நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 30, 2018

மங்கல மார்கழி 15

ஓம்  

தமிழமுதம் 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற ஒழுக்கு.. (148)
*
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 15



எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன்வாய் அறிதும் 
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை 
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்... 
***

தேனாய் மொழியுடையாய்..
மீனாய் விழியுடையாய்!...

வித்தாரம் பேசுவதில் நாணா நாவுடையாய்..
கோவிந்தனைக் கூடுவதில் கோணா மனமுடையாய்!...

இன்னும் உறங்குகின்றனையே...
என்னவொரு விந்தை!...

(இதற்குப் பிறகுதான் அவள்
கண் மலர்கிறாள் போலும்!..)

சில்லென்று பொழுதும் இருக்கையில்
சில்.. வண்டு போல
ஏனடி துளைக்கின்றீர்கள்!..
இதோ.. எழுந்து வருகிறேன்...

ஆகா... மொழி மாற்றிப் பேசுவதில் வல்லவள் நீ!...
உன்னைப் பற்றி அறிய மாட்டோமா நாங்கள்...

ஓ... நீங்கள் சொல்வது போல
நான் வல்லவளாகவே இருந்து விட்டுப் போகிறேன்...

சரி.. சரி... உனக்கு என்னதான் வேண்டும்?..
விரைவாய் எழுந்து வா!..

எல்லாரும் வந்து விட்டார்களா?..
யாரும் வரவில்லை எனில் அவர்கள் வரும் வரைக்கும் 
சற்று உறங்கிக் கொள்கிறேனே!...

அடிக் கள்ளி.. நீ மட்டும் தான் வரவேண்டும்...
ஐயம் உண்டெனில் எழுந்து வந்து
எண்ணிப் பார்த்துக் கொள்!...
அப்படியாவது வருகிறாளா.. பார்ப்போம்!...

நான் அவசியம் வரத்தான் வேண்டுமா!?..
இன்னும் கொஞ்சம் தூக்கம் இருக்கிறதே தோழிகாள்!... 

எல்லே.. இளங்கிளியே!...
என்ன பேச்சு பேசுகிறாய் நீ!..
நா படைத்த பயனை நாம் அடைய வேண்டாமா?...

நாரணனைப் பாட வேண்டாமா?..
அவனது நலந்தனைக் கூறவேண்டாமா?..

வெறி கொண்டு வந்த வேழத்தைக் கொன்றவன் அவன்..
மதிகெட்ட மாற்றாரின் மாற்றழித்து வென்றவன் அவன்..

வா.. எழுந்து வா!..  
***

தித்திக்கும் திருப்பாசுரம்




வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து ஆயர்
நிரைவிடையேழ் செற்றவாறென்னே உரவுடைய
நீராழியுள்கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான்.. (2164)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்  
***  

இயற்கையின் சீதனம் 

பன்னீர் பூ


இதுதான் மர மல்லி எனப்படுவது..

தூய வெண்ணிறம் அல்லது 
அதனுடன் இள மஞ்சள் கலந்த
நிறமுடைய அழகான பூக்கள்..

நறுமணம் மிக்க மலர்களுள்
இதுவும் ஒன்று..

வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு,
பித்த கோளாறுகள்
இவற்றுக்கெல்லாம்
பன்னீர் இலைகள், மரப்பட்டை
உகந்தவை என்கிறார

மருத்துவ குணம் மிக்கது என்றாலும் 
தகுந்த மருத்துவரின் மேற்பார்வை அவசியம்...

பன்னீர் மரத்தின் பட்டைகளை நிழலில் உலர்த்தி
இடித்து தணலில் தூபம் இடுவது நல்லது..

நேர்மறை எண்ணங்களை விளைப்பதாக
இம்மலர் உணரப்படுகின்றது...



திருச்சோற்றுத்துறையின்
தலவிருட்சம் பன்னீர்..

இருப்பினும்
பற்பல திருக்கோயில்களிலும்
பன்னீர் மரத்தைக் காணலாம்...

இம்மலரைத் தலையில் சூடிக்
கொள்வதில்லை.. ஆனாலும்
மனதை மயக்கும் மணமுடையது...

