நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 28, 2015

அமைதியைத் தேடி

அக்னிச் சிறகுகளை விரித்தபடி 
அந்தப் பறவை - அமைதியைத் தேடி - பறந்து விட்டது..


நம்ப முடியவில்லை..

கண்ணால் செய்திகளைப் பார்த்தும் கூட மனம் நம்ப மறுக்கின்றது..

இவர் தமக்கும் மரணம் உண்டா!.. - என்று மறுகுகின்றது..



நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி.. 
பெருமைக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர்.. 

அதையெல்லாம் விட - தாய் நாட்டின் பெருமையை - 
மாற்றாரும் வியந்து நோக்கும்படிச் செய்த வித்தகர்..

மேதகு APJ அப்துல் கலாம் அவர்கள் மாரடைப்பால் காலமானார். 

பாரதத் தாய் - தனது தவப்புதல்வனை இழந்து பேச மொழியின்றி தவிக்கின்றாள்..

இனி - இப்படியொரு புதல்வனை என்று காண்பளோ!..



அப்துல் கலாம் அவர்கள் நேற்று மாலை மேகலாயாவில் அமைந்துள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். 

அதனையடுத்து ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் - பலனின்றி உயிர் பிரிந்தது.. 

ஏழு நாட்களுக்கு நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கப்படுகின்றது.

வாழும் காலத்தில் புகழுடன் வாழ்ந்தவர்..



எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில்!.. - என்றார்!..

தன்னுடைய இயல்பான எளிமையினால் - அன்பான மொழியினால்,
காலங்களைக் கடந்து - வானமும் வையமும் உள்ள அளவிற்கு நிலைத்திருக்கும் வாழ்க்கை அவருடையது..


கனவு காணுங்கள்.. 
அந்தக் கனவை நினைவாக்க பாடுபடுங்கள்!..

இளைஞர்களின் இதயங்களில் பதிந்த பொன்னெழுத்துக்கள் அவருடையவை..

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் (1981) பத்ம விபூஷன் (1990) பாரத ரத்னா (1997) - ஆகியன இவரால் பெருமை கொண்டன..

இன்னும் பற்பல விருதுகளும் இவரைத் தேடிவந்து - சிறப்பு பெற்றன

எளிய - மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்..
தன் விடாமுயற்சியால் - சிகரங்களைத் தொட்டவர்.




முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!..
- என்பதற்குக் கண்கண்ட அடையாளம் - மேதகு APJ அப்துல் கலாம் அவர்கள்..

நாட்டின் முதற்குடிமகன் என்ற பெருமை அவரைத் தேடி வந்தது..

பதவிக் காலம் முடிந்த பிறகு - நான்கைந்து பெட்டிகளுடன் - ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியவர்..

அப்படிப்பட்ட ஒருவரை - அப்போதுதான் பாரதம் கண்டு வியந்தது..


அரசியலில் ஈடுபட்டதில்லை - அவர்..

ஆனாலும், அவர் தமக்கு ஆகவில்லை என்பதற்காக - பொங்கிப் புழுங்கினர் அரசியல்வாதிகள்!..

வாழ்ந்து முடித்த பிறகும் நினைவில் நிற்கும் வாழ்க்கை அவருடையது..

வானமும் வையமும் உள்ள அளவிற்கு பாரத மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார்..



மொழி கடந்து இனம் கடந்து - 
பெரியவர் - சிறியவர், படித்தோர் - பாமரர் என்றில்லாமல் -
பாரத மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இறுதி மூச்சு வரை அயராது மக்கள் பணியாற்றியவர்.

இந்த நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்தித்தவர்.

வளரும் பிள்ளைகளிடமும் மாணவச் செல்வங்களிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர்.

அவ்வண்ணமாக - 
மாணவர்களிடம் பேசிக்கிட்டு இருக்கும்போதே புகழுடம்பு எய்தினார்..

இத்தகைய மரணம் இறையருள் பெற்றவர்க்கே வாய்க்கும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே பெருமை..



பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் திருப்பெயர் 
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும். 

அவரது ஆன்மா - இறைநிழலில் 
அமைதியடைய வேண்டுகின்றேன்.. 
* * *