நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 21, 2021

மூன்றடி மண்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
திரு ஓணம்
***
யாகசாலையின்
குண்டத்தில் அக்னி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றது..

அதை விடவும் அதிகமாக
யாகத்தை முன்னின்று நிகழ்த்தும்
சுக்ராச்சார்யார் நெஞ்சகத்தில்..

எப்படியாவது தடுத்தே தீர வேண்டும்!..

ஆனால், மாவலிக்கு எவ்விதக் கேடும் நேர்ந்து விடக்கூடாது!..

தனது எண்ணத்தில் முனைப்பாக இருந்த சுக்ராச்சார்யார் -
தன்னுடைய தகுதிக்கு மீறிய செயலைச் செய்திடத் தலைப்பட்டார்...

வந்திருப்பவன் இறைவன்!.. - என்று அறிந்த பின்னரும் - அவரது மனம் நல்ல வழியில் செல்ல மறுத்தது..

அதன் விளைவு தான் இந்தப் போராட்டம்..

என்ன போராட்டம் அது?..

நீரை அடைக்க வேண்டும்.. தண்ணீரைத் தடுக்க வேண்டும்!..

எதற்காகத் தண்ணீரைத் தடுக்க வேண்டும்?.. தண்ணீர் பொதுவல்லவா!..

அதெல்லாம் இல்லை...
இப்போது பொற்கிண்டியிலிருக்கும் தண்ணீர்
அசுர வேந்தனாகிய மாவலி சக்ரவர்த்திக்குச் சொந்தமானது..


இதோ விநாடிக்குள் அந்தத் தண்ணீரைக் கொண்டு தாரை வார்த்துக் கொடுக்கப் போகின்றான்...

கிண்டியின் நீரை வார்த்து மூன்றடி மண்ணைத் தானமாகக் கொடுத்து விட்டால் - அசுர வேந்தன் அழிந்து விடுவான்..

எனவே, கிண்டியின் தாரையை அடைக்க வேண்டும்..  
ஒரு துளி நீர் கூட வெளியேறாமல் தடுக்க வேண்டும்!..

வந்திருப்பவன் இறைவன்!.. - என்று உணர்ந்து கொள்ளும் அளவுக்கு
வல்லமை கொண்ட சுக்ராச்சார்யார் - அடுத்து நிகழ இருப்பதை அறிந்து கொள்ளும் தன்மையை இழந்தார்..

இதோ மின்னல் வேகத்தில் கருவண்டாக உருமாறி கமண்டலத்தினுள் விழுந்தார்

அதன் நீர்த் தாரையை அடைத்துக் கொண்டார்..

கிண்டியிலிருந்து நீர் வெளியேறாமல் தடைப்பட்டது..

தாரை வார்க்கும் அசுர வேந்தனின் கரம் மேலிருக்க - தானத்தைப்
பெற்றுக் கொள்ளும் பாலகனின் கை கீழிருந்தது..

வேத மந்திரங்கள் முழங்கின..

ஆனால், கிண்டியிலிருந்து நீர் வழிந்தோடவில்லை..

அதுசரி.. எதற்குத் தாரை வார்ப்பது?.. எதைத் தானம் கொடுப்பது?..


அந்த யாகசாலையில் எவ்விதக் குறைவுமின்றி நடந்து கொண்டிருந்தது நூறாவது யாகம்.. அதுவும் அஸ்வமேத யாகம்!..

இன்னும் சிறு பொழுதில், வேள்வித் தீயில் - 
பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு விட்டால் -
யாகத்தின் புண்ய பலனைப் பெற்றவனை எவரும் வெல்ல முடியாது..

யாகத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருப்பவர் - அசுர குரு சுக்ராச்சார்யார்..

யாருக்காக நடத்திக் கொண்டிருக்கின்றார்?..

தன் அன்புக்குரிய மாவலிச் சக்ரவர்த்திக்காக!..

அவன் ஈரேழு புவனங்களையும் ஏக சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வதைக் கண் குளிரக் காண வேண்டும்.. 

அது ஒன்றே - சுக்ராச்சார்யாருடைய நீண்ட நாள் கனவு.. 

அப்படியானால் தேவேந்திரன்?..

அவனை தேவ சிம்மாசனத்திலிருந்து இறக்க வேண்டும்!.. 

