நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 30, 2016

மார்கழிப் பூக்கள் 15

தமிழமுதம்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை..(1031) 
***
ஔவையார் அருளிய
நல்வழி

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு..
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 15


எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண் ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்


ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் - குணசீலம்..
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற் கரவு..(2134)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
வீரட்டானத் திருத்தலங்கள்

ஐந்தாவது திருத்தலம்
திருப்பறியலூர்



இறைவன் - ஸ்ரீ வீரட்டேஸ்வரர்
அம்பிகை - இளங்கொம்பனையாள், பாலாம்பிகை
தீர்த்தம் - சிவகங்கை தீர்த்தம்
தலவிருட்சம் - பலா

அங்கே தட்க்ஷ பிரஜாபதியின்
அரண்மனையில் ஏகத்துக்கும் ஆரவாரம்..

என்னவென்று விசாரித்தால்,

தேவாதிதேவர்கள் எல்லாரும் கூடி
திருமணம் பேச வந்திருக்கின்றார்களாம்..

யாருக்கு!?..

வேறு யாருக்கு?.. தட்க்ஷனின் திருமகளாக
வளர்ந்து வரும் தாட்க்ஷாயணிக்குத் தான்!..

மணமகன் எந்த நாட்டின் இளவரசன்?..

இளவரசனா?.. சரியாய் போச்சு!..
மணமகன் அரசர்க்கெல்லாம் அரசன்.. பேரரசன்..
ராஜாதிராஜன்!.. தியாகராஜன்!..
திருக்கயிலாய நாதன்!..

தட்க்ஷன் என்ன சொல்கிறார்?...
ஒத்துக் கொண்டு விட்டாரா?.. எப்போது கல்யாணம்!..
கல்யாண வீட்டில் சாப்பிட்டு நாளாகின்றது!..

தற்சமயம் சிவன் சக்தியற்று இருக்கின்றாராம்...
தாட்க்ஷாயணியைக் கல்யாணம் செய்து கொண்டால் தான்
சக்தியை மீண்டும் பெறுவாராம்!..

ஓஹோ!..

அதனால் தேவர்கள் தரப்பில் உடனடியாகக் கல்யாணத்தை
வைத்துக் கொள்ளலாம் என்கின்றார்கள்.. ஆனால்..

என்ன ஆனால்?..

தட்க்ஷன் பிடிவாதமாக இருக்கின்றானாம்!..

எதற்காக!?..

சிவனே சக்தியற்றுக் கிடக்கின்றான்..
அவனுடைய சக்தியே இப்போது என் கையில்!..
நான் என் பெண்ணைக் கொடுத்தால் தான்
சிவனுக்கு சக்தி கிடைக்கும் என்றால்..

என்றால்!..

நான் தானே பெரியவன்!..ஆகையால், 
என்னை வந்து சிவன் பணிய வேண்டும்!..
என்கின்றானாம்!..

அடப்பாவி!..

எல்லாரும் அப்படிச் சொன்னதால்
கல்யாணப் பேச்சு தடைபட்டுப் போயிற்று...

எதுக்கும் கொடுப்பினை வேண்டும்..
கல்யாணம் நின்று போயிற்று..
கல்யாணச் சாப்பாடும் கிடைக்காமல் போயிற்று!..

இப்படித்தான் மக்கள் பேசிக் கொண்டார்கள்..

ஆனால்,
கல்யாணப் பேச்சு நின்றதே தவிர
கல்யாணம் நிற்கவில்லை..

தந்தையின் அகம்பாவத்தைக் கண்ட தாட்க்ஷாயணி
தான் பூஜித்து வந்த சிவலிங்கத்தை
தனது இதய கமலத்துள் நிறுவிக் கொண்டாள்...

அந்த அளவில் தனது சக்தியை மீண்டும் எய்திய
எம்பெருமான் தாட்க்ஷாயணியை சிறையெடுக்க
திருக்கயிலையில் திருக்கல்யாணம் நடந்தேறியது...

அதேசமயம்
தன்னை அவமதித்து விட்டதாக
தட்சனின் தலைக்குள் வெறியேறியது..

அதன் விளைவாக
ஈசனையும் இறைவியையும் புறக்கணித்து விட்டு
மாபெரும் வேள்வியைத் தொடங்கி நடத்தினான்..

