நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 06, 2018

மாம்பழச் சாமியார் 2

மாம்பழ ஸ்வாமிகளின் புகழ் அந்த நாடு முழுதும் பரவி விட்டது..

பற்பல ஊர்களிலிருந்தும் ஸ்வாமிகளின் குடிலைத் தேடிவந்து அருளுரை பெற்றுச் சென்றனர்...

அன்றைய தினம் காலைப் பொழுது...


மாம்பழத்துடன் வரகரிசிக் கஞ்சியை ருசித்துக் கொண்டிருந்த வேளையில் வாசலில் ஏகத்துக்கும் ஆரவாரம்...

என்னென்று அறிவதற்கு வாசலுக்கு ஓடிய இளந்துறவி
மகிழ்ச்சியுடன் உள்ளே வந்தான்..

ஸ்வாமி.. தங்களை நாடி தலைமை அமைச்சரும் ஏனைய
அரசு அலுவலர்களும் வந்திருக்கின்றனர்..

அப்படியா!..இதோ வருகிறேன்.. - என்றபடி தள்ளாத வயதிலும் எழுந்து நடந்தார்..
குடிலின் வாசலுக்கு வந்து - வந்திருக்கும் அமைச்சர் பெருமக்களை இன்முகத்துடன் இருகரம் நீட்டி வரவேற்றார்..

நாடு வாழ்க..
நற்றமிழ் வாழ்க..
நாடு காக்கும் எங்கோன்
நலங் கொண்டு வாழ்க!..

அரசன் அவ்விடத்தில் இல்லாத போதும்
அரசனையும் நாட்டையும் மொழியையும் வாழ்த்தி சிறப்பித்தார்..

பெரியீர்.. தமக்கு வணக்கம்.. அரசனின் ஆணைப்படி தங்களைச் சிறப்பிப்பதற்கு அரச முத்திரையுடன் கொடியையும் தாங்கி வந்துள்ளோம்...

எனக்கு சிறப்பா.. அந்த அளவுக்கு தகுதி எனக்கிருக்கின்றதா!..

இமயம் தன் பெருமையைத் தானெடுத்துக் கூறுமா!..
அவையடக்கம் ஆன்றோர்க்கே உரியதன்றோ!.

ஆயினும், முற்றும் துறந்த முனிவனுக்கு முத்தாரமும் கடம்பும் எதற்கு?..

எல்லாம் மக்களுக்காகட்டும்.. இந்த மாஞ்சோலையும் பூஞ்சோலையும் கழனி வெளியும் காடு கரைகளும் ஏரியும் குளமும் என்றும் நிலைத்திருக்க ஆவன செய்யுங்கள்.. அதுவே மக்கட்பணி..

மக்களுக்குச் செய்யும் பணியே மகேசனுக்குச் செய்யும் பணி...

அங்ஙனமாகில் நாங்கள் கொண்டு வந்திருக்கும் இந்தப் பரிசுப் பொருட்களை என்ன செய்வது?..

இதோ நிற்கும் இந்த தம்பதியினர் தான் எனக்கு முதலில் உணவளித்தவர்கள்.. 
இங்கே கூடியிருக்கும் மக்கள் எல்லாம் என் மீது அன்பைப் பொழிந்தவர்கள்.. ஏழை எளியவர்களாகிய இந்த மக்களிடம் வழங்கி விடுங்கள்...
அரசனுக்கும் அவன் தேவியருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!...

என்ன இருந்தாலும் பெரியவர் பெரியவர் தான்!.. - ஊர்மக்கள் பேசிக் கொண்டனர்...

ஆண்டுகள் சில ஆயின...

ஸ்வாமிகளுடன் ஊர் மக்கள் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டார்கள்..

ஐயா.. கனி வகைகளில் உயர்ந்தது எது?...

சிறப்பித்துச் சொல்லப்பட்ட மூன்றிலும் முதலில் விளங்கும் மாங்கனி தான் உயர்ந்தது...


