நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று வைகாசி மூல நட்சத்திரம்.. ஞான சம்பந்தப் பெருமான் சிவ ஜோதியுள் ஐக்கியமாகிய நாள்..
ஞான சம்பந்தப் பெருமான் திரு ஆச்சாள்புரத்தில் திருமணக்கோலம் கொண்டு தோத்திரப் பூர்ணாம்பிகையின் கைத்தலம் பற்றி மனை மங்கலம் கொண்ட வேளையில் ஆங்கெழுந்த ஜோதியுள் புகுந்து ஈசனுடன் ஒன்றினர் என்பர்..
அவருடன் இருந்து கல்யாண வேள்வியை நடத்திய முருக நாயனார், நீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடைய மனைவி மதங்க சூளாமணியார் ஆகியோரும் இறையுடன் கலந்தனர்..
நேற்று வந்திருக்க வேண்டிய இப்பதிவு சிறியதொரு கவனக் குறைவால் இன்று வெளியாகின்றது..
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருப்பதிகம் ஒன்றுடன் பெருமானை சிந்தையில் கொள்வோம்..
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்கள் சுமார் 16000 என நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நமக்குக் கிடைத்துள்ளவை 383 திருப்பதிகங்கள் மட்டுமே..
முதல் திருமுறையில் 136
இரண்டாம் திருமுறையில் 122
மூன்றாம் திருமுறையில் 125 பதிகங்கள் எனத் தொகுக்கப் பட்டுள்ளன.. காலத்தை வென்றவைகளாக மேலும் மூன்று பதிகங்கள் கிடைத்து பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன..
*
திருத்தலம்
திருநெய்த்தானம்
முதலாம் திருமுறை
பதினைந்தாம் திருப்பதிகம்
நன்றி கூகிள் |
*
மையாடிய கண்டன் மலைமகள் பாகம் அது உடையான்
கையாடிய கேடில்கரி உரி மூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம் மலர் நயனத் தவளோடும்
நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானமெ னீரே..1
பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே..2
பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே..3
சுடுநீறணி அண்ணல்சுடர் சூலம் அன லேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை இடமாம்
கடுவாளிள அரவாடுமிழ் கடல் நஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே..4
நுகராரமொடு ஏலம்மணி செம்பொன்நுரை உந்திப்
பகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதண்கரை நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே..5
விடையார் கொடி உடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைசடை உடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்ந்தநெய்த் தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்அடை யாரே..6
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
தழலானவ னனலங்கையில் ஏந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே..7
அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
இறையாரமு னெடுத்தானிரு பதுதோளிற வூன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நல் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே..8
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்அறி வரிதாய் ஒளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே..9
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம் உடை யடியாருடல் செறுநோயடை யாவே..10
தலமல்கிய புனற்காழியுட் தமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்இவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்அடி சேர்வர்சிவ கதியே..11
***
ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி.. போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
ஓம் சிவாய நம ஓம். 16000 பதிகங்களில் கிடைத்தது 383 தான். என்னவொரு இழப்பு... பகிர்ந்திருக்கும் பதிகம் சிறப்பு.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
நானும் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்..
அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
என்ன மாதிரியான சந்தத் தமிழ்... படிக்கப் பரவசம். முதல் பாசுரத்தில் குவளைம் என்பதற்குப் பதில் குவளை என்றே வந்திருக்க வேணும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை..
நீக்குவெகுநாட்களுக்குப் பிறகு தங்களது வருகை..
இதற்கு முன்னும் இப்படியொரு ஐயம் தங்களிடம் இருந்து..
மழலைம் முழவு அதிர - என்று திரு அண்ணா மலைப் பதிகம் அது..
இம்மாதிரியான ஒற்றை ஒலிக் குறிப்புகள் நிறையவே பாடல்களில் காணக் கிடைக்கின்றன..
அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நாடும் வீடும் நலம் பெறட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குஓம் நமசிவாய...... கிடைத்த பதிகங்கள் மட்டுமே இவ்வளவு சிறப்பாக இருக்கிறது. மற்றவையும் நமக்குக் கிடைத்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும். இழந்த பல நல்ல விஷயங்களில் இவையும்...... இருப்பவர்ரையாவது காப்பாற்றி போற்ற வேண்டும்.
பதிலளிநீக்குஉண்மை தான்... காலக் கோளாறினால் கறையான்களிடம் சிக்கிய திருமுறைப் பாடல்களை மீட்டுத் தந்தவர் ராஜராஜ சோழர்.. இனி அவற்றைக் காப்பாற்றிக் கொள்வது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பு..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நேற்று மாலை கூட்டு வழிபாட்டில் திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு அவரின் தேவராங்களை பாடினோம்.
பதிலளிநீக்குபதிவு சிறப்பு. பகிர்ந்த தேவாரத்தை பாடி அவர் திருவடிகளை வணங்கி கொண்டேன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குநலமே வாழ்க..
அருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குதமிழ் ஞானத் தமிழமுதம்!!!. சுவை. தமிழ் கட்டிப் போடும் ஒன்று. பிரபந்தம் மற்றும் திருமுறைகளில் மிகவும் ரசிப்பது இந்தத் தமிழ் சந்தம். பள்ளியில், கல்லூரியில் வாசிக்க என்னை மிழாசிரியர் கூப்பிடுவதுண்டு. ஏற்ற இறக்கங்களோடு சத்தமாக (என் குரல் கொஞ்சம் சத்தமான குரல் வேறா...) அந்த நினைவுகளும் கூடவே.
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குஆச்சாள்புரத்திற்கு நான் சென்றதுண்டு. ஆனால் உரிய தகவல்களை இன்றே தங்கள் மூலம் அறிந்தேன். மிக்க நன்றி.
பதிலளிநீக்குவெகு நாட்களுக்குப் பின்னர் தங்கள் வருகை..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..
இத்தனை சிறிய வயதிலேயே இத்தனை அழகாய்த் தமிழ் கொஞ்சி விளையாடி இருக்கிறது. இப்போவும் எங்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் பதிகம் மந்திரமாவது நீறு! மற்றும் கோளறு பதிகம்.
பதிலளிநீக்கு2019 ஆம் ஆண்டில் நாங்க அம்பேரிக்காவில் இருந்தப்போ எங்க பெண்ணிற்கு ஏதோ வைரல் ஜூரம்! மருந்து கொடுத்தும் 3 நாட்களாக இறங்கலை. இந்தப் பதிகம் தான் காசெட்டில் போட்டுவிட்டுக் கூடவே திரும்பத் திரும்பச் சொன்னோம். அன்று மதியத்துக்குள்ளாக ஜூரம் இறங்கியது.
பதிலளிநீக்கு