்:

  1. GST வரிவிதிப்புக்கும் முன்னதாகச் சென்ற உலாவா? தட்டில் மெழுகுத்தாள் வைத்து பரிமாறப்படுவதை யாரும் எதிர்க்காதது எப்படி? "அப்படித்தான்" என்ற அகம்பாவ பதில் நோகச் செய்யும்.

    பதிலளிநீக்கு
  2. நாம் பார்த்துக்கொண்டிருப்பதைவிட, பெருமான் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற உணர்வே... அட... இப்படி ஒரு சிந்தனை எல்லோருக்கும் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. // "இங்க படம் எடுக்கலாமா?" "இங்காலயா" என்கிற ஏளன பதில் //

    எதையும் கேட்காமல் செய்தால் ஒன்றும் கேட்க மாட்டார்கள். கேட்டால் நிறைய தடைகள் சொல்வார்கள். என் அலுவலகத்தில் என் நண்பர்களிடம் சொல்வதுண்டு.. நாளை லீவுஎடுக்கலாமா? என்று கேட்காதீர்கள். நிறைய ஆட்சேபனை சொல்வார்கள். லீவு லெட்டர் எழுதிக்கொண்டுபோய் நீட்டுங்கள். கையெழுத்துப் போட்டு சேர்த்து விடுவார்கள் என்பேன்!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் தளம் படித்து விட்டு செய்தித்தாளுக்குச் சென்றேன் - பாஸிட்டிவ் வேட்டைக்கு... அங்கு கண்ணில் பட்ட முதல் செய்தி...

    http://www.dinamalar.com/news_detail.asp?id=1967517

    பதிலளிநீக்கு
  5. உங்கள் மூலம் மீண்டும் நெல்லையப்பர் - காந்திமதி தரிசனம். நண்பர் இருவர் அங்கே இப்போதும் இருக்கிறார்கள் - தொடர்ந்து அழைப்பு விடுத்தாலும் செல்ல முடிவதில்லை. செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஜி முந்தைய பதிவையும் இப்போதுதான் படித்து கருத்திட்டு வருகிறேன்... தரிசனம் நலமுடன் அமைந்தமை கண்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான தரிசனம்...

    பதிலளிநீக்கு
  8. ஒரு முறை நாகர் கோவில் சென்றிருந்தபோது நண்பர் ஒருவர் நெல்லையப்பர் கோவிலுக்குக் கூட்டிச்சென்றார் அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த வற்றில் சிலவற்றை குறிப்பெடுத்துக் கொண்ட நினைவு எது என்பது நினைவில்லை குறிப்பும் கை வசமில்லை

    பதிலளிநீக்கு
  9. தாமிர பரணி ஆற்றைக் காணக் கொடுத்து வைக்க வில்லை நீங்கள் பார்த்தீர்களா

    பதிலளிநீக்கு
  10. அழகிய திருக்கோயில் .. படங்கள் மனதில் பக்தியை வர வைக்கிறது. அதிலும் அந்தக் கோயில் கற்கோயில்போல இருக்கு சிற்ப வேலைகள்.. பெயிண்ட் அடிக்காமல். கொழும்பில் இருக்கும் பிரசித்தி பெற்ற பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலும் இப்படித்தான் முழுக்க கற்கோயில் பெயிண்ட் அடிப்பதில்லை.

    தட்டில் பேப்பர் போட்டுக் கொடுப்பது.. தட்டுக் கழுவும் நேரத்தையும் செலவையும் மிச்சப் படுத்தவோ..

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ஐயா!

    கோவிற் சிற்பங்களையும் திருமூர்த்தங்களையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது.
    அழகென்றால் அத்தனை அழகு!
    நல்ல தரிசனம்!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  12. துளசி: எத்தனை வருடங்களாயிற்று நெல்லை கோயில் சென்று...அருமையான படங்கள். ஓ! இப்போது ஹோட்டலிலும் இப்படியான மெழுகு பேப்பர் வந்துவிட்டதா? இலையைத் தட்டில் போட்டுத்தானே தருவார்கள்...

    கீதா: கோயில் படங்கள் அருமை. ஒவ்வொரு த்டவை திருநெல்வேலி செல்லும் போதும் சென்றுவிடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் செல்லவில்லை. உங்கள் வர்ணனையும் அருமை அண்ணா. சிற்பங்கள் குறிப்பாக மண்டபத்து விதானத்துச் சிற்பங்கள் வெகு அழகு!!! நல்லதொரு தரிசனம்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..