திருக்கயிலாய மலையில் ஈசனுக்கு நாரதர் சமர்ப்பித்த கனி மாங்கனிதான்..

நிறைந்த உயிர்ச்சத்துகளுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் நமக்கு வழங்குவது மாங்கனிதான்...

கனி மட்டுமல்லாது மா மரத்தின் பட்டையும் தளிர்களும் இலைகளும் பூக்களும் வடுவும் காய்களும் மனிதனுக்கு நன்மையளிக்கக் கூடியவை..

இன்றைய குருகுலம் எதிர்வரும் கால கட்டத்தில் கல்விச் சாலையாக மாறும்..
அந்தவேளையில் ஆசிரியர் மாணாக்கர்களுக்கு போதிக்கும் இடம் மரத்தடியாகவே இருக்கும்...

அப்படியான மரத்தின் நிழல் எதுவாக இருக்கும்?..

மா மரத்தின் நிழலாகவே இருக்கும்!...

ஆல்,  அரசு, வேம்பு இவையெல்லாம் பயனற்றவைகளா ஸ்வாமி?..
இதெல்லாம் தானே சிறந்தது எனக் கூறுகின்றார்கள்!..

ஆல்,  அரசு, வேம்பு இவையெல்லாம் சிறந்தவை தான்..
வேம்பின் நிழல் நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம் இவற்றை வழங்க வல்லது..
அரசும் ஆலும் - எல்லாவற்றையும் உணர்ந்த நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் கைகூடிவரச் செய்பவை..
அதனால் தான் தவம் முனைவோர் அவற்றின் நிழலில் அமர்ந்தனர்..

ஆனால்,
மாமரத்தின் நிழல் மனதின் எண்ண அலைகளைக் குவித்து ஓரிடத்தில் நிலை நிறுத்த வல்லது...
மாமரத்தின் கீழிருந்து ஒருவன் ஒன்றைக் கற்கும்போது கற்றுக் கொள்ளும் விஷயம் அவன் நினைவை விட்டு நீங்குவதேயில்லை... அதன் காரணமாக அவன் மேலும் மேலும் கற்பதில் நாட்டம் கொள்கின்றான்...


எல்லாம் வல்ல ஈசன் எம்பெருமானுக்கு கந்த வேலன் குருவாக அமர்ந்து ப்ரணவ மந்திரத்தின் உட்பொருளை உணர்த்திய தலம் - திருவேரகம் எனப்படும் சுவாமிமலை...

அந்த திருத்தலம் மாமரங்களால் சூழப்பட்டிருந்தது என்பது அருணகிரியாரின் திருவாக்கு..

சூத மிக வளர் சோலை மருவு
சுவாமிமலை தனில் உறைவோனே!..  - என்று போற்றுகின்றார்...

சூதம் என்றால் மாமரம்...

இன்னொரு திருத்தலம்.. மந்திரபுரி என்று சொல்லப்படுவது..
திரு உசாத்தானம் என்பது ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு
கோயிலூர் என்று பின்னாளில் வழங்கப்படும்...

ஸ்ரீ மந்த்ரபுரீஸ்வரர்
மந்திரபுரீஸ்வர் என்பது ஈசனின் திருப்பெயர்...
அம்பாள் பெரியநாயகி என விளங்குகின்றாள்..

மந்திரபுரி என்ற தலத்திற்கு என்ன விசேஷம் ஸ்வாமி!?..

இந்த திருத்தலத்திற்கு சூத வனம் அதாவது மாங்காடு என்றும் பெயர்..
ஸ்ரீராமபிரான் தேவியைப் பிரிந்த பின்னர் தம்பியுடன் தெற்கே வரும்போது
மாஞ்சோலையின் நடுவே சிவபூஜை விழைகின்றார்..

