நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 15, 2017

நல்வாழ்த்துகள்..

அக்கா.. அக்காவ்!..

வாம்மா.. தாமரை.. வா.. எப்படியிருக்கே?..



நல்லாயிருக்கேன்.. அக்கா!.. மாமாவுக்குத் தான் ரெண்டு நாளா ஜூரம்.. நல்லவேளை சாதாரண காய்ச்சல் தான்!..

என்னமோ..ம்மா.. எல்லாரும் நல்லபடியா இருக்கணும்... வீட்டுக்கு வீடு கஷ்டம்.. வருத்தம்...சோதனை .. ன்னா மனசு ரொம்பவும் கஷ்டப்படுது...

அக்கா.. நேத்து கூட டெங்கு காய்ச்சல்..ல இருந்து தப்பிக்கிறதுக்கு பொது சுகாதார வழிமுறைகள்..ன்னு ஒரு கையேடு கொடுத்துருக்காங்க.. பக்கத்து வீட்டுப் பையன் வாங்கி வந்திருந்தான்.. கூடவே நிலவேம்பு பொடியும் கொடுத்தாங்களாம்..



யாரு கொடுத்தாங்களாம்!..

ஏதோ சிவனடியார் திருக்கூட்டம்..ன்னு போட்டிருந்தது.. அத்தோட அப்பர் பாடுனது.. அவரு பாடுனது.. இவரு பாடுனது..ன்னு தேவாரப் பாட்டு எல்லாம் அச்சடிச்சு கொடுத்திருக்காங்க... இதப் பாடினா ஜூரம் ஓடிப் போய்டும்..ன்னு வேற சொல்லியிருக்காங்க...

நல்லது தானே!..

என்னா நல்லது?.. ஊர் தீப்புடிச்சி எரிஞ்சப்போ யாரோ ஒரு ராஜா தில்லானா வாசிச்சானாம்.. அந்த மாதிரி.. எங்கே பார்த்தாலும் கொடுமையா விஷக் காய்ச்சல் ஜூரம் ..ன்னு இருக்கிறப்போ தேவாரம் பாடுங்க... திருநீறு பூசுங்க..ன்னா என்னக்கா அர்த்தம்.. முட்டாள் தனமா இருக்கா.. இல்லையா!...

இதுல.. என்னம்மா முட்டாள் தனம் இருக்கு?..

ஜூரம் வந்துட்டா கோயிலுக்குப் போறதா?.. டாக்டர்..கிட்ட போறதா?..

கோயிலுக்குப் போறது மனசு நல்லாயிருக்கணும் ..ங்கறதுக்கு..
ஆஸ்பத்திரிக்குப் போறது உடம்பு நல்லாயிருக்கணும் ..ங்கறதுக்கு...

அந்த டாக்டர்களே தெய்வத்தை நம்புறப்போ -
நாம தெய்வத்துக்கிட்ட நம்பிக்கை வைக்கிறதுல என்ன தப்பு?..


அதுக்காக வியாதி எல்லாம் கோயிலுக்குப் போறதுனாலயும் தேவாரம் பாடுறதுனாலயும் விலகிப் போகும்...ன்னு சொன்னால்..

அலைச்சல் மிச்சம்.. உளைச்சல் மிச்சம்...

என்னக்கா... எதுகை மோனையா?..

இல்லடா.. தாமரை.. இன்றைக்கு மருத்துவம் என்ன நிலைல இருக்கு..ன்னு நான் சொல்லி நீ தெரிஞ்சிக்க வேண்டியதில்லை.. சமீபத்தில தவறான சிகிச்சையால கர்ப்பிணி ஒருத்திக்கு கரு கலைஞ்சதோட அதிக வீரியமான மருந்தினால குடல் பகுதியும் அழுகிப் போனதாக செய்தியெல்லாம் வந்ததே!..

அதனால???..

கோயிலுக்குப் போகணும்..ன்னு சிரத்தையா இருக்கிறவங்க தன்னை சுத்தமா வெச்சுக்குவாங்க... தன்னுடைய இருப்பிடத்தை சுத்தமா வெச்சுக்குவாங்க...

அதுக்கும் இதுக்கும் என்னக்கா சம்பந்தம்!?..

இருக்குதே!..

என்ன அது?...

ஆறு குளம் குட்டை - இதெல்லாத்தையும் அழிக்க மாட்டாங்க.. இயற்கையை காப்பாத்துறதுல ஆர்வமா இருப்பாங்க!.. 
நீ தட்டான் பூச்சி பார்த்திருக்கியா!..

ஓ!..



