நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 08, 2018

நாகை அதிபத்தர்

பொன்னி நதி நலம் கொழிக்கும் சோழ வளநாட்டில்
காவிரியின் கரைகளில் தேவாரப் பதிகம் பெற்று விளங்கும்
திருத்தலங்களுள் திருநாகைக் காரோணமும் ஒன்று...

புண்டகரீக முனிவரை தன்னுடன் அணைத்து முக்திப் பேறு நல்கியதால்
எம்பெருமானின் திருப்பெயர் - காயாரோகணேஸ்வரர்...

இந்நாளில் நாகப்பட்டினம் என வழங்கப்படும் தலம் இதுவே..

நாகப்பட்டினம் காவிரியின் தென்கரைத் திருத்தலம் ஆகும்...
மிகப் பழமையானது. பல்வேறு புராண வரலாறுகளைக் கொண்டது.

நாகராஜன் வழிபட்ட சிறப்புடையதால் நாகப்பட்டினம் என்பதும், 
ஊழிக் காலத்தில் அனைத்தும் இங்கு ஒடுங்குவதால் 
இத்தலம் சிவராஜதானி என்பதும் தலபுராணக் குறிப்பு...

திருத்தலம்
திருநாகைக் காரோணம்
(சப்த விடங்கம் ஏழனுள் ஒன்று)


இறைவன் - ஸ்ரீகாயாரோகணேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ நீலாயதாக்ஷி..

ஸ்ரீ சுந்தர விடங்கர்
அல்லியங்கோதை
பாராவாரதரங்க நடனம்..
வீசி நடனம் என்றும் சொல்வர்..

தீர்த்தம் - புண்டரீக தீர்த்தம், வங்கக் கடல்..
தல விருட்சம் - மா..

காஞ்சி, கும்பகோணம், நாகை ஆகிய மூன்று தலங்களில் மட்டுமே -  காயாரோகணர் என்ற திருப்பெயருடன் - ஈசன் திகழ்கின்றனன்.

கருந்தடங்கண்ணி எனப் புகழப்படும் அன்னை ஸ்ரீ நீலாயதாக்ஷியின் சந்நிதி சக்தி பீடங்களுள் ஒன்றென விளங்குவது.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, ஆரூர் கமலாயதாட்சி, நாகை நீலாயதாட்சி - என்பது சொல்வழக்கு..


திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் 
- என, மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம்...

சுந்தர மூர்த்தி நாயனார் - குதிரை, நவரத்னங்கள், பொன்மணிகள், முத்து மாலை, பட்டு ஆடைகள் முதலிய ஐஸ்வர்யங்களை வேண்டிப் பெற்ற தலம்...

சோழர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய திருத்தலம்...

அத்துடன் -
அதிபத்தர் எனும் மீனவப் பெருமகன் செயற்கரிய செய்து
உய்வடைந்த திருத்தலம்...


சிவ மரபினில் - செயற்கரிய செய்த பெருமக்களை
நாயன்மார்கள் என்று சிறப்பித்தனர் பெரியோர்.

அந்த வகையில் சைவம் குறிக்கும்  நாயன்மார்கள் அறுபத்து மூவர்.  

அத்தகைய பெருமக்களுள் ஒருவர் - அதிபத்த நாயனார்...

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்!.. 
- என்று, திருத் தொண்டர் திருத்தொகையில் 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் போற்றுகின்றார். 

ஏன் !.. எதனால்!.. 

யானைகளையும் மணிகளையும் முத்துக்களையும் மயிற்தோகைகளையும் அகில் சந்தனம் மிளகு ஏலம் - என இவற்றை வாங்குதற் பொருட்டும் உயர் இன குதிரைகள், கண்கவர் பட்டுத் துகில்  இவற்றை விற்பதன் பொருட்டும் எழுந்த ஒலியினால் மகிழ்ந்திருந்தது  - நாகை.

