நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 16, 2018

மங்கல மார்கழி 01

ஓம்

தமிழமுதம்


அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.. (01)

பாலும்தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :-
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் - 01



மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்குப் பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!..
***

மங்கல அணிகலன்களை என்றென்றும்
பிரிந்தறியாத செல்வச் சிறுமியரே!..
சீர்மல்கும் ஆய்ப்பாடியின் செல்வச் செழுமைக்குக்
காரணம் ஆனவன் ஆரென்று அறிவீரோ?..

அவன் கொடியோர்க்குக் கொடுந்தொழிலனாக
கூர்வேல் கொண்டு விளங்கும் நந்தகோபனின் இளங்குமரன்...
அன்பெனும் அழகு தவழும் கண்களை உடையவளாகிய
யசோதை பெற்றெடுத்த இளஞ்சிங்கம்...

கன்னங்கருத்த மேனியன் எனினும்
அருளிச் சிவந்த கண்களை உடையவன்...

கதிரைப் போலத் திண்மையும்
மதியைப் போலத் தண்மையும்
கொண்ட திருமுகத்தினன்...

அவன் கண்ணன்.. கார்முகில் வண்ணன்..
அவனே பரிபூரணன்.. ஹரிநாரணன்...

அவனே நமக்குப் பறை எனும் நலன்களைத் தருபவன்...

அந்த நலன்களைப் பெறுதற்கு
நாம் நோற்க வேண்டாமா?..

அவனும் நம்மை நோக்க வேண்டாமா!...
நாம் பெறும் நலங்களைக் கண்டு
உலகம் வியக்க வேண்டாமா!...

வாருங்கள்...
மதி நிறைந்த நன்னாளாகிய
மார்கழியின் இந்நாளில்
மங்கல நீராடி அவனைப் போற்றுவோம்!...
*** *** ***

ஏதொன்றும் அறியாத நான்
திருப்பாவையின் நடை சொல்லத் துணிந்தது எவ்வாறு?..

அன்பின் சகோதரி ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்களின்
கருத்துரை என்னை உற்சாகப்படுத்தியது...

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்...
அவளுரைத்த செந்தமிழை
என்னளவில் சொல்லுதற்கு
அவளே என்னை வழி நடத்துவாள்!...
***

பெரியாழ்வார் அருளிய திருப்பாசுரம்
திரு அரங்கம்

திரு அரங்கன்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா நின்
சேவடி செவ்வித் திருக்காப்பு..

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!..

ஓம் ஹரி ஓம்!..
 ***
இயற்கையின் சீதனம்
வில்வம்



எல்லாம் வல்ல எம்பெருமானுக்கு உரியது.. எனினும்
வில்வ மரத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி உறைவதாக ஐதீகம்...

திருஅரங்கத்தில் தாயார் சந்நிதிக்கு அருகில் 
வில்வ மரம் விளங்குகின்றது..

திருஐயாறு, இராமேஸ்வரம், திருவெண்காடு
இன்னும் பல சிவாலயங்களின் தலமரமாகத்
திகழ்வது வில்வம்...


ஸ்ரீ காசி விஸ்வநாதர்
ஏக வில்வம் சிவார்ப்பணம் - என்பது சிறப்பு..
சிவ வழிபாட்டிற்குரிய இலைகளுள் வில்வமும் ஒன்று...
தமிழில் கூவிளம் எனப்படுவது..


வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம் ஆகியன
மருத்துவ குணமுடையவை..

தலை சுற்றல் மயக்கம், வயிற்றுப் போக்கு ஒவ்வாமை
முதலான நோய்களுக்கு அருமருந்தாவதுடன்
இரத்தத்தில் சர்க்கரையைச் சமன்படுத்துகிறது வில்வம்..

எனினும்
தக்க மருத்துவரின் மேற்பார்வை அவசியம்...
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 01

போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் என்னை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!.. 
***

சிவ தரிசனம்
தில்லை திருச்சிற்றம்பலம்



இறைவன் - திருமூலட்டானேஸ்வரன்
அம்பிகை - திருமுழுதுடைய நாயகி

ஐயன் பொற்சபைக் கூத்தன்
அன்னை ஸ்ரீ சிவகாம சுந்தரி..

தல விருட்சம் - தில்லை..
தீர்த்தம் - சிவகங்கை..

