நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 13, 2018

கணபதி வாழ்க 1

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு..
-: ஔவையார் :- 


ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
வையகம் வளங்கொண்டு வாழ்க...

வையகம் வளங்கொண்டு வாழட்டும்...

அதுதானே நல்ல மனங்களின் விருப்பமும்

ஆனால் -
வளங்கொண்டு வையகம் வாழ்வதற்கு எது அடிப்படை?..

நீர்... தண்ணீர்!...

நீரின்றி அமையாது உலகு!.. - என்றருளினார் திருவள்ளுவர்..

அந்த நீரையும்

தண்ணீரும் காவிரியே!.. - என்று சிறப்பித்தார் தமிழ் மூதாட்டி...

கங்கையிற் புனிதமாய காவிரி!... - என்று மெய்சிலிர்த்தார் ஆழ்வார்...

இத்தகைய சிறப்புகளை உடைய காவிரி 
சில ஆண்டுகளாக ஆவணியில் கூட செழுமையின்றிக் கிடந்தாள்...

மீண்டும் நீர் நிறைந்து பெருகியோடுவதைக் காணமாட்டோமா!..
- என்று நல்லோர் மனங்கலங்கி நின்றனர்....

இந்த ஆண்டு 
சர்வமங்கலங்களையும் அள்ளித் தருபவளாகிய காவிரி
சலசல.. என்று இருகரைகளையும் தழுவித் ததும்பிக் கொண்டிருக்கின்றாள்...


இன்று ஸ்ரீவிநாயக சதுர்த்தி..

இவ்வேளையில் காவிரிக் கரையில் நிகழ்ந்த
இனிய சம்பவம் ஒன்றினைக் காண்போம்...

அகத்திய மாமுனிவர் குடகு மலையில் தவமிருந்த சமயம்...   

நதி கன்னியர் ஒன்று கூடி உலா கிளம்பினர்.
அவர்களுள் துள்ளலும் துடிப்புமாக இருந்தவள் காவிரி. 

விதியின் விளையாட்டால்,
இளம் மங்கையரின் ஆட்டமும் பாட்டும்
மகாமுனிவரின் தவத்தைக் கெடுத்தன.

அகத்தியர் விழித்து நோக்கினார். 

காவிரி - ஒருத்தியைத் தவிர, மற்ற எல்லாரும் திகைத்து ஒதுங்கினர். காவிரியோ - அகத்திய மாமுனிவரின் வடிவத்தைக் கண்டு சிரித்தாள்.  

அவளது அறியாமையை உணர்ந்த முனிவர்,  அவள் திருந்தவும் அவளால் வையகம் வளங்கொண்டு பொருந்தவும் திரு உளங்கொண்டார். விளைவு - 

அகத்திய மாமுனிவரின் கமண்டலத்தில் நீராக - சிறைப்பட்டாள் காவிரி!..

அதைக் கண்டு, அஞ்சி நடுங்கிய மற்ற கன்னியர்கள்
ஓடிச்சென்று - நின்ற இடம் இந்திர சபை.

தேவேந்திரன் மற்றவர்களுடன் கூடி ஆலோசித்தான்...

நான்முகன் கூறினார். 

காவிரிப் பிரச்னை தீர வேண்டும் என்றால்  - 
கணபதியின் திருவடிகளைச் சரணடையுங்கள்!..

அவ்வளவு தான்... விழுந்தடித்துக் கொண்டு ஓடிய தேவர்கள் -
உமை மைந்தனின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கினர்... 

அஞ்சேல்!.. - என்று அபயம் அளித்தார் ஐங்கர மூர்த்தி...

அதன்பின்  - ஒரு சுபயோக சுப தினத்தில், காக்கை வடிவங் கொண்டு - அகத்தியரின் அருகிருந்த கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார் - பெருமான்...


சிறைப்பட்டுக் கிடந்த காவிரி - சிரித்த முகத்துடன் வெளிப்பட்டாள்...

தம்மை மீறி ஒரு காக்கை  இச்செயலைச் செய்வதா!..
- எனக் கோபங்கொண்ட அகத்தியர், தவம் கலைந்து எழுந்தார். 

அந்தப் பொல்லாத காக்கையோ - 
இளம் பாலகனாக மாறி, கைக்கெட்டும் தூரத்தில் நின்றது!..

