நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 13, 2017

மார்கழிப் பூக்கள் 29

தமிழமுதம்

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை..(411)
***
சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- தாளாண்மை - 
ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு..(196)  
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 29


சிற்றம்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேள்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!..

திருப்பாடல் - 30

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ வீர நரசிங்கப் பெருமாள் - தஞ்சை
பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடி மேலன்பாய் துணிந்தேன்
புரிந்தேத்தி உன்னைப் புகலிடம் பார்த்தாங்கே
இருந்தேத்தி வாழும் இது..(2246)


சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் வாழி!.. 

திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தருளி தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..

ஆண்டாள் திருவடிகள் போற்றி..
ஆழ்வார் தம் திருவடிகள் போற்றி!..

ஆருயிர்க் குழாமும் போற்றி..
அரங்கன் தன் திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
சிற்றுயிர்கள் வழிபட்ட திருத்தலங்கள்

குயில் வழிபட்ட
திருத்தலம்

திருக்கோழம்பம்


இறைவன் - ஸ்ரீ கோகிலேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்


அமரலோகத்தின் உப்பரிகையில் நின்றபடி
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த
மேகங்களை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தான் தேவேந்திரன்..

அன்றைய பொழுது நல்லபடியாகச்
செல்வதாகவே தோன்றியது - அவனுக்கு...

அந்த வேளையில் மேகக் கூட்டங்களின்
ஊடாக வித்யாதரன் ஒருவன் தென்பட்டான்..

உண்மையில் அவனுக்குத் தான்
நேரம் சரியாக இல்லை..

தன்னைக் கண்டதும் வித்யாதரன்
வணங்கி வந்து நிற்பான் -  என்று இறுமாந்திருந்த
இந்திரன் அதிர்ந்து போனான்...

வித்யாதரன் இந்திரனைக் கண்டுகொள்ளவேயில்லை..

நீ யாராக இருந்தால் எனக்கென்ன?.. என்ற மனோபாவம்
அவனுக்கு!.. -  என்று எண்ணிய இந்திரன்
வித்யாதரனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தான்...

என்னை நீ கண்டும் காணாமல் சென்றது எதற்கு?..
இந்திரனிடமிருந்து ஆத்திரத்துடன் வினா பிறந்தது..

நீ என்னைக் கண்டீர் அல்லவா!..
அது போதாதா!..
வித்யாதரனிடமிருந்து பதில் வந்தது...

நெஞ்சழுத்தம் உனக்கு!...

தேவேந்திரனாகிய தாங்கள்
மேகக்கூட்டத்தின் ஊடாக தேவகன்னியருடன்
விளையாடுவதாக நினைத்து விட்டேன்!..

மேகத்துடன் நின்றதல்லால்
மோகத்துடன் நிற்கவில்லை!..

மனதில் தோன்றியதைச் சொன்னேன்!..
தங்களின் இயல்பு அவ்வாறாயிற்றே!..

நல்ல பொழுதென்று நினைத்திருந்தேன்..
அவ்வாறு அல்ல என்று நிரூபித்து விட்டது உன் பேச்சு!..
விபரீதத்தை விளைத்து விட்டாய் வித்யாதரா!..

அதன் விளைவு என்னவென்று தெரியுமா?..
பொறுப்பற்ற உனது பேச்சினால்
வெறுப்புற்றது என் மனம்!..

எல்லாருக்கும் விருப்புற்றது குயில்..
ஆனால், அதுவோ பொறுப்பற்றது..
நீ அதுவாகக் கடவாய்!..
அங்குமிங்கும் அலைந்து திரிவாய்!..

அதிர்ந்து நின்றான் வித்யாதரன்..

அச்சமயத்தில் அவ்வழியாக வந்த தவ முனிவர்கள்
வித்யாதரனை ஆறுதல்படுத்தினர்..