அந்தத் தட்டான் ஒரு நாளைக்கு பல நூறு கொசுக்களை குளங்குட்டைகள்..ல ஒழிச்சுக் கட்டிடுதாம்.. 



கொசு முட்டையிட்டா அதுகளையெல்லாம் அந்தத் தண்ணியில கிடக்கிற தவளைகள் தின்னு தீர்த்துடுதாம்...

அட!..

என்ன ஆச்சர்யமா இருக்கா!.. ஈக்குருவி...ன்னு ஒன்னு.. கோடியக்கரை பட்டுக்கோட்டை பக்கமெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.. 


Fly Catcher
ஆனா அதுங்க.. இப்போ இல்லை.. சிட்டுக் குருவிய மாதிரி.. காணாமப் போயிடுச்சுங்க!..

அதென்ன அக்கா ஈக்குருவி?..

Fly Catcher.. ன்னு ஆங்கிலப் பெயர்.. ஈ கொசு மாதிரியான சின்ன சின்ன பூச்சிகளைக் காலி பண்றது தான் இதுங்களுக்கு வேலை...


Fly Catcher - India
கரிச்சாங்குருவி மாதிரி .. ஆனா செந்தூர நிறமா இருக்கும்.. வால் நீளமா இருக்கும்... அப்போ இதுங்களைப் பற்றி அதிகமா தெரியலை.. இப்போ கூகிள் வழியா தெரிஞ்சுகிட்டேன்.. வட இந்தியாவுல பலவகையா நெறைய இருக்குதாம்.. மத்தியப் பிரதேசத்தின் மாநிலப் பறவையாம் இது.. இலங்கையிலும் காணப்படுதாம் இந்தப் பறவை..

இந்த சேதியெல்லாம் எனக்கு புதுசு அக்கா!..

இந்தப் பறவைகளுக்கு மரங்கள் அடர்த்தியான பகுதி தான் வாழ்விடங்கள்.. ஆனா நமக்குத் தான் மரங்களைக் கண்டாலே பிடிக்காதே...

..... ..... ..... .....!..

இயற்கையில ஒன்னுக்கொன்னு தொடர்பிருக்கு.. அதை மனித சமூகம் தான் உடைச்சது... அதனோட பலனைத் தான் இப்போ அனுபவிக்கிறது..

பக்தியினால மனம் சுத்தமானது.. சுற்றுச் சூழல் பத்திரமானது.. எங்காவது ஒரு சில தவறு நடந்திருக்கலாம்... அதுக்காக கோயிலாவது குளமாவது.. ன்னு குற்றம் சொல்லக் கூடாது...

பகுத்தறிவு ..ன்னு வந்ததுக்கு அப்புறம் தான் ஆறு குளம் காடு மலை எல்லாமே காணாமப் போனது!..

நம்ம மக்களையும் சும்மா சொல்லக் கூடாது.. 
கோயிலுக்குப் போனா அங்கே அசுத்தம் பண்றது தான் முதல் வேலை..

கோயில் குளத்து...ல ஈரத்துணிகளை போட்டு வர்றது... 
கொய்யாப் பழத்துல விளக்கேத்துறேன்.. கொடுக்காப் புளியில விளக்கேத்துறேன்... ன்னு சுற்றுப் புறத்தைக் கெடுக்கிறது...

கோயில்..ல உட்கார்ந்து கண்டதையும் தின்னுட்டு அங்கேயே போட்டுட்டு வர்றது..

இப்படியெல்லாம் பண்றதுனாலே மத்தவங்களுக்கும் இடைஞ்சல்...ங்கறதை கொஞ்சமும் உணர்ந்துகிறதே இல்லை...

வீட்டு வாசல்..ல முருங்கை மரம்.. அது பக்கத்து வீட்டுப் பக்கம் வளைஞ்சா சண்டை வராது.. ஏன்னா - முருங்கைக் காய்!.. ஆனா, அதுவே வேப்ப மரமா இருந்தா சண்டை..  உடனே மரத்தை வெட்டுங்க.. இலை எல்லாம் விழுந்து ஒரே குப்பை.. ன்னு!...

..... ..... ..... .....!..

ஆனா வேப்பஞ்சருகுகளை கொளுத்தி விட்டா அந்தப் புகையில கொசு ஈ எல்லாம் ஒழிஞ்சு போகுது... வேப்ப மரங்களே காணாமப் போன பிறகு வேப்பஞ்சருகுக்கு எங்கே போறது!..