இருவருக்கும் பொதுவான முனிவர்கள்
இது தவறு!.. - என்றார்கள்...

அதையெல்லாம் அவன் கேட்கவில்லை..

அம்பிகை கயிலையை விட்டு நீங்கியவளாக
தந்தையின் வேள்விச் சாலைக்குச் சென்று
மகள் என்ற உரிமையுடன் கேட்டாள்..

அம்பிகையை வரவேற்று உபசரிக்காமல்
தகாதனவற்றைச் சொல்லி அவமதித்தான்..
அங்கிருந்து வெளியேற்றினான்...


கோபத்தால் கொதித்திருந்த ஈசனின் திருமேனியிலிருந்து
ஸ்ரீ வீரபத்ரர் தோன்றியருளினார்..

தாட்க்ஷாயணி தன்னுடல் நீத்து
ஸ்ரீ பத்ரகாளியாக வெளிப்பட்டாள்..

அந்த அளவில்
தட்சனின் யாகசாலை அழிக்கப்பட்டது...

யாகத்தில் விருந்துண்பதற்கு வந்திருந்த
தேவர்கள் எல்லாரும் அடித்து நொறுக்கப்பட்டனர்...

உயிர் தப்பியோர் ஓடி ஒளிந்து கொண்டனர்..

ரௌத்ரம் அடங்காத வீரபத்ரர்
தட்சனை எட்டிப் பிடித்து
அவனது தலையை அரிந்தெடுத்து
யாக அக்னிக்குள் போட்டார்..

அது ஈரமற்று இருந்ததால்
உடனடியாகத் தீப்பிடித்து
எரிந்து சாம்பலாகிப் போனது..

முனிவரெல்லாம் ஓடி வந்து
ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமியை சாந்தப்படுத்தினர்..

தட்சனின் பிழைதனைப் பொறுத்து
உயிர்ப்பித்தருள வேண்டினர்...

யாகசாலையில் நடந்த களேபரத்தில்
ஆடு ஒன்று பலியாகிக் கிடந்தது..

ஆட்டின் தலையை எடுத்து
தட்சனின் முண்டத்தில் பொருத்தினார்..

தட்சன் உயிர் பெற்றெழுந்தான்..
வழக்கம் போல மன்னிப்பு கேட்டுக் கொண்டான்..
பணிவுடன் வணங்கி நின்றான்..




ஈசன் - வீரபத்ரர் எனத் திருக்கோலம் கொண்டு
தட்சனின் யாகத்தை அழித்த சம்பவம்
திருமுறைகளில் போற்றப்படுகின்றது..

தன்னை உணராமல் தருக்கித் 
திரிபவர்களுக்கு எல்லாம்
இனிது.. இனிது.. ஆட்டுத்தலையே இனிது!..

இதெல்லாம் நிகழ்ந்தது இமய மலைச்சாரலில் என்றாலும்
திருப்பறியலூரின் தலபுராணம்
மனிதன் ஆணவம் கொள்ளாமல் இருக்க வேண்டியதை
அறிவுறுத்துகின்றது..

திருப்பறியலூருக்கு ஞானசம்பந்தப் பெருமான்
திருப்பதிகம் அருளியுள்ளார்..

இன்றைய நாளில் பரசலூர் என்று வழங்கப்படும் 
இவ்வூர் மயிலாடுதுறையை அடுத்துள்ள 
செம்பொன்னார் கோயிலிலிருந்து
நல்லாடை எனும் ஊருக்குச் செல்லும் சாலையில் உள்ளது

ஸ்ரீ திருஞானசம்பந்தர் 
அருளிய திருக்கடைக்காப்பு

நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையார் அரவம் அழகா அசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறியலூரில்
விரையார் மலர்ச் சோலை வீரட்டானத்தானே!..(1/134)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவாசகம்




பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ..
***

தேவி தரிசனம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
பொலாலி - கர்நாடகா


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்அடியாரை ,மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சை உண்டு
கறுக்கும் மிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே!..(46) 
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. ரசிக்கும்படியான விவரிப்பு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை,, பக்தி இலக்கியம் படிக்க துவங்கிட்டேன். நன்றி

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான படங்களும் விவரங்களும் என ஸ்பெஷல் பதிவு ஸ்பெஷலான பதிவு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..