நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 23, 2018

மங்கல மார்கழி 08

ஓம்

தமிழமுதம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.. (072) 
***

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 08


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய 
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..
***

கீசுகீசு எனக் கருங்குருவிகளின் இன்னிசையோடு
கீழ்வானம் வெளுக்கலாயிற்று...

தொழுவத்து எருமைகளும் அவிழ்த்து விடப்பட்டு
அவைகளும் ஆங்காங்கே மேய்வதற்குத் தலைப்பட்டன...

அங்குமிங்கும் போகின்ற பிள்ளைகளை
எங்கும் போக விடாமல் தடுத்து
உன்னை எழுப்புதற்காக வந்து நிற்கின்றோம்...

குதூகலம் மிக்குடைய மென் நகையாய்..
எழுந்திராய்...

கடுங்குதிரையாய் வந்தவனைப் பிளந்தவனை
மார் தட்டி நின்ற மல்லர் தம்மை மாய்த்தவனை
பாட வேண்டமா?.. பாடிப் பறை கொள்ள வேண்டாமா!..

அந்த தேவாதி தேவனைச் சேவிக்க.. - என்று, தேடிச் சென்றால்
வா.. வா.. என்று நம்மை வரவேற்க மாட்டானா!..
நம் உள்ளத்தை ஆராய்ந்து அடுத்து நாம் உய்வதற்கு
ஓர் உபாயம் அருள மாட்டானா!?..

எழுந்திராய்.. தோழீ.. எழுந்திராய்!..
***

தித்திக்கும் திருப்பாசுரம்..


ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி - மன்னார்குடி 
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே என்றும்
புறனுரையே ஆயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு.. (2122)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***  

இயற்கையின் சீதனம்

வாழை

தமிழ் கூறிய முக்கனிகளில் மூன்றாவது..
ஆயினும் விசேஷங்கள் எல்லாவற்றிலும் 
முன்னே நிற்பது...

திருப்பைஞ்ஞீலி எனும்
தலத்தின் தலவிருட்சம் வாழை..

வாழைத் தோரணத்துடன் தான்
எல்லா மங்கல விழாக்களும்
எனில் வாழையின் சிறப்பு விளங்கும்...



வாழை இலையில்
அதுவும் தலைவாழையிலையில்
விருந்து உபசரிப்பு என்றால்
அதன் மகத்துவமே தனி..



வாழையிளந்தளிர், இலை,
அதன் பூ, காய் கனி
எல்லாமே விருந்துக்கு விருந்து ..
மருந்துக்கு மருந்து...

வாழையின் பட்டையும் உள்ளேயிருக்கும் தண்டும்
பட்டை உலர்ந்தால் அதன் நார்...
எல்லாமே மக்களுக்கானது...

வாழையின் துவர்ப்பு உடலுக்கு மிக நல்லது..

வாழைத் தண்டு
வயிற்றுப் புண்களை ஆற்றுகிறது..

வாழைத் தண்டின் சாறு
சிறுநீரக கற்களைக் கரைக்கிறது...

வாழைப் பட்டையின் சாறு
விஷ ஜந்துகளின் விஷத்தை முறிக்கின்றது..

இப்படியெல்லாம் நம்மை வாழ வைத்த
வாழையை நாம் வாழ வைத்தோமா?...

இன்றைக்கு இலை போன்ற
நெகிழிகளில் விருந்து உபசரிப்பு...

இந்நிலையில்
பாரம்பரியம் கலாச்சாரம் என்று பிலாக்கணம் பாடும்
ஆன்மீக வியாபார ஊடகங்கள்
நெகிழி இலைகளுக்குக் கட்டியம் கூறும்
விளம்பரங்களுக்கு ஆலவட்டம் வீசுவது கொடுமை..

வாழ வைத்த வாழையை மறந்து
நெகிழி இலைகளின் பின்னே
தமிழ்ச் சமுதாயம் ஓடுகின்றதென்றால்
எங்கேயிருந்து மன்னிப்பு கிடைக்கும்!?...


மீண்டும் ஊர்கள் தோறும் வாழை தழைப்பது எந்நாளோ!..
அந்நாளை எண்ணி பிரார்த்தனை செய்வோம்..

வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
- என்பார் கவியரசர்...

அப்படி வாழை இலை போல
ஒரு வஞ்சி வாழ்வின் துணை என்றால்
வாழ்க்கை முழுதும் வசந்தம் தானே!...
*** *** ***

சிவ தரிசனம்
திருமறைக்காடு
- வேதாரண்யம் -



இன்று திருவாதிரை..
ஆருத்ரா தரிசனம்..


இறைவன் - ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்..
அம்பிகை - ஸ்ரீ யாழைப் பழித்த மொழியாள்

தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - மணிகர்ணிகை, வங்க சமுத்திரம்..

ஸ்ரீ முசுகுந்த சக்ரவர்த்தி
தேவலோகத்திலிருந்த கொணர்ந்த
வேதங்கள் வணங்கிய திருத்தலம்..
வேத வனம் என்பதும் பெயர்...

