நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 21, 2017

புண்ணியத் தலம்

புனித பாரதத்தில் அங்கிங்கெணாதபடிக்கு ஊர்கள்..

அத்தனைக்குள்ளும் ஏதாவதொரு கோயில்..

அதனுடன் பின்னிப் பிணைந்து -
காலகாலமாகத் தொடர்ந்து வரும் ஒரு கதை...

அதனை ஒட்டி மக்களின் நம்பிக்கை - இது ஒரு புண்ணியத் தலம்!..

அந்த வகையில் பட்டியலிட முடியாதபடிக்கு புண்ணியத் தலங்கள்!..

அவற்றுடன் மிகச் சமீபத்தில் மேலும் ஒன்று சேர்ந்து கொண்டது..

அது..

மெரினா!.. 

தமிழுணர்வு ஊற்றெடுத்து ஒன்றுபட்டு நின்ற திருத்தலம்!..

உலகின் இரண்டாவதான சென்னை மெரினா கடற்கரை!..

இன்று உணர்வுபூர்வமாக முதலிடத்தில் நிற்கின்றது..


அங்கே ஆயிரங்களாக லட்சங்களாகத் திரண்டிருந்த மக்களுள் -

எத்தனை பேர் அலங்கா நல்லூரைப் பார்த்திருப்பார்கள்?..

எத்தனை பேர் அடங்காத காளையைக் கண்டு திகைத்திருப்பார்கள்?..

எத்தனை பேர் வாடி வாசலைக் கண்டு வணங்கியிருப்பார்கள்!..

அத்தனை பேரையும் ஒரே கூட்டுக்குள் கொண்டு வந்து
அடைத்து வைத்ததொரு சூழ்நிலை..

அதற்கு நாம் மிகவும் நன்றி சொல்லத்தான் வேண்டும்!..

கடந்த நான்கு நாட்களாகவே மனதிற்குள் போராட்டம்...

நம்மால் கலந்து கொள்ளமுடியவில்லையே!.. - என்று..

வெறும் எழுத்துக்கள் மட்டும் தானா!..
செயலாக்கம் என்று எதுவும் கூடவில்லையே!..

என்னடா.. தலையெழுத்து இது!..

தோளோடு தோளாகத் தொட்டுக் கிடப்பவர்களின்
பாதாரவிந்தங்களைக் கண்ணாரக் காண முடியாமல்!..

உளைச்சல்.. மன உளைச்சல்..

நேற்று முன் தினம் விடியற்காலை..
வீட்டிலுள்ள தொலைபேசி எனது அழைப்பினால் சிணுங்கியது..

எல்லாம் பேசி விட்டு.. தம்பி.. எங்கே!.. - என்றேன்..

சென்னைக்குப் போயிருக்கின்றான்!..

சென்னைக்கா!.. எதற்கு?..

வேலை விஷயமாக!.. - எதிர்முனையில் பதில்...

ஒன்றும் சொல்லவில்லை..

மதியத்திற்குப் பிறகு சென்னையிலிருக்கும் என் மகனுடன் தொடர்பு கொண்டேன்..

வேலை தேடிச் சென்ற நிறுவனத்தைப் பற்றிக் கேட்டு விட்டு -

மெரினாவுக்குப் போய் விட்டு வா!.. - என்றேன்..

மெரினாவுக்குத் தான் கிளம்பிக் கொண்டிருக்கின்றேன்!.. -  என்றான் என் மகன்...

கேட்டபோதே மனம் சில்லென்று ஆனது..

தற்போது மூன்றாவது நாளாக அங்கிருக்கின்றான் என் மகன்..

தமிழுணர்வு பொங்கித் ததும்பும் கடற்கரை மணலில்
பாரம்பர்யத்திற்கு ஆதரவாக தனது குரலையும்
எனது உயிரின் உயிர் பதிவு செய்து கொண்டிருக்கின்றது...

அங்கிருந்தபடி எனது மகன் அனுப்பிய படங்கள் சில!..






அங்கே கொடுக்கப்பட்ட கோயில்பட்டி கடலைமிட்டாய் பாக்கெட்..
மற்றும் சுவையான உணவு.. எல்லாமும் படங்களாக கண்முன்!..

பத்து நிமிட இடைவெளியில் தங்கு தடையில்லாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்களாம்!..

கேட்கும்போதே நெஞ்சம் நெகிழ்ந்தது...

என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே!.. என்ற ஏக்கமும் தீர்ந்தது..

திரு ராகவா லாரன்ஸ்..
எல்லாவற்றுக்கும் மேலாக - 
உடல் நலம் இல்லாத நிலையிலும் போராட்ட களத்தில் முன்நின்ற -
திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் பெண்களுக்கான ஒதுங்குமிடத்தை வழங்கியிருக்கின்றார்..

மனித நேயமிக்க அவரை மனதார வாழ்த்துகின்றது - தமிழினம்.. 