அசுர குலத்தை இத்தனை நாள் படாதபாடு படுத்திய
அவனுடைய இடுப்பெலும்பை நொறுக்க வேண்டும்!..

குருவின் மன நிலையை அறிந்தவனாக வெற்றிக் களிப்பில்
தன் மனைவியுடன் அமர்ந்திருந்தான் - மாவலி சக்ரவர்த்தி..

வெற்றி பெறப்போகும் களிப்பில் - மாவலியின் கண்கள் மின்னின..

சக்ரவர்த்தியாகிய மாவலி - ஸ்ரீ பக்த பிரகலாதனின் பேரன்..

இப்படி நூறாவது யாகத்தை நடத்துதற்கும்
ப்ரகலாதனின் வம்சத்தில் பிறப்பதற்குமான காரணம் எது?..

திருமறைக்காடு எனும் திருத்தலத்தின் சிவ சந்நிதியில் 
கனன்று கொண்டிருந்த தீபச்சுடர் தனைத் தூண்டி விட்ட புண்ணியம் அது...

இதெல்லாம் நடந்தது ஆதியில்!.. 

தற்போது மாவலியிடம் அசுர குணமே மேலோங்கி நிற்கின்றது..

அதனாலேயே அஸ்வமேத யாகம்!..

ஆயிற்று இன்னும் சில நொடிகள் தான்!..

அந்த வேளையில் -


தேஜோ மயமான சின்னஞ்சிறு பாலகன் யாக சாலைக்குள் நுழைந்தான்..

அவனைக் கண்டு பிரமித்து மயங்கினர் அனைவரும். 

அமர்ந்திருந்த ஆசனப் பலகையிலிருந்து எழுந்து
வாமன மூர்த்தியை வரவேற்று மரியாதை செய்த மாவலி, 

ஐயனே!.. தாங்கள் வேண்டுவது யாது!.. - எனக் கேட்டான்..

நான் உன்னிடம் விரும்புவதெல்லாம் எனது காலடியினால் மூன்றடி நிலமே!.

அதற்கு மேல்?..

அதற்கு மேல் எதுவும் எனக்குத் தேவையில்லை!..

- என்று திருவாய் மலர்ந்தான் வாமனன்.

மாவலி - மகிழ்ந்தாலும் சற்றே வருந்தினான்..

ஸ்வாமி!.. பச்சிளம் பாலகனாகிய தங்களின் பிஞ்சுக் காலடியால் மூன்றடியா!.. அதிலே தங்களுக்கு என்ன கிடைத்து விடும்?.. வேறு பல செல்வங்களைக் கேட்டுப் பெறலாமே!.. விரும்பியதைத் தருவதற்கு சித்தமாக உள்ளேன்!..''

எனக்கு அதெல்லாம் வேண்டாம்.. தான் அளக்கும் மூன்றடி நிலமே போதும்!..

அதன்படி - பாலகன் கேட்டதைத் தானம் தருவதற்கு ஆயத்தமானான் - மாவலி.

மூன்றடி மட்டும் போதும் - என வந்திருப்பவன் யார்?..

- என, சுக்ராச்சார்யார் - தனது மூளையைக் குடைந்ததில் - தானம் கேட்டு வந்திருப்பவனின் சுயரூபம் அகக்கண்ணில் வெளிப்பட்டு நின்றது..


திடுக்கிட்ட சுக்ராச்சார்யார் - தானம் வழங்கப்படும் வேளையில்,

வந்திருப்பவன் மாயவன்!.. அவன் கேட்டபடி வழங்காதே!.. - என்றார்.

அசுர வேந்தன் மாவலியோ - பண்பின் சிகரமாக,

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ - தகவு இல் வெள்ளி!..
கொடுப்பது விலக்கு கொடியோய்!.. உனது சுற்றம் 
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!..
(கம்பராமாயணம்)

- என்று மறுமொழி கூறி நின்றான்.

அப்போது நடந்தவை தான் முன் சொன்னதெல்லாம்!..

தன் பேச்சைக் கேட்காமல் - கிண்டியிலிருந்து நீரை வார்த்து - தானம் செய்கையில் மனம் பொறாத சுக்ராச்சார்யார் - வண்டாக மாறி,
கிண்டியின் நீர் வழியை அடைத்துக் கொள்ள -

கிண்டியிலிருந்து நீர் வழிய வில்லையே.. ஏன்?.. - மாவலிக்கு வியப்பு..