யாரடா.. நீ .. மாயக்காரன்!.. - என்று தாவிப் பிடித்த அகத்தியர் 
இத்தனை தலைக்கனமா உனக்கு!..'' - என்றபடி தலையில் குட்டினார்.

குதுகலத்துடன் சிரித்த விநாயகர் - தன்னுருவம் காட்டி மறைந்தார்!..

அவவளவு தான்!.. 
தடுமாறிப் போனார் தவமுனிவர். 
ஒருகணம் சிந்திக்காமல் செயல் பட்டதை உணர்ந்தார்.. கண்ணீர் பெருகியது...

..ஐயனே!.. என்பிழை பொறுத்தருள்க!.. - எனப் பணிந்தார்...

அகத்தியரே!.. முதலில் காவிரியை வாழ்த்தி விடை கொடுத்தருளுங்கள்.
பெருக வேண்டிய காவிரியை எதற்காகவும் அடைத்து வைக்க வேண்டாம்..
அவளும் அவளால் இந்த அவனியும் பெருமை கொள்ளட்டும்!.. 

- என்று, விநாயகப் பெருமான் திருவாய் மலர்ந்தார்...

அதன்படி,

காவிரி மடந்தாய்!..
துடுக்குடன் செருக்குற்றுத் திரிந்தாய்.. 
அதனால், கமண்டலத்துள் அடைபட்டுக் கிடந்தாய்..
இன்று ஐங்கரன் அருளால் சுதந்திரம் அடைந்தாய்!.. 

அன்பும் அருளும் பெற்றுப் பொலிந்தாய்!.. 
இனி, இத்தமிழகத்திற்கு நீயும் ஒரு தாய்... 
என்னும் பெருஞ்சிறப்பினை அடைந்தாய்!.. 
நலந்திகழ நல்வழியில் நடந்தாய்!.. 

நடந்தாய் வாழி.. காவிரி நங்காய்!.. 
நாடெங்குமே சிறக்க 
நன்மையெல்லாம் செழிக்க.. 
நடந்தாய் வாழி காவேரி!.. 

- என்று, காவிரிக்கு மகிழ்வுடன் விடை கொடுத்தார் அகத்தியர்..

ஐங்கர மூர்த்தியையும் அகத்திய முனிவரையும்
வலம் செய்து வணங்கிய காவிரி தன்வழி நடந்தாள்... 

ஆயினும், அகத்தியருக்கு மனம் ஆறவில்லை. 
முதற்பிள்ளையின் உச்சியில் குட்டிய சோகம் தீரவில்லை!..  

காவிரி சென்ற வழியிலேயே நடந்தார்... 
அந்த வழியெல்லாம் மங்கலம் விளைந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தார்...  

பற்பல திருத்தலங்களைத் தரிசித்தபடி சென்ற அகத்திய மகரிஷிக்கு - 
கணபதியைக் கண்டு கைகூப்பித் தொழும் வேளையும் வந்தது...

காவிரியின் வடகரையில் மாஞ்சோலைகள் 
அடர்ந்திருந்த வனப்பகுதியில் விநாயகப் பெருமான் தரிசனம் அளித்தார்... 

ஆனந்தக் கண்ணீர்  பெருகி வழிய,
பணிந்து வணங்கினார் - அகத்திய மாமுனிவர்...

கவலை வேண்டாம்!.. பிழை பொறுத்தோம்!.. - விநாயகர் புன்னகைத்தார்..

ஆனாலும்.. 
இளம் பாலகனாக நின்ற உம்மை அறியாமல் 
பாலன் என்றும் பாராமல், பலங்கொண்டு உச்சியில் குட்டினேன்..
பெருந்தவறு எனும் பிழை புரிந்தேனே.. ஸ்வாமி!..

அகத்தியர் மனம் கசிந்து நின்றார்...

ஆயினும் - தாயினும் நல்லாளாக - காவிரி வளம் கொடுக்கின்றாள்!..
மண்ணும் மக்களும் நலம் பெறுகின்றனர்!.. இதுவே நமக்கு மகிழ்ச்சி!.. 
உயிர்கள் இன்புற்று வாழ்வதற்கு நாம் எதையும் ஏற்றுக் கொள்வோம்!..

இனி.. இது முதற்கொண்டு நீர் - எம்மை வழிபடும்போது
உமது சிரசில் குட்டிக் கொள்ளும்.... இதுவே மிகவும் உகப்பானது!...