அப்போது சிவபெருமான் ஸ்ரீராமபிரானுக்கு மந்த்ரோபதேசம் வழங்குகின்றார்...

இங்கேயும் உபதேசம் மா மரத்தின் நிழலில் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...

இத்திருத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் விளங்குகின்றது...

ஸ்வாமி.. வேறெங்கெல்லாம் மாமரம் தலவிருட்சம் என்பதையும் கூறுதல் வேண்டும்...

அம்பிகை காமாட்சியாக பூஜை செய்த காஞ்சிபுரம், மயிலாக பூஜை செய்த மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,  அவிநாசி, திருப்பாதாளேஸ்வரம் எனப்படும் பாமணி, திருமாந்துறை - இங்கெல்லாம் தலவிருட்சம் மா மரம் தான்...

மந்தமார் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்திநீர் வருகாவிரி வடகரை மாந்துறை..

- என்று திருமாந்துறையில் ஞானசம்பந்தப்பெருமான் பாடியருள்கின்றார்..

ஆனி மாதப் பௌர்ணமி அன்று ஈசனுக்கு மாம்பழச் சாற்றினால் அபிஷேகம் செய்வது மிகுந்த நன்மையைத் தரும்...

வங்கக் கடலின் ஓரமாக விளங்கும் கற்பகநாதர் குளம் எனும் திருக்கோயிலில் விநாயகப் பெருமான் திருக்கரத்தில் மாங்கனியுடன் திகழ்வது சிறப்பு..

ஆனால்...

கூடியிருந்தவர்கள் திகைத்தனர்...

ஸ்வாமி ஜி அடுத்து என்ன சொல்லப் போகின்றாரோ என்று!..

இத்தனை சிறப்புகளையும் நன்மைகளையும் உடைய மாமரம் தமிழர்க்கே உரியது...

மாவூர், மாங்குடி, மாஞ்சோலை, மாந்துறை, மாங்காடு - என்றெல்லாம்
சிறப்பித்த தமிழர்களே இச்சிறப்புகள் அனைத்தையும் மறப்பார்கள்..

இதன் நிழலில் படுத்து உறங்கிய மக்களே இதனை அழிப்பார்கள்...

ஈவு இரக்கமில்லாமல் நாகரிக வளர்ச்சி என்ற பேரில் நிழல் கொடுத்த மரங்களையே கண்ட துண்டமாக வெட்டிப் போடுவார்கள்...


பசுமையான மா இலைகளை வீட்டின் நிலைகளில் கட்டி வைத்த தமிழர்கள் 

விஷத் தன்மையுடைய ஒரு வகை நெகிழியை மா இலை போல கட்டி வைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள்...

மாஞ்சோலைக்கு உரிமையுடைய விவசாயிகளே விளைச்சல் பெருக வேண்டும் என்பதற்காக - இளம் பூக்களில் ரசாயனம் என்னும் விஷத்தைத் தெளித்து வைப்பார்கள்..


விற்பனை செய்பவர்களோ நச்சுத் தன்மையுடைய கற்களைக் கொண்டு மாங்காய்களைப் பழுக்கச் செய்வார்கள்...


இன்னும் ஒருபடி மேலே போய் வருடம் முழுதும் மாம்பழம் என்ற மாயையான வார்த்தைகளால் சிறு பிள்ளைகளை மயக்கி இரசாயனக் கலவையில் உருவாக்கப்பட்ட கரைசலை மாம்பழச் சாறு என்று குடிக்கச் செய்வார்கள்....


உண்ணும் உணவு, குடிக்கும் நீர், உடுக்கும் உடை, சுவாசிக்கும் காற்று 

- என, எல்லாமே மனிதனுக்குப் பகையாகி நிற்கும்.. 

ஞானிகள் சொல்லியவை எல்லாம் மக்களுக்கு மறந்தே போகும்..


மா மர நிழலில் இருந்து சிறார்கள் கல்வி கற்க மாட்டார்கள்...