ஸ்ரீ ஆதிசங்கரர்
திருச்செந்தூரில் வழிபட்டபோது
அவருடைய வயிற்று வலி தீர்வதற்கு
பன்னீர் இலையில் வைத்து
திருச்செந்தில் நாதன்
விபூதி வழங்கினான் என்பது ஐதீகம்..
***

சிவ தரிசனம்
திருச்சோற்றுத்துறை



இறைவன் - ஸ்ரீ சோற்றுத்துறை நாதன்
அம்பிகை - ஸ்ரீ அன்னபூரணி

தல விருட்சம் - பன்னீர் மரம்
தீர்த்தம் - காவிரி

திருமூலத்தானத்துக்குத் தென்புறம்
கிழக்கு முகமாக தனிக்கோயிலில்
அம்பிகை அருள் பாலிக்கிறாள்...

வறுமையுற்ற நிலையிலும்

அறம் செய்வதற்கு விரும்பிய
அடியார் ஒருவருக்கு
அம்மையப்பன்
அட்சய பாத்திரம் வழங்கி
அருள் புரிந்த திருத்தலம்...

அக்ஷய திரிதியை அன்று வழிபட்டுதற்குரிய

திருத்தலம்..

திரு ஐயாற்றின்

சப்தஸ்தானத் திருத்தலங்களுள் ஒன்று...



காவிரியின் தென்கரையில்
அமைந்திருக்கும் திருத்தலம்...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து

கண்டியூர் வழியாக வீரமாங்குடி சென்றடைந்தால்
அங்கே வரப்ரசாதியாக
அன்னதானப் பிரியை அன்னை மகாமாரியம்மன்
திருக்கோயில் கொண்டிருக்கின்றாள்..

அவளைத் தரிசித்து விட்டு
அங்கிருந்து ஒன்றரை கி.மீ., தொலைவில்
திருச்சோற்றுத்துறைக்குச் செல்லலாம்.....

நல்ல சாலை உள்ளது.. ஆனாலும்
ஏன் பேருந்து செல்வதில்லை?.. என்பது புதிர்..
**

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


பாலும் நெய்யும் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலும் துதைந்த மார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.. (1/28)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின்றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயினானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனே உன்அபயம் நானே.. (6/44)

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு

கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.. (7/94) 
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 09 - 10



முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய்... 9

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்... 10

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..  
***

8 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா..

    என்னடா எபியிலும் காணலை பதிவும் காணலைன்னு கவலைப்பட்டோம்..ஸ்ரீராமும் சொல்லிருக்கார்...

    ஹப்பா இப்பத்தான் மனம் சமாதானம்...எல்லே இளங்கிளி வந்துவிட்டாள் இங்கு...அமுதம் பருகிட்டு வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம். சற்றே தாமதமாக பறந்திருக்கிறது இளங்கிளி!!

    பதிலளிநீக்கு
  3. அமுதம் பருகியாச்சு.. அடுத்த வேலையைப் பார்க்கலாம்!

    பதிலளிநீக்கு
  4. தேனாய் மொழியுடையாய்...மீனாய் விழி உடையாய்....ஆஹா என்ன அருமையான அடைமொழியுடன் விளக்கம்...அந்த விளக்கம் முழுவதுமே ஆஹா போட வைக்கிறது..

    பன்னீர் பூ செம மணமா இருக்கும்...அதன் சிறப்புகள் இப்போதுதான் அறிகிறேன் அண்ணா...அருமையா இருக்கு படங்கள் பாடல்கள் விளக்கம் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பன்னீர் பூ - எவ்வளவு மணம் அதில். திருவரங்கம் கோவிலிலும் இந்த பன்னீர் பூ மரம் உண்டு. நிறையவே பாதையில் விழுந்து கிடக்கும். அந்தப் பாதை முழுவதும் மணம் பரப்பும்.

    இனிய பாசுரம். சிறப்பான விளக்கம். படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  6. பன்னீர் பூ விடயங்கள் இன்று தங்களால் அறிந்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  7. பதிவுகளை காலதாமதமாய் படிக்கிறேன்.
    ஊருக்கு போய் விட்டதால்.

    பன்னீர் பூ மிக அருமையாக இருக்கும்.
    அதன் சிறப்புகள் பற்றி சொன்னது அருமை.
    பாடல்கள், படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  8. இப்போதெல்லாம் பன்னீர் இலை விபூதி திருச்செந்தூரில் கொடுக்கிறாங்களா தெரியலை. திருச்சோற்றுத்துறை தரிசனம் கிடைக்கப்பெற்றேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..