வலைகளைக் கடலுக்கு இழுத்துச் செல்வோர்கள் எழுப்பிய ஒலியினாலும் கடலினின்று கரைக்கு ஏற்றிய வெண்ணிறச் சங்குகளையும் சிறந்த மீன்களை விலை கூறி விற்பவர்கள் எழுப்பிய ஒலியினாலும் நிறைந்திருந்தது - நாகை.

இத்தகைய அரும்பெரும் சிறப்புகளை உடைய நாகையின் கடலோரத்தில் செழுமையுடன் விளங்கிய குப்பங்களுள் ஒன்று நுளைப்பாடி.

அங்கே - மீனவப் பெருங்குலத்தில் பிறந்தவர் - அதிபத்தர்.

அதிபத்தர்  இளமை முதற்கொண்டே சிவபக்தி உடையவராக விளங்கினார்... 

நாகையில் ஆலயம் கொண்டு விளங்கும் பெருமானிடம் அளவற்ற அன்பு கொண்டு நாளும் பல நல்லறங்கள் புரிந்தார்...  

தனக்கு விதிக்கப்பட்ட வாழ்கையினின்று வழுவாது நேர்மையுடன்  தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தார்...

பல மீனவக் குடும்பங்களுக்குத் தலைவராக விளங்கினார் அதிபத்தர்...

வலை வீசிப் பிடித்த மீன்களைக் குவித்து -  அவற்றைத் தரம் பிரித்து - 
நாடி வருவோர்க்கு நியாயமாக விற்பனை செய்து, 
நேரிய வழியில் பொருளீட்டி பெருஞ்செல்வத்தினை உடையவராய் - 
அது கொண்டு தன்னைச் சார்ந்தவர் பலரையும் ஆதரித்து 
அதனால் அன்பிலும் பண்பிலும் உயர்ந்தவராய் விளங்கினார்.


நாளும் தன் கூட்டத்தினருடன் கடலோடி வலை வீசி மீன் பிடிக்கும் போது - வலையினில் அகப்படும்  முதல் மீனை சிவார்ப்பணம் என்று 
கடலிலேயே விட்டு விடுவது அவரது பழக்கமாக இருந்தது. 

அது சாதாரண மீனாக இருந்தாலும் சரி.. உயர்தர மீனாக இருந்தாலும் சரி!.. 

மீன் வளம் அதிகமானாலும் குறைந்தாலும் 
தனது பழக்கத்தில் வழுவாதவராக விளங்கினார் - அதிபத்தர்.

இளமையிலிருந்து இவரைப் பற்றி அறிந்திருந்த 
உற்றாரும் மற்றோரும் இவரது பக்தியைக் கண்டு வியந்து  - 
நம் குலத்தில் இப்படியோர்  மகன் பிறக்க என்ன தவம் செய்தோமோ!.. என்று மகிழ்ந்திருந்தனர்.

ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க முனைந்தது எல்லாம்வல்ல சிவம்.

அதன் விளைவு - கடலில் மீன் வளம் குறைந்தது. 

விரிந்து பரந்து விளங்கிய கடலில் நீரோட்டம் உணர்ந்து 
ஆங்காங்கே சென்று வலைகளை வீசினாலும் - 
ஒற்றை மீன் மட்டுமே வலையில் கிடைத்தது.

அச்சமயத்தில் அந்த மீனையும் 
சிவார்ப்பணம் என்று கடலில் விட்டு விட்டு 
வெறும் கையோடு கரைக்குத் திரும்பும்படி ஆயிற்று. 

இதனால் வளங்கொழித்து விளங்கிய
மீனவர் குடும்பங்கள் வறுமையில் வாடின. 

தனது பக்தியை சற்றும் விட்டுக் கொடுக்காத அதிபத்தர் - 
தனது கைப் பொருளைக் கொண்டு - 
தன்னைச் சார்ந்திருந்த மக்களை வாழவைத்தார். 

இதை அறிந்த ஏனைய குப்பத்தினர் - 
ஏளனஞ்செய்து எள்ளி நகையாடி மகிழ்ந்தனர்.

இதனால் எல்லாம் மனந்தளராத
அதிபத்தர் வழக்கம் போல கடலுக்குச் சென்று வலை வீசினார். 

