நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 26
சனிக்கிழமை
மேற்கத்திய நாடுகளில் வருவதற்கு ஆளில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழிபாட்டு இடங்கள் இழுத்து மூடப்பட்டு - மது அருந்தும் இடங்களாக, இரவு கேளிக்கை விடுதிகளாக மாறி இருக்கின்றன... என்றொரு செய்தியை இணைய தளத்தில் படித்தேன்..
இதற்கு அவர்கள் கண்டு பிடித்திருக்கும் காரணம் கூட்டுக் குடும்ப முறை ஒழிந்தது.. நல்லொழுக்கம் அழிந்தது.. உறவு முறைகள் அற்றுப் போயின - என்பது தானாம்..
இங்கே, நம் நாட்டின் நல்லொழுக்கம்
மேலை நாகரிகத்தால் தாக்கப்பட்டு குற்றுயிராகக் கிடக்கின்றது .. இப்போது தான் சீர்கேடுகள் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன..
இதெல்லாம்
ஐரோப்பிய ஆங்கிலேயக் கோமாளிகள் - நாகரிகம் என்ற பேரில் இந்த மண்ணுக்குக் கற்றுக் கொடுத்தது..
அன்றைக்கு அவர்கள் நம் நாட்டில் அடித்து வைத்த ஆப்பு இன்றைக்கு அவர்கள் பக்கமாகத் திரும்பியிருக்கின்றது..
குல தெய்வ வழிபாடு, குடும்ப கௌரவம், கூட்டுக் குடும்ப நிர்வாகம் - இவற்றை அழிப்பதையே லட்சியமாக்கி நிறைவேற்றியும் இருக்கின்றார்கள்..
டமிலனுக்கு (தமிழனுக்கு) தெய்வம் இல்லை.. மதம் இல்லை..
மதத்தை நம்புகிறவன் மடப் பயல்..
குல தெய்வத்தைக் கும்பிடுபவன் கிறுக்குப் பயல் என்றெல்லாம் ஏகப்பட்ட சத்தங்கள்..
வெள்ளக்காரனப் பாரு..
அரபிக்காரனப் பாரு!.. அவன் எல்லாம் குல தெய்வம் கும்பிட்டுக்கிட்டா இருக்கான்?..
என்கிற அறிவுரைகள் வேறு..
குல தெய்வம் - என, அன்றொரு திரைப்படம் வந்தது..
இன்றொரு திரைப்படத்துக்கு அப்படியான பெயரை அறிவிப்பு செய்தாலே போதும்..
ஆ... ஊ... என்று,
ஆசனத்தில் அமிலம் பட்டது போல அலறிக் கொண்டு -
அந்தப் பக்கத்தில் இருந்தும் இந்தப் பக்கத்தில் இருந்தும் நடுநிலை எடுப்புச் சோறு ஆயிரக் கணக்கில் வருவார்கள்..
குல தெய்வ வழிபாடு என்பது என்ன?..
குடும்பம் என்பது
அந்தந்தச் சமூகங்களின் வாழ்வியல் அடையாளம்..
அது இல்லறத்தானுக்கு மட்டுமே உரியது..
குல தெய்வ வழிபாடு அழிந்து போனால் என்ன ஆகும்?..
பங்காளி எனப்படும் தந்தை வழியும் தெரியாது..
தாயாதி எனப்படும் தாய் வழியும் புரியாது..
மோகம்..ன்னு வந்து விட்டா முகவரியே தேவையில்லே!.. - என்கிற தகர டப்பா பாட்டுடன் - பல ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படம் ஒன்று வந்தது..
ஆமாம் வந்தது.. அதனால் என்ன?.
முகவரி இற்றுப் போகும் போது எதிர் பாலினத்தின் உறவு முறையும் அற்றுப் போகும்..
சரி.. அதனால்?..
அக்கா யாரு - தங்கச்சி யாருன்னு தெரியாது..
யாருடனும் ஆடலாம்..
யாருடனும் கூடலாம்!..
எல்லாமே ஐரோப்பிய ஆங்கிலேயனின் நடைமுறை ..
பழகுவோம்.. விலகுவோம்!..
இதுதான் இப்போது..
பழகுவோம் - இன்றைய தலைமுறைக்கு இதன் அர்த்தமே வேறு..
இதன் விளைவு -
காய்ந்து போன சுள்ளியில் வைக்கப்பட்ட தீ -
காட்டை அழித்தது போலத் தான்..
தந்தை தாய் தெரியாமல்
தங்கை தமக்கை புரியாமல்
அண்ணன் தம்பி அறியாமல் அன்பு காட்ட ஆளில்லை என்றால் -
அனாதைகளாக வாழ்வதா வாழ்க்கை?!..
ஆங்கிலேய ஐரோப்பியன் மாதிரி -
" ஹாய்.. How are you!.. " - என்று கேட்டு விட்டால் அதுதான் அன்பு என்று நினைத்துக் கொள்கின்றார்கள் ..
அதுவா அன்பு?..
மனம் கலங்கிச் சிந்தும் கண்ணீர்த் துளிகளும் தான் அன்பு..
அத்தகைய -
அன்பின் வேர்கள் அறுந்து உறவு முறைகள் அழிந்து போனதாலேயே மேற்கத்திய நாகரிகத்தில் இடி இறங்கி இருக்கிறது..
தமிழகத்தில் மட்டும் என்ன?..
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசினரால் முன்னெடுக்கப்பட்ட சிறு குடும்பத் திட்டத்தினால்
மிகுந்த கலாச்சாரமுடைய உறவு முறைகள் அழிந்து கொண்டிருக்கின்றன.. ஏறக்குறைய அழிக்கப்பட்டு விட்டன..
அதட்டுவதற்கும் அடிப்பதற்கும் பெரியப்பா சித்தப்பா இல்லாமல் போனார்கள்..
கண்டிக்கும் மாமியும் கண்காணிக்கும் அத்தையும் காணாமல் போனார்கள்..
அள்ளாத அமுதமாய் ஆச்சியும் தாத்தாவும் அழிந்தே போனார்கள்..
சிறு குடும்பம் சீரான வாழ்வு என்றார்கள்..
சிறு குடும்பம் இருக்கின்றது.
சீரான வாழ்வு இல்லையே.. ஏன்?..
நாம் இருவர் நமக்கு இருவர் என்றார்கள்.
இன்றைக்கு வீட்டுக்கு வீடு ஒற்றைப் பனை மரம் தான்...
இதுவா வீடு..
இதுவா குடும்பம்?..
குடும்பம் என்பது சமஸ்கிருதத்தில்..
வீடு என்பது நிறைவு.. நிறைவு என்பதற்குத் தமிழில் பல அர்த்தங்கள்..
நிறைவாக இருப்பது தான் வீடு.. அந்த மாதிரி ஒரு வீடு உண்டா நாட்டில்?..
வீடு என்பது குடியிருக்கும் இடம் மட்டுமல்ல..
இறைவனது திருவடி..
முக்திப் பேறு..
திரைச்சித்திரம்: பாமா விஜயம்
பாடல்: கவியரசர்
இசை: மெல்லிசை மன்னர்
பாடியவர்கள்
P. சுசிலா, L.R.ஈஸ்வரி
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
சிந்திப்போம் சிந்திப்போம்..
சந்ததியை வாழ வைப்போம்..
வாழ்க நலம்!..
***