- என்று சொல்லி - அகத்தியரை வாழ்த்திய
விநாயகப் பெருமான் தன்னுரு கரந்தார்...

ஸ்ரீ மகாகணபதி
கணபதி அக்ரஹாரம்
இப்படி, அகத்திய மாமுனிவர், விநாயகப் பெருமானை
வணங்கி நின்ற திருத்தலம் தான்  - கணபதி அக்ரஹாரம்!.. 

அகத்திய மாமுனிவரைக் குருவாகக் கொண்டுதான் 
நாமும் தலையில் குட்டிக் கொண்டு பிள்ளையாரை வணங்குகின்றோம்!..

கணபதி ஸ்தலங்களில் சிறப்புடையதும் ,
அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான பெருமையுடைய - இத்தலத்தின் பெருமையை உணர்ந்த கெளதம மகரிஷி கணபதியை பூஜித்து  - நித்ய மங்கல ஸ்வரூபத்தினை - காவிரிக்குப் பெற்றுத் தந்தார்.

விநாயக சதுர்த்தி அன்று, 
கணபதி அக்ரஹாரத்தின் மக்கள் அனைவரும் தத்தம்
இல்லங்களில் சதுர்த்தி வழிபாடு செய்யாமல் 

கணபதியின் ஆலயத்தில் ஒன்று கூடி, அங்கேயே பெருமானுக்கு நிவேத்யங்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்து மகிழ்கின்றனர்... 

விநாயக சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் பத்து நாள் திருவிழாவாக நிகழ்கின்றது. நாளும் காலை மாலை வேளைகளில் - திருவீதி உலா சிறப்புடன் நிகழ - ஒன்பதாம் நாள் தேரோட்டம். 

கண்ணாடிப் பல்லக்கில் வீதி உலா, ஊஞ்சல் சேவை மற்றும் மஞ்சள் நீராட்டு என மங்கலகரமாக திருவிழா இனிதே நிறைவுற - ஸ்ரீவிநாயகப்பெருமான் ஆஸ்தான பிரவேசம் கொள்வார்.

ஓவியம் S. இளையராஜா.. 
கணபதி அக்ரஹாரம் - தஞ்சையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயங்குகின்றன. கண்டியூர், திருவையாறு , திருப்பழனம், திங்களூர் - தலங்களை அடுத்து உள்ளது.

கும்பகோணம் - திருவையாறு பேருந்துகள் கணபதி அக்ரஹாரம் வழியாகத் தான் இயங்குகின்றன...

நலந்தரும் விநாயக வழிபாடு..
நாயகனைத் தொழுவோம் அன்போடு!.....


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப் 
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத 
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும் 
சத்தி தரும் சித்தி தரும் தான்..
-: பழம்பாடல்:-

ஸ்ரீ முக்குறுணிப் பிள்ளையார்
மதுரை
ஸ்ரீ ஸ்வேத விநாயகர்
திருவலஞ்சுழி
திருவலஞ்சுழி
ஸ்ரீகள்ள வாரணப் பெருமான்
திருக்கடவூர்
ஸ்ரீ மகாகணபதி
பெரிய கோயில் - தஞ்சை
ஸ்ரீ வெள்ளைப்பிள்ளையார்
தஞ்சாவூர்
ஸ்ரீ கணபதி - திருச்செங்காட்டங்குடி..
வாதாபியிலிருந்து பரஞ்சோதியார்
கொணர்ந்த திருமேனி
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!..

கணபதியைத் தொழுவோம்!..
நலங்களெல்லாம் பெறுவோம்!..

ஓம் கம் கணபதயே நம:
ஃஃஃ

26 கருத்துகள்:

  1. காலை வணக்கம், மற்றும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கும் நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கணபதி அருளால் இந்த வருடம் தமிழகம் காவிரிக் கருணையில் குளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      காவிரி நிறைந்திருப்பது மகிழ்ச்சி...

      வாழ்க நலம்..

      நீக்கு
  3. படங்களும், விவரங்களும் சிறப்பு. உங்களுக்கு அந்த ஊரில் கொழுக்கட்டை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...

      தொகுப்பு அங்காடிகளில் இப்போது எல்லாமும் கிடைக்கின்றது...

      கேரளத்து அரிசிப் பொடிகள் சற்று இறுக்கமாக இருக்கும்...

      அதில் ஒரு சந்தேகம் உள்ளது..

