நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 08, 2017

தீவினை தீர்க..

ஞானசம்பந்தப்பெருமான் தன் அடியாருடன்
திருச்செங்கோட்டுக்கு வருகை தந்த போது 
கொங்குநாட்டில் விஷக்காய்ச்சல் பரவியிருந்தது..

மக்கள் சொல்லொணாத துயருக்கு ஆளாகியிருந்தனர்...

தொற்று நோயாகிய அந்த விஷக் காய்ச்சல்
அடியார்களையும் பற்றிக் கொண்டது.

விஷ ஜூரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அடியார்களையும் 
காத்தருள வேண்டி திருவுளங்கொண்டார் ஞானசம்பந்தப் பெருமான்..

மக்கள் நலம் பெற வேண்டி இறையருளைச் சிந்தித்தார்.. 


அவ்வேளையில் - 
பாடியருளிய திருப்பதிகம் தான் - திருநீலகண்டத் திருப்பதிகம்...

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!.. - என்று, ஒவ்வொரு திருப்பாடலின் இறுதியிலும் ஆணையிட்டருளிய திருப்பதிகம்..

இறையருளால் நாடு முழுதும் விஷக் காய்ச்சல் ஒழிந்தது.. 
மக்களும் பிணி நீங்கி நலம் பெற்றனர்.. 

சீர் வளர் சீர் குருமகா சந்நிதானம்
பெரிய புராணம் காட்டும் திருக்குறிப்பின்படி -
நாடு முழுதும் மக்கள் பிணி நீங்கி நலம் பெறுதற்காக
இந்தத் திருப்பதிகத்தினை பாராயணம் செய்திடுமாறு

சிவனடியார்களுக்கும் இறையன்பர்களுக்கும்  
தருமபுர ஆதீனம் சீர்வளர் சீர் குருமகா சந்நிதானம் 
சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் 
அறிவுறுத்தியுள்ளார்...

அவ்வண்ணமே 
குருஸ்வாமிகளின் ஆணையினை 
தலைமேற்கொண்டு
இன்றைய பதிவில் நலந்தரும் திருப்பதிகம்..
* * *

திருத்தலம்
திருச்செங்குன்றூர் - திருச்செங்கோடு.


இறைவன் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பாகம்பிரியாள்
தலவிருட்சம் - இலுப்பை.
தீர்த்தம் - தேவதீர்த்தம்.

- தலப்பெருமை -
ஐயனும் அம்பிகையும் - 
மாதொருபாகனாக  பாகம் பிரியாளாக 
விளங்கும் திருத்தலம். 

செந்தமிழ் வேலன் - இங்கே
செங்கோட்டு வேலனாகத் திகழ்கின்றனன்..
* * *

திருநீலகண்டத் திருப்பதிகம் 
{பொது}
முதலாம் திருமுறை. 
திருப்பதிக எண் - 116 



அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதி ருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்தெம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{1}

காவினை இட்டும் குளம் பலதொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம்அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.. {2}

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணங் கொண்டுஎமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{3}

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரரும் வேதியரும்
புண்ணியரென்று இருபோதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடையீர் உம்கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{4}

மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் தோளுடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துன் திருவடியே அடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{5}

மறக்கு மனத்தினை மாற்றியெம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழையாத வண்ணம்
பறித்த மலர்க்கொடு வந்துமை ஏத்தும் பணியுடையோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{6}

இத் திருப்பதிகத்தின் ஏழாவது திருப்பாடல் சிதைந்து போயிற்று..

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{8}

நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றமுடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம்அடியோம்
சீற்ற மதாம்வினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{9}

சாக்கியப் பட்டுஞ் சமணுருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்..{10}

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே!..
 
{11} 
* * *       

நாமும் மற்றவர்களும் நலம் பெறுதற்காக திருப்பதிகப் பாராயணம் இறைவழிபாடு இவற்றைத் தவறாமல் செய்தாலும்

சுற்றுப்புறத்தில் சுத்தத்தைப் பேணுதலும் இன்றியமையாததாகும்..

எதற்கும் பயன்படாத குப்பைகளை அப்புறப்படுத்துதலும்
எவ்விதத்திலும் தண்ணீர் தேங்கிக் கிடக்காதபடி செய்தலும்
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்..

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான் அல்லவோ அடியேனை ஆட்கொண்டவனே..(4/93)
- திருநாவுக்கரசர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * * 

10 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அன்று முற்றும் துறந்த முனிவர்கள் உண்மையான காவி அணிந்து இறையருள் பெற்றவர்கள் சாத்தியமாயிற்று

    இன்று ???

    பாடலுடன் தந்த பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  2. தமிழ்நாட்டில் இன்று பரவி வரும் டெங்குக் காய்ச்சல் மறைய இப்படி ஒரு மகான் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு ஐயா...
    மடாதிபதிகளில் நல்லோரும் உண்டு கில்லர்ஜி அண்ணா...
    அவரேனும் பாடட்டும்... இந்தப் பிணி தீர,,,

    பதிலளிநீக்கு
  4. அருமையான தகவல்கள்.. எனக்கு அந்த சிவலிங்கப் பெருமானை ரொம்பப் பிடிச்சிருக்கு... ஓம் சிவாய நம!!!.

    பதிலளிநீக்கு
  5. தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனராம் இப்பாடலைப் பாட வேண்டியதுதானே எல்லோரும் நலம் பெறலாமே

    பதிலளிநீக்கு
  6. விரைவில் திருச்செங்கோடு செல்லவுள்ளோம் ஐயா. நாங்கள் பார்க்காத கோயில்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  7. அருமையான தகவல். திருப்பதிகத்தையும் அறிந்தோம்.

    இப்போது பரவி வரும் பல விஷக் காய்ச்சலுக்கு நல்ல வழிகாட்டல்.

    கீதா: நாம் சுற்றுப் புரத்தை சுத்தம் செய்தாலும் பொது இடங்களில் உள்ள குப்பைகள் அழுக்குகள் மாநகராட்சியால் நீக்கப்பட வேண்டியய்வை நீக்கப்படாமல் இதோ மழை வேறு அவ்வப்போது பெய்துவருவதால் அழுகி மிகவும் அவலமாக இருக்கிறது. விஷக் காய்ச்சல் பரவுகிறது என்று செய்தி சொல்லும் அரசு. அதற்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறோம் என்று சொல்லும் அரசு அடிப்படைத் தேவையான பொதுச் சுகாதாரத்தைப் பேணாமல் இருந்தால் என்ன செய்வது. நாம் குப்பை கொட்ட குப்பைத் தொட்டிகளே இல்லை. குப்பை எடுபப்வரும் சில நாட்கள் வருவதில்லை. மக்கள் எல்லோரும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டிவிடுகின்றனர்....அரசு முனைந்தால் ஒழிய பொதுச்சுகாதாரம் பேணப்படப் போவதில்லை...சகோ. இங்கு சென்னையை வந்து பாருங்கள். துர்நாற்றம்...

    பதிலளிநீக்கு
  8. எங்கள் வீட்டில் யாருக்கு காய்ச்சல் வந்தாலும் இப்பதிகம் பாட சொல்வார்கள் எங்கள் மாமானார்.
    நாங்களும் அதை பாடுவோம்.

    மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் நல்லது.

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..