கல்விக் கூடங்களில் மண்ணும் கல்லுமே நிழலாகும்.. 

அந்த நிழலில் கற்ற கல்வி - மனிதனை அந்த நிலைக்கே இட்டுச் செல்லும்..

ஆக்கம் தரும் கலைகளுக்கு இருப்பிடமான கல்விச் சாலை

ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் பிறப்பிடமாகத் திகழும்

அழிவுக்கான வழியும் ஆங்கே ஆரவாரத்துடன் திறந்து வைக்கப்படும்...


கல்வி கற்றதாகச் சொல்லிக் கொள்பவனே 

கதிகலங்கி கயமை எனும் கழிவு நீரில் வீழ்ந்து அழிவான்...

அந்த அளவில் ஸ்வாமிஜி ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்தார்...

ஸ்வாமிகளின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தனர் மக்கள்...

எதிர்காலம் எப்படியாகுமோ?.. - என்ற கவலை அவர்களை வாட்டியது...

ஸ்வாமிகளின் தியானத்தைக் கலைக்க விரும்பாமல்
அங்கிருந்து விடைபெற்றனர்...

ஸ்வாமிகள் அருளிய உபதேசங்களைக் கொண்டு
நல்வழியில் நடந்து நாட்டைக் காக்கவேண்டும் என முனைந்தனர்..

ஆனால் காலம் போன வேகத்தில் எல்லா உறுதிகளும் காற்றோடு கலந்தன...

அடுத்தடுத்து வந்த தலைமுறையினர் விடியலைத் தேடினர்...

ஆயினும் -
எப்போது விடியும் என்பது தான் 
தெரியவில்லை...

வாழ்க வையகம்.. 
*** 

28 கருத்துகள்:

  1. அதிரா செய்த வரகரசிக் கஞ்சியையா மாம்பழச் சாமியார் சாப்பிடுகிறார்!! ஆஹா!!! சரி சரி எனக்கு வம்பு எதற்கு...அதிரடி வருவதற்குள் நான் ஓடிவிடுவேன் சாமியாரிடம் அருள் பெற்றுக் கொண்டு...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ஸ்ஸ்ஸ் கீதா:)) ஸ்வாமியாரை அப்பூடி எல்லாம் ஜொள்ளக்கூடா:)) அவர் இந்தப் பகுதியிலயும் நல்லவராகவே இருந்து போதிக்கிறார்ர்:))..

      நீக்கு
    2. >>> அதிரா செய்த வரகரிசிக் கஞ்சியையா சாமியார் சாப்பிடுகிறார்!..<<<

      ஆகா... அதிரா செய்த வரகரிசிக் கஞ்சிக்கு அவ்வளவு மகத்துவம்..
      இனிமேலாவது மிய்யாவ்வை கஞ்சி காய்ச்சாமல் விட்டு விடுங்கள்..

      நீக்கு
  2. ஆஹா! அண்ணா மாமரத்தின் கீழ் அமர்ந்து கற்றால் மனம் குவிந்து கற்றல் நிலைத்து நிற்கும் என்பதை இப்போதுதான் அறிகிறோம். அருமை! ஆல், அரசு தான் சாமியார்களின் இடம் என்று நினைத்திருந்ததுடன் இப்போது கூடுதல் தகவலும் சேர்ந்து கொண்டது.
    தலவிருஷமாகவும் அமைந்திருக்கும் சிறப்பையும் அறிகிறோம். அதுவும் சுவாமி மலை சூழ்ந்திருந்தது என்பதை அறிந்த போது அப்போது எப்படி இருந்திருக்கும்!! பறவைகள் மாங்கனிகளைச் சுவைக்கவே நிறைய வந்திருக்குமே!!! சூதம் என்றால் மா என்பது உட்பட, திருவேரகம், திரு உதாத்தானம் என்பதும் தகவல்கள்.

