நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 16, 2013

திருக்கருகாவூர் 3

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கருகாவூருக்கு -

வசிஸ்டர் வணங்கிய குருஸ்தலமாகிய திட்டை, பாகவதமேளா நிகழும் மெலட்டூர்  வழித்தடத்திலும்,

மகமாயி வீற்றிருக்கும் புன்னைநல்லூர், சாலிய மங்கலம் வழித்தடத்திலும் - தொடர்ந்து  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தஞ்சை - கும்பகோணம் (சாலை அல்லது ரயில் ) வழியில் - பாபநாசத்தில் இறங்கிக் கொண்டால் அங்கிருந்து 5 கி.மீ. தொலைவு - திருக்கருகாவூர்.

திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு சுவாமிகளும் பாடிப் பரவிய திருத்தலம் - திருக்கருகாவூர்.


உலகில் மற்ற உயிர்கள் தோன்றும் முன்னே - அவை எல்லாவற்றுக்கும் கருவாய்த் தோன்றிய கருப்பொருள் என்பதோடு மட்டுமல்லாமல் - அவை அனைத்துக்கும் கண்ணாகும் எந்தை கருகாவூரார்

- என்று, திருநாவுக்கரசர் திருப்பதிகத்தில் நெகிழ்ந்து உருக்கின்றார்.

thanjavur

மேலும்  - பொதுத் திருத்தாண்டகத்தில்(4/15/6) , கருகாவூரிற் கற்பகத்தை என - மெய்சிலிர்க்க வர்ணிக்கின்றார் நாவுக்கரசர் பெருமான்..

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  தம்முடைய ஷேத்திரக் கோவையில் (7/47) ,

காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகாவூரானே!..

- என சிறப்பித்துப் பாடுகின்றார்.

thanjavur
ஸ்ரீ விடங்க நந்தி (செந்நிற திருமேனி)

நந்தி மற்றும்  விநாயகர் திருமேனிகள் உளி படாத விடங்கத் திருமேனிகள்.


முல்லைவன நாதர்  சுயம்பு மூர்த்தி. லிங்கத்திருமேனி புற்று மண்ணால் ஆகியது. எனவே அபிஷேகங்கள் ஆவுடைக்கே நிகழும்.

திருமேனியில் முல்லைக் கொடி படர்ந்த தழும்பினை தீப ஆராதனையின் போது தரிசிக்கலாம்.

திருத்தல விநாயகர் கற்பக விநாயகர் என வழங்கப்படுகின்றார்.


முதல் திருச்சுற்றில் கன்னிமூலையில் கணபதி சந்நிதியில் ஸ்ரீ பூர்ணா - புஷ்கலை தேவியருடன் ஐயனார் அருள் வழங்கி வீற்றிருக்கின்றார்.

ஐயனின் இடப்புறம் வள்ளி தெய்வானை சூழ - வடிவேல் முருகனின் சந்நிதி. 

இரண்டாம் திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய அன்னையின் சந்நிதி . 

அழகிய நந்தவனமாக அமைந்துள்ள மூன்றாம் திருச்சுற்றில் ஆலயத்தை வலம் வரும் போது சோமாஸ்கந்த பிரதக்ஷிணமாக அமைகின்றது.

தவிர திருக்கோயிலில் கோசாலையும் உள்ளது.

திருக்கோயிலின் எதிரில் காமதேனு பொழிந்த க்ஷீர புஷ்கரணி - திருப் பாற்குளம் எனும் தீர்த்தம்.

க்ஷீர புஷ்கரணி
மூர்த்தி, தலம், தீர்த்தம் என - மூன்றினாலும் பெருஞ்சிறப்புடைய இத்தலத்தில் என்றைக்கும் மங்கல நிகழ்வுகளைக் காணலாம்.

எல்லாவற்றுக்கும் காரணம் - கர்ப்ப ரக்ஷாம்பிகையின் அளப்பரிய அருளுடன், அவள் சந்நிதி வாசலின் திருப்படியினில் மெழுகிடும்  - நெய் தான்!..

ஆம்!... குறைபாடுகளுடன் குமுறும் இளம் பெண்களின் -

கருவறை வாசல் திறக்கக் காரணமாவது  -
  அன்பெனும் அடையா நெடுங்கதவுடன் திகழும், 
அன்னை கர்ப்ப ரக்ஷாம்பிகையின் கருவறை வாசலே!..

இத்திருத்தலத்தில் பிரத்யேகமாக நிகழ்வது  - ''நெய்யிட்டு படி மெழுகுவது''. 

கருத்தரிப்பதில் குறைபாடுகளை உடைய இளம் பெண்கள் அன்னையிடம் பிரார்த்தித்து, அர்ச்சனை செய்து  - சுத்தமான பசு நெய் கொண்டு அன்னையின் சந்நிதி வாசல் படியினை மெழுக வேண்டும்.

அர்ச்சனை முடிந்து தீப ஆராதனை நிறைவுற்ற பின்,  அந்த நெய்யை வழித்து சுத்தமான கிண்ணத்தில் சேகரித்துக் கொண்டு, தினமும் இரவில் சிறிதளவு அருந்த வேண்டும் என்பது நியதி.

மெழுகி எடுத்த நெய் தீர்கின்ற நிலையில் -  பசு நெய் வாங்கி, அம்பிகையின் பெயரை உச்சரித்து தாமே அதில் மீண்டும் கலந்து கொள்ளலாம்.
 
நெய்யினால் மெழுகப்படும் நிலைப்படி  - கவசமிட்டு பாதுகாக்கப்படுகின்றது.

thanjavur
அன்னையின் கருவறை விமான தரிசனம்
இந்த நெய்யினை அருந்தும் காலத்தில் தம்பதியர் புலால் உணவினை நீக்குவது  நல்லது.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் கர்ப்பப்பை பழுது எனும் கொடும் சூழ்நிலை நேரும் போது கூட,   கர்ப்பரக்ஷாம்பிகை  - கை கொடுக்கின்றாள்.

குறை ஏதும் இல்லை எனினும் - பருவமடைந்த பெண்கள், இளந்தம்பதியர் - என, அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம்  - திருக்கருகாவூர்.


அல்லலுற்று ஆற்றாதழுபவர் - எவராயினும் சரி... 
அவர் தம் கண்ணீரை -
கருணையுடன் துடைத்து விடுபவள் கர்ப்ப ரக்ஷாம்பிகை!...
 
ஓம் சக்தி.. ஓம் சக்தி..
* * *

4 கருத்துகள்:

  1. செல்லும் விவரங்கள் உட்பட தலத்தின் சிறப்புகள், விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையின் அருளின்றி ஏதுமில்லை. அவள் புகழைப் பரவுவது அன்றி வேறொன்றுமில்லை!...

      நீக்கு
  2. பக்தி மணம் கமழும் பதிவு அய்யா.

    பதிலளிநீக்கு
  3. சொல்லச் சொல்ல இனிக்கும் திருப்பெயர் அவளுடையது!...முல்லையைத் தொட்டால் - தொட்ட கையும் மணக்கும் அல்லவா!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..