அகத்தியர் பெருமான்
ஈசனின் திருமணக் காட்சியைத்
தரிசித்த திருத்தலம்..

சீதாதேவியைத் தேடிவந்த
ஸ்ரீ ராமனும் லக்ஷ்மணனும்
இங்கே வழிபட்டதாகவும்

திருமறைக்காட்டை அடுத்துள்ள

கோடியக்கரையில் நின்று
தென்திசையை நோக்கியதாகவும் ஐதீகம்...

காசியின் கங்கை பெருகி
இங்கே தீர்த்தக் கட்டமாக நிறைந்ததால்
மணிகர்ணிகா என்று பெயர்..

அப்பர் பெருமானும் ஞானசம்பந்த மூர்த்தியும்
இங்கே திருமடம் அமைத்து தங்கி
இறைவன் பேரால்
மக்கட்பணி புரிந்துள்ளனர்...

வேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கதவுகளை
திருப்பதிகம் பாடி - அப்பர் பெருமான் திறக்கவும்
திறக்கப்பட்ட திருக்கதவுகளை
திருப்பதிகம் பாடி - ஞானசம்பந்த மூர்த்தி அடைக்கவும்
கிய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம்...

ஸ்ரீ துர்காம்பிகை
திருமறைக்காடு .. 
ஞானசம்பந்த மூர்த்தி 
மதுரையம்பதிக்கு எழுந்தருளல் வேண்டுமென -

பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி
அனுப்பிய திருவோலை
இங்கு தான் பெருமானிடம் கையளிக்கப்பட்டது..

அப்போது நாளும் கோளும் நன்றாக இல்லை
என்பதை உணர்ந்த நாவுக்கரசர்
ஞானசம்பந்தரிடம் எடுத்துரைத்தார்...

அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!.. - என்று
விளம்பினார் - 
ஞானசம்பந்த மூர்த்தி..

அந்த அளவில் பாடப்பட்டதுவே
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
எனத் தொடங்கும் திருப்பதிகம்..

கோளறு திருப்பதிகம்
மலர்ந்த திருத்தலம்
திருமறைக்காடு...
***



ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

கூனிளம் பிறைசூடிக் கொடுவரித் தோலுடையாடை
ஆனிலங் கிளரைந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம்
கானலங்கழி ஓதங்கரையொடு கதிர்மணி ததும்பத்
தேனலங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந்தாரே.. (2/106)


ஸ்ரீ திருநாவுக்கரசர்அருளிய
தேவாரம்

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. (6/23)

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு

யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம் பேணில்
தாழைப்பொழில் ஊடேசென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.. (7/71)
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 08


முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதுங் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

7 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை. பகிர்ந்த திருக்குறள் , படங்கள் மற்றும் பாடல்கள் எல்லாம் அருமை.

    திருவாதிரை தரிசனம் ஆச்சு உங்கள் தளத்தில்.
    உங்கள் விஷயம் நல்லபடி ஆச்சா?
    வாழையின் பயன்களை நன்றாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
    நீங்கள் வேண்டியதை தந்து இருப்பார் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. திருவாதிரை தரிசனம் அருமை.
    அழகிய பாடல்களும், வாழைபற்றிய விடயங்களும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  4. எல்லா அமுதமும் அருமை துரை அண்ணா. ஆருத்ரா தரிசனம் என்று கொடுத்திருக்கும் வேதவனம் பற்றி அறிய முடிந்தது. நல்ல தரிசனம் கிட்டியது. கூடவே வாழையின் சிறப்பும் நல்லாருக்கு அண்ணா..

    உங்கள் பிரச்சனை நல்லபடியாகத் தீர்ந்ததா அண்ணா? தாமதத்திற்குக் காரணம் இணையமோ?? நீங்கள் முன்பு சொல்லியிருந்தது போல வேறு இடம் போய்விட்டீர்களோ?

    உங்கள் நலத்திற்குப் பிரார்த்தனைகள் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. எங்கள் வீட்டில் இருக்கும் ஒரே வாழை பூ விட்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. இங்கே வந்ததில் இருந்து வாழை இலையில் தான் சாப்பாடு. நல்ல மாற்றம் தெரிகிறது. படங்கள், பாசுரங்கள், விளக்கம் எல்லாம் அருமை. மன்னார்குடி ராஜகோபாலனின் அழகைச் சொல்லவே வேண்டாம். நடராஜர் தரிசனமும் கிடைத்தது. கோடியக்கரை இன்னும் போகவே இல்லை. பூம்புகாரும் தான்! சொல்லிண்டே இருக்கேன். எப்போக் கிடைக்குமோ? கோடியக்கரை குழகரைப் பார்க்கணும்னு ஆசை இருக்கு!

    பதிலளிநீக்கு
  7. ராஜகோபாலன் தரிசனம் செய்திருக்கிறேன். வாழையின் மகத்துவம் போற்றத்தக்கது. சுகமான பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..