    மாம்பழச்சாமியாரின் வாக்குகள் அனைத்தும் இன்று நடந்து கொண்டிருக்கிறதே! இந்த மாங்கனிக்காகத்தானே அண்ணனும், தம்பியும் போட்டி போட்டு, அண்னனும் தம்பியும் தத்துவத்தை உணர்த்திட... தம்பி
    (ஞானப்) பழம் நீயப்பா என்ற பெயர் பெற்றிட...மலையில் குடி கொண்டு பழநி உருவாகிட....மாம்பழத்தின் சிறப்பே சிறப்புதான்...மாம்பழச்சாமியார் மூலம் மா பற்றி பல அரிய தகவல்களை அறிய முடிந்தது துரை அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாங்கனியின் பெருமையை விளக்குதற்கு இன்னும் கூட பதிவுகள் இடலாம் போலிருக்கின்றது..

      ஆனாலும் இப்போதைக்கு இது போதும் என நினைக்கின்றேன்..

      அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மாம்பழத்தின் பலன்களை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.

    சாமியார் சொன்னதுதான் இன்று நிகழ்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மாமரம் மட்டுமல்ல, பொதுவாக எந்த மரத்துக்குமே ஏதேனும் ஒரு பயன் உண்டு. என்றாலும் நம் மக்கள் அதை முழுமையாக உணரவில்லை! எனக்குத் தெரிந்து நாங்கள் முதல் முதல் அம்பத்தூரில் குடி இருந்த வீட்டில் 18 மாமரங்கள் இருந்தன. ஒரு மாங்காய் சுமார் 2 கிலோவுக்குக் குறையாது. அபூர்வ வகை மாமரங்கள்! இப்போது நினைவிற்காக ஒரே ஒரு மரத்தை மட்டும் வைத்திருக்கின்றனர். மற்ற இடங்கள் கான்க்ரீட் காடாகி விட்டன! :( என்ன சொல்வது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்...
      ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கின்றன...

      நாம் தான் அனைத்தையும் மறந்து விட்டோம்...

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சாமியார் சொல்வதுதான் இன்றைய நிலை.
    மாமரத்தின் சிறப்புக்களை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  6. வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.

    படித்த செய்தி.

    கும்பத்திற்கு மாவிலை வைத்து அந்த தண்ணீரை வீடு முழுவதும், கோவில் முழுவதும் தெளிப்பது கிருமிநாசினி என்பதால் தான்.

    சாமியார் சொல்லும் அனைத்து விஷ்யங்களும் அருமை.
    மகன் சிறுவயதில் படித்த பள்ளிக்கூடத்தில் நிறைய மாமரம் உண்டு.
    அதன் அடியில் விளையாட விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழாக்காலங்களில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் தோரணங்களின் அர்த்தம் இது தான்..

      நான் பள்ளியில் படித்தபோதும் மரத்தடி வகுப்பு என்றால் மா மரத்தின் நிழல் தான்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  7. மா மரத்தைப் பற்றிய இடுகை அருமை. காலம் மாற மாற எல்லாமே மாறுகிறது. கோலம், மாவிலைத் தோரணம், பிரம்பு நாற்காலிக்குப் பதில் பிளாஸ்டிக் சேர் என்று என்ன என்னவோ மாற்றங்கள்.

    எங்கள் வீட்டில், 5 அருமையான மாமரங்களை வெட்டி, தம்பி பெரிய வீடு கட்டினான். எனக்கு வருத்தம்தான்.

    நமக்குக் கனி கொடுத்த மரத்தை வெட்டுவது மிகுந்த வேதனைக்குரியது. நீங்கள் போட்டிருப்பதுபோல் மஞ்சள் நிறக் கனிகளோடு மரத்தில் நான் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...

      தங்களது மாங்காய் ஊறுகாய் பதிவின் விளைவு தான் இந்த நான்கு பதிவுகளும்..