திரு. ராகவா லாரன்ஸ் வழங்கிய கேரவன்
கீழுள்ள படங்கள் எல்லாம் Fb ல் கிடைத்தவை...


தஞ்சையில் திரண்டிருக்கும் இளைஞர்கள்
தஞ்சை


தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக...
சென்னை
மதுரை
மதுரை
எதையும் மாற்ற வல்லது காலம்!.. என்பார்கள்..

அப்படித்தான் ஆகிவிட்டது..

மாபெரும் எழுச்சி...

விவரிக்க முடியாதபடிக்கான வல்லமை வந்துற்றது..

இந்த வல்லமையைக் கைநழுவ விடக்கூடாது..

அடுத்து அடுத்து சாதிக்க வேண்டியவை - என நிறைய!..

முன்னேறுவோம்.. முன்னேறுவோம்..
தடைகளைத் தகர்த்து முன்னேறுவோம்!..


நிலைமை இவ்வாறிருக்க -

எவ்வளவோ பிரச்னைகள் முன்னிருக்க
இதற்கு ஏன் இத்தனை - போராட்டம்?.. - என்கின்றனர் ஒரு சிலர்..

காவிரியின் பிரச்னை என்றாவது ஒருநாள் தீர்ந்து விடக்கூடும்..
சக மனிதருக்கு நல்ல குணங்கள் அமைந்து விட்டால் ஒழுங்கீனங்கள் தொலைந்து விடும்..

ஆனால்,

காளைகளையும் பசுக்களையும் எருமைகளையும்
அழிவின் விளிம்புக்குத் தள்ளிவிட்டால் - அவற்றை
என்றைக்குமே நம்மால் மீட்டெடுக்க இயலாமல் போய்விடும்..

அந்த உணர்வு தான் தற்போது வெடித்துக் கிளம்பியிருக்கின்றது..

இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி இனியும் தொடரும்..

அதனை அடக்குதற்கு முற்பட்டால் அவர்களுக்கே அழிவு நிச்சயம்!..


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே..
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்!..
- மகாகவி பாரதியார் -

வாழ்க தமிழினம்..
வளர்க தமிழினம்!..
***

9 கருத்துகள்:

  1. ஒவ்வொரு படத்தை பார்க்கும் போதும் அடங்காத காளை போல உற்சாகம் பீறிட்டு எழுகிறது ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. மெய் சிலிர்க்கிறது ஐயா...நம் மக்களின் மாண்பை காணும் போது...

    காளைக்காக சீறும் தங்கள் மகனுக்கும்... வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. முடிந்த பிறகும் தொடர்கிறது. இந்தக் கட்டுப்பாடான போராட்டம் சிறு குறைகளையும் களைந்து வேறு காரணங்களுக்கும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  4. இளைஞர்களின் தன்னெழுச்சியான இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறது தமிழ்நாடு. அரசியல் வாதிகளின்- தீவிரவாதிகளின் தூண்டுதல்களுக்கு பலியாகிவிடாமல் உடனடியாக இப்போராட்டம் நிறுத்தப்படவேண்டும். மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பவேண்டும். இல்லையெனில் இப்போராட்டத்தை ஓபிஎஸ் சுக்கு எதிரான போராட்டமாகத் திசைமாற்றிவிட்டு இன்னொருவரை முதல்வராக்கிவிடவும் முயற்சிக்கக்கூடும்...

    பதிலளிநீக்கு
  5. வரலாற்றுச் சிறப்பு மிக்க எழுச்சிப் போராட்டத்தில் உங்கள் மகனும் பங்கு கொண்டமை மகிழ்வளிக்கிறது. அவரிடமிருக்கும் சமூக சிந்தனைக்கு ஜே! நல்லவிதமாக ஊருக்குத் திரும்பிவிட்டாரா? போராட்டத்தின் முடிவு மனதைக் கனக்கச் செய்கின்றது. வன்முறை ஏதுமின்றி அறவழியில் போராடிய மாணவர்களைத் தடியடி நடத்திக் கலைத்த கொடுமையை வரலாறு மன்னிக்காது! புகைப்படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி துரை சார்!

    பதிலளிநீக்கு
  6. கண்களில் நீர் நிறைந்துவிட்டது!! ஐயா. மெய் சிலிர்த்து! தங்கள் உயிரின் உயிரும் அங்கு கலந்து கொண்டமைக்குப் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! நலமுடன் இருக்கிறார் தானே! ஏனென்றால் போராட்டத்தின் இறுதி கணங்கள் மனதைக் கனக்க வைத்ததே. உங்களுக்கும் அங்கு கனத்திருக்கும்! புகைப்படங்களைக் காணும் போது மெய் சிலிர்த்துக் கொண்டே இருக்கிறது ஐயா. வேறு பல காரணங்களுக்கும் மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஏன் நாமும் நமது அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சி செய்யலாம்! வரலாற்று நிகழ்வுதான் இது!!

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..