அன்று வழக்கத்துக்கு மாறாக -  தங்க மீன் ஒன்று வலையில் சிக்கியது.  

பசும் பொன்னாலும் ஒளி மிக்க மணிகளாலும் ஆனதோ - இது!.. 
- என காண்பவர் திகைக்கும் வண்ணமாக இருந்தது அந்த மீன்.

பல நாள் பஞ்சத்தில் தவித்திருந்த மீனவர்கள் - 
இன்றுடன் நம் கவலைகள் எல்லாம் தீர்ந்தன!.. 
- என ஆனந்தம் கொண்டனர்...

இந்த மீனுக்கு ஈடாக இவ்வுலகில் யாதொன்றும் இல்லை!.. 
- என, அந்தப் பொன் மீனைக் கையிலேந்தி மகிழ்ந்தார் அதிபத்தர் . 

இப்பொன் மீன் எம்மை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க!.. 
- என்று, வழக்கம் போல அதனைக் கடலில் விடுதற்கு முனைந்தார். 

உடனிருந்த மீனவர்கள்,
வறுமையால் தளர்ந்திருக்கும் வேளையில் இதனைக் கடலில் விட வேண்டாம்!.. -  எனக் கூறித் தடுத்தனர். 

ஆனால் -
சிவம் எனும் செம்மையில் ஒன்றியிருந்த அதிபத்தர்
சிவார்ப்பணம் என்று சொல்லி, அந்தத் தங்க மீனைக் கடலில் விட்டு விட்டார். 


அந்த வேளையில் - அவரது பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அம்பிகையுடன் விடை வாகனத்தில் திருக்காட்சி நல்கி முக்தி அளித்தார்.

செயற்கரிய செய்வார் பெரியர்  - எனும் வேத வாக்கின் படி - பின்னாளில் அதிபத்தரைப் போற்றி வணங்கினார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

நாமும் கைகூப்பி வணங்கிட -  நாயன்மார்களுள் ஒருவராக இடம் பெற்றார் அதிபத்தர்.

அதிபத்தர் குருபூஜை விழா - ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரம். 
அதன்படி நேற்று மாலை (7/9) நாகையில் அதிபத்தர் குருபூஜை நிகழ்ந்தது..

அதிபத்தர் உற்சவராக ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளி, 
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார். 

அப்போது மீனவர்கள் - தங்க வெள்ளி மீன்கள் இரண்டினை 
வலையில் வைத்து கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்வர்.

அதிபத்தர் வலையில் கிடைத்த தங்க மீனை
சிவார்ப்பணம் செய்து வழிபடுவார்...

அந்த வேளையில்  சிவபெருமான் ரிஷப வாகனத்தில்  திருக்காட்சி அளிக்க மகா தீப ஆராதனை நிகழும்...

நேற்று நிகழ்ந்த வைபவத்தின் திருக்காட்சிகள்
இன்றைய பதிவில்...

காட்சிகளை வழங்கிய
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்க்கு
மனமார்ந்த நன்றி...




அதிபத்தர்
கடலுக்குச் செல்லும் அதிபத்தர்
ஈசனுக்குச் சமர்ப்பிக்கப்படும் தங்க மீன்
முக்தி நலம் பெற்ற அதிபத்த நாயனார்
நாகை கடற்கரையில் நிகழும்
இந்த விழாவின் போது மட்டுமே தங்க மீனை பார்க்க முடியும்.

அதிபத்தர் வாழ்ந்த நுளைப்பாடி இன்று நம்பியார் நகர் எனப்படுகின்றது.


ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி திருக்கோயிலில் 
அதிபத்த நாயனாருக்கு சந்நிதி உள்ளது...

அதிபத்த நாயனார் போல 
நம்மால் வாழ இயலாவிடினும்  - 
உண்ணும் போது முதற்கவளத்தினை 
சிவார்ப்பணம் செய்து வழிபடுவோம்.
சீர் கொண்ட சிவம் சிந்தையில் சுடராக நிற்கும்!..