வீடுகள்..ல முன்னெல்லாம் சாம்பிராணி குங்கிலிய தூபம் போடுவாங்க!.. நெருப்புக் கங்குல தக.. தக..ன்னு புகை.. கொசு மட்டுமல்ல பல்லி கூட ஓடிப் போகும்.. இப்போ கம்பியூட்டர் சாம்பிராணி..ன்னு.. ஏதோ ஒன்னு... அதனால என்ன பிரயோஜனம்?.. யாருக்கும் தெரியாது!..

இப்படியெல்லாம் இருக்குதா அக்கா!..

இல்லையா பின்னே!.. ஜனங்க பக்கந்தான் இப்படி..ன்னா முனிசிபாலிட்டி என்ன செய்யுது?.. எந்த ஒரு ஊராவது சுத்தமா இருக்கிறதா விரல் விட்டு சொல்லு.. பார்ப்போம்!..

அது முடியாது அக்கா!..

எந்த ஊருக்கும் போய் இறங்கு.. அந்த ஊர் பஸ் ஸ்டாண்டு எப்படி இருக்கு?.. வேற ஊர்களை ஏன் சொல்வானேன்!.. நம்ம தஞ்சாவூரை எடுத்துக்க!.. சொல்ற மாதிரி இருக்குதா!.. பல லட்சம் செலவு..ன்னு கணக்கு காட்டுறாங்க.. நாலு மாசத்தில இலவச கழிப்பிடம் பாழாய்ப் போய்க் கிடக்குது.. வழி நெடுக குப்பை கூளம்.. துர்நாற்றம்.. திருந்தாத ஜனங்கள்.. அரசு வேலையாட்கள்...

இதையெல்லாம் ஒட்டு மொத்தமா திருத்துறதுக்கு எத்தனை காலம் ஆகுமோ.. யாருக்கும் தெரியாது.. யாராலயும் முடியாது..ன்னும் வெச்சுக்கயேன்...

அதனால தான் நம்மள.. நாமே திருத்திக்கலாம்..ன்னு சொல்றீங்களா!..

ஆமாம்..  
அதுக்காக ஆஸ்பத்திரிகெல்லாம் போக வேண்டாம்..ன்னு யாரையும் சொல்லலை... 
நமக்கு நாமே சுத்தம் சுகாதாரத்தைப் பேணிக்குவோம்..
முடிஞ்சவரைக்கும் நோய் நொடிக்கு இடங்கொடுக்காம இருப்போம்..

நம்ம முயற்சி எல்லாம் பலிக்கணும்..ன்னு
தெய்வத்தையும் கூட துணைக்கு அழைச்சுக்குவோம்!.

ஓஹோ.. அதுக்குத் தானா தேவாரம் திவ்ய பிரபந்தம் எல்லாம்!...

ஆமாம்..மா.. 
எங்கள் Blog.. ன்னு ஒரு வலைத்தளம்.. ஸ்ரீராம் நடத்துறார்..



வாராவாரம் சனிக்கிழமை ஊருக்கு நல்லது செய்ற 
நல்லவங்களைப் பற்றி எழுதறார்...

தன்னலமில்லாத அவங்க எல்லாம்
கடவுளை வேண்டிக்கிட்டா கூட நல்லது நடக்குமே.. 
மனுசங்களை நம்புறதை விட தெய்வத்தை நம்புவோமே...

மருந்தெல்லாம் நலம் கொடுக்குமா.. கெடுக்குமா.. தெரியலை...
இன்னைக்கு உணவே விஷம்.. ந்னு சொல்லிட்டாங்க..
அப்படியிருக்க.. மருந்து மட்டும் அமுதம் ஆகிடுமா!..

அதனால தான் சொன்னேன் -
அவனது அடியலால் ஈங்கில்லை பிறிதொரு தஞ்சம்!.. - அப்படி..ன்னு!..

நம்பிக்கை .. அதுதான் மருந்து...
அதைத்தான் இறையருளா எடுத்துக்கறோம்...

எப்படியோ அக்கா.. நல்லது நடக்கணும்..
அதுக்காக வேண்டிக்குவோம்!..
எங்கே...க்கா அத்தானும் பசங்களும்?..

அங்கே அரண்மனை வளாகத்துல
சித்த மருத்துவம் பற்றி பயிற்சிப் பட்டறையாம்.. போயிருக்காங்க...

அப்புறம் அக்கா!..
தீபாவளி விசேஷமெல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு!.

எல்லாருக்கும் துணிமணியெல்லாம் எடுத்தாச்சு...
பலகாரம் செய்யிறது மட்டும் தான் பாக்கி!..

ஆமாம்.. அக்கா.. எங்க வீட்லயும் துணி எடுத்தாச்சு...
இந்தத் தீபாவளிக்கு புதுசா ஒரு இனிப்பு செய்யப் போறேன்!..

