நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 06, 2017

புன்னகைப் பூக்கள்

இன்று அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை..

அதனால் என்ன?..

சர்வதேச புன்னகை தினம்!..

1999 ல் இருந்து அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை
உலகின் புன்னகை நாளாக அறிவித்து அதனை அனுசரித்துக் கொண்டிருக்கின்றார்கள்..

ஸ்ரீ நடராஜர் - கோனேரிராஜபுரம்
ஆயினும்,
நூறு நூறு ஆண்டுகளுக்கு முன் கல்லையும் பொன்னையும் 
சிரிக்க வைத்தனர் நம்மவர்கள் - கலை என்னும் பெயரால்!..



அப்பர் பெருமான் ஈசனைத் தரிசிக்கும்போது -

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்!..

- என்று ஈசனின் புன்னகையில் திளைத்துத் தேவாரம் பாடுகின்றார்...

தாருகாவனத்து முனிவர்கள் அபிசார யாகம் நடத்தி 
அதனுள்ளிருந்து ஒரு மாயையை யானை வடிவில் உருவாக்கி
ஈசன் எம்பெருமானின் மீது ஏவி விடுகின்றனர்..

அந்த யானையை மடக்கிப் பிடித்து
அதன் கொட்டத்தை அடக்கி தோலை உரித்தபோது -

இது என்ன கொடூரம்!.. - என்று உமையம்மை அஞ்சி நடுங்கினள்..

அந்த நிகழ்வையும் 

விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால வயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்திரு மணிவாய் விள்ள 
சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!..

- என்று, நளினமாகக் காட்டுபவரும் - அப்பர் பெருமான் தான்!..

கொடுமையான அந்த நேரத்தில் கூட - ஈசன் புன்னகையுடன் திகழ்ந்தார்!..
என்று வர்ணிக்கின்றார் அப்பர் பெருமான்!..

பின்னொரு சமயத்தில் -
திரிபுரத்தையும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த 
மூன்று அசுரர்களையும் இறைவன் சுட்டெரித்துச்
சாம்பாலாக்கியதும் - தன் புன்னகையாலே!.. 

இதுவும் தேவாரத் திருப்பதிகங்களில் அறியக் கிடக்கின்றது..


ஆண்டாண்டு காலமாக நாமும்
சிரிப்பும் கூத்துமாகத் தான் இருந்தோம்...

நம்மிடையே புழங்கியிருந்த - 
பஞ்ச தந்திரக் கதைகள், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் 
எல்லாம் படிக்கும் தோறும் புன்னகையை வருவிப்பவை...

சிரிக்கவும் அத்துடன் சிந்திக்கவும் வைத்து
குழந்தைப் பருவத்திலேயே நம்மை நெறிப்படுத்தியவை.. 

ஆனால் - சமீப காலமாக சிரிப்பு என்பதே மறந்து போயிற்று...

வீட்டுக்குள் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ்வதற்கே 
கோயில்களுக்கு வேண்டுதல் வைக்கும்படியாக ஆயிற்று..

பிறரைக் கண்டு புன்னகைக்கவும் அச்சப்படும் சூழ்நிலையாக ஆயிற்று..

அதிலும் பெண்பிள்ளைகள் சிரிப்பதற்குப் பெருந்தடையைப் போட்டு வைத்தவர்களும் நம்மவர்களே!..

அதிலே அர்த்தங்கள் பல உண்டு .. 

ஆனாலும் பெண்கள் சிரிக்காமலா இருந்தார்கள்!?..

பெண்கள் சிரிக்காமல் இருந்திருந்தால் 
இந்த வையகம் பூண்டற்றுப் போயிருக்காதா!..

எனினும்,

பொம்பளை சிரித்தால் போச்சு..
புகையிலை விரித்தால் போச்சு!..

- என்ற சொல்வழக்கு
புகையிலை வந்ததற்குப் பின் உருவானதாக இருக்க வேண்டும்..

புகையிலையைப் பக்குவம் செய்து சுருட்டி வைத்தால் தான்
அதன் காரம் அடைப்பாக இருக்கும்.. 

அதனை விரித்துப் போட்டு விட்டால் வெறும் சக்கையாகப் போய்விடும்...

பெண்களின் சிரிப்பை அந்நாளிலும் சரி இந்நாளிலும் சரி - 
தறுதலைகள் தவறுதலாகக் கையாள்வது கண்கூடு...

கௌரவர்களும் பாண்டவர்களும் அழிவதற்குப்
பாஞ்சாலியின் சிரிப்பு ஒன்றே போதுமானதாக இருந்தது...

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே 
சொந்தமான கையிருப்பு - சிரிப்பு.. 

- என்று, கலைவாணர் NSK அவர்கள் பாடிவைத்தார்..

அத்துடன்,

ஆணவச் சிரிப்பு , அசட்டுச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு என்பவைகளுடன்
சங்கீதச் சிரிப்பையும் வகைப்படுத்திக் காட்டினார்..

அதனால் தான் கவியரசரும்

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே..
அது வடிக்கும் கவிதை ஆயிரம்..
அவை எல்லாம் உன் வண்ணமே
என் கண்ணே.. பூ வண்ணமே!..

- என்று, பின் தொடர்ந்தார்..

இந்தவகையில் இன்னும் நிறைய சொல்லலாம்..
அவற்றையெல்லாம் வேறொரு வேளையில் கவனிப்போம்..


புன்னகை நாளைத் திட்டமிட்டு அதற்குரிய Smiley சித்திரத்தை
1963 ல் உருவாக்கியவர் Harvey Ball (Worcester, Massachusetts) என்பவர்..

இன்றைய நாளில் ரசிப்பதற்கு
அந்த நாளைய நகைச்சுவை கொஞ்சம்..







இவை ஆனந்த விகடனின் தனிசிறப்புக்குரியவை..
விகடனுக்கு மனமார்ந்த நன்றி..

தான் மகிழ்வது மட்டுமல்லாமல் 
பிறரையும் மகிழ்விப்பது
புன்னகை பூக்க வல்லாருக்கே உரியது...

அன்பான புன்னகை அருமருந்து..
பண்பான புன்னகையே பெருவிருந்து..

புன்னகைப்போம்..
புன்னகைப் பூக்களாகப் பூத்திருப்போம்!..
* * *

4 கருத்துகள்:

  1. அன்பின்ஜி
    இன்றைய தினத்திற்கு பின்னால் இவ்வளவு வரலாற்று செய்திகள் உள்ளனவா ?

    அட்டைப்பட நகைப்புகளில் எவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறது அருமை ஜி.

    பதிலளிநீக்கு
  2. புன்னகை வேறு எந்த நகையும் வேண்டாமே!!! இந்தத் தினத்திற்கு இத்தனை தகவல்கள் உண்டென அறியத் தந்த தங்களுக்கு மிக்க நன்றி. ஸ்மைலி உருவானதும் தெரிந்து கொண்டோம். நகைச்சுவைத் துணுக்குகள் அருமை. அதிலும் அட்டைப்படத் துணுக்குகள் ரொம்பவே ரசித்தோம் ஐயா/சகோ..நல்ல பதிவு! புன்னகை விரிகிறது!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  3. புன்னகை தினத்துக்கான பகிர்வு அருமை....
    மிக அருமை...
    இறைவனின் புன்னகை தவழும் முகம் மிகச் சிறப்பாய்....
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..