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்!..


கற்றார் பயில்கடல் நாகைக் காரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேல்நெடுங்கண்ணி வியன்கரமே
நற்றாள் நெடுஞ்சிலை நாண் வலித்தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவகம் என்னைகொல் செப்புமினே..(4/103)
-: திருநாவுக்கரசர் :-

அதிபத்தர் திருவடிகள் போற்றி!.. போற்றி!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

21 கருத்துகள்:

  1. புராண நிகழ்வுகள் நமது வாழ்வுப் பாதையை நெறிபடுத்தவே... வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. ​நாகை.

    எங்கள் சீனியர் ஆ'சிரி'யர்களின் ஊர்!

    அதிபத்த நாயனார் புராணம் படித்து இன்புற்றேன். பொன்மீனை கடலில் விட்டதும் அவருக்கு விண்ணுலக முக்தி கிடைத்தது. வறுமையில் வாடிய மீனவ மக்களுக்கு என்ன கிடைத்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிபத்தரின் முக்திக்குப் பின்னர் மீன் வளம் எப்போதும் போல் இருந்து மீனவர்களை வாழ வைத்திருக்கும். இதெல்லாம் சொல்லிப் புரிய வேண்டியதில்லையே! :)

      நீக்கு
    2. வறுமையிலும் செம்மை, இறை பக்தி. இறைவன் கைவிடமாட்டான் என்னும் நம்பிக்கை இவற்றைச் சொல்வதே அதிபத்தரின் சரிதம் நமக்குச் சொல்லும் நீதி!

      நீக்கு
    3. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வினாக்களுக்கு கீதாக்கா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்...

      அதுவே எனது கருத்தும்..

      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. ஸ்ரீராம்... அதிபத்தரின் பக்தியைச் சோதிக்க மீன்வளம் இல்லாது படைத்தான் ஆண்டவன். பத்தியின் வைராக்யத்தைக் கண்டதும் மீண்டும் மீன்வளம் கொழித்திருக்கும். நாயனாரின் தொடர்பு இருந்ததால் அவர் கூடச் சேர்ந்தவர்களுக்கும் விண்ணுலகம் கிட்டியிருக்கும் என்பதில் ஐயமுண்டோ?

      நீக்கு
    5. அன்பின் நெ.த..

      தங்களுடைய கருத்து மிகவும் அருமை...

      அன்பிற் சிறந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் நமக்கு நல்வழி காட்டவே இப்பூவுலகில் உதித்தனர்...

      அவர்களுடன் வாழும் பேறு பெற்ற மக்கள் எத்தனை புண்ணியசாலிகள்...

      ஆனால் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் அந்த அன்பிலிருந்து நழுவிப் போனார்கள்...

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அதிபத்தர் பற்றிய சிறப்பான தகவல்கள். படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மிக அருமை. நாகைக்கு 20 வருடங்கள் முன்னால் போனது. உங்கள் பதிவு மீண்டும் செல்லத் தூண்டுகிறது. மிக அருமையான விளக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      மிகவும் அமைதியான சூழ்நிலை..அவசியம் நாகை சென்று வாருங்கள்..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நாகைப் புராணம் என்று எழுத்தைப் பார்த்ததுமே எனக்கு உ.வே சுவாமிநாதய்யர் அவர்களின் 'என் சரித்திரம்'தான் ஞாபகத்துக்கு வந்தது. அங்கு இந்தப் புராணத்தைப் பற்றிய குறிப்புகள் வரும்.

    கீசா மேடம் இதை மறந்துவிட்டது ஏனோ.

    பதிலளிநீக்கு
  7. பொன்னி என்றொரு நதியோ... புதுசா இருக்கே. தங்கமீன் கதை கேள்விப்பட்டிருக்கிறேன். சாம்பிராணிப் புகையுடன் எடுத்த படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஞானி..

      பொன்னி என்பது காவிரி நதியின் மற்றொரு பெயர்...

      தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. இதுவரை அறியாத தங்கமீன் கதை...ஓம் நாசிவாய...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..