வாமனனாக வந்த பாலகன் தலை நிமிர்ந்து நோக்கினான்..

நீர்த் தாரைக்குள் அசுரகுரு அடைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான்

அந்த அளவில் பெருமான் கிண்டியின் தாரையில் தர்ப்பையினால் குத்திக் கிளற, நீர் வழியை அடைத்துக் கொண்டிருந்த சுக்ராச்சார்யார் ஒரு விழியை இழந்தார். 

அந்த மட்டில் அங்கிருந்து சுக்ராச்சார்யார் விலகி நீங்கினார்..

ஆக, நீர் வழியினை அடைப்பவர்களுக்கு என்ன நேரும் என்று 
அன்றே சொல்லப்பட்டிருக்கின்றது!..

தடை நீக்கப்பட்டதும், பெருகி வழிந்த நீரை வார்த்து -  அசுரவேந்தன் தானம் கொடுத்தான்..

அந்த அளவில், வாமனன் - த்ரிவிக்ரமனான வளர்ந்து
ஓரடியால் மண்ணையும்  மறு அடியால் விண்ணையும் அளந்தார்.


மூன்றாவது அடிக்கு இடம் இல்லை!.. 

மாவலி!.. மூன்றாவது அடியை எங்கே வைப்பது?..

பெருமானே!.. இதோ.. என்தலையின் மேல் திருவடியை வைத்து மூன்றாவது அடியை அளந்து கொள்ளுங்கள்!.. 

ஸ்ரீ ஹரிபரந்தாமன் புன்னகையுடன் நின்றான்..

தனது  தானத்தால் - எல்லாமே பறிபோகும் என அறிந்தும் , குரு சுக்ராச்சார்யார் தடுத்தும் கூட, வாக்கு தவறாமல் தானத்தை வழங்கினை!..

யாராலும் கடக்க முடியாத மாயையைக் கடந்த நீயே - அடுத்த மன்வந்த்ரத்தின் தேவேந்திரன்!..

- என, வாழ்த்தி யாகத்தினைத் தொடர்ந்து நிறைவேற்றும்படி அருளினான். 

இப்படி நிகழ்ந்த வாமன அவதாரத்தினை,

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடு முட்டச் 
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே!.. 
(கந்தர் அலங்காரம்) 

- என்று, வர்ணிக்கின்றார் - அருணகிரி நாதர்...


ஈகையின் பொருள் விளங்கும்படித் திகழும் வாமன அவதாரத்தினை,

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகை 
முடியத் தாவிய சேவடி..

- என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் (ஆய்ச்சியர் குரவை) புகழ்கின்றார்.

மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயதெல்லாம் ஒருங்கு. 

என்பது - திருவள்ளுவரின் திருவாக்கு.

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈரடியாலே மூவுலகு அளந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர
போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் -

- என, போற்றித் திருஅகவலில் மாணிக்கவாசகர் புகழ்ந்துரைக்கின்றார்..

திருமயிலையில் பூம்பாவையை எழுப்பும் போது -

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காண..

என்று - ஓணத் திருநாள் காண வருமாறு அழைக்கின்றார் - ஞானசம்பந்தர்..


ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தத்தின் திருப்பாசுரங்கள் பலவற்றிலும் வாமன அவதாரம் பேசப்படுகின்றது..

பெரியாழ்வார் - நம்பெருமாளுக்குத் திருப்பல்லாண்டு பாடும்போது -

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்..

- என்று, தாம் ஆட்பட்ட விதத்தைக் கூறுகின்றார்..

கண்ணன் பிறந்தான்!.. - எனக்கொண்டு - மங்கையரை அழைக்கும்போது,

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர்! வந்து காணீரே!..

(அத்தத்தின் பத்தாம் நாள் - திருவோணம்)

- என்று சிறப்பிக்கின்றார்..

பழங்காலத்தில் தமிழகம் எங்கும் கொண்டாடப் பெற்ற ஓணத் திருநாள்
இன்று கேரளத்தில் மட்டுமே திருநாளாகத் திகழ்கின்றது..

கேரளம் முழுதும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

ஊர்கள் தோறும் இல்லங்கள் தோறும் பத்து நாள் விழாவாக வெகு சிறப்புடன் ஓணம் கொண்டாடப்படுகின்றது..