அப்படியா!.. என்னம்மா அது?..

அதை தீபாவளி முடிஞ்சதும் சொல்றேனே!..

தீபாவளிக்கு பட்டாசெல்லாம் பாதுகாப்பா வெடிக்கணும்.. சரியா!..



ஆகட்டும் அக்கா!.. எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!..

ஆகட்டும்..டா.. செல்லம்.. 
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!..

வாழ்க நலம்..
வாழ்க வளம்!..
***

8 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    இயற்கையின் அமைப்பில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது மனிதனின் நல்வாழ்வுக்காக... ஆனால் அதை அறியா மடந்தை மனிதன் அழித்து விட்டு தானும் அழிந்து கொண்டு வாழ்கிறான் எல்லாம் கலிகாலம்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு ஐயா
    விங்குகளின் உணவுச் சங்கிலியினைத் தகர்த்தெறிந்த பெருமை
    மனிதனை,மனிதனை மட்டுமே சார்ந்ததாகும்
    இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  3. அது என்ன புது இனிப்பு? நான் இழப்பனவற்றைக்கூறிப் பகிர்ந்த விதம் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா எந்நாம் பெரீஈஈஈஈய போஸ்ட்:)... ஆனா படிக்க படிக்க இன்றஸ்ட்டா இருந்துது சொன்னவிதம்... அதனால பந்திக்குப் பந்தி தாவாமல் ஒழுங்காப் படிச்சேன்...

    கோயிலையும் கும்பிடு.. புத்தகத்தையும் படி.. அப்போதான் நல்ல ரிசல்ட் வரும் எனக் கேட்ட வரிகள் நினைவுக்கு வந்தன.;).

    பிளை கச்சர்:) இப்போ எல்லாம் பிளை பண்ணிப்போட்டுதுபோல:).
    சுத்தம் சுகம்தரும்... சனத்தொகை அதிகமாகும்போது கஸ்டம்தான்... இப்போ இந்தியாவைப் பார்க்க வருவோர் முதலில் பேசுவது அங்கிருக்கும் சன நெருக்கத்தைப் பற்றித்தான்...
    போனகிழமை கூட இங்கு ஒரு வெள்ளையர் சொன்னார் தன் மருமகன் சென்னை போயிருந்தாராம்.. என்னா சனத்திரளாம்... பப்ளிக் வாகனங்களில் ஏறவே முடியல்லியாம் ...

    பலகார ரெசிப்பி சொல்லிடுங்கோ விரைவில்...

    பதிலளிநீக்கு
  5. அழகான படங்களுடன் சுற்றுச் சூழல், பொதுச்சுகாதாரம் குறித்துச் சொல்லும் அருமையான பதிவு. ஃப்ளை கேச்சர் முன்பு பார்த்தது உண்டு சகோ..இப்போது காணவில்லை...ஆனால் (துளசி: எங்கள் ஊரில் இருக்கிறது..)

    உழைக்கணும்...அதே சமயம் அந்த உழைப்பு நல்லதாக முடிய இறைவனின் அருளும் வேண்டுமே!!! work hard leave the rest to God என்பதும் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே எனும் கீதையின் வாசகமும் நினைவுக்கு வருகிறது...

    தீபாவளி நல்வாழ்த்துகள்

    (கீதா: மேலே சொன்னக் கருத்துடன்.. அந்தப் பலகாரம் என்ன என்று அறிய ஆவல்!!)

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  6. ஒரே பதிவில் எத்தனை கருத்துகள்...

    தெய்வ நம்பிக்கை பற்றியும்...

    தட்டான்...தவளை ...ஈக்குருவி...கரிச்சான் குருவி பற்றியும்

    ஒவ்வொன்றும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  7. எனக்கு பதிவு digression போல தெரிந்தது

    பதிலளிநீக்கு
  8. "ஓஹோ அதுக்குத்தானா தேவாரம் திவ்யப்ப்ரபந்தம் எல்லாம்' - இத்துடன் இடுகை சொல்லவந்த செய்தி முற்றுப்பெற்றுவிட்டதாகத்தான் தோன்றுகிறது. கோவிலை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்று அருமையாகச் சொல்லியிருக்கீங்க.

    ஓவியர் மாருதி அவர்களின் படம் அட்டஹாசம். கண்ணில் நிற்கும் ஓவியம். இதேபோல் ஒரு பெண்ணின் முகம் மட்டும் வரைந்த ஓவியத்தை முன்பு பகிர்ந்திருந்தீர்கள். (எங்கேயிருந்துதான் இந்த ஓவியங்கள் கிடைக்கின்றனவோ)

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..