அஞ்ச வேண்டாம்.. காவிரிக்குத் தென்கரையில்
அம்பாள் பசு வடிவங்கொண்டு வழிபட்ட திருத்தலம் ஒன்றுண்டு..
அங்கே சென்று சிவ வழிபாடு செய்வாக..
அனைத்தும் நலமாகும்!..

வித்யாதரன் மனம் கலங்கினான்..
ஆருயிர் காதலிக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை..

சிவனே என்று சென்று கொண்டிருந்த என்னை
வம்புக்கிழுத்து சாபங்கொடுத்தனை.. 
மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி..

ஆனால், தேவேந்திரா!.. 
நான் சிவபூஜை செய்த தலத்திற்கு நீயும் வந்து
கும்பிட்டு எழுந்து குறையிரந்து நிற்பாயாக!..
நினைவில் வைத்துக்கொள்!..

வித்யாதரன் குயிலாகிப் பறந்து விட்டான்..
***

மையான கண்டனை மான்மறி ஏந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
செய்யானைத் தேனெய் பாலுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே!..(2/13)
- ஞானசம்பந்தர் -
***
குயிலாக மாறிய வித்யாதரனின் வழிபாட்டினால்
குயிலேஸ்வரர் என்றும் கோகிலேஸ்வரர் என்றும்
எம்பெருமானுக்குத் திருப்பெயர் வழங்கலாயிற்று....

அம்பாள் பசுவாகி வழிபட்ட திருத்தலங்களுள்
திருக்கோழம்பமும் ஒன்று..

சிவலிங்கத்தின் மேல்
பசுவின் குளம்பு தெரிவதாகச் சொல்வர்...

பின்னாளில்,
அகலிகையின் பாவத்தைக் கொட்டிக் கொண்ட இந்திரன்
கௌதமரின் சாபத்தினால் காணச் சகிக்காத கோலத்துடன்
இத்தலத்திற்கு வந்து கண்ணீர் விட்டுக் கதறியதாக தலபுராணம்..



செம்பியன் மாதேவியார் எடுப்பித்த திருக்கோயில்..
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
எத்தனை எத்தனை கோலாகலமாக
இருந்திருக்கும் - இந்தக் கோயில்!..

ஆனால் - இன்றைக்கு இங்கே
ஒரு கால பூஜை மட்டுமே நிகழ்வதாகத்
தெரிகின்றது..

கோழம்பம் எனும் இத்தலம் - இன்றைய நாளில்
குழம்பியம் என்று குழம்பிப் போயிற்று..

கொளம்பியம் என்றே சொல்கின்றார்கள்..


திருக்கோழம்பம் கோயில் குறித்த படங்களை 
வழங்கியவர் திரு. சிவமதி..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

கும்பகோணம் காரைக்கால் வழித்தடத்தில் S. புதூர் எனும் 
ஊரிலிருந்து வடக்காக 2 கி.மீ., தொலைவிலுள்ளது..

- திருப்பதிகம் அருளியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்..

ஸ்ரீ திருநாவுக்கரசர் 
அருளிய தேவாரம் 

சமர சூரபன் மாவைத் தடிந்த வேற்
குமரன் தாதைநற் கோழம்ப மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே!..(5/64)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை

ஸ்ரீ வீதி விடங்கர் - அல்லியங்கோதை
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவ பெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே!..
***

தேவி தரிசனம்
- தஞ்சாவூர் -

ஸ்ரீ மகமாயி - தஞ்சை
ஸ்ரீ வராஹி - தஞ்சை
ஸ்ரீ பிரஹந்நாயகி - தஞ்சை
குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கை வல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!..(100)

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே!..
- அபிராமிபட்டர் -


மங்கலகரமான மார்கழிப் பூக்களைத் தொடர்ந்து
அனைவருக்கும்
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!.. 

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்!..
- சேக்கிழார் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. இந்த வித்தியாதரன் கதை இதுவரைக்கேட்டதில்லை. பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. மார்கழிப் பூக்களாய் மலரும் பதிவுகள் அருமை ஐயா....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..