எல்லாம் சரிதான்!.. 
மாவலியிடம் தானம் பெற்றதை - பெருமாள் என்ன செய்தார்!..

தானம் பெற்றதை இந்திரனுக்கே அளித்து விட்டு -
திருமகள் பாதசேவை செய்ய -
மீண்டும் பாற்கடலில் பள்ளி கொண்டாராம் நம்பெருமாள்!..


உரியது இந்திரர்க்கு இதென்று உலகம் ஈந்து போய்
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான் -
கரியவன் இலகு எலாம் கடந்த தாளிணை 
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே!..
-: கம்பர் :-

தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்துதோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன்கொண்ட மூவாவுருவினன் அம்மானை
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே..(1722)
-: திருமங்கையாழ்வார் :-

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே!..
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!.. 
-: கோதை நாச்சியார் :-
* * *
கிருஷ்ணராஜ சாகர்

நீரைத் தடுக்காமலும் கெடுக்காமலும்
நீர்வழியை அடைக்காமலும் உடைக்காமலும்
எல்லார்க்கும் ஆகட்டும் என்று
இன்முகம் கொள்ளட்டும் நின்று!..
*** 

சில ஆண்டுகளுக்கு முன்பு 
வெளியிடப்பட்ட பதிவு இது..
சூழ்நிலை கருதி
மீண்டும் தங்களுக்காக..

அனைவருக்கும் 
ஓணத் திருநாள் 
நல்வாழ்த்துகள்!..

ஓம் ஹரி ஓம் 
ஃஃஃ

9 கருத்துகள்:

  1. தமிழில் மூழ்கி எழுந்து எழுதிய பதிவு.  சிறப்பான எடுத்துக்காட்டுகள்.  நீரைத் தடுப்பவர்களுக்கு என்ன கதி என்று முடிச்சு போட்டிருப்பது சிறப்பு.  திரைப்படங்களில் முக்கியமான கட்டத்தில் நிறுத்தி சுபம் போட்டு விடுவார்கள்.  அப்புறம்தான் அங்கு கதையே இருக்கும்.  அதுபோல அளந்து வாங்கிய அந்த மூன்றடி மண்ணை மாயவன் என்ன செய்தான் என்பதையும் எடுத்துச் சொல்லி இருப்பது சிறப்பு.  ரசித்த பதிவு.

    பதிலளிநீக்கு
  2. ஓணத்திருநாள் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  3. அருமை. அழகுத்தமிழில் அழகான உதாரணங்களுடன் காட்டப்பட்ட பதிவுக்கு நன்றி. இத்தனை ஆதாரங்கள் இருந்தும் இன்னமும் வடவர் தெய்வம்/தென்னவர் தெய்வம் எனப்பாகுபாடு காட்டிப் பேசுபவர்களை என்ன சொல்வது! அவங்க தான் இதெல்லாம் படிக்கவும் மாட்டாங்க/படிக்க விடவும் மாட்டாங்களே! பொதுமக்களுக்குத் தெரிஞ்சுடுமே! :(

    பதிலளிநீக்கு
  4. ஓணத்திருநாள் தமிழகமெங்கும் கொண்டாடப்படுவது குறித்து நானும் படித்து அறிந்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் அது கேரளத்துக்கென்றே உரியதாக மாறிவிட்டது. என்னவோ!

    பதிலளிநீக்கு
  5. ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்.
    ஓங்கியுலகளந்த பெருமாளின் வரலாறு படங்கள் எல்லாம் அருமை.
    ஓம் ஹரி ஓம்!

    பதிலளிநீக்கு
  6. வாமனன்!
    என் மரதக வண்ணன்!
    தாமரைக் கண்ணனின்! ...அற்புத தரிசனம்

    பதிலளிநீக்கு
  7. ஓணம் குறித்த சிறப்பான பதிவு.

    ஹரி ஓம்!

    பதிலளிநீக்கு
  8. அய்யா வணக்கம்! நம் பாரதநாட்டின் கொடியை தங்களது ப்ளோகில் பொருத்தி தமிழ் பிரிவினை பேசும் சில சீ....மான்களுக்கு செருப்படி கொடுத்தமைக்கு முதற்கண் நன்றி. உங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...

    குறிப்பு:-
    நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..