      நேற்றைக்கு தமிழகத்தில் இருந்து வரும் அரிசிப் பொடி வாங்கி இருக்கிறேன்...

      கொழுக்கட்டை செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்...

      உடுப்பி உணவகங்களில் கொழுக்கட்டை கிடைக்கக் கூடும்..

      ஆனாலும்,
      நாமே செய்து பிள்ளையாரப்பனுக்கு படைப்பது தானே ஆனந்தம்...

      நீக்கு
  4. ஓவியம் அசர வைக்கிறது...

    இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்அகள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இனிய நன்னாளில் அழகிய தகவல்களுடன் இனிய பதிவு ஐயா...

    மிக மகிழ்ச்சி...

    கணபதி அருள் என்றும் அனைவருக்கும் கிடைக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்...

      நீக்கு
  6. பல்வேறு படங்கள் செய்திகளுடன் நிறைவாக இடுகையை எழுதியிருக்கீங்க.

    'நடந்தாய் வாழி காவேரி' என்ற வரிகளைப் படித்தாலே சீர்காழியின் கம்பீர குரல் காதுகளில் ஒலிக்கிறது.

    ஓவியர் இளையராஜாவின் ஓவியம் மிக அருமை. இத்தகைய பெண்களை இப்போது ஓவியங்களில்தான் பார்க்கமுடியும். ஹாஹாஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,

      சீர்காழியாரின் வெங்கலக் குரலுக்கு ஈடு இணை ஏது!...

      பதிவையும் ஓவியத்தையும் ரசித்து கருத்தளித்ததற்கு
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  7. இன்று கொழுக்கட்டை செய்தீர்களா? அங்குதான் எல்லாமே கிடைக்குமே (செய்வதற்கான பொருட்கள், நேரத்தைத் தவிர ஹாஹா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> இன்று கொழுக்கட்டை செய்தீர்களா?... <<<

      அதை விட வேறு வேலை ஏது!..

      இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில்!...

      கணேசா சரணம்!...

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஆகா...

      வாழ்த்துகள் மட்டும் தானா!..
      கொழுக்கட்டையெல்லாம் கொண்டு வரவில்லையா!...

      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஜி. புகைப்படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
    படங்கள், செய்திகள் பாடல்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. கணேசருக்கும், காவிரிக்கும் உள்ள தொடர்போடு உங்கள் பதிவு சிறப்பு.
    எங்கள் பிறந்த வீடு கணபதி அக்ரஹாரத்தை பூர்வீகமாக கொண்டது.
    விசேஷமான பிள்ளையார் படங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...
      எனக்கொரு சந்தேகம் இருந்தது... இப்போது சரியாயிற்று...

      தாங்களும் தஞ்சை மாவட்டம் தான்.. ஆகா!..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. நம் பதிவுலக நண்பர் ஜீவியின் சொந்த ஊர் கணபதி அக்கிரகாரம் கல்லணையில் அகத்தியரின் கமண்டலமும் அக்கமண்டல சிலையை காகம்தட்டி விட்ட சிற்பமொன்று இருந்தது இழுத்த இழுப்புக்கு வருபவர் விநாயகர்நான் ஓவியம் வரைவதைச் சொன்னேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      கல்லணையில் அப்படியான சிற்பம் ஒன்று இருக்கின்றது...
      தங்கள் வருகையும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. ஸாரி அண்ணா விநாயகச் சதுர்த்தி அன்று வர முடியலை நேற்றும் ...
    வேறு விட்ட பதிவுகளை நேரம் கிடைத்த போது பார்க்கப் போனதால்...நேற்று இரவு பதிவு வாசித்துவிட்டேன்....ஆனால் கருத்து போடும் முன் 9 மணிக்கு மேல் என் நெட் என்னைப் போல் சாமியாடிடும் தூங்கிடுச்சு...

    படங்கள் எல்லாம் அருமை. அப்பெண் பூ தொடுத்து பிள்ளையார் படம் அழகு...

    நிறைய தகவல்கள். குறிப்பாக காவிரிக்கும் பிள்ளையாருக்குமான தொடர்பு...மற்றும் கணபதி அக்ரஹாரம் எல்லாம் அறிய முடிந்தது...

    பதிவு வழக்கம் போல் அருமை அண்ணா

    இனி மதியம் அல்லது மாலைதான்...வலைப்பக்கம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அழகான படங்கள்.

    பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..