      எனது நினைவலைகளைத் தூண்டி விட்ட தங்களுக்கு நன்றி..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  8. 'மா'வின் சிறப்புகளை சாமியார் மூலமாக எடுத்தியம்பியது சிறப்பு. இன்றைய நிலையை அந்தக் காலத்தில் சாமியார் சொன்னது சரி, இன்றைய நாளையின் நிலைமை பற்றி சாமியார் என்ன சொல்வார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      இன்றைய நாளின் நிலைமை இனிமேல் புதிதாக விடிந்தால் தான் தெரியும்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் ஐயா!

    மாம்பழச் சாமியார் காலத்தின் கோலத்தினை மிக அழகாகக் கூறியுள்ளார்.

    மாங்கனி, மரம் இவற்றின் சிறப்புகள் அறிந்திருந்தாலும் மாமர நிழலின் அருமை பெருமைகளை இங்குதான் அறிகின்றேன். மிக அருமை!
    ஹோமத்திற்கு மாஞ்சமித்து பயன் படுத்துவார்களே அதற்குரிய பலன்கள் என்னவாயிருக்கும் ஐயா?

    மாவுடன் பெருமை சேர்ந்த வழிபாட்டுத்தலங்களும் அதன் பெருமைகளையும் அறிந்துகொண்டேன்.

    மிக அருமையான தகவல்கள்!
    நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமரத்தின் நிழல் மகத்துவம் மிக்கது..

      ஹோமத்திற்கு ஆகும் மாஞ் சுள்ளிக்கும் இதே நோக்கம் தான் காற்றைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி...

      பூஜா விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு இல்லத்தில் ஹோமங்கள் செய்யப்படும் போது சர்வ தேவதா ப்ரீதியும் சர்வ மங்கலமும் உண்டாகும் என்பது ஐதீகம்..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. மாமரத்துக் கீழிருந்து என்ன செஞ்சாலும் மறக்காதோ? அதனால்தான் போலும் எனக்கு சின்ன வயசு நினைவுகள் பசுமையா இருக்கு... எங்கள் வீட்டைச் சுற்றி மாமரங்கள்.. பென்னாம் பெரிசு.. சூரியன் முற்றத்தில் படாது...

    பதிலளிநீக்கு
  11. >>> மா மரத்தின் கீழிருந்து என்ன செஞ்சாலும் மறக்காதோ?...<<<

    அதிலென்ன சந்தேகம்!..

    மாமரத்தைப் பற்றி இன்னொரு பதிவும் இருக்கிறது..
    அதில் வேறொரு சுவையான தகவலும் சொல்லப்படும்..

    அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  12. எங்கள் வீட்டிலும் ஒரு மாமரம் இருக்கிறது மாம்பழசீசனில் நாங்கள் வேறுமாம்பழங்கள் வாங்குவதில்லை சாப்பிடுவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      வீட்டில் பழுத்த பழங்களைச் சாப்பிடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. ஒரு பக்கம் மரம் நடுங்கள் என்று சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் வைத்த மரங்களை எல்லாம், இடைஞ்சல் என்று சொல்லி வெட்டிக் கொண்டே போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      அவர்களுக்கும் வேலை வேண்டும் என நினைக்கின்றார்கள் போலிருக்கின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  14. நெய்வேலியில் இருந்த போது எங்கள் வீட்டில் ஆறு மாமரங்கள். ஒன்று தவிர மற்ற ஐந்திலும் சுவையான மாம்பழங்கள். அனைத்தும் வருபவர்களுக்கெல்லாம் கொடுப்போம். இன்று நாங்களே விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை.....

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      கூடை கூடையாய் மாம்பழங்களை வாங்கி வருவார் என் தந்தை..
      குடியிருந்த காலனியில் மாங்கன்று வைத்து வளர்த்து மாம்பழம் தின்றது தனிக்கதை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..