எண்ணரும் சிறப்புகளை உடைய திருத்தலம்..
***


ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய 
தேவாரம்

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!.. (6/95)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. மார்கழி முதல் நாள். எப்போதும் காணப்படும் குளிரைக் காணோம்! குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சென்னையில் குளிரே இல்லை...நான் வந்திருந்தப்ப...ராத்திரி ஓகே. ஆனால் வேலை செய்தப்ப வேர்த்தது.

      இன்று இங்கு (பங்களூரில்) காலையில் 15 டிகிரி...

      பகலில் கொஞ்சமே வெயில் வந்தது. அப்புறம் 25 டிகிரிதான்...நல்ல சிலு சிலுன்னு இருக்கு...

      கீதா

      நீக்கு
  2. ஏதும் அறியாதவரா நீங்கள்? ஓ... அப்படியா?

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு.

    மார்கழி முழுவதும் தொடரும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமை. நல்லதொரு விஷயத்திற்குத் தூண்டுகோலாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் அருந்தமிழ்ச்சேவையை! திருவெம்பாவை விளக்கங்களை எதிர்பார்த்திருந்தேன். திருப்பள்ளி எழுச்சியில் தொடங்கி இருக்கிறீர்கள். அருமையாகவும் அழகாகவும் சுருக்கமாகவும் திருப்பாவை விளக்கம் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  5. தூண்டுகோல் கொடுக்க நண்பர் அமையும்போது உங்கள் எழுத்து இன்னும் சிறப்பாக அமைவது உண்மையே. நல்ல ஆரம்பம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம்.

    மார்கழி முதல் நாள் - சிறப்பான தொடக்கம். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஜி
    மார்கழியின் தொடக்கம் நன்று.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  8. செங்கண்-கண்ணன் (விஷ்ணு) எப்போதுமே செந்தாமரை போன்று சிவந்த நிறமுடைய கண்களை உடையவனாகத்தான் எல்லாப் பாடல்களிலும் சொல்லப்படுகிறான்.

    கதிர் மதியம் போல் முகத்தான் - இறைவனின் ஒரு கண் சூர்யனாகவும் இன்னொன்று சந்திரனாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. சூர்யனைப்போல் ப்ரகாசிக்கிறது என்று சொல்லலாம். இல்லை, ஒன்று கொதிக்கும் அனலைப் போன்றும் இன்னொன்று குளிர்ச்சியாகவும் இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் சொல்லவரும் கருத்து, ஏதிலிகள் ஏழையர் மீதும் நல்லவர்கள் மீதும் அவன் கருணையான குளிர்ச்சிப் பார்வை பார்க்கிறான் என்றும், கொடியவர்கள் தீயோர் மீது அவன் கோபக் கனலைக் காண்பிக்கிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.

    இப்போதுதான் இடுகையைப் படித்துக்கொண்டிருக்கிறேன். நன்றாக உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அவனருளாலே மார்கழி முழுவதும் உங்கள் இடுகைகள் சிறப்பாக வரும்.

    பதிலளிநீக்கு
  9. திருவெம்பாவைக்கும் சுருக்கமாகப் பொருள் எழுதுங்கள் (திருப்பாவைக்கு எழுதுவது போலவே). இடுகை சிறப்புறும்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான தொடக்கம்.
    காலை முகநூலில் மார்கழி பதிவு போட்டு விட்டு மணிவிழாவிற்கு போய் விட்டேன்.
    அதுதான் காலதாமதம்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான தொடக்கம் துரை அண்ணா.....

    திருவாதரைக் களி நாளை இப்பவே எதிர்பார்க்கத் தொடங்கிட்டேன் ஹா ஹா ஹா ரொம்பப் பிடிக்கும்...வருடம் தோறும் செய்வதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. திரும்பிப் பார்க்க முன் 2019 வரப்போகிறது.. இனி 2018 என நம் வாழ்நாளில் எழுத முடியாதே என நினைக்கையில் மிகவும் சோகமாஅகுது மனது:(.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ உங்களுக்கு 16 வயசுன்னு கடந்த 20 வருடமா உங்க தளத்துல எழுதிக்கிட்டே வர்றீங்களே... அப்போ எங்களுக்கு எவ்வளவு சோகமா இருக்கும் (பார்றா... நமக்கு மட்டும் வயசு கூடுது. இந்தப் பெண் 16லியே நிக்குதே என்று)

      நீக்கு
  13. மிக அருமையான ஆரம்பம் ...

    மிக மகிழ்ச்சி ...அருமை

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..